பூக்கள் பூக்கும் தருணம்
Episode 1 | தொட்டால் தொடரும்
அவை கோவை வருடங்கள். 89-லிருந்து 93-வரை. கோவை வேளாண் பல்கலையில் இளங்கலை தோட்டக்கலை படித்துக்கொண்டிருந்தேன். என் வகுப்பில் நானும், உடன் பயின்ற மதுரை புதூர் சிவகாமியும், அதே வருடம் வேளாண் பொறியியல் படித்துக்கொண்டிருந்த மாணவர்களில் ஐந்து பேரும், மாணவிகளில் நான்கு பேருமாக நாங்கள் பதினோரு பேரும் ஒரு செட்டாகத்தான் சுற்றித் திரிவோம். சினிமாவிற்குப் போவதென்றாலும், வகுப்பு முடித்து மாலை கோவிலுக்குப் போவதென்றாலும், விடுமுறை நாட்களில் தாவரவியல் பூங்காவில் பேசிக் கொண்டிருப்பதேன்றாலும் அனைவரும் பெரும்பாலும் சேர்ந்துதான் செல்வது. அந்த நாட்களின் மருதமலை கோவிலும், வடவள்ளி செல்லும் வழியிலிருந்த பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவிலும், வேளாண் பல்கலையின் இரண்டாம் பஸ் நிறுத்தத்திலிருந்த பூங்காவும், கேஜி-யின் சினிமா தியேட்டர்களும்...மறக்கமுடியாதவை. எங்களின் பதினோரு சைக்கிள்களுமே பத்தாயிரம் கதைகள் சொல்லும்.
எங்கள் குரூப்பில் இருந்த வேளாண் பொறியியல் சாந்திக்கு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் ஆனது. இரண்டு வீட்டாராலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். கணவர் கண்ணன் பல்கலையின் பக்கத்திலிருந்த பி.என்.புதூரில் ஜவுளிக்கடை ஒன்று வைத்திருந்தார். கண்ணனும், சாந்தியும் பி.என். புதூரில் வீடு வாடகைக்கு எடுத்திருந்தனர். இருவரும் மிகப் பொருத்தமான, அட்டகாசமான ஜோடி. அடுத்த ஒரு வருடமும் சாந்தி புதூரிலிருந்துதான் கல்லூரிக்கு வந்துசென்றார். அதன்பின், கண்ணனும் எங்கள் செட்டில் இணைந்து கொண்டார். நாங்கள் வழக்கமாக ஜமா போடுமிடங்களில், கண்ணனின் ஜவுளிக் கடையும், பி.என்.புதூரில் கண்ணன் சாந்தி அவர்களின் வீடும் சேர்ந்துகொண்டது. சாந்தியின் வீட்டில் சனி இரவுகளில், நள்ளிரவு வரை கூட பேச்சுக் கச்சேரி நடக்கும். சிரிப்பும், மகிழ்ச்சியுமாய்...பசுமையாய் இன்றும் நினைவிலிருக்கும் நாட்கள்.
குரூப்பில் சரஸ்வதி நன்றாக பரதம் ஆடக் கூடியவர். மேட்டூரைச் சேர்ந்த குருவிற்கு, சாந்தியின் மேல், திருமணத்திற்கு முன்பு மெல்லிய இன்ஃபேச்சுவேசன் இருந்தது. அது சாந்தியின் திருமணத்திற்குப் பின்பு, சாந்தியின் மேல் மிகப் பெரும் மரியாதையாகவும், பெரும் அன்பாகவும் பரிமாணம் கொண்டது. குரு ஓர் ப்ரமாதமான ஓவியன். எங்களின் எல்லாப் பிரச்சனைகளையும் நாங்கள் முதலில் பகிர்ந்துகொள்வது கண்ணனிடமும், சாந்தியிடமும்தான். திருமணத்திற்குப் பிறகு சாந்தி மிகவும் மெச்சூர்டாக மாறிப் போனார். குரு கொஞ்சம் எமோஷனல் டைப். ஒவ்வொரு முறையும் ஏதேனும் விஷயங்களில் குரு எமோஷனல் ஆகும்போதெல்லாம், அறிவுரை சொல்லி அமர்த்துவது சாந்திதான்.
ஒருநாள் வெள்ளி நள்ளிரவு தாண்டிய பின்னிரவு. நானும் குருவும், நாங்கள் தங்கியிருந்த கல்லூரியின் தமிழகம் விடுதியின் மொட்டை மாடியில் இருட்டில் உட்கார்ந்திருந்தோம். விடுதி முழுதும் உறக்கத்திலிருந்தது. தூரத்தில் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் சோடியம் வேப்பர்களின் மஞ்சள் வெளிச்சம். பேச்சின் கனத்தில் குரு உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் குரல் தழுதழுத்திருந்தது. நான் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து “சரி, போய்ப் படுப்போம். நாளைக்கு காலையில ஏழு மணிக்கு ப்ராக்டிகல் க்ளாஸ் போகணுமில்லையா?” என்றேன். கீழே குரு அறைக்கு வந்ததும், டேபிளின் மேலிருந்த செய்தித்தாள் அட்டை போட்ட ஒரு புத்தகத்தை என்னிடம் தந்தான். “இதப்படி” என்றான். ”சரி” என்று சொல்லிவிட்டு அவனைத் துங்கச் சொல்லிவிட்டு என் அறைக்கு வந்தேன். எனக்கு இன்றைக்கு தூக்கம் வராது என்று நினைத்தேன். விளக்கைப் போட்டு, புத்தகத்தை பிரித்தேன்.
அப்போதெல்லாம் எங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. புதிதாகப் பத்தகம் வாங்கினால், அதை எங்கு, எப்போது வாங்கினோம் என்று புத்தகத்திலேயே எழுதிவைப்போம். எழுத்தாளர்கள் டெடிகேட் செய்வதுபோல், நாங்களும் யார் நினைவாக புத்தகம் வாங்கினோம் என்று முதல் பக்கத்தில் எழுதுவோம். குரு அப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதியிருந்தான் “என் அம்மாவைப் போன்ற...என்னை எப்போதும் ஆற்றுப்படுத்தும்...சாந்திக்கு...”
அப்புத்தகம்...பிகேபி-யின் ”தொட்டால் தொடரும்”...
Episode 2 | மழை தழுவும் காட்டின் இசை
மழை பெய்யும் காடு...என் கல்லூரி வாழ்க்கையில் மறக்கமுடியாத இரு பயணங்கள்/இரு வகுப்புகள் குறிஞ்சியில் நான் கழித்த நாட்கள். ஒன்று வால்பாறையில் நாங்கள் பங்குகொண்ட தேயிலை தொடர்பான பயிற்சி வகுப்புகள். மற்றொன்று ஏற்காட்டில் - காபி பயிர் தொடர்பாக. பயிற்சிக் காலங்களில் தோட்டக்கலை ஆராய்ச்சிப் பண்ணைகளில் அங்கேயே தங்கியிருப்போம். அந்த நாட்களில் நான் அடைந்த பரவசங்களை, இனிய நினைவுகளை எல்லாம் ஒவ்வொரு முறை மலைப் பயணமும் மேல் கொண்டு வரும். தடியன் குடிசை, பேச்சிப் பாறை, கல்லார் மற்றும் பர்லியார், குன்னூர்...வகுப்புகளுக்காகப் பயணித்த எல்லா இடங்களும் அந்த அடர் வனத்தின், குளிரின் மணத்தோடு உள்ளெழுகின்றன.
தேயிலை பயிர் பயிற்சிக்காக வால்பாறையில் தங்கியிருந்தபோது, ஒருநாள், பக்கத்திலிருக்கும் தனியார் பண்ணையைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டோம். கல்லூரிப் பேருந்தில் சென்று இறங்கியதும், பண்ணையின் மேலாளர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பண்ணை இயங்கும் முறைகள் பற்றி சிறு அறிமுகம் தந்துவிட்டு, பண்ணையை சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றார். நானும் கொஞ்சதூரம் சென்றுவிட்டு, சரிவுகளில் ஏறி இறங்க முடியாமல், திரும்பி வந்து பேருந்து அருகில் நின்றுகொண்டேன். மழை வரும்போலிருந்தது. மேகங்கள் அடர்த்தியாய் மூடியிருந்தன. ஸ்வெட்டரை மீறியும் குளிர் இருந்தது. பேருந்து ஒரு மரத்தினடியில் நிறுத்தப்பட்டிருந்தது. அருகில் ஓடு வேய்ந்த ஒரு சிறிய கட்டிடம். அலுவலகமாகவோ ஸ்டோராகவோ இருக்கவேண்டும். பக்கத்தில் சிமெண்ட் தளம் போட்ட நீண்ட அகலமான களம்.
மழை மெலிதாய் தூற ஆரம்பித்தது. பேருந்தினுள் ஏறி உட்கார்ந்துகொண்டேன். தூரத்தில் சரிவில் வரிசை வீடுகள் தெரிந்தன. மலைப்பிரதேசங்களில் பயணிக்கும்போதெல்லாம் ஏன் மனம் சட்டென்று அமைதியாகி விடுகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு நிதானம் புகுந்துவிடுகிறது. குன்னூர், ஊட்டி பயணிக்கும் ஒவ்வொரு முறையும் இந்த வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேன். மேட்டுப்பாளையம் வரை இருக்கும் மனது வேறு. மேலே ஏற ஆரம்பித்ததும் மனம் வேறு தளத்திற்கு நகர்ந்துவிடும்.
பேருந்தை நோக்கி ஒரு குட்டிப்பெண் ஒரு ப்ளாஸ்டிக் கூடையைத் தூக்கிக்கொண்டு வருவது தெரிந்தது. நான் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். பேருந்து அருகில் வந்து “மாமா...” என்றது. நான் கீழிறங்கி “என்ன பாப்பா...” என்றேன். முகத்தில் தூய்மையும், விகசிப்பும். கூடையை என்னிடம் கொடுத்து “அம்மா எல்லாருக்கும் கொடுக்கச் சொன்னாங்க...” என்றது. கூடை நிறைய பழங்கள்; ஆரஞ்சுகளும், ஆப்பிள்களும். நான் வாங்கிக்கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் குட்டி...மழை தூறுதே... அப்பறமா வந்துருக்கலாமே...” என்று சொல்லிவிட்டு “பாப்பா பேரென்ன...வீடு எங்கயிருக்கு?” என்றேன். “கயல்” என்று சொல்லிவிட்டு தூரத்து வரிசை வீடுகளை சுட்டிக்காட்டியது. நண்பர்களும், மேலாளரும் மழையினால் சீக்கிரமே திரும்பினர். “இவங்க கயல்...நமக்கு ஃப்ரூட்ஸ் கொண்டு வந்துருக்காங்க...” என்று நண்பர்களிடம் சொன்னேன். நண்பிகள் கயலின் கன்னம் நிமிண்டினார்கள். கயல் சிரித்துக்கொண்டும், நெளிந்துகொண்டும் எங்கள் மத்தியில் குட்டி தேவதை போல் உரையாடியது. காலி கூடையை திரும்ப வாங்கிக்கொண்டு குடுகுடுவென்று ஓடியது. எனக்கு மாமாவின் குட்டிப் பெண்கள் நினைவுக்கு வந்தார்கள். கூடவே அம்மாவின் ஞாபகமும், வகுப்புத் தோழி மேனகாவின் முகமும். மேனகா என்ன செய்கிறார் என்று கண்கள் துழாவியது. மேனகா கலாவிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். சிரிக்கும் மேனகாவின் சித்திரம் உள்ளுக்குள் பதிந்துபோனது அன்றுதான். மேனகாவின் முகத்தில்தான் எத்தனை தூய்மை?
ஏற்கனவே மலையின், மழையின் நெகிழ்விலிருந்தேன். இன்னும் கொஞ்சம் வெளிச்சம் குறைந்து தூறல் அதிகமாகியது. தூரத்தில் கயல் விரைவது தெரிந்தது. பேருந்தினுள், பையில் ஸ்நாக்ஸ்கள் இருந்தன. கயலுக்கு கொடுத்திருக்கலாம். மறந்துவிட்டது. அந்த நாளின், அந்த நேரத்தின், மனதில் வெண்மையும் நெகிழ்வும் தாய்மையும் ஏறிய அந்தக் கணம்...
காடு கடவுள்தான் இல்லையா?...
Episode 3 | நத்தை கூடுகள்
"இப்ப என்னதான் பிரச்னை உனக்கு?” விஸ்வா கேட்டான். நானும் விஸ்வாவும் யுனிவர்சிடி கேண்டீனின் வலதுபக்க படிகளில் உட்கார்ந்திருந்தோம். மணி இரவு பதினொன்றிருக்கலாம். விஸ்வா மேல் படியிலும், நான் அடுத்த கீழ் படியிலும் உட்கார்ந்திருந்தோம். கேண்டீன் முன்னால் ஆர்ச்சேர்டு போகும் வழியிலிருந்த சோடியம் விளக்கிலிருந்து வெளிச்சம், மரத்தின் இலைகளினூடே புகுந்து எங்கள்மேல் தெளித்திருந்தது. நான் தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் ஆசிரியர் விடுதி இருளிலிருந்தது.
“நீ மேனகாவ லவ் பண்றியா?”. இல்லை என்பதாய் தலையசைத்தேன். “அப்புறம், இது வெறும் இன்ஃபேச்சுவேவேஷன்தான்-னு நினைக்கிறேன். ஏன் இதுக்கு போயி இவ்வளவு அலட்டிக்கிற?” விஸ்வாவின் குரலில் மெல்லிய கோபமிருந்தது. அவன் கோபப்படுவதிலும் நியாயமிருக்கிறது. தினமும் முன்னிரவு வேளையில், அவனைப் பிடித்து, இம்மாதிரி அரையிருளில் உட்கார வைத்துக் கொண்டு, அன்றைய நாள் முழுக்க மேனகா எப்படி வகுப்புக்கு வந்தார், என்ன ட்ரெஸ் போட்டிருந்தார், வகுப்பில் என்னென்ன மாதிரி முகபாவங்கள் காட்டினார்...மேனகாவின் உதடுகள் பிரியாமல் சிரிக்கும் அந்தப் புன்னகை எப்படி இருந்தது...நண்பர்களிடம் மெலிதாய்ப் பேசும்போது அவர் முகம் எப்பக்கம் சாய்ந்தது...என்று ஒன்று விடாமல் விவரித்தால்...பாவம் அவனும்தான் என்ன செய்வான்?.
“டேய்...அழறியா?” விஸ்வா கேட்டான். நான் தலைநிமிர்ந்து பெருமூச்சு விட்டு சன்னமாய் கரகரத்து இல்லையென்றேன். கண்களில் நீர் கோர்த்திருப்பதை இருளில் அவன் பார்த்திருக்க முடியாது. கூடைப்பந்து மைதானம், மஞ்சள் வெளிச்சத்தில் நனைந்திருந்தது. தூரத்தில் தமிழகம் விடுதியில் இன்னும் பல அறைகளில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. தாமு அறையில் வெளிச்சமில்லை. ”மேனகா கல்யாணமே பண்ணிக்கக்கூடாது-னு தோணறது விஸ்வா” என்றேன். ”அடப்பாவி, நீ நார்மலாதான் இருக்கியா?” என்று கேட்டுவிட்டு “இதுக்குதான் அதிகமா புக் படிக்கக்கூடாதுங்கறது. இப்ப பாரு. எதையுமே ப்ராக்டிகலா யோசிக்க மாட்டியா நீ?. எப்பப் பாரு எதையாவது படிச்சிட்டு கனவுலயே மிதந்துட்டிருக்கிறது” அவன் குரலின் எள்ளல் என்னைத் தொடவேயில்லை.
“மேனகா மாதிரி...அந்த முகம்...அந்த தெய்வீகம்...கல்யாணமாகி ஒரு ஆணோட, ஒரு சராசரி லௌகீக வாழ்க்கையில என்னால நினைச்சிக்கூட பார்க்கமுடியலடா...கல்யாணமும் காமமும்தான் எத்தனை மலிவான விஷயம்...அந்த அழகு போயும் போயும் இதுக்குத்தானா படைக்கப்பட்டிருக்கும்?”
“அது சரி. முதல்ல இந்த பாலகுமாரனையும், தி.ஜா-வையும் படிக்கிறத நிறுத்து. ரொம்ப ஓவரா போற நீ. மேனகா கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டிகளோட சந்தோஷமா இருந்தா பத்தாதா? என்ன உளர்ற நீ?”
“ஆமா, அந்த தூய்மையான முகத்துல கவலையின் ஒரு ரேகை வர்றதையும் என்னால தாங்கமுடியுமானு தெரியல. மேனகாவுக்கு கல்யாணம் ஆச்சின்னா...” நான் மறுபடி தலைகுனிந்து கொண்டேன்.
“ஸ்ஸ்ஸ்ப்பா...தாங்க முடியல. எந்திரி நீ முதல்ல...இப்படியே விட்டா, ராத்திரி முழுசும் புலம்பிட்டே இருப்ப...” எழுந்து கைபிடித்து தூக்கிவிட்டான். இருவரும் சைக்கிளில் லாலி ரோடு கிளம்பினோம். கெமிஸ்ட்ரி லேப் தாண்டி, இடதுபுறம் திரும்பி, எங்கள் ஃபேகல்டியை கடந்தோம். பகலில், வகுப்பு இடைவேளையில், ஃபேகல்டிக்குப் பக்கத்திலிருக்கும் மரத்தடியில்தான் டீ குடிப்பது. அண்ணா ஆடிட்டோரியம், முகப்பில் விளக்கு வெளிச்சத்தோடு அமைதியில் இருந்தது. ஆடிட்டோரியத்தின் கீழ்த்தளத்தில் தான் நூலகம் இருந்தது. ஒருமுறை, அசோகமித்திரனின் “18-ஆவது அட்சக்கோடு” புத்தக வரிசைகளில் தேடிக் கொண்டிருந்தபோது, யதேச்சையாய் மேனகாவை ஒரு புத்தக வரிசையில் பார்த்து, மனம் படபடத்தது ஞாபகம் வந்தது. ஆர்.ஐ கட்டிடத்தைத் தாண்டி, கேட்டில் வெளியே வந்து, மெயின் ரோட்டில் ஏறினோம். விஸ்வா பேசிக்கொண்டே வந்தான். “நீயெல்லாம் புக் படிக்கிறதே வேஸ்ட். பாலகுமாரன், வாசகர்களிடம் இதத்தான் எதிர்பார்ப்பாரா?. ப்ராக்டிகலா, தரையில நிக்க வேண்டாமா?” என்றான். எனக்கு அவன் பேசியது எதுவும் காதில் நுழையவில்லை.
அர்ச்சனா பேக்கரி திறந்திருந்தது. டீ சொல்லிவிட்டு, வெளியிலேயே படியில் உட்கார்ந்து கொண்டோம்.
“இன்னிக்கு காலைல பத்தரைக்கு, மேனகாவோட, செகண்ட் கேட்லருந்து ஆர்ச்சேர்டு வரைக்கும் நடந்து வந்தேன். கூட வளர்மதியும் இருந்தாங்க” என்றேன். “அப்படியே பறந்துருப்பியே...” விஸ்வா சிரித்துக்கொண்டே சொன்னான். ஆம், அந்த சமயம் கொஞ்சமாய்தான் சுயநினைவு இருந்தது. சைக்கிளை உருட்டிக்கொண்டே நடந்து வந்தோம். நான் பெரும்பாலும் மௌனமாய்தான் நடந்தேன். மேனகாதான் அம்மாவைப் பற்றியும், தம்பிகளைப் பற்றியும் கேட்டுக்கொண்டு வந்தது. உறவினர் ஒருவர், குப்புசாமி ஹாஸ்பிடலில், ஒரு மைனர் சர்ஜரிக்காக அட்மிட் ஆகியிருப்பதாகவும், மறுநாள் மாலை அங்கு தான் போகவேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
“நாளைக்கு சாயந்திரம் குப்புசாமி ஹாஸ்பிடல் போலாமா?” என்றேன் விஸ்வாவிடம். “போலாம்...போலாம்...இன்னைக்கு நைட் தூங்குவியா?...” என்றான். டீ குடித்துவிட்டு, மறுபடி விடுதி திரும்பி அறைக்கு வந்து படுக்கும்போது மணி இரண்டு.
மறுநாள் வகுப்புகள் முடித்து, மாலை கிளம்பி, சைக்கிளை செகண்ட் கேட்டில் விட்டுவிட்டு, காந்திபுரம் பஸ் ஏறி, குப்புசாமி ஹாஸ்பிடல் ஸ்டாப்பில் இறங்கும்போது மணி ஆறாகியிருந்தது. தெரு விளக்குகள் போடப்பட்டிருந்தன. இரண்டு தெரு தள்ளிதான் ஹாஸ்பிடல் இருந்தது. உள்ளே நுழைந்து, ரிஷப்ஷனில் ரூம் நம்பர் சொல்லி (மேனகா சொல்லிய ரூம் நம்பர் அதுதானா என்று சந்தேகம் வந்தது) எப்படி போகணும் என்று கேட்டபோது, செகண்ட் ஃப்ளோர் போய் வலதுபக்கம் திரும்பச் சொல்லியது ரிஷப்ஷன் பெண். லிஃப்டில் ஏறி இரண்டாம் மாடிக்குச் சென்று, கதவு திறந்து வெளியில் வந்து வலது புறம் திரும்பியதும், மேனகா வராந்தாவிலேயே கண்ணில் பட்டது. நீல நிற உடையில் தேவதை மாதிரி...தேவதையின் குறுஞ்சிரிப்போடு...
விஸ்வா “நீ ஸ்டெடியா இருக்கியா?” என்று காதில் கேட்டான். அறைக்குள் கூட்டிச் சென்று எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியது. பதினைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். விஸ்வா சர்ஜரி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். சின்ன சர்ஜரிதான் என்றும் இரண்டு/மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம் என்றும் உறவினர் சொன்னார். நான் இயல்பாயில்லாமல் ஒரு தவிப்போடுதானிருந்தேன். மனது முழுதும் நீலம் நிறைந்திருந்தது. டீ வந்தது. குடித்தோம். “நாங்க கிளம்பறோம் மேனகா” விஸ்வா எழுந்தான். மேனகா ரிஷப்ஷன் வரை கீழே வந்து, தான் அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் வருவதாக சொல்லி வழியனுப்பியது.
பஸ் ஸ்டாண்ட் வந்து வடவள்ளி பஸ் ஏறி உட்கார்ந்ததும், கனமாய் மழை துவங்கியது. சடசடவென்று அடித்துப் பெய்தது. பஸ்ஸின் முன்னால் வைப்பர்கள் மிக வேகமாய் அசைந்தன. கண்ணாடி ஜன்னல் வெளியே ரோட்டோர வரிசைக் கடைகளின் விளக்கு வெளிச்சங்கள் மழையில் கரைந்திருந்தன. நல்லவேளை, கார்டன் ஸ்டாப்பில் இறங்கும்போது, மழை குறைந்து நிதானித்து தூறிக்கொண்டிருந்தது. கேட்டில் நுழைந்து, பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் வரிசையில் சைக்கிளை எடுக்கும்போது கீழே பார்த்தேன். நத்தை ஒன்று கூடுதூக்கி ஊர்ந்துகொண்டிருந்தது.
Episode 4 | மரமல்லி
”வீட்லருந்தே தண்ணி, பாட்டில்ல கொண்டு வந்துருக்கலாம். உனக்கு எதுதான் ஞாபகமிருக்கு? நீதான் அசமஞ்சமாச்சே...இரு வர்றேன்” சிவகாமி பஸ்ஸிலிருந்து இறங்கி, ரோடு தாண்டி எதிர் வரிசை கடைக்குச் சென்றார்.
மேலூர் பேருந்து நிலையம் இரவுக்குள் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. சோடியம் வேப்பர்களும், மெர்க்குரிகளும் ஒளிரத் தொடங்கியிருந்தன. பரோட்டா கடைகள் சுறுசுறுப்பாகியிருந்தன. மணி ஆறரை ஆகியிருந்தது. சிவகாமி தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு வந்தார்.
நாங்கள், மதுரை பெரியார் நிலையம் போகும் பேருந்தில் பின் படிக்கட்டுகளின் எதிரில் ஒரு இரட்டை சீட்டில் உட்கார்ந்திருந்தோம். மதுரை பேருந்துகள் எல்லாம், பேருந்து நிலையத்திற்கு வெளியில்தான் வரிசை கட்டி நின்றிருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த பேருந்துக்கு முன்னால், இரண்டு மதுரை பேருந்துகள் நின்றிருந்தன. பஸ்ஸில் விளக்கு போட ஏறிய கண்டக்டர், “முன்னால நிக்கிற வண்டிதான் முதல்ல எடுப்பாங்க, அதுல ஏறிக்குங்க’ என்றார். பேசிக் கொண்டிருக்கலாம் என்று வேண்டுமென்றேதான் மூன்றாவது பேருந்தில் ஏறியிருந்தோம். சிவகாமி “பரவால்லைங்க” என்றார். கண்டக்டர் விளக்கு போட்டுவிட்டு கீழிறங்கிப் போனார். “அவரு நம்மளப் பத்தி ஏதாவது தப்பா நினைச்சிருப்பாரோ?” என்றேன். சிவு சிரித்துவிட்டு “நினைச்சா நினைச்சிக்கட்டும்” என்றார்.
சிவு வீட்டிற்கு இன்று காலையில் 10 மணிக்கு வந்தது; இப்போதுதான் கிளம்புகிறேன். விளையாட்டுக்களும், உணவும், சந்தோஷமுமாய்...நேரம் எப்படி பறந்ததென்றே தெரியவில்லை. சிவு என்னுடன் கோவை வேளாண் பல்கலையில் தோட்டக்கலை படிக்கிறார். சிவுவின் அப்பா, மின்சார வாரியத்தில் வேலை செய்கிறார். சிவு-விற்கு இரண்டு தங்கைகள். மேலூரிலேயே பள்ளியில் படிக்கிறார்கள். சிவு-வின் அம்மா, வேண்டாமென்று சொல்லியும், முறுக்கும் சிப்ஸூம் கவரில் போட்டு “போகும்போது சாப்பிடு, வீட்டுக்குப் போறதுக்கு ஒன்பது மணி ஆயிடுமே” என்று பையில் வைத்தார்கள். என் வீடு திருமங்கலத்திலிருந்தது. சிவு-வும் ஒருமுறை திருமங்கலம் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
”இருட்டிடுச்சே, நீ கிளம்பி வீட்டுக்குப் போ சிவு. அம்மா வெய்ட் பன்ணிட்டிருப்பாங்க. நான் போய்க்கிறேன்” என்றேன். “பரவால்ல இங்கதான வீடு அஞ்சு நிமிஷத்துல போயிடுவேன். உனக்கென்ன இப்ப...நான் உட்கார்ந்திருக்கேன்; காலேஜிலதான் உம்மணாம்மூஞ்சியாட்டம் பேசவே மாட்ட; இப்பயாவது பேசு, நான் கேட்கிறேன்; பாலாவோட என்ன புக் படிச்சிட்டிருக்க?” என்று கேட்டார். சிவு-வின் வீடு, பஸ் ஸ்டாண்டிலிருந்து ஐந்து நிமிட நடையில், கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல் பக்கத்திலிருந்தது. நான் “திருப்பூந்துருத்தி” என்றேன். ”நல்லாருக்கா, என்ன கதை?” “எனக்கு புக் படிக்கத்தான் தெரியும், சரியா சொல்லவராது. நல்லாருக்கு. முடிச்சதும், தர்றேன்” என்றேன்.
பேச்சு, சுற்றிச் சுற்றி, கல்லூரி, நண்பர்கள் மத்தியிலேயே சுழன்றது. கல்லூரி வாழ்க்கையில், சிவு மாதிரி, ஒரு நெருக்கமான, வெளிப்படையான, எதுவென்றாலும் தயங்காமல் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு பெண் நட்பு கிடைத்தது கடவுள் தந்த வரம். சமயங்களில் ப்ராக்டிகல் ரிகார்டு பண்ணித் தரச் சொல்லியிருக்கிறேன். “அன்னன்னிக்கு நடத்துறத அன்னன்னைக்கு கொஞ்சமாவது ரூம்ல திருப்பிப்பாரு. ட்ரைமெஸ்டர் எக்ஸாம் ஆரம்பிக்குற வரைக்கும் தூங்காத...” என்று கடிந்துகொண்டிருக்கிறார். “எனக்கென்னவோ, நீ மேனகாவப் பாத்து ஜொள்ளு விடறமாதிரி இருக்கு...” என்றார் ஒரு நாள்.
சிவு, வேளாண் பொறியியல் படிக்கும் ஒரு நண்பர் குழுவுடன் மிகவும் நெருக்கம். அக்குழுவில் குரு, சாந்தி, பழனி, சரஸ்வதி, ஹேமா, குமார் இன்னும் சிலருண்டு. சிவு நட்பாய் எல்லோருக்கும் நெருக்கம் என்றாலும், குமாரின் மேல் நட்பு தாண்டிய ஒரு ப்ரியம் உண்டு. குமார் குடும்பத்தில், குமார்தான் முதன்முதலில் தலையெடுத்து, கல்லூரி வரை வந்திருப்பவன்; ஏழைக் குடும்பம். குடும்பப் பொறுப்புகள் அதிகம். ஒருமுறை சிவு, வகுப்பு இடைவேளையில், செமினார் ஹாலுக்கு வெளியே சைக்கிள் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது “நான் குமார்கிட்ட லவ்வ சொல்லிட்டேண்டா” என்றார். நான் புன்னகைத்து “என்ன சொன்னான்?” என்றேன். “நான் யோசிச்சி சொல்றேன்”னான். எனக்கு பொறுப்புகள் ஜாஸ்தி. என்னோட குடும்ப சூழ்நிலை தெரியும்தான? இது சரிவருமான்னு தெரியல”-ன்னான். ”எனக்கு இன்னும் அவன்மேல இருக்குற மதிப்பு ஜாஸ்தியாயிடுச்சு” என்றார். ”உனக்கு என்ன தோணுது? நான் ஏதும் அவசரப்பட்டு அவனை தொந்தரவு பண்ணிட்டேனோ...” என்று கேட்டார். “எனக்குத் தெரியல சிவு. நீயா சொல்லிட்டது நல்லதுதான்னு படறது. எனக்கு இந்த வயசுல காதலப் பத்தி தெளிவா ஒரு முடிவுக்கு வரமுடியல. நான் கனவுலயே இருக்கேன்னு விஸ்வா சொல்றான். எந்த நேரமும் கலைஞ்சி கீழ இறங்கிடுவே, கவனமாயிரு”-ன்னு பதட்டப்பட வைக்கிறான். குமார்கிட்ட சொல்லிட்டதான, பார்ப்போம். எல்லாம் சரியா வரும்னுதான் எனக்கு தோணறது” என்றேன். “உனக்கு லவ்வெல்லாம் வரலையா?” சிரித்துக்கொண்டே சிவு கேட்டார்.
“உன்ன மாதிரி நெருக்கமா நட்பிருக்கும்போது லவ்வுக்கு என்ன அவசரம்?” என்றேன். ”ஃபிஸிகல் காண்டாக்ட், அது சார்ந்த முயற்சிகள் எல்லாம் வேடிக்கையாத்தான் தோணுது சிவு. இப்போதைக்கு எனக்கு தூரமாத்தான் இருக்கு. நான் சோகமா இருக்கும்போது “ஏண்டா, ஏதாவது ப்ரச்னையான்னு” கேட்டு நீ கைபிடிச்சுக்குவயே...அன்பு பூசின அந்த மாதிரி தொடல்களே எனக்குப் போதும்” என்றேன். “சரி...சரி...உன் தத்துவங்களை ஆரம்பிச்சிராத...” என்று நிறுத்தினார்.
பஸ்ஸில் இருக்கைகள் நிரம்பியிருந்தது. கண்டக்டர் ஏறி டிக்கெட் போட ஆரம்பித்தார். நான் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவுவின் வலதுகை விரல்களைப் பிடித்துக்கொண்டு “அப்பாகிட்ட சொல்லிட்டியா சிவு, குமாரப் பத்தி?” என்று கேட்டேன். “சொல்லிட்டேன். ரெண்டு மூணு மாசமாகும் பதில் சொல்ல. ப்ராக்டிகலா யோசிக்கணும். அதுவரைக்கும் அமைதியா இருக்கச் சொல்லியிருக்கிறார்” என்றார். நான் மனதுக்குள் சிவு-வின் அப்பாவை வணங்கிக்கொண்டேன்.
பஸ்ஸினுள் ட்ரைவர் ஏறினார். ‘சரி, நான் கிளம்பறேன். வீட்ல அம்மா, பாட்டி, தம்பிங்க எல்லோரையும் விசாரிச்சதா சொல்லு” கைபிடித்து அழுத்திவிட்டு, பஸ்ஸிலிருந்து சிவு இறங்கிக்கொண்டார். பஸ் கிளம்பி மெதுவாய் நகர்ந்தது. சிவு ரோடு தாண்டி மறுபுறம் போய் கடைவீதி தெருவில் நுழைந்து திரும்பி நின்று கையசைத்தார். நானும் பஸ்ஸினுள்ளிருந்து கையசைத்தேன். சிவு-வின் வெள்ளை சுடிதாரும், வானவில் கலர் துப்பட்டாவும் கடைகளின் விளக்கு வெளிச்சத்தில் பளபளப்பு ஏறித் தெரிந்தது. எனக்கு அலங்காநல்லூரில் டாக்டர் அத்தை வீட்டு முன் இருக்கும் மரமல்லி ஞாபகம் வந்தது. எனக்குப் பிடித்த மல்லிகள் கீழே உதிர்ந்து கிடக்கும் மரம்...
சிவு...என் ப்ரியமான தோழியே...
Episode 5 | கலையின் பரிசுத்த அழகு
பின்னால் பெரும் சத்தம் கேட்டது. என்ன நடந்ததென்று தெரியவில்லை. அந்தரத்தில் சில நொடிகள் இருந்தேன். சைக்கிள் முன்னால் இரண்டடி தள்ளி ரோட்டில் விழுந்தேன். விழுந்தபின்புதான் நினைவு வந்தது. பின்னால் திரும்பிப் பார்த்தபோது, சீனியர்கள் மூவர் பைக்கில் கீழே விழுந்து கிடந்தனர். அருகில் விளையாட்டு மைதானத்திலிருந்து, நண்பர்கள் ஓடிவந்தார்கள். கீழே விழுந்த சீனியர் ஒருவர் எழுந்து என்னைத் தூக்கிவிட்டார் “ஒண்ணும் அடிபடலயே?” பதட்டமாகக் கேட்டார். கை, கால்களை உதறி விடச் சொன்னார். நண்பர்கள் சைக்கிளையும், பைக்கையும் தூக்கி நிறுத்தினார்கள். சைக்கிளின் பின் சக்கரம் லேசாக வளைந்திருந்தது. என் தவறுதான்; ஏதோ ஞாபகத்தில், பின்னால் வந்த பைக்கை கவனிக்காமல், வலதுபுறம் திரும்பிவிட்டேன். பின்னால் வந்த சீனியர்கள் இரண்டாம் கேட்டிற்குப் போவதற்காக நேராகச் செல்லவேண்டியவர்கள். எனக்கு ஆடிட்டோரியம் போகவேண்டும். பெரிதாய் காயங்கள் யாருக்குமில்லை. சிராய்ப்புக் காயங்கள்தான். யாரோ, பக்கத்திலிருந்த யுனிவர்சிடி கேண்டீனிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து தந்தார்கள். குடித்ததும், “ரூம்ல கொண்டுபோய் விடவா?” என்று ஒரு சீனியர் கேட்டார். “வேண்டாம், நான் ஆடிட்டோரியம் போகணும். போயிடுவேன். நீங்க போங்கண்ணா. தேங்ஸ்” என்று சொல்லிவிட்டு சைக்கிளை தள்ளிக்கொண்டு கிளம்பினேன். இன்னும் எங்கெங்கு சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. முழங்கை பின்னால் எறிந்தது.
ஆடிட்டோரியத்தின் முன்னால் ஏற்கனவே சைக்கிள் வரிசைகள். அன்று மாணவர் அமைப்பின், ஒரு நிகழ்ச்சி. பேராசிரியர்கள், சில உறுப்பினர்களின் பேச்சுக்கள் முடிந்ததும், ஒரு மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் இருந்தன. பாலாவின் பரதநாட்டியம் இருந்தது. நான் வந்தது பாலாவின் பரத நடனத்தைப் பார்ப்பதற்காகத்தான்.
பாலா என்கிற பாலசரஸ்வதி, சிவு-வின் நெருங்கிய நண்பர். வேளாண் பொறியியல் வகுப்பு. எனக்கு அப்போது பரதநாட்டியத்தில், ஸ்ரீநிதி ரங்கராஜனை மிகவும் பிடிக்கும். பெரும் மோகமே இருந்தது. கலையும், அழகும் ஒன்றுசேர்ந்த தெய்வாம்சம் தளும்பும் முகம். எனக்கு பாலாவைப் பார்க்கும்போதெல்லாம், ஸ்ரீநிதி ஞாபகம் வருவார். ஸ்ரீநிதி நிகழ்ச்சிகள் பார்க்கும்போது பாலா ஞாபகம் வரும். பரதநாட்டியத்தில் எனக்கு அறிதல் குறைவு. பாலாவுடன் பரிச்சயம் ஏற்பட்ட பிறகுதான், பரதநாட்டியத்தை இன்னும் அணுகி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. ஒருமுறை ட்ரைமெஸ்டர் விடுமுறையில் திருமங்கலத்தில் இருந்தபோது பாலாவிற்கு ஒரு கடிதம் எழுதினேன், பரதநாட்டியத்தை இன்னும் அதிகமாக, ஆத்மார்த்தமாக எப்படி ரசிப்பதென்று. நான் இன்னும் மேலோட்டமாகத்தான் ரசிக்கிறேன் என்று எனக்கே புரிந்தது. ஒரு வாரமாயிற்று, பாலாவிடமிருந்து எந்த பதிலுமில்லை. என் கடிதத்திற்கு பாலா பதில் போடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் பத்தாவது நாள், ஏ4 காகிதத்தில் ஐந்து பக்கங்களில், முத்திரை, அடவு, ஜதி, பாணி...எல்லாவற்றையும் விளக்கி, எடுத்துக்காட்டுக்கு படங்களை ஒட்டவைத்து...ஒரு நீண்ட கடிதம் பாலாவிடமிருந்து வந்தது. எனக்கேற்பட்ட ஆச்சர்யத்துக்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. வீட்டில் ஒருமுறை கடிதத்தை படித்துவிட்டு, அன்று சாயங்காலம் அரசபட்டி ரோட்டிலிருக்கும், நூலகத்திற்கு எதிரில், காமாட்சி அம்மன் கோவிலுக்கு கடிதத்தை சட்டைப் பையில் வைத்து எடுத்துக்கொண்டு போய், அங்கு ஒருமுறை மண்டபத்தில் வைத்து படித்தேன். பாலாவின் மேல் மரியாதையும், கனிவும், அன்பும் பலமடங்கு கூடியிருந்தது.
பாலா அன்று ஆடிட்டோரியத்தில், ஒரு சீனியருடன் சேர்ந்து இரண்டு பாடல்களுக்கு நாட்டியம் ஆடினார். ஒன்றில் சிவன் வேடம். ப்ரமாதப்படுத்தியிருந்தார். சீனியர் “நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கன்ணம்மா...”விற்கு ஆடினார். எனக்கு என்னவோ சீனியர் ஆடியது, செமி-பரதநாட்டியம் போலிருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் பாலாவிடமே கேட்டுக்கொள்ளலாம் என்றிருந்தேன். தோட்டக்கலை சீனியர் கங்கா, ஜென்சியின் “ஒரு இனிய மனது” இனிமையாக பாடினார். நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டிருந்தார்கள். சிவு-வும், நானும் படிகளில் கீழிறங்கி நூலகத்தின் முன் வராண்டாவில் நின்றுகொண்டிருந்தோம். “ஏண்டா, பேண்ட்டெல்லாம் மண்னா இருக்கு?” நான் வரும்போது பைக் மோதி கீழே விழுந்ததைச் சொன்னேன். “அடப்பாவி, மருந்து போட்டியா இல்லயா?” “ரூமுக்குப் போயி போடணும்” என்றேன். ”நேத்து படம் புடிச்சிருந்ததா உனக்கு?” என்று கேட்டேன். முந்தைய நாள் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கனகதாராவில் “க்ளிஃப் ஹேங்கர்” பார்க்கப் போயிருந்தோம். வரும்போது, எனக்கும் சிவு-விற்கும், யார் முதலில் காலேஜ் போய்ச் சேருவதென்று ஒரு சின்ன சைக்கிள் ரேஸ் நடந்தது. ட்ராஃபிக்கிற்குப் பயந்து நான்தான் நடுவில் நிறுத்திக்கொண்டேன். “பரவால்ல...” என்றார்.
கிளம்பிச் செல்லும் எல்லாப் பெண்கள் நடுவிலும் என் கண்கள் யாரையோ தேடியதைப் பார்த்து, “அலையாத, மேனகா வரல...” என்றார். நான் மெலிதாய் சிரித்துக்கொண்டு, “ஏன், இன்னிக்கு காலையில க்ளாஸூக்கு வரும்போது காதுல பஞ்சு வச்சிருந்தாங்க?” என்றேன். சிவு பதில் சொல்லுமுன், பாலா படியிறங்கி வந்தார். நான், நாட்டியம் நன்றாயிருந்ததாக பாலாவிற்கு வாழ்த்து சொன்னேன்.
மறுநாள் மாலை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் போகலாம் என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் புதிய கோவில். அப்போதுதான் மெதுவாய் பிரபலமடைந்து வந்தது. தில்லை நகர் ஸ்டாப்பில் இறங்கி கலை பேக்கரி அருகே, மண்ரோட்டில் நடந்து கொஞ்சதூரம் உள்ளே செல்லவேண்டும். ஸ்டாப்பில் இறங்கியபோது அப்போதுதான் பாலாவை பார்த்தேன். மென்சிவப்பு உடையில். நெற்றியில் சந்தனக் கீற்று. என்னுள்ளே ஏதோ உடைந்தது. அது “நான்” ஆகத்தான் இருக்கவேண்டும். என் வார்த்தைகள் மௌனமாகிவிட்டன. குருவும், ஹேமாவும், சிவு-வும் பேசிக்கொண்டு வந்தார்கள். குரு “அடுத்த பாரதியார் பிறந்த நாளை கலை பேக்கரில கொண்டாடலாமா?” என்றான். நான் குனிந்தவாறே தலையசைத்தேன். நிமிர்ந்து பாலாவை மறுபடி பார்த்தால் அழுதுவிடுவேன் போலிருந்தது.
சூரியன் மறைந்து வெளிச்சம் இன்னும் குறையாமல் இருந்தது. மெலிதாய் காற்று வீசிக் கொண்டிருந்தது. கோவிலில் கூட்டமில்லை. சாமி கும்பிட்டுவிட்டு, ப்ரசாதம் வாங்கிக்கொண்டு மேற்குப் பக்கம் கல்லின் மேல் உட்கார்ந்தோம். கோவில் வெளிப்புறச் சுவர் வேலை நடந்துகொண்டிருந்ததால், சிமிண்ட்டும், பலகைகளும் ஆங்காங்கே கிடந்தன. “என்னாச்சு உனக்கு, ஏன் கம்முன்னு இருக்கே ரொம்ப நேரமா?” சிவு கேட்டார். நான் ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தேன். கொஞ்சமாய் நிமிர்ந்தபோது, பாலாவின் முகத்திற்கு மேல், வானத்தில் மஞ்சளும், சிவப்பும், ஆரஞ்சுமாய்...சூரியனின் தீற்றல். ”ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய: ப்ரபவதி...” நான் கண்மூடிக்கொண்டேன்.
Episode 6 | தாய்மை சூழ் உலகு...
மல்லிகா (அம்மு) வும், நானும் லக்ஷ்மி மில்ஸ் வீட்டின் மொட்டை மாடியில் விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்திருந்தோம். திருமணமாகி இரண்டாவது வருடம் என்று நினைக்கிறேன். சுற்றிலும் புத்தகங்களும், காகிதங்களும் பரவிக் கிடந்தன. லேப் டாப் திறந்திருந்தது. கல்லூரி புகைப்படங்களை, அம்முவிற்கு காட்டிக்கொண்டிருந்தேன். அம்முவும், அம்மாவுடன், நான் கல்லூரியில் முதலாமாண்டில் இருக்கும்போது, பழைய விடுதியில் பார்க்க வந்திருக்கிறார். காற்றில் பக்கத்து வீட்டின் தென்னை மர இலைகள் சப்தமெழுப்பிக் கொண்டிருந்தன. ஷிஃப்ட் மாற்றத்திற்கான சைரன் ஒலி மில்லிலிருந்து கேட்டது. நினைவுகள், அற்புதமான அந்த நான்கு வருடங்களை சுற்றிச் சுழன்றன. மனது, வரிசையாய் இல்லாமல், கலந்து கலந்து மனதில் பதிந்தவைகளை மேல் கொண்டுவந்து கொண்டிருந்தது.
தாஜ்மஹாலில், மேனகாவுடன் எடுத்த ஃபோட்டோ லேப் டாப் திரையில் வந்தது. முன்னரே மேனகா பற்றி அம்முவிடம் சொல்லியிருக்கிறேன். “தப்பா லாங் ஷாட் ஆயிடுச்சி, அம்மு. டென்ஷன் வேற, ஃபோட்டோ எடுத்த சரணுக்கு. எனக்கும்தான். இந்த ஃபோட்டோ எடுத்து முடிக்கிற வரைக்கும் கொஞ்சம் படபடப்பாதான் இருந்தது” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.
அது ஒரு நீண்ட கனவு நிறைவேறிய பொக்கிஷ கணம். தாஜ்மஹாலில், மேனகாவுடன் தனியாக ஃபோட்டோ எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது, கல்லூரியின் நான்காம் வருடத்தில் ஆறு மாதக் கனவு. ஆல் இண்டியா டூரின் பார்க்கப் போகும் இடங்களின் விபரங்கள் தெரிந்ததுமே அக்கனவு துளிர்விட்டது. இது சாத்தியமாகுமா? இதை எப்படி சாத்தியப்படுத்தப் போகிறேன்? என்று யோசித்துக்கொண்டேயிருந்தேன். தாஜ்மஹாலில் ஃபோட்டோ எடுக்க வாய்ப்பு கிடைத்தாலும், தனியே எடுக்க வாய்ப்பு கிடைக்குமா? எப்படி அங்கு மேனகாவிடம் கேட்பது? கல்லூரியின் முதல் இரண்டு வருடங்கள், மேனகாவின் கண்களைப் பார்ப்பதற்கே தைரியம் வராது. மூன்றாம் வருடத்தில்தான் கொஞ்சம் பரபரப்பு குறைந்திருந்தது. இருந்தும், மேனகா இருக்கும் கெமிஸ்ட்ரி ப்ராக்டிகல் வகுப்புகளில், கண்ணாடி குடுவைகளை கீழே போட்டு உடைத்துவிடாமலிருக்க ப்ரயத்தனப்படவேண்டியிருந்தது.
ஆக்ராவில், பஸ்ஸிலிருந்து இறங்கி மஹாலின் வெளிப்புற முதல் நுழைவாயிலில் நுழைந்ததுமே, மனம் தவிக்க ஆரம்பித்தது. எப்படியாவது மேனகாவுடன் ஃபோட்டோ எடுத்துவிட வேண்டுமென. கடவுளை வேண்டிக்கொண்டேன், இதை மட்டும் சாத்தியப்படுத்தி விடு என்று. தூரத்திலிருந்தே பார்வையில் விழுந்து அணைத்துக்கொண்ட அந்த வெண்பளிங்கு மஹாலின் முதல் தரிசனம் மிகுந்த பரவசம் தந்தது. தாமு, கார்த்தி, ச்ரண், ராம்-உடன் சுற்றி வந்தேன். சிவு கண்ணில் படவில்லை.
அது நிகழ்ந்தது...அது எப்படி, எந்த நேரத்தில் நடந்தது, எப்படி அந்தக் கணம் வாய்த்தது, நான்தான் மேனகாவிடம் கேட்டேனா?, எப்படி அது சாத்தியமாயிற்று?...எந்த கேள்விக்கும் என்னிடம் இப்போது பதிலில்லை. என்ன நடந்தது என்று சுத்தமாக ஞாபகமில்லை. டூர் முடிந்து வந்து, ப்ரிண்ட் போட்டு ஃபோட்டோவை கையில் வாங்கி பார்த்தபோதுதான், நடந்தது கனவல்ல...ஃபோட்டோ எடுத்துக்கொண்டது நிஜம் என்று உரைத்தது. இதுநாள் வரையிலும், என் மனதுக்கு நெருக்கமான ஃபோட்டோ அது.
“இவங்க வேணி, என் புத்தக வாசிப்பை அதிகமாக்கினவங்க. கவிதையும் வாசிக்கச் சொல்லி கத்துக் குடுத்தவங்க. கவிதை எழுதுவாங்க” என்று அடுத்த ஃபோட்டோவில் வேணியை காட்டினேன். “சொல்லியிருக்கீங்க பாவா, அவங்க லெட்டர்லாம் காமிச்சிருக்கீங்க” என்று அம்மு சொன்னார். ஆம், வேணி எழுதிய கடிதங்கள் சேர்த்து வைத்திருந்தேன்; எப்படியும் ஒரு குயர் இருக்கும்; எல்லாமே புத்தகங்கள் பற்றி, கவிதைகள் பற்றி, கவிதை எழுதுவது பற்றி, எடுத்துக்காட்டிற்கு கவிதைகள் கோட் பண்ணி...அப்பா, எத்தனை பக்கங்கள்; வேணியின் ஒரு கடிதம் குறைந்தது பதினைந்திலிருந்து இருபது பக்கங்கள் இருக்கும்.
அடுத்த ஃபோட்டோ, ரேணுவுடனும், சுகன்யா, சிவு-வுடனும், பேரூர் கோயில் முன்னால் எடுத்தது. கல்லூரி வாழ்க்கையில் பேரூர் கோவில் மறக்க முடியாத நினைவுகள் கொண்டது. சைக்கிளில் விடுதியிலிருந்து கிளம்பி, பின்வழியாக பூசாரிபாளையம் வந்து ரோடு கிராஸ் செய்து குறுக்கு பாதையில் சென்றால் வெகு சீக்கிரம் கோவில் போய்விடலாம். கோவிலுக்குள்ளே விஜயா பதிப்பகத்தின் சிறிய பெட்டிக்கடை ஒன்றிருந்தது. அங்கு புத்தகங்கள் வாங்குவதுண்டு. பாலாவின் “கரையோர முதலைகள்” அங்குதான் வாங்கினேன். கோவில் உள்ளேயே மண்டபத்தில் உட்கார்ந்து ஒன்றிரண்டு மணிநேரம் படித்துவிட்டு, இரவுணவிற்கு விடுதிக்கு திரும்பியதுண்டு. வருடா வருடம் நாட்டியாஞ்சலி விழா நடக்கும். ஒருமுறை மாளவிகா சருக்கையின் நாட்டியம் கண்டு பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தது ஞாபகம் வந்தது.
அடுத்த ஃபோட்டோவில் கயல்விழி-யை காண்பித்தேன். “இவங்களும் நிறைய புக் படிப்பாங்க. ஆனால், பெரும்பாலும் இங்கிலீஷ் புக்ஸ். இவங்க என்னென்ன புக் படிக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசையாருக்கும். ஆனா, அப்ப இவங்ககிட்ட பேசுறதுக்கு ஒரு தயக்கம் இருந்துட்டே இருக்கும் ஃபர்ஸ்ட் இயர்ல. ஒருநாள், க்ளாஸூக்கு ஒரு புக் கொண்டுவந்து படிச்சிட்டிருந்தாங்க. ப்ரொஃபஸர் வந்ததும் புக்கை சேர் கீழே வச்சாங்க. அது காலின்ஸ், லேப்பியரொட “ஃப்ரீடம் அட் மிட்நைட்”. அந்த ஆதர்லாம் அப்பதான் நான் புதுசா கேள்விப்படுறது” என்றேன்.
“நண்பர்கள் இல்லைனா நான் யுஜி முடிச்சிருப்பேனா-ன்னு சந்தேகம்தான் அம்மு. எத்தனை உதவி! எத்தனை பரிவு! சிவு, தாமு...மாதிரி நட்பு கிடைக்க நான் என்ன தவம் செஞ்சேனோ?... பேர் சொல்லணும்னா எங்க யுஜி-லருந்த எல்லார் பேரும் சொல்லணும்.
ஒரு தடவை, ஆல் இண்டியா டூர் அப்பதான், பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன்ல, ட்ரெய்ன் ஏறதுக்கு நாலாவது ஃப்ளாட்ஃபார்ம் போகணும். என்னால என்னோட சூட்கேஸை தூக்கிட்டு நடக்க முடியல. பைத்தியக்காரத்தனமா, நிறைய புக்ஸ் உள்ள வச்சி கொண்டுவந்துருந்தேன். சிவு பார்த்துட்டு “நீ நடப்பா, நான் எடுத்துட்டு வாரேன்” என்று சொல்லிவிட்டு சூட்கேஸை எடுத்துக்கிட்டாங்க. சிவு-னாலயும் தூக்கறதுக்கு கஷ்டமாருந்தது. இரண்டு கையையும் கைப்பிடில வச்சி தூக்கி ஃப்ளாட்ஃபார்ம் ஸ்டெப்ஸ்-ல ஒவ்வொரு படியிலயும் வச்சி தூக்கிட்டு வந்தாங்க. எனக்கு கண்ல தண்ணியே வந்துடுச்சு அம்மு. எதைச் சொல்றது...எதை விடுறது...எங்களுக்கு ரெண்டு கிராப் ப்ரொடக்ஷன் கோர்ஸ் இருந்தது. கொஞ்சமா நிலம் கொடுத்து, நாங்களே எல்லாம் பண்ணனும் அதுல - நடுறதுலருந்து, தண்ணி பாச்சறது, களையெடுக்கறது...இப்படி. என்னோட ஃப்ரெண்ட்ஸ் இல்லைனா...அதெல்லாம் தாண்டி நான் வந்திருப்பேனான்னே தெரியல.” பேசிவிட்டு கொஞ்ச நேரம் அமைதியாயிருந்தேன்.
என்னவோ நினைத்துக்கொண்டவன் போல், “பொண்ணுங்க நீங்கல்லாம், மனசளவுல சீக்கிரமே முதிர்ச்சியாயிடறீங்கள்ல அம்மு. எத்தனை மதர்லியா இருக்கீங்க. இப்ப திரும்பி நினைச்சுப்பார்த்தா, என்கூட யுஜி-ல படிச்ச பதினாறு பொண்ணுங்களும் தேவதை மாதிரிதான் தெரியறாங்க. இப்ப இருக்குற மெசூரிட்டியோடயும், தெளிவோடும் இன்னொரு தடவை யுஜி படிக்கலாம்போல இருக்கு...” சொல்லிவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டேன்.
அம்மு என்கிற அம்மா தேவதை தோளில் சாய்த்துக்கொண்டது
Episode 7 | குறிஞ்சியின் யட்சி...
காற்று தென்னை மரங்களையும், வேப்ப மரங்களையும் அசைத்துக்கொண்டிருந்தது. ஆனி கடைசியிலும், ஆடியிலும் லக்ஷ்மி மில்ஸ் குடியிருப்புகளில், காற்று மாலை வேளைகளில் அதிகமாகத்தானிருக்கும். அம்முவின் வீடிருக்கும் இந்திரா காலனியில், விசாலமான தெருக்கள். குறுக்குத் தெருக்கள் மிக நேர்த்தியாய் நேர்கோட்டில் இருக்கும். எல்லா வீடுகளிலும் மரங்கள். தென்னை மரமோ, வாழை மரங்களோ...எல்லா வீடுகளிலும் ஏதாவது மரம் இருக்கும். அம்முவின் வீட்டில் கொய்யா மரமும், தென்னை மரமும் இருந்தது. மல்லியும், முல்லைச் செடியும் கூட. கொய்யா மரத்திற்கும், வீட்டின் உள்வாசலுக்கும் இடையில் மாவாட்டும் உரல் போடப்பட்டிருக்கும். மாலை வேளைகளில், அம்மு மாவாட்டிக் கொண்டிருக்கும்போது, பக்கத்தில் சேர் போட்டு உட்கார்ந்து, பேசிக் கொண்டோ புத்தகம் படித்துக்கொண்டோ இருப்பேன். ஒருமுறை அம்மு மாவரைக்கையில், உதவி செய்வதற்காய், அரைக்கும்போது மாவினை கையால் தள்ளி விடலாம் என்று உரல் முன்னால் சேரைத் தள்ளி உட்கார்ந்தபோது, ”சரியாய் தள்ளுவீங்களா? விரல்கள் பத்திரம்” என்று சிரித்துக்கொண்டே அம்மு சொன்னார்.
இரவுணவை முடித்துவிட்டு வெளித் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டால், உடல் தழுவும் காற்றும், எஃப்.எம் ரேடியோவில் பக்கத்து வீடுகளிலிருந்து கேட்கும் ராஜாவின் பாடல்களும் மயக்கம் உண்டாக்கும். அந்த நாட்களில் அம்மு தினமும், தலையில் முல்லைப் பூ வைத்துக்கொள்வார். எனக்கு முல்லைப் பூக்களின் மணம் மிகவும் பிடிக்கும். கூடவே மகிழம் பூவின் மனமும். சம்பங்கி மாலையை பூஜை அறையில் சாமிக்கு சார்த்திவிட்டு, மறுநாள் காலையில் அறை திறந்ததும் ஒரு மணம் வருமே...அந்த நறுமணம் கண்மூடி ஆழ்ந்து சுவாசிக்க வைக்கும்.
கொஞ்ச நேரம் திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு, நானும் அம்முவும் ஒரு நடை சென்றுவரலாம் என்று எழுந்தோம். தெருவில் இடது பக்கம் நாலைந்து வீடுகள் தாண்டினால், மில்லின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைய சின்ன வழியிருக்கும். வீடுகளில் தொலைக்காட்சிகளின் சப்தம். மில்லின் உள்ளேதான் அம்மு படித்த பள்ளி இருந்தது. குடியிருப்பு பகுதியின் நடுவில் நடந்துசென்று இடதுபுறம் திரும்பியதும் பள்ளியின் விளையாட்டு மைதானம். மைதானத்தின் வடக்கு மூலையில் ஒரு விநாயகர் கோவில். கோவிலில், வெளிச்சுவருக்கு உள்ளே சிமிண்ட் தரை முழுதும் மர இலைகள் விழுந்துகிடந்தன. “தினசரி யாரும் க்ளீன் பன்ணமாட்டாங்களா அம்மு?” என்றேன். “பூஜை பண்ற ஐயர் பண்ணுவாரு. ப்ரதோஷத்துக்கு மட்டும்தான் கூட்டமா இருக்கும்” என்றார் அம்மு. கோவில் அந்தகாரத்தில் இருந்தது. விளக்கு ஒன்று விநாயகர் சந்நிதானத்தில் எரிந்துகொண்டிருந்தது.
நாங்கள் விளையாட்டு மைதானத்தை சுற்றிக்கொண்டு நடந்தோம். அம்முவின் அப்பா, அந்த மில்லில்தான் வேலை பார்த்தார். அம்மு அப்பாவின் அந்த நாட்களைப் பற்றி பேசிக்கொண்டு வந்தார். நாங்கள், மில்லின் உள் மெயின் ரோடைத் தொட்டு, சோடியம் வேப்பர்களின் வெளிச்சத்தில், முதல் கேட்டை நோக்கி நடந்தோம். அம்முவின் அப்பா இறந்தபின், அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டார்கள், அந்தக் கஷ்டத்திலும் அம்மு எப்படி D.Pharm படித்து முடித்தது என்று சொல்லிக்கொண்டு வந்தார். கடந்த காலங்களைப் பற்றிப் பேசினாலே மனது மிகவும் நெகிழ்ந்து நொய்மையாகி விடுகிறதுதானே?
மெயின் கேட்டில் வெளி வந்து, கோவை-பல்லடம் ரோட்டில், வலது பக்கம் ஓரமாகவே மண்ணில் இறங்கி நடந்தோம். நான் அம்முவின் மனநிலையை மாற்ற நினைத்து, எதிரில் சாலைக்கு அப்புறம் இருந்த, “லஷ்மி கார்டு குளோத்திங்” ஆலையை சுட்டிக்காட்டி, ஹேமா-வோட வீட்டுக்காரர் இங்கதான் வேலை செய்றாராம். அவங்க வீடு ஒண்டிப்புதூர்லதான் இருக்கு போலருக்கு. ஒருநாள் போயிட்டு வரலாம்” என்றேன். ஹேமா சிவு-வின் ஃப்ரெண்ட் என்பது அம்முவிற்குத் தெரியும். பேச்சு அங்கு தொட்டு இங்கு தொட்டு மறுபடி என் கல்லூரி வாழ்க்கையின் நிகழ்வுகளில்தான் நிலைகொண்டிருந்தது.
பேருந்து சிம்லாவை நெருங்கிக்கொண்டிருந்தது. முன்னிரவு எட்டு மணி. வெளியில் உடல் நடுக்கும் குளிர். ஜன்னல்களில் நீர்த் திவலைகள். நண்பர்களில் யாரோ சொல்லி, ம்யூசிக் ஸிஸ்டத்தில், “புது வெள்ளை மழை...” பாடிக்கொண்டிருந்தது. நான் பின்சீட்டுக்களில் ஒன்றில் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தேன். மனது அந்தக் குளிரை அனுபவித்துக்கொண்டிருந்தது. அனைத்திந்தியப் பயனத்தில், அடுத்தநாள் குஃப்ரி செல்வதாக ஏற்பாடு.
சிம்லாவிற்குள் சென்று பஸ் இரவுணவிற்காக நின்றது. நண்பர்கள் இற்ங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். வெளியில் குளிர் யாரோ ஐந்து டிகிரி இருக்கலாம் என்றார்கள். பேருந்தின் முன்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. நண்பிகள் எழுந்து ஒரு சீட்டினருகில், கும்பலாய் நின்றிருந்தார்கள். கேட்டு விஷ்யமறிந்த போது, சிவு-விற்குத்தான் உடம்பு சரியில்லாமல் போயிருக்கிறது. அதிகக் குளிரினால் உண்டாகியிருக்கலாம். கயல்விழி சிவு-வின் கைகளைத் தேய்த்து விட்டுக்கொண்டிருந்தார். பாதங்களை ஈஸ்வரி தேய்த்துக் கொண்டிருந்தார். என்னுள் மெல்லிய பதட்டம் எழுந்தது. “என்னாச்சு சிவு?” என்று மனதுள் கேட்டுக்கொண்டே, மனதிற்குள் சிவு-வின் கைகளைப் பிடித்துக்கொண்டேன்.
அனைத்திந்தியப் பயணத்தின்போது, பெங்களூரில் மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். இண்டோ அமெரிக்கன் ஹைப்ரிட் சீட்ஸ், IIHR...இன்னும் சில இடங்கள் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விடுதியின் கீழேயே ரெஸ்டாரண்ட் ஒன்று இருந்தது.
இரண்டாம் நாள் மாலை, சுகன்யாவின் உறவினர் வீட்டிற்கு நண்பர்கள் சிலரை சுகன்யா அழைத்துப் போயிருந்தார். அங்கேயே இரவுணவு சாப்பிட்டோம். சுகன்யா கன்னடத்தில் பேசுவதை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
மூன்றாம் நாள், முன்னிரவு ஏழு மணி இருக்கும். சிவு கையில் ஒரு உடையுடன் அறைக்கு வந்தார். “என்னப்பா பண்ற?” கேட்டுக்கொண்டே இடதுபக்கம் சேரில் உட்கார்ந்துகொண்டார். நான் பாலாவின் “இனியெல்லாம் சுகமே” படித்துக்கொண்டிருந்தேன். புத்தகத்தின் முன் அட்டையை சிவு-விடம் காட்டினேன். கையில் ஊசி வைத்து கொண்டு வந்த உடையில் ஏதோ தைக்க ஆரம்பித்தார். “படிக்கறதெல்லாம் சரிதான். முடிச்சிட்டு கீழே இறங்கிடணும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ”“உள்ளம் கவர் கள்வன்” படிச்சேன். ரொம்ப நல்லாருந்தது. நீ படிச்சிட்டியா?” என்று கேட்டுக்கொண்டே பற்களால் நூலைக் கடித்தார். பேச்சு, பாலா, ஜே.கிருஷ்ணமூர்த்தி, அசோகமித்திரன், தி.ஜா...என்று சுற்றியது. “சரி, வா...வெளியில போகலாம். சார் பார்த்தாருண்ணா, இங்க இந்த ரூம்ல என்ன பண்ற-ன்னு திட்டப்போறார்” என்று எழுந்தார்.
விடுதியை விட்டு வெளியில் வந்து மெயின் சாலையில் இடதுபுறமாகவே நடந்தோம். மறுபடி இடதுபுறம் வளைவு திரும்பியதும், மெஜெஸ்டிக் பேருந்து நிலையம் ஒளிவெள்ளத்தில் எதிர்ப்புறம் தெரிந்தது. பேச்சு பாலாவின் புத்தகங்களினூடே இருந்தது. தி.ஜா-வின் பெண் பாத்திரங்களைப் பற்றி நான் சொல்லிக்கொண்டு வந்தேன். தி.ஜா-வின் மீதான சில சீனியர்களின் அவதானிப்பு பற்றி சொன்னேன். ”அகிலன் சொல்றாரு, தி.ஜா. ப்ராக்டிகலாவே இல்ல; பொண்ணுங்க அழகைக் கண்டு பயப்படுறாரு; அதை நேருக்கு நேரா சந்திக்க முடியாம, கடவுள் ரேஞ்சுக்கு உசத்திர்றாரு-ன்னு”. “உண்மைதானே” சிவு சிரித்தார் ”அன்னிக்கு, லேடீஸ் ஹாஸ்டல் வந்துட்டு விஸிட்டர்ஸ் ரூம்ல சேர்ல எப்படி உட்கார்ந்திருந்தேன்னுதான் பார்த்தேனே” என்றார். அன்று, சிவு-விடம் ஜெராக்ஸ் எடுக்க வாங்கியிருந்த வகுப்புக் குறிப்புகளை, திருப்பிக் கொடுத்துவிட்டு, ஊரிலிருந்து சிவு-வைப் பார்க்க வந்திருந்த அப்பாவையும் பார்த்துவிட்டு வரலாம் என்று போயிருந்தேன். விஸிட்டர்ஸ் ஹாலில், சேரின் நுனியில் ஒரு அமைதியில்லாத்தனத்துடன் உட்கார்ந்திருந்தேன்.
மெஜஸ்டிக் முன்னால் இன்னொரு ரெஸ்டாரண்ட் பக்கத்திலிருந்த தியேட்டருக்கு அருகில் மறுபடியும் திரும்பினோம். தள்ளு வண்டிகளில் வாழைப்பழங்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். பானி பூரி வண்டிகளும் ஒன்றிரண்டு இருந்தன. நேரே சென்று திரும்பினால், ஒரு சுற்று சுற்றி நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு போய்விடலாம். “டீ சாப்பிடலாம் சிவு” என்றேன். முக்கிலிருந்த பெட்டிக்கடையில் டீ வாங்கிக்கொண்டு கடைக்கு அருகிலேயே நின்றுகொண்டோம். சிவு-திருமங்கலம் வீட்டிற்கு வந்திருந்தபோது, மதிய உணவு முடித்துவிட்டு வீட்டு படியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு ஹேமா ஆனந்ததீர்த்தனின் சிறுகதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்கார அம்மா, சிவு சென்ற மறுநாள், என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார் “என்ன, இப்படி பேசிக்கிறாங்க” என்று. அம்மா சிரித்துக்கொண்டே “என்னடா பேசுனீங்க அப்படி?” என்று கேட்டார். “ஒண்ணுல்லம்மா, ஒரு கதையைப் பத்தி பேசிட்டிருந்தோம்” என்றேன். நினைவினால் புன்னகைத்துக்கொண்டேன்.
”அழகை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்துறதுல என்ன தப்பு சிவு?. ஒண்ணுமே பண்ணமுடியுமாம திகைச்சு நிக்கும்போது, ஏதாவது ஒரு சரியான வழி கண்டுபிடிச்சு சேன்னலைஸ் பண்ணலேனா, அந்த உணர்வு, எனர்ஜி, தப்பான வழியில போயிடாதா?. அழகை தெய்வமாக்குறது ஒரு தப்பித்தல்னா, வேற என்ன வழியிருக்கு?. கல்யாணம் கூட ஒரு சமூக சேன்னலைசேஷன்தானே?” என்றேன்.
பேசிக்கொண்டிருக்கும்போது மேனகா-வின் முகம்தான் மனதில் இருந்தது. அது சிவு-வுக்கும் தெரிந்திருந்தது. ”குறுந்தொகையில கபிலரோட ஒரு பாட்டு இருக்கு சிவு. நீ படிச்சிருக்கிறியா?. கபிலர் மலையப் பத்தி, காட்டைப் பத்தித்தான் நிறைய பாடியிருக்கார். சுனைப்பூ குற்று தைஇவனக்கிளி...ன்னு ஆரம்பிக்கும். சரியா வரிகள் ஞாபகமில்லை. ஆனா, அர்த்தம் ஞாபகமிருக்கு “வனத்தடாகத்தில் பூப்பறித்து மாலைகட்டி அணிந்து காட்டில் கிளியோட்டும் பெரிய கண் அழகி அறியமாட்டாள். தூங்கும் யானைபோல பெருமூச்சுவிட்டு என் மனம் அவள் நினைவைத் தொடர்வதை...”
நான் பெருமூச்சு விட்டேன்.
மேனகா...குறிஞ்சியின் யட்சி...சந்திரி...
Episode 8 | அன்பெனும் தவம்
”செய்க தவம்; செய்க தவம்; தவமாவது அன்பு செலுத்தல்” - பாலாவோட புக்ல படிச்சதுதான் இது. பாலாவை மட்டும் நான் படிக்கலைனா, என்னோட வாழ்க்கையே திசை மாறியிருக்கும்னுதான் நினைக்கிறேன்” - நான் கணேஷிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
இருவரும், மருதமலையின் கார் பார்க்கிங் பகுதியில் சமதளத்தின் கிழக்கு விளிம்பில் தடுப்புச் சுவரின் மேல் உட்கார்ந்திருந்தோம். மேற்கில் சூரியன் இறங்கிக்கொண்டிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் சுகமான மாலை. மதியம் விடுதி கேண்டீனில் நெய்ச்சோறும், தயிர்சாதமும், உருளைக்கிழங்கு சிப்ஸூடன் அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டுவிட்டு, மேலே ஐஸ்கிரீமையும் உள்ளே தள்ளி, அப்படியே போய் அறையில் படுக்கையில் சாய்ந்து, பாலாவின் “பந்தயப் புறா”-வை இரண்டு பக்கம் படிப்பதற்குள் கண் சொருகியது. அடித்துப் போட்டாற்போல் மூன்று மணி நேரம் தூங்கிவிட்டு, எழுந்து முகம் கழுவி கிளம்பி மறுபடியும் கேண்டீனில் டீ சாப்பிட்டுவிட்டு, கணேஷூடன் மருதமலை வந்தேன். மனது தெளிவாக, புத்துணர்ச்சியுடன் இருந்தது. ஞாயிறு மதிய உணவின் பின்னான தூக்கம், எழுந்து முகம் கழுவி கிளம்பி சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்துவிட்டால், கழுவிவிட்ட தரை போல் மனது குளிர்ச்சியாய் உற்சாகம் கொண்டுவிடுகிறது.
கோவிலிலும், சுற்றுப் பகுதிகளிலும் விளக்குகள் போட ஆரம்பித்தார்கள். நான் ஒருவாரத்திற்கு முன் அங்கிருந்த விஜயா பதிப்பகத்தின் சிறிய கடையில் வாங்கிப் போன பாலாவின் “இனிது இனிது காதல் இனிது” புத்தகத்தை கையில் எடுத்து வந்திருந்தேன். படிக்கிறேனோ இல்லையோ, எங்கு போனாலும் புத்தகத்தை எடுத்துப்போவது பழக்கமாயிருந்தது.
"சாரதி அண்ணா, பாலாவோட புக்ஸ் எல்லாத்தையும் மெலோடிராமா-ன்றார். படங்கள்-ல சிவாஜி ஓவர் ஆக்ட் பண்ற மாதிரி. சாரதி அண்ணாவோட போய் சந்திச்ச கோவை ஞாநி சாரும் “இந்த வயசுல பாலா புக்ஸ் எல்லாம் ஒரு மாதிரி போதை. அடிமையாக்கும். ஆனா பாலாவைத் தாண்டி படிக்கிறதுக்கு இன்னும் நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்க வெங்கடேஷ்” என்று சொன்னார்”
“இதுக்குதான் நான் பி.கே.பி, சுபா, ராஜேஷ்குமார் தாண்டி எதுவும் படிக்கிறதில்ல. பாலாகிட்ட என்னதான் இருக்கோ, இப்படி ஒட்டிட்டிருக்க?” கணேஷ் சிரித்துக்கொண்டே சொன்னான். நெற்றியில் விபூதி இட்டிருந்தான்.
“பாலா கிட்டயிருந்து நான் எல்லாத்தையுமே கத்துண்டேன் கணேஷ். பாலா-வை மட்டும் படிக்கலைனா, இந்த வயசுல எது எது பண்ணக் கூடாதோ எல்லாத்தையும் பண்ணிண்டிருந்திருப்பேன். காதலன் பட டிஸ்கஷனுக்காக அவர் அன்னபூர்ணாவுல தங்கியிருந்தபோது குருவோட போய் பார்த்தேன். நிரம்பித் தளும்பும் எனர்ஜியை, இதோ இதுதான் பாதை, இப்படிப்போனா சரியாயிருக்கும்னு காட்டிக்கொடுத்தவர். இந்த வயசுக்கே உண்டான எதிர்பால் ஈர்ப்பை, தப்பில்ல, ஆனா பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்லித் தந்தவர். இயல்பிலேயே ஆண் ஆழ்மனசுக்குள் பதிந்துபோயிருக்கும், ஆணாதிக்க ம்னோபாவம் தலைதூக்கும்போதெல்லாம், நிதானிச்சு யோசிச்சு அமைதியாக்க வைச்சவர். “காதல்னா விட்டுக்கொடுக்குறது”-னு அவர்கிட்ட படிச்சப்ப கண்ல தண்ணி வந்தது. முதல் வருஷம், காலேஜூக்கு வந்த புதுசில, மேனகா-வைப் பார்க்கும்போதெல்லாம் மனசு பரபரன்னு இருக்கும். இந்த் மூணு வருஷத்துல அந்த உணர்வு அப்படியேதான் இருக்கு. ஆனா அது இத்தனை கனிஞ்சிருக்குன்னா, அதுக்கு காரணம் பாலாவும், பாலா அறிமுகம் பண்ணி வச்ச தி.ஜா-வும். விஸ்வா-கூட சொன்னான் “பரவால்ல, முந்திக்கு இப்ப கொஞ்சம் அமைதியாயிட்ட. முன்னாடியெல்லாம் புலம்பிட்டேயிருப்ப...”-ன்னு. ஒரு தடவை செகண்ட் இயர்ல “மேனகா-கிட்ட சொல்லேண்டா...” என்றான் விஸ்வா. பாலாவைப் படித்துக்கொண்டிருந்ததனால்தான், அன்று உட்கார்ந்து யோசித்தேன். பாலா-வோட எழுத்துல எனக்குப் புடிச்ச விஷயமே, எந்தப் பிரச்சனைன்னாலும் உட்கார்ந்து இழை இழையாப் பிரிச்சி யோசிக்கறது. அன்னிக்கு நைட் உட்கார்ந்து யோசிக்கும்போதுதான் தெரிஞ்சது - மேனகா-வோட தெய்வீக அழகுக்கு முன்னாடி நான் ஒரு புல்லு-ன்னு. என்னோட உணர்வு காதலே இல்லன்னு புரிஞ்சது.
அந்த உணர்வுக்கு ஏன் பெயர் வைக்கணும்னு யோசிச்சேன். ஏன் நாம எல்லாத்தையும் சட்னு ஒரு எல்லைக்குள்ள கொண்டுவந்து, பேர் வச்சி குறுக்கிர்றோம்?. புத்தர் தம்ம பதத்துல, “ஆசை தோணுச்சுன்னா, அதை அடக்கவும் செய்யாம, அடையறதுக்கும் ஓடாம, அந்தரத்துலயே வச்சு பார்க்கணும்”-னு சொல்றார். மேனகா முகத்தைப் பார்க்கறப்ப, அவங்க மேனரிசங்களை கவனிக்கறப்ப...என் உள்ளுக்குள்ள பொங்குற ப்ளசர்நெஸ்ஸூம், ப்ளிஸ்ஃபுல்நெஸ்ஸூம்...நான் அனுபவிக்கிறேனே...இதுவே போதுமே...இது காதலாதான் இருக்கணுமா என்ன?...ஒரு தடவை கார்டன் முன்னால, சிவு-வை மீட் பண்ணி பேசிட்டிருந்தப்ப...மேனகா சைக்கிள்-ல கேட்லருந்து வெளியே வந்து ஹாஸ்டல் பக்கம் போயிட்டிருந்தாங்க. மேனகாவைப் பார்த்துட்டு, சிவு என்னோட முகத்தைப் பார்த்தாங்க...நான் கொஞ்ச நேரம் அமைதியாயிருந்துட்டு சொன்னேன் “எனக்கு அந்த முகத்தோட ஆசீர்வாதம் மட்டும் கிடைச்சிட்டுருந்தா அது போதும் சிவு...வேறெதுவும் வேண்டாம்”-னு.
ஒரு வீக் எண்ட், சனிக்கிழமை சாயங்காலம் கிளம்பி நானும், சுப்ரமண்யன் அண்ணாவும் திருவண்ணாமலைக்குப் போனோம். கோவிலுக்கு இல்ல; சுப்ரமண்யன் அண்ணாவுக்கு யோகிராம்சுரத்குமாரைப் பார்க்கணும். நானும் அவரைப் பார்த்ததில்லை. எனக்கும் பார்க்கணும்போல இருந்தது. லேட் நைட் அங்க போய் கோவிலுக்கு முன்னால ஒரு லாட்ஜ்ல ரூம் எடுத்து கொஞ்ச நேரம் தூங்கிட்டு, காலையில சீக்கிரம் எந்திரிச்சி கிளம்பினோம். ”முதல்ல யோகியப் பார்த்துட்டு அப்புறம் கோவிலுக்குப் போகலாம்”னார் மணி அண்ணா. யோகி கோவிலுக்கு வலதுபக்கத் தெருவில் ஒரு வீட்டிலிருந்தார். நாங்கள் போனபோது வீட்டுக்கு வெளியில் வரிசையில ஒரு ஆறுபேர் நின்னுட்டிருந்தாங்க. உள்ளருந்து பாட்டு சத்தம் கேட்டது. ஒவ்வொருத்தரா உள்ளபோயி யோகி-ட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு வெளிய வந்தாங்க. எனக்கு முன்னாடி மணி அண்ணா நின்னுட்டிருந்தார். கேட் பக்கத்துல போயி, கேட்லருக்குற கம்பில கை வச்சு உள்ளே பார்த்ததும், மணி அண்ணா கண்லருந்து தண்ணி கொட்றது. கன்னத்துல வடிஞ்ச கண்ணீரத் துடைக்காம நின்னுட்டிருக்கார். நான் உள்ள போய் யோகி-ட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு வெளியில வந்தேன். மணி அண்ணா உள்ளேயே ஓரமா உட்கார்ந்திருந்தார். மணி அண்ணா வருவதற்கு நேரமாகும் என்று நினைத்து நடந்து வந்து கோவிலுக்கு முன்னாலிருந்த மண்டபத்தில் உட்கார்ந்துகொண்டேன். மனசு மணி அண்ணாவோட அழுகையையே நினைச்சிட்டிருந்தது. ”இது என்ன? இந்த உணர்வெழுச்சி எந்த தளத்துல நடக்குது”-னு மனசு நெகிழ்ந்து நெகிழ்ந்து யோசிச்சிட்டிருந்தது. மண்டபத்துல சில பெரியவங்க படுத்துட்டிருந்தாங்க. கோவிலுக்கு முன்னாடி சிலர் துண்டு விரிச்சி உட்கார்ந்துருந்தாங்க. வெளில வர்றவங்க சிலர் காசு போட்டாங்க. எனக்கு உள்ள தோணுச்சு “அன்பு வேணுண்ணா, எனக்கு அன்பு பிச்சை போடுங்கண்ணு” கேட்கறதுல என்ன தப்புண்ணு. மணி அண்ணா இன்னும் வரல. எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. அங்கேயே உட்கார்ந்த இடத்துல கண்ணை மூடிக்கிட்டேன். மனசுக்குள்ள கைகூப்பிட்டு, தாத்தா, பாட்டி, அம்மா, தம்பிங்க எல்லார் முகத்தையும் கொண்டுவந்து அவங்களுக்காக வேண்டிக்கிட்டேன். மேனகா முகமும் வந்தது...
“சிரிச்ச முகத்தோட, மனசு பூரா சந்தோஷமா, இப்ப மாதிரி எப்பவுமே...நீ நல்லாருக்கணும் தாயி...” வேண்டிக்கொண்டு கண்திறந்தபோது கண்கள் ஈரமாகியிருந்தன.
Episode 9 | இளமை எனும் பூங்காற்று
”பாந்தம் (மெல்லிய “பா”), பாந்தம்னு ஒரு சொல் இருக்கில்லயா அப்பு (இங்கும் மெல்லிய “ப்”-தான்), நானும் நிறைய புக்-ல படிச்சிருக்கேன். அந்த சொல்லோட உண்மையான அர்த்தம், அவங்களை முதன்முதல்ல பார்த்தப்பதான் எனக்குப் புரிஞ்சது.”
பிபிஸி விடுதியின் படிகள் ஏறியதும், வலது புறம் திரும்பினால் முதலில் இருக்கும், என் அறைக்கு அருகில், சேர் போட்டு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அப்புவிடம் மேனகாவைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். இந்த முறை விடுமுறை முடிந்து திருமங்கலத்திலிருந்து கோவை திரும்பியபோது, மூன்று நாட்கள் தங்கவைத்து கல்லூரியையும், கோவையையும் சுற்றிக்காட்ட அப்பாஸையும் கூட்டிவந்திருந்தேன். அப்புவிற்கு மேனகாவைத் தெரியாது. டேப்-ரிகார்டரில், அறைத் தோழன் கமலேஷ் கொடுத்து கேட்கச் சொல்லியிருந்த ஜேசுதாஸின் “வசந்தகீதங்கள்” பாடிக்கொண்டிருந்தது. வராண்டாக்களில் ட்யூப்லைட் வெளிச்சங்கள். இரண்டாம் மாடியிலிருக்கும், டிவி ரூமிலிருந்து, ராஜூவின் ரூம் வரை செல்லும் மெல்லிய கண்ணுக்குத் தெரியாத சிறிய கம்பி ஒன்று, பக்கத்துச் சுவற்றில் கைவைத்தபோது, விரல்களில் நெருடியது.
அப்பாஸ் என் பள்ளித் தோழன். திருமங்கலம் பி.கே.என் ஸ்கூலில் என்னுடன் ஒன்பதாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவன். மிக நெருங்கிய நண்பன். ஆங்கிலப் படங்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவன்; ஜாக்கி ஜான், சில்வஸ்டர் ஸ்டாலன்...எல்லோரையும் தெரிந்துகொண்டது அவன் மூலம்தான். வீட்டிற்குத் தெரியாமல் முதன்முதலில் திருமங்கலம் மீனாட்சி தியேட்டரில் ஒரு ஆங்கில “ஏ” படம் பார்த்தது அவனோடுதான். அப்போது என் வீட்டில் டேப்-ரிகார்டர் இல்லை. விடுமுறை நாட்களில் பாட்டுகள் கேட்பதற்கும், ஒலிச்சித்திரங்கள் கேட்பதற்கும், படம் பார்ப்பதற்கும் பெரும்பாலும் அவன் வீட்டில்தான் கிடப்பேன். அப்பாஸின் வீட்டில் டிவியும், வி.ஸி.ஆர்-ம் இருந்தது. அப்பாஸின் வீட்டில் எல்லோருமே மிக அன்பு. அப்பாஸின் வாப்பா, திருமங்கலத்தில் கட்டிட காண்ட்ராக்டர். ”கலைமான் புகையிலை” ஏஜென்சியும் எடுத்திருந்தார். நானும், அப்பாஸும் ஒருசில ஞாயிறுகளில், புகையிலை லாரி லோடு வரும்போது, மார்க்கெட் உள்ளே கடைகளுக்கு புகையிலை பண்டில்களை சப்ளை செய்துவிட்டு கலெக்ஷனுக்காக செல்வோம். மாலைகளில், கட்டிட வேலைகள் முடித்துவரும், மேசன்கள், வேலையாட்களுக்கு சம்பளம் பிரித்துக் கொடுப்பதுமுண்டு.
அப்பாஸின் இரண்டு அக்காக்களும் திருமணமாகி திருமங்கலத்தில்தான் இருந்தார்கள். தினமும் அப்பாஸின் வீட்டிற்கு வந்துபோய்க்கொண்டுதான் இருப்பார்கள். அப்பாஸிற்கு பானு என்று ஒரு தங்கை இருந்தார். ஷேக் என்று ஒரு தம்பி. ஹூசேனா என்ற மிக மிக அழகான ஒரு பெண், வீட்டு வேலைகள் செய்வதற்காக அப்பாஸ் வீட்டில் தங்கியிருந்தார். ஹூசேனாவிற்கு, எனக்கு அப்பாஸை விட ஒரு வயதுதான் அதிகம். அப்பாஸிற்கு சொந்தம்தான் என்றாலும், அவர்கள் குடும்பம் கொஞ்சம் ஏழை என்பதால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இங்கு அப்பாஸ் வீட்டில், வீட்டு வேலைகள் செய்வதற்காக வந்து தங்கியிருந்தார். அப்பாஸின் அப்பா, ஹூசேனாவின் வீட்டிற்கு மாதாமாதம் பணம் அனுப்பிக்கொண்டிருந்தார். பானுவும், ஹூசேனாவும் எனக்கு மிக அணுக்கத் தோழிகள். விடுமுறை நாட்களில், காலையில் சாப்பிட்டுவிட்டு அப்பாஸ் வீட்டிற்குச் சென்றுவிட்டால், மதிய உணவு,இரவுணவு எல்லாம் எனக்கு அங்கேதான். வீடுதிரும்ப சில நாட்கள் பத்து மணி அல்லது பதினொன்றாகும். அம்மாவிடம் திட்டுகள் கிடைக்கும். அப்பாஸ் வீட்டில் சாப்பிடும் நேரம் என்பது ஒரு கொண்டாட்டமான நேரம். எல்லோரும் சுற்றி தரையில் உட்கார்ந்துகொள்ள ஹூசேனா பரிமாறுவார். அவ்வப்போது பரிமாறிவிட்டு எங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார். ஹூசேனா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டால் மனம் சிறகடிக்கும். சில நாட்களில் அப்பாஸின் அம்மா, சாதத்தை குழம்பு ஊற்றி பிசைந்து உருண்டைகளாக்கி, எல்லோர் கைகளிலும் ஒன்றொன்றாகத் தருவார்கள். நான் அப்போது அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தேன். எனக்கு மட்டும், உம்மா, ஹூசேனாவை சைவம் சமைக்கச் சொல்லியிருப்பார். ஹூசேனாவின் கைகள் மாயம் கொண்டவை. ஹூசேனாவின் கைகள் பட்ட சாப்பாடு எல்லாம் அமிர்தமாகியிருக்கும். எனக்கே எனக்கென்று, கெட்டிப் பருப்பும், சாம்பாரும், காயும், கீரும் ஹூசேனா சமைப்பதுண்டு. சாதம் போட்டு, குழம்பும் நெய்யும் ஊற்றி ஹூசேனா தட்டை என்னிடம் தருவார். சமயங்களில் ஹூசேனா கையாலேயே பிசைந்து வாங்கிக்கொள்வதுமுண்டு.
ப்ளஸ் டூ முடித்து, நான் தோட்டக்கலை பயில கோவை வந்துவிட்டேன். அப்பாஸ் மதுரைக் கல்லூரியில் சேர்ந்திருந்தான். இப்போதும் கல்லூரி விடுமுறையில் கோவையிலிருந்து திருமங்கலம் புதுநகர் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அப்பாஸ் வீட்டிற்கு இரண்டு மூன்று நாட்களாவது போவேன். ஹூசேனாவின் கையால் சாப்பிடுவதற்காகவே. அப்பாஸின் வீட்டில் இருந்தால் எனக்கு அந்நியர் வீட்டில் இருப்பது போலவே இருக்காது. அவ்வீடு அன்பின் நிறைவில் தழும்பிக்கொண்டிருந்தது என்றுதான் நினைக்கிறேன். “எப்ப வந்த? லீவு எத்தனை நாளைக்கு?” முகம் முழுக்க சிரிப்புடன் ஹூசேனா கேட்கும்போதே விடுமுறை அர்த்தம் பெற்றுவிடும்.
அப்பாஸ் வீடிருக்கும் தெருக்கோடியில்தான் புதிதாக “பானு” தியேட்டர் கட்டி திறந்திருந்தார்கள். வீட்டில் போரடித்தால், நாங்கள் பானு தியேட்டரில் எந்த நேரமென்றாலும் நுழைந்து விடுவதுண்டு. தியேட்டரின் உள்ளே அப்பாஸின் நண்பனொருவன், கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்திருந்தான்.
தியேட்டரில் “வெற்றி விழா” படம் ஓடிக்கொண்டிருந்தது. வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த நானும், அப்பாஸூம் திடீரென்று கிளம்பி அம்மாவிடம், “அம்மா, நாங்க தியேட்டருக்குப் போறோம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினோம். “சாப்பிட்டுப் போங்கடா, வர்றதுக்கு லேட்டாயிடுமே?. மணி பத்தாச்சு. இப்ப எதுக்கு போறீங்க, இரண்டாம் ஆட்டமும் ஒன்பது மணிக்கு ஆரம்பிச்சுருப்பானே?” அம்மா சொல்லச் சொல்ல கேட்காமல் கிளம்பிச் சென்றோம். தியேட்டரில் இரண்டாமாட்டம் ஓடிக்கொண்டிருந்தது. கேட்டில் அப்பாஸின் நண்பன் பெயர் சொல்லி உள்ளே நுழைந்தோம். இரண்டாமாட்டம் என்பதால் கதவுகள் திறந்தேதான் இருந்தன. திரையில் “மாருகோ” பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. பாட்டில் சசிகலாவின் உடை பறந்தபோது விசில்கள் எழுந்தன.
படம் முடிந்து வீட்டிற்கு வரும்போது மணி நடு இரவு பனிரெண்டு. அப்பாஸின் வீட்டிற்கு முன்னாலிருக்கும் பெரிய காலியிடத்தில்தான் மணல், கற்கள், மரக் கட்டைகள் எல்லாம் போட்டுவைத்திருப்பார்கள். வெளிச்சத்தில் மணல்குவியல் மீது படுத்திருந்த இரண்டு நாய்கள் எங்களைப் பார்த்ததும் குலைத்தன. கதவு தட்டினோம். ஹூசேனா-தான் உள்விளக்கு போட்டு கதவு திறந்தார். அம்மா, வாப்பா, பானு, ஷேக் எல்லோரும் தூங்கியிருந்தார்கள். வீட்டுக்குள் போனதும் “சாப்புட்டு வீட்டுக்குப் போடா. இரு, கசகசன்னு இருக்கு, நான் போய் தலையில் தண்ணி ஊத்திட்டு வந்துர்றேன்” சொல்லிவிட்டு அப்பாஸ் போனான். ஹாலுக்கும் கிச்சனுக்கும் இடையில் திறந்த வெளியிருக்கும். அங்குதான் துணி துவைக்கும் கல்லும் பக்கத்தில் பாத்திரங்கள் கழுவுவதற்கான இடமும் இருக்கும். அங்கிருக்கும் விளக்கைப் போட்டு, முன் ஹால் விளக்கை அணைத்துவிட்டு, “வா” என்று கிச்சனுக்கு அழைத்துப்போனார் ஹூசேனா. கிச்சன் விளக்கைப் போட்டு, பாத்திர அலமாரியின் அருகில் மடக்கு சேரை விரித்துப்போட்டு ”உட்கார்ந்துக்கோ. தோசை சுடறேன். தக்காளி சட்னி இருக்கு” சொல்லிவிட்டு தோசைக்கல்லை அடுப்பில் வைத்தார். அப்பாஸ் வீட்டின் சமையலறை மிகச்சிறியது. ஒடுக்கமானது.
முதல் தோசையை தட்டில் வைத்து, தக்காளி சட்னியை ஊற்றி என்னிடம் தந்தார் ஹூசேனா. “சர்க்கரை வச்சுக்குறியா?” என்றார். நான் வேண்டாம் என்றேன். பிய்த்து, சாப்பிட ஆரம்பித்தேன். இரண்டாவது தோசையை கல்லில் ஊற்றிவிட்டு, “எப்ப கோயம்புத்தூர் திரும்பிப் போகணும்?” என்று கேட்டார். “நாளைக்கு சாயந்திரம்” என்றேன். ”மதுரை போயி போகணும் இல்ல? டிடிசி-யில புக் பண்ணிருக்கிறியா?” என்றார். “இல்ல. இங்கேயிருந்தே ஏறிக்கற மாதிரி, சிவகாசி-யிலருந்து வர்ற டிராவல்ஸ்-ல புக் பண்ணிருக்குது” என்றேன்.
அப்பாஸ் இன்னும் குளித்துவிட்டு வரவில்லை. நான் சமையலறை வாசலுக்கு நேரே உட்கார்ந்திருந்ததால், வெளியில், வானத்தில் நிலா தெரிந்தது. “உனக்கு ஒண்ணு தரணுன்னு நினைச்சேன்” என்று சொல்லியபடி, தோசையைத் திருப்பிப் போட்டுவிட்டு, பின்னால் திரும்பி மர அலமாரியின் டிராயரைத் திறந்து ஒரு செயினை எடுத்தார். “போன வாரம் நானும், பானுவும் கவர்ன்மெண்ட் கேர்ள்ஸ் ஸ்கூல்ல போட்டிருந்த பொருட்காட்சிக்கு போயிருந்தோமா... எங்களுக்கு வாங்கும்பொது உனக்கும் வாங்கணுன்னு தோணுச்சி. இந்தா” என்று கொடுத்தார். நான் இடதுகையில் இருந்த தட்டை அருகில் அப்பாஸிற்காக போட்டிருந்த சேரில் வைத்துவிட்டு, வலது கையால் இருவிரலில் வாங்கி இடதுகைக்கு மாற்றிக்கொண்டு பார்த்தேன். வளையம் வளையாமாய் நீண்ட, வெண்மையான செயினில் நடுவில் கூம்பு வடிவில் பச்சைக்கல் பதித்த டாலர். பச்சைக்கல்லினுள் அரபியில் ஏதோ எழுதியிருந்தது. ”என்ன எழுதியிருக்கு ஹூசேனா?” என்றேன். ஹூசேனாவிற்கு அரபி படிக்கத் தெரியும். தினமும் மாலையில் வீட்டில் துஆ படிப்பது ஹூசேனாதான். “குர்ஆன்-ல வர்ற ஒரு பிரார்த்தனை வாக்கியம்” என்று புன்னகையுடன் சொன்னார். “போட்டுக்கோ” என்றார். நான் இடதுகையால், தலையைச் சுற்றி போட முயன்றேன். தலைக்குள் போகவில்லை. “இரு. கொக்கியை கழட்டி மாட்டிக்கலாம்” என்று சொல்லிவிட்டு, தோசையை தட்டில் போட்டுவிட்டு, தோசைக்கரண்டியை மேடைமீது வைத்துவிட்டு, செயினை வாங்கி பின்னை கழட்டி, என் கழுத்தில் சுற்றி, பின்னால் கொக்கியை மறுபடி மாட்டி, கழன்று விடாமல் இருக்க விரலால் கொக்கியின் வளையத்தை அழுத்தினார். வளையம் அமுங்கவில்லை. “ஹார்டாயிருக்குது” என்று சொல்லிக்கொண்டே, தலைகுனிந்து பல்லால் கடித்து வளையத்தை இறுக்கினார். என் மனது இளகி இளகி கரைந்துகொண்டிருந்தது. குரானின் பச்சை டாலர், நான் ஏற்கனவே இரண்டு சுற்றாய் போட்டிருந்த இஸ்கானின் துளசி மாலைக்கருகில் என் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. கை நடுங்குவதை மறைக்க நான் தட்டை மறுபடி எடுத்து இரண்டு கைகளாலேயும் பிடித்துக்கொண்டேன்.
கரண்டியை கையில் எடுத்துக்கொண்டு “மறுபடி எப்ப வருவே?” என்றார். ”அடுத்து தீபாவளிக்குத்தான் லீவு இருக்கும்” என்றேன். ”இன்னும் மூணு மாசம் இருக்குல்ல?” என்று தோசையிலிருந்து பார்வையைத் திருப்பி என்னைப்பார்த்து புன்னகைத்தார். “ஒழுங்கா படிக்கிறியா?” என்று கேட்டுவிட்டு “நல்லா படிப்பா, அம்மா பாவம். எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னைப் படிக்க வைக்கிறாங்க” என்றார். எனக்கு தொண்டை அடைத்தது.
கைலியில் மாறிக்கொண்டு அப்பாஸ் வந்தான். “நல்லா சாப்பிட்டுட்டு போடா” என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்தான். சாப்பிட்டு முடித்து சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பியபோது மணி ஒன்று. கையசைத்துவிட்டு கதவை மூடுமுன் “பார்த்துப் போ. இருட்டுல நாய்மேல சைக்கிளை ஏத்திராத...” சிரித்துக்கொண்டே சொன்னார் ஹூசேனா.
அப்பாஸிடம், அறைக்கு முன்னால், மேனகாவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, கை நெஞ்சுக்கருகில் டாலரை மெல்லிதாய் ஸ்பரிசித்துக்கொண்டிருந்தது. “ஹூசேனாம்மா...நீ ஒரு தடவை மேனகாவைப் பார்க்கணும்” என்று மனது நினைத்துக்கொண்டது.
Episode 10 | விசும்பின் மலர்
பழைய விடுதியில், முன்னிரவில் கரண்ட் போனது. நான், படித்துக்கொண்டிருந்த பாலாவின் “மெர்க்குரிப் பூக்கள்”-ஐ டேபிளின் மேல் கவிழ்த்து வைத்துவிட்டு, என் அறை 112-ஐ விட்டு வெளியே வந்தேன். இருட்டு கவிழ்ந்திருந்தாலும், இன்னும் மூன்று நாட்களில் வரப்போகும் பௌர்ணமியின் முன்னறிவிப்பாக, நிலவின் மெல்லிய வெளிச்சம் இருந்தது. நண்பர்கள் அனைவரும் அறைகளை விட்டு வெளியில் வந்திருந்தனர். எதிர் பிளாக்கிலிருந்து “ஓடிப்போயிடலாமா?” என்ற குரல் கேட்டது. தியேட்டர்களில் அப்போதுதான் “இதயத்தை திருடாதே” வெளியாகியிருந்தது. விசில்கள் சத்தம் ”ஓடிப்போயிடலாமா?”-வைத் தொடர்ந்தது.
இடதுபக்க பிளாக்கில், வராண்டாவில் முன்னும் பின்னுமாய் நடந்துகொண்டிருப்பது சதாசிவமாகத்தான் இருக்கவேண்டும். அநேகமாய் சேண்டிங் செய்துகொண்டிருப்பான். எனக்கு, கல்லூரியின் முதல் வருடத்தில், சதாசிவம் அறிமுகமானபோது, நான் அடைந்த ஆச்சர்யம் நினைவுக்கு வந்தது. எத்தனை அமைதி...அந்த வயதுக்கேயுண்டான இளமையின் பரபரப்புகள் இல்லாத நிதானம்...மெதுவான நடை...ஒருமுறை சதாசிவம் அறைக்குப் போயிருந்தபோது, இன்னும் ஆச்சர்யம் அதிகமானது. முற்றிலும் வெண்மை...தூய்மை...சூட்கேஸின் மேல்கூட ஒரு வெண்துணியை போர்த்தியிருந்தான். டேபிளின் மேல் புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. நான், புத்தகங்களும் துணிகளும் இறைந்துகிடக்கும் என் ரூமை நினைத்துக்கொண்டேன்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை முன் மதியம், ஆர்.ஐ கட்டிடத்தின் பின்பகுதியில், கண்ணகுமாரின் “விவேகானந்தா ஸ்டடி சர்க்கிள்”-ன் வாராந்திரக் கூட்டத்தில்தான் சதாசிவத்துடன் முறையான அறிமுகம் உண்டானது. அக்கூட்டத்திற்கு மொத்தமே ஆறுபேர்தான் வந்திருந்தோம். குளிர்ந்த தரையில் வட்டமாக உட்கார்ந்திருந்தோம். கண்ணகுமார் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு எல்லோரையும் அறிமுகப்படுத்திக்கொள்ளச் சொன்னார். எல்லோரும் பெயர், ஊர், பெற்றோர்கள் பற்றிய ஒரு சிறு அறிமுகம் செய்துகொண்டோம். விடுமுறை நாளின் இன்னும் ஆழமான அமைதியில் ஆர்.ஐ பில்டிங் இருந்தது. வெளியில் உச்சி வெயிலின் பிரகாசம். எங்கள் வகுப்பின் விஜியும் வந்திருந்தார், இன்னும் இரண்டு தோழிகளோடு. அந்த சூழ்நிலையினாலோ, அங்கு உண்டான பாஸிடிவ் எனர்ஜியினாலோ என்னவோ, “அப்பா இல்ல, என்னோட பதினோரு வயசுல இறந்துட்டார். அம்மா ஸ்கூல்ல வொர்க் பண்றாங்க” என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும்போதே என் குரல் உடைந்தது. நான் தலைகுனிந்து கொண்டேன். 45 நிமிடங்கள் கழித்து, கூட்டம் முடிந்ததும், என்னைக் கூட்டி வைத்து, ஆர்.ஐ பில்டிங்கின் ஒரு தூண் ஓரம் நின்று, கீதை, கர்மா, பக்தி...என்று அரைமணி நேரம் க்ளாஸ் எடுத்தான் சதாசிவம். இஸ்கானுடனான என் வாழ்நாள் தொடர்பு அன்றுதான் தொடங்கியது.
நானும், சாரங்கனும் பூசாரிபாளையம் டீக்கடையில் உட்கார்ந்து, மரவள்ளி சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். லாலி ரோடிற்குத்தான் வழக்கமாய் போவதென்றாலும், ஒருசில நாட்கள் பின் மாலைகளில் பூசாரிபாளையம் வருவதுண்டு. எனக்கு காபியும், சாரங்கனுக்கு பாலில்லாத டீயும் சொல்லியிருந்தோம். சாரங்கன் எப்போதுமே பாலில்லாத டீதான் குடிப்பான். சாரங்கனின் ரசனைகள் வித்தியாசமானவை. டி.ராஜேந்தரின் பாட்டுக்கள் அவனுக்குப் பிடிக்கும். கூடவே கவுண்டமணியையும். பூசாரிபாளையம் டீக்கடை அண்ணாவிடம், கணக்கில் எழுதிக்கொள்ளச் சொல்லிவிட்டு, மாதக் கடைசியில் செட்டில் செய்துகொள்ளலாம். பூசாரிபாளையம் ரோடு, லாலி ரோடைப் போல் இரைச்சலில்லாதது. பஸ்களும் எப்போதாவதுதான் கடந்துபோகும். அவசரத்திற்கு டீ குடிப்பதற்கு பூசாரிபாளையம் வசதி. சென்ற வாரம், டிவி ரூமில் டெக்கில் பார்த்த பாக்யராஜின் “நேற்று இன்று நாளை” படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
“நேத்து ப்ராக்டிகல் எக்சாம் எப்படிடா எழுதுன?” என்று கேட்டான் சாரங்கன். நான் சிரித்துக்கொண்டே “அத ஏன் கேட்குற? ஐடெண்டிஃபிகேஷனுக்கு வச்சிருந்த பத்து ஸ்பெசிமன்-ல பாதி என்னன்னே தெரியல. அப்புறம் பக்கத்து வரிசைல உட்கார்ந்திருந்த ஜேம்ஸ் அண்ணாகிட்ட கிசுசிசுப்பாய் கேட்டேன். அவர்தான் கீழே கிடந்த காஞ்ச இலைல எழுதி தூக்கிப் போட்டார்” என்றேன். ஜேம்ஸ் அண்ணா எங்களுக்கு ஒருவருடம் சீனியர். ஆனால் ஒருசில கோர்ஸ்கள் எங்களுடன் இந்த வருடம்தான் படித்துக்கொண்டிருந்தார்.
நேற்று ஆர்ச்சேர்டு மரத்தடியில்தான் வரிசையாய் பிரிந்து உட்கார்ந்து எக்சாம் எழுதினோம். மரத்தடியில் சுற்றிக் கட்டியிருந்த கல்சுவரில் ஐடெண்டிஃபிகேஷன் செய்து அதைப்பற்றிய வளர்ப்புக் கட்டுரை எழுதுவதற்கான ஸ்பெசிமன்-கள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருவராய் எழுந்துசென்று பார்த்து குறித்துக்கொண்டு வரவேண்டும். எனக்கு பாதி தெரியவில்லை. நல்லவேளை, ஜேம்ஸ் அண்ணா உதவினார். எழுதி முடித்தபோது இன்னும் கால்மணி நேரம் பாக்கியிருந்தது. மேனகா எங்கு உட்கார்ந்திருக்கிறார் என்று முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்தேன். வலதுபுறம் இரண்டாவது வரிசையில் கடைசியில் உட்கார்ந்திருந்தார். கையில் ஸ்கேல் வைத்து, ஆன்ஸர் ஸீட்டில் கோடுபோட்டுக்கொண்டிருந்தார். மேனகாவிற்குத்தான் எந்த நிற உடையென்றாலும் எப்படிப் பொருந்திவிடுகிறது?. இந்த சாதாரண காகி யூனிஃபார்மிலும் எத்தனை அழகாயிருக்கிறார்?. மேனகாவை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ஐம்பெரும் இயற்கையின் ஏதோ ஒன்று மனித உடல்கொண்டு வந்ததுபோல் இருக்கும். பபாயா மரங்களுக்கிடையில் ப்ராக்டிகல் க்ளாஸில் பார்க்கும்போது, ப்ருத்விதான் இயற்கைப் பேரழகோடு கையில் குறிப்பு ஏடுடன் முன்னால் நிற்பதாகத் தோன்றும். ஒருசில நாட்கள் காலை ஏழேகால் மணிக்கு, கிழக்கில் ஏதேனும் ஃபீல்டில் நிற்கும்போது, மேலெழும் சூரியனுக்கு அடியில் சிவப்பு துப்பட்டாவுடன் மேனகா தீயின் தணலாய் தெரிவார். சைக்கிளில் செல்லும்போது பார்ப்பதற்கு காற்று தென்றலாய் வருடிச் செல்வது போலிருக்கும். ஒருசில நாட்கள் ப்ராக்டிகல் க்ளாஸ் முடிந்து அவசர அவசரமாய் விடுதிக்குச் சென்று, அரை மணி நேர இடைவெளியில் காக்காய் குளியலுக்காய் பாத்ரூமிற்குள் சென்று ஷவர் திருகி தண்ணீர் தலையில் இறங்கும்போது, மனதின் தண்மையில் அம்முகம் தெரியும்.
”தத்தம்” சார் வகுப்பு முடித்துவிட்டு கிளம்பிச் சென்றார். அடுத்த வகுப்பு ராமசாமி சார். இன்னும் அவர் வரவில்லை. நாங்கள், தோட்டக்கலை துறையின் விரிவுரை அறையில் உட்கார்ந்திருந்தோம். அஸ்வதி எழுந்து சென்று பசும் பலகையை டஸ்டரால் துடைத்துக்கொண்டிருந்தார். நான் மேனகாவை வலதுபுறம் லேசாகத் திரும்பிப்பார்த்தேன். நாலாவது வரிசையில் சுவர் ஓரமாக கலாவும், பக்கத்தில் மேனகாவும் உட்கார்ந்திருந்தனர். மேனகா, தத்தம் சார் பாடத்தின் குறிப்பு நோட்டை சேருக்கடியில் வைத்துவிட்டு வேறு நோட்டை எடுத்து மேலே வைத்துக்கொண்டார். கலாவிடம் ஏதோ கேட்டார். உதடுகள் அசைவது மட்டும்தான் தெரிந்தது. இதுவரையிலும், மேனகா சத்தமாகப் பேசியோ, வாய்விட்டு சத்தமாக சிரித்தோ நான் பார்த்ததில்லை. மென் ஆரஞ்சு நிறத்தில் புடவை கட்டியிருந்தார். கையிலிருந்த பேனாவின் பின் முனையை மூடிய உதடுகள்மேல் வைத்துக்கொண்டு நோட்டில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்தி சாயும் நேரம் சூரியன் மறைந்தபின், வானத்தில் சிவப்பும், ஆரஞ்சுமாக ஒரு ஓவியம் தெரியுமே?; கடவுளின் ஒரு அற்புதமான ஓவியத்தைப் பார்ப்பது போலிருந்தது. ஆகாயம் எனும் விசும்பு; வானமில்லை. ஆகாயம். ஆகாயத்திற்கு விசும்பு என்ற சொல்தான் பொருத்தம். விசும்பு ஓர் பெண் வடிவம் கொண்டால்...”வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி...” மனதுக்குள் எப்போதோ பல்ளியில் படித்த இறைவணக்கப் பாடல் வரிகள் ஓடியது. எனக்கு, இன்மையின் சுவையையும் உணர்த்திச் செல்லும் அருட்பெரும் ஜோதியே...விசும்பின் மலரே...உனக்கு நம்ஸ்காரம்...
Episode 11 | நீலக்கடலலையே...
கலை பேக்கரியில் வேறு யாருமில்லை. நான், குரு, மணி, பழனி, குமார் ஒரு டேபிளைச் சுற்றி உட்கார்ந்திருந்தோம். டேபிளின் மேல் ஏற்கனவே ஆர்டர் செய்து, கடைப் பையன் கொண்டுவந்து வைத்திருந்த வட்ட வடிவ பிங்க் நிற கேக் உட்கார்ந்திருந்தது. “பாரதியின் நினைவாக” என்று சொல்லிக்கொண்டே, குரு ஒரு சின்ன துண்டு வெட்டினான். எல்லோரும் கைதட்டினோம். மணி விசிலடித்தான். கல்லாவில் உட்கார்ந்திருந்த கடைக்காரர் திரும்பிப்பார்த்தார். “சாரிண்ணா. இன்னைக்கு பாரதியார் பிறந்தநாள். அதான் ஒரு சின்ன செலிப்ரேசன்” குமார், கைதூக்கி கடைக்காரரிடம் அனுமதி கேட்பதுபோல் சொன்னான். கடைக்காரர் சிரித்துக்கொண்டே தலையசைத்தார்.
“எல்லோரும் அவங்கவங்ளுக்குப் பிடிச்ச பாரதியார் பாட்ட படிச்சிட்டு கேக் கட் பண்ணிக்கலாம்” என்றான் குரு. நான் பாரதியின் கவிதைகள் முழுத் தொகுப்பு கையோடு எடுத்துப் போயிருந்தேன். பாலாவினால் பாரதி பித்து தலைக்கேறியிருந்தது. எல்லோரும் கேக் ஒரு விள்ளல் எடுத்து வாயில் இட்டுக்கொண்டோம். கடைக்கு வந்து ஹனி கேக் வாங்கிய இரண்டு குட்டிப் பெண்களுக்கு, கேக் இரண்டு பீஸ் எடுத்துச்சென்று கொடுத்துவிட்டு வந்தான் மணி. “சிவு இல்லாம செலிப்ரேஷன் களைகட்டாது” என்றான் பழனி. “ஆமா, பாலாவையும், சிவு-வையும் மட்டுமாவது வரச் சொல்லியிருக்கலாம்” என்றேன். குரு புத்தகத்தைப் பிரித்து ”பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்...” வாசித்தான். இது நான், ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, திருமங்கலம் பி.கே.என் ஸ்கூல் விடுதியில் தங்கிப் படித்தபோது அங்கு விடிகாலையில் ப்ரார்த்தனையில் பாடும் பாடல். தினமும் விடிகாலையில் கத்தி கோரஸாக பாடியதால் வரிகள் அனைத்தும் துல்லியமாக மனப்பாடம் ஆகியிருந்தன. பாலா ஒரு நாவலில் இப்பாடலை பிரித்து, வார்த்தை வார்த்தையாய் அலசியிருப்பார்.
மனம் சட்டென்று மேனகாவின் நினைவுகளுக்குச் சென்றது. ஆம், இப்போதெல்லாம் எங்கு சென்றாலும், எங்கு இருந்தாலும், புத்தகம் படித்தாலும், கோவிலுக்குச் சென்றாலும், அந்த சூழ்நிலையின் ஏதோ ஒன்று மேனகாவின் நினைவினைத் தொட்டெடுத்து விடுகிறது. அல்லது மேனகாவின் முகம் உள்ளுக்குள் மறைவதேயில்லையோ என்ற ஐயம் வந்தது. சாய்பாபா காலனி போகும் வழியில், தடாகம் ரோட்டிலிருந்த காமாட்சி அம்மன் கோவிலில் போன வாரம் காயத்ரியின் கச்சேரி கேட்கப் போயிருந்தபோது, காயத்ரி சுருதி சேர்ந்தபின், “ஹிமகிரி தனயே ஹேமலதே...” என்று ஆரம்பித்ததுமே மேனகாவின் வட்டவடிவமான முகமும், கண்களும்தான் ஞாபகம் வந்தது. குரு மேலும் படித்துக்கொண்டிருந்தான். “எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி...’ ஆம், அம்முகம் பொற்சுடர்தான். நேற்று, எக்ஸ்டென்ஷன் செமினார் ஹாலில், மேனகா வகுப்பிற்குள் நுழைவதற்காக, கண்களை வாசலிலேயே வைத்திருந்தேன். அச்சுடர் வகுப்பிற்குள் நுழைந்தபோது, உண்மையிலேயே மனசுக்குள் வெளிச்சம் பரவியது போல்தான் இருந்தது. ஒவ்வொரு முறையும், மேனகா வகுப்பிற்குள் நுழைவதற்காக காத்திருப்பதும், உள்ளே வந்ததும் அந்த முகத்தைப் பார்த்தவுடன் மனதுள் படரும் ஒரு ஆனந்த நிம்மதியையும் வார்தைகளால் விவரித்துவிட முடியுமா, என்ன?. “தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கிங்குன்...” குரு படிக்குமுன்பே அடுத்த வரி மனதுக்குள் வந்தது. அந்த சௌந்தர்யத்துக்கு முன்னால நான் ஒரு தூசு-ன்னு நினைப்பு வரும்போது தொழாம என்ன பண்ண முடியும்?. “விழிதுயில்கின்றனை இன்னும் எம் தாயே, வியப்பிது காண் பள்ளியெழுந்தருளாயே” குரு பாடலை முடித்தான். எனக்கு ஏனோ அது “அறிதுயில்” என்றே மனதில் பதிந்திருந்தது. ஆம், அம்முகம் கண்ணில் தெரிவது எழுந்தருளல்தான்.
மணி பேக்கரிக்கு வந்த இன்னும் சிலருக்கு கேக் கொடுத்தான். பழனி, புத்தகத்தின் இன்னொரு பக்கம் திருப்பி இன்னொரு பாடலை படித்தான். “கண்டதொரு காட்சி கனவு நனவென்றறியேன்...” என்று அவன் ஆரம்பித்தபோது ‘அடப்பாவி, இந்தப் பாட்டுதான் உனக்குக் கிடைச்சதா?’ என்று மனதுக்குள் நினைத்தேன். அது குயில் பாட்டில் வருவது. “எண்ணுதலுஞ் செய்யேன், இருபது பேய்கொண்டவன்போல் கண்ணும் முகமும் களியேறி...”. மனது “அப்பா, என்ன மனிதர் இவர்...” என்று அரற்றியது. விவரிக்க முடியாததை, விவரிக்கும் சக்திதான் கவிஞர்களுக்கு எப்படி கிடைக்கிறது? எத்தனை வருடங்களுக்கு முன்னால் இதை எழுதியிருப்பார்?. மேனகாவைப் பார்க்கும் கணம், மனம் களியின் உச்சம் கொண்டுதான், அந்த நிலையில் தொடரமுடியாமல், செய்வதறியாமல் திகைத்து அழ ஆரம்பித்துவிடுகிறது என்று நினைக்கிறேன். ”புத்திமனம் சித்தமொன்றறியாமல்...” குமார், அதே பக்கத்தில் இன்னொரு பாடலைப் படித்தான். மேனகாவைப் பார்க்கும்போது புத்தி, மனம், சித்தம் எல்லாம் ஒருகணம் அழிந்துதான் போகிறது. நான் மனதிற்குள் மேனகாவிடம் கேட்டேன் “மேனகாம்மா, குயில் பாட்டு படிச்சிருக்கீங்களா நீங்க?”.
அடுத்த பாடலை, தோத்திரப் பாடல்களிருந்து குரு படித்தான். “சந்திரனொளியில் அவளைக் கண்டேன், சரணமென்று புகுந்துகொண்டேன்...”. ஆம், அவ்வழகின் முன் நெடுஞ்சாண்கிடையாய் நமஸ்கரித்து விழுந்து சரணடைவதைத் தவிர வேறேனும் வழி உண்டா?. “குரு, உன்னோட மிருதங்கத்த எடுத்து வந்திருக்கலாம்” என்று குமார் சிரித்துக்கொண்டே சொன்னான். குரு, வடவள்ளியில் ஒரு இசைப்பள்ளியில் வார இறுதி விடுமுறை நாட்களில் மிருதங்கம் கற்றுக்கொள்கிறான். விடுதி அறையில், மிருதங்கம் வைத்து மாலை வேளைகளில் பயிற்சி செய்வதுண்டு.
படிப்பதற்கு என்முறை வந்தது. எனக்குப் பிடித்தமான கண்ணம்மா பக்கங்களுக்குள் சென்றேன்.
“நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்; நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்; திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்; சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்; பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;”
ஏனோ அழுதுவிடுவேனோ என்று பயமாக இருந்தது. பாதியிலேயே நிறுத்திக்கொண்டேன். மறுபடியும், மறுபடியும் சுற்றிச் சுற்றி பாடல்கள் வாசித்துக்கொண்டிருந்தோம். வியப்பதும், உணர்ச்சிவசப்படுவதுமாய்...நேரம் போனதே தெரியவில்லை. நாலைந்து டீ குடித்திருப்போம் என்று நினைக்கிறேன். எட்டரை மணிக்கு, கடைக்காரருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம். பஞ்சமுக ஆஞ்சநேயரை தூரத்திலிருந்தே கும்பிட்டுவிட்டு, சைக்கிள்களில் ஏறி விடுதி வந்து பேசிக்கொண்டே இரவுணவு முடித்துவிட்டு, அவரவர் அறைகளுக்குப் போனோம்.
அன்றிரவு, ஒரு மணி வரைக்கும் தூக்கம் வராமல் புரண்டுகொண்டே இருந்தேன். மனது முழுதும் மேனகா எனும் கண்ணம்மாவே நிறைந்திருந்தார். ஒரு கட்டத்தில் மூச்சு முட்டுவது போல் இருந்தது. எழுந்து கதவைத் திறந்து வெளியில் வந்தேன். பின்னிரவின் நிசப்தம். விடுதியின் முன்னிருந்த மரங்கள் அசைவில்லாமல் நின்றிருந்தன. வானத்தில் மேகங்களின் பின்னால் நிலா பாதி மறைந்திருந்தது. ஏனோ மேனகாவை அப்போதே, அந்தக் கணமே பார்க்கவேண்டும் போலிருந்தது. என்ன நினைத்தேனோ, சைக்கிளை எடுத்து ஓட்டிக்கொண்டு ஆர்ச்சேர்ட் கேட் தாண்டி, வெட்னரி மாட்டுப்பண்ணையையும் தாண்டி இரண்டாம் கேட்டில் வெளியில் வந்து இடதுபுறம் திரும்பி கொஞ்சதூரம் சென்று சட்டென்று நின்றேன். சைக்கிளிலேயே உட்கார்ந்துகொண்டு, இடதுகாலை தரையில் ஊன்றி தலைகுனிந்து மௌனமாக பத்துநிமிடம் நின்றுகொண்டிருந்தேன். ”என்னாச்சு எனக்கு? என்ன செய்துகொண்டிருக்கிறேன்?” பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்த்தபோது மகளிர் விடுதியினுள் இருந்த விநாயகர் கோவிலில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. கைகூப்பிவிட்டு, சைக்கிளைத் திருப்பிக்கொண்டு மறுபடி கேட்டில் நுழைந்து, மெதுவாக மிதித்துக்கொண்டு வந்தேன். மனதில் கண்ணம்மாவின் வரிகள் மறுபடியும்...
ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்; ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!
அந்த கடைசி வார்த்தை, கண்ணம்மா மனதில் ஓடியபோது, ”மா” என்று முடியுமிடத்தில் தானாகவே நீண்ட “ஆ”காரம்...சட்டென்று கண்களில் நீர் துளிர்க்க வைத்தது. விடுதி வந்து அறைக்கு முன்னால் வராண்டா விளிம்பில் கால்களை தொங்கவிட்டு இருட்டில் உட்கார்ந்து கொண்டேன். காலையில் ஏழு மணிக்குத்தான் ஆர்ச்சேர்டில் ப்ராக்டிகல் கிளாஸ். மணி இரண்டுதான் இருக்குமென்று நினைக்கிறேன். மேனகாவைப் பார்ப்பதற்கு இன்னும் ஐந்துமணி நேரம் காத்திருக்கவேண்டும். அந்த ஐந்துமணி நேரக் காத்திருப்பு தாங்கமுடியாததாய் இருந்தது...
Episode 12 | கோடைகாலக் காற்றே...
”ஏன் மறுபடியும் சப்பாத்திக்கு தேய்க்கிற மாதிரி சன்னமா, அகலமா தேய்க்கிற?. பூரிக்குதானே தேய்க்கணும். இத வச்சு தலையில ஒண்ணு போடவா?” என்று கேட்டுக்கொண்டே சிவு கையில் வைத்திருந்த தேய்க்கும் கட்டையை ஓங்கினார். ஒண்ணேகால் அடி அகலத்தில் இருந்த சிறிய நீளமான டேபிளின் ஒரு முனையில் நானும், மறுபுறம் சிவு-வும் உட்கார்ந்திருந்தோம்.
நான் சிரித்துக்கொண்டே “சரி, சரி. அடுத்த டைம் கரெக்டா தேய்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு பாத்திரத்தில் மிகப்பெரிய உருண்டையாக பிசைந்து வைத்திருந்த மாவிலிருந்து, கொஞ்சம் பிய்த்து உருண்டை திரட்டினேன். “உருண்டை இவ்வளவு பெரிசா பண்ணா, எப்படி சின்னதா தேய்ப்ப?. உன்னையெல்லாம்...” பாத்திரத்தை இழுத்து, மாவை எடுத்து “உருண்டை கையிலெல்லாம் பிடிக்கவேண்டாம். கையில பிடிச்சு இத்தனை மாவு எப்ப முடிப்ப? நாளைக்கு காலைல பிரேக்ஃபாஸ்ட்டுக்கா? இப்படி எடுத்து, நீளமா உருட்டிட்டு, கத்திய வச்சு சின்னச் சின்னதா கட் பண்ணிக்கணும். கையில வச்சு என்ன குலோப்ஜாமூனுக்கா உருண்டை பிடிக்கற?” என்றார் சிவு.
சுவரருகில் அடுப்பில் பெரிய பாத்திரத்தில் கொதித்துக்கொண்டிருந்த உருளைக்கிழங்கு குருமாவை கிண்டிக்கொண்டிருந்த சமையல்கார அண்ணா சிரித்தார். பக்கத்து அடுப்பில் பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றினார். “சின்னச் சின்ன உருண்டையா புடிச்சி, சின்னச் சின்ன வட்டமா தேய்ச்சாப் போதும். பூரிதானே?” சொல்லிக்கொண்டே சமையல்கார அண்ணாவும் எங்கள் பக்கத்தில் இருந்த இன்னொரு நீள டேபிளில் உட்கார்ந்து, மாவை உருண்டைகளாக்கி இன்னொரு பாத்திரத்தில் போட ஆரம்பித்தார்.
தென்னமநல்லூருக்கு, என்.எஸ்.எஸ் கேம்ப் வந்து நாலைந்து நாட்களாகிறது. வந்த முதல்நாளே எனக்கு ஊரைப் பிடித்துவிட்டது. மிகவும் பசுமையான ஊர் என்று சொல்லிவிட முடியாது. கருவேலஞ் செடிகளும், வேப்ப மரங்களும், புளிய மரங்களும் கொண்ட ஒரு சிறிய கிராமம். எங்கள் வகுப்பில் எல்லோரும் வந்திருந்தோம். எங்களுக்கு சமைப்பதற்காக, விடுதி கேண்டீனிலிருந்து சமையல் செய்யும் ஒரு அண்ணா கூட வந்திருந்தார். ஊருக்குப் பொதுவான, கோவிலைச் சேர்ந்த ஒரு மடம் மாதிரியான இடத்தில்தான் எல்லோரும் வரிசையாக உட்கார்ந்து சாப்பிடுவோம். மடத்திற்கு முன்னால் இருக்கும் அறையில்தான் சமையல்.
பகலில் ஊர்ப் பொதுப் பணிகளில் உதவி. மாலை வேளைகளில், ஊருக்குள் குழு குழுவாய் பிரிந்துசென்று, எழுதப் படிக்கத் தெரியாத முதியவர்களுக்குப் பாடம் எடுப்பது. ஸ்கூல் செல்ல ஆரம்பித்திருக்கும் குழந்தைகளும் இணைந்துகொள்வார்கள். கிராமத்தின் மாலைப் பொழுதுகள் மிக ரம்யமானவ. சூரியன் இறங்கும் அந்தியில், அந்தத் தெருக்களில், மிதமாய் வீசும் காற்றில், வெள்ளந்தியான மனிதர்களோடு, அவர்கள் அன்பாய் கொடுக்கும் டீயுடன் அவர்களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது...வாழ்வின் மிக அற்புதமான தருணங்களாகத் தோன்றும். எனக்கு தாத்தாவின் களரிக்குடி கிராமம் ஞாபகத்தில் வந்துகொண்டேயிருக்கும். கிராமத்து குழந்தைகள், பெரியவர்கள் முகங்கள்தான் எத்தனை அழகு. என்.எஸ்.எஸ் கேம்ப்பிற்கு போகிறோம் என்றதுமே, பூமணியின் சிறுகதைத் தொகுப்பையும், பாலாவின் சில புத்தகங்களையும் எடுத்து முதலில் பைக்குள் வைத்திருந்தேன். இரவுணவு முடித்துவிட்டு, தூக்கம் வரும்வரை படிப்பதற்கு.
சமையல் அண்ணா, குருமாவை கீழிறக்கி, பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றினார்.
”பாலாவோட ’தலையணைப் பூக்கள்’-ல கடைசி அத்தியாயம் அட்டகாசம், இல்ல சிவு?” என்று கேட்டேன். ‘ஆமா, எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. பாலாவால மட்டும்தான் அப்படி எழுதமுடியும்” என்றார் சிவு. “அப்புறம், ‘முன்கதைச் சுருக்கம்”-ம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது” என்றார். “நான் பாலாவ அன்னபூர்ணா ஹோட்டல்ல பார்த்தப்ப “தாயுமானவன்” புக்லதான் ஆட்டோகிராஃப் வாங்கினேன். அதுலதான் வாங்கணும்னு தோணுச்சு. ‘அன்புள்ள வெங்கடேஷூக்கு’-ன்னு எழுதி ’என்றென்றும் அன்புடன் பாலா’-ன்னு கையெழுத்து போட்டு தந்தார். அவர நேர்ல பார்த்தது இன்னும் நம்ப முடியாமதான் இருக்கு. ‘அம்மா என்ன பண்ராங்கன்னு’-ன்னு கேட்டுட்டு, அம்மாவ பார்த்துக்கங்கன்னு சொல்லி சட்டைப் பையிலருந்து யோகிராம்சுரத்குமார் போட்டோ எடுத்து கொடுத்தார்” என்றேன்.
“நாவல் டைம்ல போனமாசம் வந்த ”அப்பா”-வும் நல்லாருந்தது” என்றேன். “பூமணி சிறுகதைகள்-ல வர்ற பள்ளிக்கூடமும், வாத்தியார்களும் எங்க வில்லேஜ் ஸ்கூலை அப்படியே காட்டுற மாதிரி இருக்கு சிவு” என்று சொல்லிக்கொண்டே தேய்த்த பூரிமாவின் வடிவத்தை பார்த்தேன். வடிவமில்லாமல் அங்குமிங்கும் நீட்டிக்கொண்டு, கார்ட்டூன் கேரக்டர் போலிருந்தது. சமையல் அண்ணா பெரிய அண்டாவின் மூடியை பக்கத்தில் வைத்திருந்தார். அதில்தான் தேய்த்து தேய்த்து போட்டுக்கொண்டிருந்தோம்.
பூரி இரவுணவிற்கு. அன்று மதிய உணவிற்கு முன்னால், ஃபீல்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது வெயில் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தது. நாங்கள் வரிசையாக நின்று, மண் ரோட்டின் ஓரத்தில் குவிக்கப்பட்டிருந்த மணலை, சட்டிகளில் அள்ளி, வரிசையாக நின்று கைமாற்றி, ரோட்டின் குழிகளில் கொட்டிக்கொண்டிருந்தோம். வழக்கம்போல் கண்கள் வரிசையில் மேனகாவைத்தான் தேடியது. மேனகா... செல்வி, ஈஸ்வரி, சாரதா, கலாவிற்கு அடுத்து நின்றுகொண்டிருந்தார். முகத்தில் வியர்வைத் துளிகள். ”வைகறைப் பூவில் பனித்துளிகள்” அடிக்கும் வெயிலுக்கு சம்பந்தமில்லாமல் வரி மனதில் ஓடியது. உடனேயே “ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்...” குறுந்தொகையின் வரியும், தொடர்ந்து “பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன...” வரியும் மின்னி மறைந்தன. ஒவ்வொரு முறையும் விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வர, மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறி, பஸ் கிளம்பி பெரியார் பாலத்தில் மேலேறும்போது, வீடு பிரிந்த சோகத்தில் மனம் கனக்கும். அப்போதெல்லாம் இந்த முகம்தானே மருந்தாய் வந்து மனதில் நிற்கும்.
நேற்று சிவன் கோவிலுக்குப் போயிருந்தேன். தென்னமநல்லூரில் ஊரின் எல்லையில் ஒரு அழகான சிவன் கோவில் உண்டு. இருபுறமும் கருவேலஞ்செடிகள் கொண்ட மண்ரோட்டில், சிறிதுதூரம் நடந்து, இடதுபக்கம் திரும்பினால் கோவில். காற்றோட்டமான விசாலமான கோவில். உள்ளுக்குள்ளே சின்னச் சின்ன சன்னதிகள். உட்கார்வதற்கு சுவரையொட்டி நான்கு புறமும் சிமெண்ட் பலகைகள். எனக்கு மிகவும் பிடித்துப்போனது சுவரில் எல்லாப் பக்கமும் எழுதியிருந்த திருவாசகப் பாடல்களும், திருமந்திரப் பாடல்களும். எனக்கு இப்போதெல்லாம் வாழ்த்துப் பாடல்களை விட, ஒரு எளிய மனது இறைவனை நோக்கி “நான் இந்த நிலையில் இருக்கிறேன், என்னை ஏதேனும் செய்யக்கூடாதா?, எனக்கு அருள்புரியக் கூடாதா?” என்று இறைஞ்சும் பாடல்களைக் கேட்டாலோ, படித்தாலோ மனம் சட்டென்று பொங்கிவிடுகிறது. களரிக்குடி பெருமாள் கோவிலில் ஒருமுறை சுவரில் எழுதியிருந்த பாட்டைப் படித்துவிட்டு, மனம் கரைந்து அழுதபோது, மாமா “என்னாச்சு, என்னாச்சு” என்று பதறிப்போனார்.
சிவன் கோவிலின் எல்லா சந்நிதியிலும் அகல் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஒன்றிரண்டு பேர் அமைதியாய் நவக்ரக சந்நிதியை சுற்றிக்கொண்டிருந்தார்கள். வெளியில் மெல்ல இருட்டு கவிழ்ந்துகொண்டிருந்தது. நான் சுவரில் எழுதியிருந்த பாடல்களை ஒவ்வொன்றாய் படித்துக்கொண்டிருந்தேன். திருவாசகத்தின் ஒவ்வொரு பாடலும் மனதை மேலும் மேலும் நெகிழ்த்திக்கொண்டிருந்தது. மனம் நெகிழும்போதெல்லாம் மேனகாவைத்தான் நினைத்துக்கொள்கிறது. ஏனோ, ஆன்மீக உணர்வும், மேனகாவும் ஒன்றுதான் என்று உள்மனம் நினைக்கிறது.
”புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்...”
மனம் சுருண்டு சுருண்டு அரற்றியது. நிற்கமுடியாது போல் தோன்றியது. பக்கத்து சுவர்ப்பலகையில் உட்கார்ந்துகொண்டேன். ”பொன்னடிகள்...பொன்னடிகள்” என்று மனம் மறுபடி மறுபடி முணுமுணுத்தது. ஐந்து நிமிடங்கள் கழித்து மனம் நிதானித்தவுடன், இந்த நேரம், இந்த க்ஷணம், மேனகா பக்கத்திலிருந்தால் இந்தக்கோவில் சொர்க்காமாகி விடாதா என்று நினைத்தேன்.
Episode 13 | ஸகருணாம் பவாநி த்வம்...
ஓசூர் நகரம் கீழே வெளிச்சப்புள்ளிகளால் நிறைந்திருந்தது. நானும், குணசேகரனும், மலைமேலிருக்கும் சந்திர சூடேஷ்வரர் கோவிலின் மேற்குப்புறம், வெளிச்சம் அதிகம் விழாத பாறை ஒன்றில், கீழே ஓசூரைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தோம். சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வரும்போது குணா இரண்டு பொட்டலங்கள் மசாலா பொரி வாங்கி வந்திருந்தான். பிரித்து, கொஞ்சமாய் எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன். காரம் தலைக்கேறியது. “மிளகாப் பொடி ஜாஸ்தியாயிருச்சு போல” என்றேன் குணாவிடம்.
குணா என்னுடன் மஞ்சுஸ்ரீ நிறுவனத்தில் வேலை செய்பவன். நான் மலர்ப் பிரிவில் இருந்தேன். குணா டிஸ்யு கல்சர் பிரிவில், லேபில் வேலை செய்தான். சொந்த ஊர் தருமபுரி அருகில் ஜருகு. சென்ற வருடம் 95-ல், மே மாதம், மஞ்சுஸ்ரீ-யில் வேலைக்குச் சேரும்போது, அனந்தராமன் அண்ணா, குணா, செல்வா, சங்கர் எல்லோரும் செந்தில் நகரில் ஒரு வீடை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்கள். எல்லோருமே பேச்சிலர்ஸ். அனந்து அண்ணா, “நீயும் எங்ககூடயே தங்கிக்கலாம்” என்று சொல்லிவிட்டார். வீடு இரண்டு பெரிய பெட்ரூம்கள், விசாலமான ஹாலுடன் பெரிய வீடு. நாங்களேதான் சமைத்துக்கொண்டோம். பண்ணை, அங்கிருந்து ஆறு கிலோமீட்டரில் தொரப்பள்ளியிலிருந்தது. தினமும் இருசக்கர வாகனத்தில் பண்ணைக்கு போய்வந்தோம். செந்தில் நகர் ஓசூரிலிருந்து, ராயக்கோட்டா ரோட்டில் ஐந்து கிமீ.
குணா என்னைவிட இரண்டு வயது சிறியவன். பேச்சில் அபாரத் திறமை. நன்றாக மிமிக்ரி செய்வான். மாலையிலோ, இரவுணவு முடித்தபின்போ, குணாவின் மிமிக்ரி கச்சேரி களைகட்டும். ”இவ்வளவு உயரத்திலிருந்து, இத்தனை வெளிச்சப் புள்ளிகளோட டவுனைப் பார்க்கறது அலுக்கறதேயில்லை, இல்லண்ணா?” என்றான் குணா. வலதுபுறம், கீழே கிருஷ்ணகிரி ரோட்டில் வாகனங்கள் வெளிச்சப் புள்ளிகளோடு நகர்ந்துகொண்டிருந்தன. பின்னால் டூவீலர்கள் நிறுத்துமிடத்திலிருந்து, கோவில் முகப்பு வரையில் பாதையின் இருபக்கமும் வரிசையாயிருந்த சின்னச் சின்ன கடைகளில் கொஞ்சமாய் கூட்டமிருந்தது.
“நீங்க யு.ஜி முடிக்கிற வரைக்கும் அவங்ககிட்ட சொல்லவேயில்லையா?” என்று குணா கேட்டான். அவனுக்கு, மேனகாவைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்த ஒரு வருடத்தில், அவனிடத்தில் சமயம் கிடைத்தபோதெல்லாம், காலேஜ் கதைகளையும், மேனகாவைப் பற்றியும்தானே பேசியிருக்கிறேன். நான் சிரித்துக்கொண்டே “இல்லை” என்றேன். “காதல்-னோ, கல்யாணம்-னோ என் மனசுல அப்ப எனக்கு தோணுணதே இல்ல-ன்னு சொன்னா நீ நம்புவயா குணா?. அந்த அழகைப் பார்த்ததும் மனசுல ஒரு பித்து ஏறிடுச்சுன்னுதான் நினைக்கிறேன். தாய்மையும், கருணையும் நிறைஞ்ச அவங்க முகம், அவங்க நடக்கறது, அவங்க ஸ்மைல் பண்றது. அவங்களோட பேச்சு, அவங்களோட அசைவுகள், மேனரிசம்...என்னை அந்த நாலு வருஷ்மும் கட்டிப்போட்டு வச்சிருந்தது. நான் இந்த வார்த்தைகளையும், வரிகளையும் திருப்பி திருப்பி உங்கிட்ட வேற வேற சமயத்துல சொல்லிட்டேயிருக்கேன்ல. என்ன பண்றது...எனக்கே தெரியுது, மேனகாவ டெஸ்க்ரைப் பண்றதுக்கு சரியான வார்த்தைகளைத்தான் இன்னும் தேடிட்டிருக்கேன்னு நினைக்கிறேன். அவங்க ஏதோ ஒரு உயரத்துல மேலே இருந்தாங்க. அவங்களோட சேர்ந்து ஒரே க்ளாஸ்ல படிக்கறதுக்கு எத்தனை புண்ணியம் பண்ணியிருப்பேனோன்னு அப்பல்லாம் அடிக்கடி நினைச்சுக்குவேன். அந்த கண்ல ஆசீர்வாதம் பண்றமாதிரியான ஒரு பாவம் எப்பவுமே இருக்கும் குணா...” நான் சொல்லிக்கொண்டே போனேன். “அவங்களுக்கு கல்யாணமே ஆகக்கூடாது-ன்னு அபத்தமா யோசிச்சிருக்கேன். எல்லோரையும் போல, ஒரு சாதாரண மனுஷப் பையனை அவங்க கல்யாணம் பண்ணிக்கிறதை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல அப்ப” என்றேன்.
“அவங்களுக்கு எப்ப கல்யாணம் ஆச்சு? அவங்க கல்யாணத்துக்கு நீங்க போயிருந்தீங்களா?” என்று கேட்டான் குணா. நான் சிரித்துக்கொண்டே, “நாங்க யு.ஜி. முடிச்சதும், எங்க பேட்ச்சில அவங்களுக்குத்தான் முதல்ல கல்யாணம் ஆச்சு” என்றேன். “நான் போகல. எனக்குத் தெரியாது அவங்களுக்கு கல்யாணம்னு. கடைசி வருஷம், கடைசி ட்ரைமெஸ்டர்ல ஒரு சப்ஜெக்ட்ல எனக்கு பிரச்சனையாச்சு. என்னோட கவனமெல்லாம், அதுக்கப்புறம் அதுல திரும்பிடுச்சு. அப்பவும், பி.ஜி. ஜாய்ன் பண்ணியிருந்த தாமு ரூம்ல தங்கியிருந்தப்ப, காலைல குளிச்சிட்டு வந்து சாமி கும்பிடும்போது அந்த முகம் மேல வரும். எங்க யு.ஜி ஃப்ரெண்ட்ஸ்-ல நான் அட்டெண்ட் பண்ணது மூணு பேரோட மேரேஜ் மட்டும்தான். மதுரையில மகியோட கல்யாணத்துக்குப் போயிருந்தேன். நான் கல்யாணத்துக்கு வந்திருந்தது மகிக்கே தெரியாது. மகி கல்யாணத்தப்ப ரொம்ப அழகா இருந்தாங்க. ஒரு அடி கூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகரமுடியாத அளவுக்கு கூட்டம். முகூர்த்தம் முடிஞ்சதும் சட்னு வெளிய வந்துட்டேன். அப்புறம் கிருஷ்ணகிரியில செல்வியோட கல்யாணம். செல்வியோட கல்யாணத்துக்கு அஸ்வதி வந்திருந்தாங்க. மூணாவது தாமுவோட கல்யாணம்; தாமுவுக்கு தேனியில அவங்க வில்லேஜ்லேயே கல்யாணம் நடந்தது. ராஜூ, டூ வீலர்லயே கோயம்புத்தூர்லருந்து வந்திருந்தான்” கொஞ்சநேரம் நிறுத்திவிட்டு மறுபடியும் பேசினேன்.
”அந்த எண்டமாலஜி கோர்ஸை முடிக்கிறதுக்காக தங்கியிருந்தப்ப, அக்ரி எஞ்சினீரிங் ஹாஸ்டல் பக்கத்துல இருக்குற கேட் வழியா வெளிய போனா, பால் கம்பெனி வர்றதுக்கு முன்னாடி, வலதுபக்கம் ஒரு சின்ன கோவில் இருக்கும். அது ஒரு ஸ்கூலுக்குள்ள இருந்தது. வெள்ளி, சனிக்கிழமை சாயந்திரம் அங்கபோய் உட்கார்ந்திருப்பேன். என்னோட மனசு கழிவிரக்கத்தாலயும், சுய வெறுப்பினாலயும் நெறைஞ்சு நான் மோசமா இருந்த நாட்கள். அந்தக் கோயில்ல கொஞ்சமா சவுண்ட் வச்சி பாட்டு பாடிட்டிருக்கும். ஒரு நாள் சுசிலாவோட “மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி” பாடிட்டிருந்தது. நான் கோவில் வாசல் பக்கத்துல இருக்கற திண்டுல உட்கார்ந்திருந்தேன். அந்தப் பாட்டு மனசை என்னவோ பண்ணிட்டிருந்தது. அம்மா, என்மேல வச்சிருந்த நம்பிக்கையை மோசம் பண்ணிட்ட மாதிரியும், அம்மாவோட கஷ்டத்த நான் கொஞ்சம்கூட புரிஞ்சுக்கலைன்ற மாதிரியும் உள்ள தோணி துக்கம் அதிகமாகி தொண்டை அடைக்குது. மாணிக்க வீணை முடிஞ்சி “ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா” ஆரம்பிச்சது. மனசுல அம்மாவோட முகம். கூடவே மேனகாவோட முகம். அது என்னன்னே தெரியல, எப்ப அம்மாவ நினைச்சுக்கிட்டாலும், கூடவே மேனகா ஞாபகமும் வரும். ஒரு டைம், காலேஜ் ஃப்ர்ஸ்ட் இயர் லீவுல திருமங்கலத்துக்கு வீட்டுக்குப் போயிருந்தபோது, ஒரு ஞாயித்துக் கிழமை அம்மா தலையில நல்லெண்ணை தேய்ச்சி, வீட்டுக்குப் பின்னாடி இருந்த கிணத்தடியில உட்கார வச்சி குளிப்பாட்டி விட்டாங்க. அந்த சமயம் இருந்த வாடகை வீட்டில பின்னாடி கிணறு இருந்தது. குளிச்சி முடிச்சிட்டு வீட்டு பின் வாசல்படியில, நான் கீழே நிக்கவும், அம்மா முதல் படியில ஏறி நின்னு தலை துவட்டி விட்டாங்க. நீ நம்பணும் குணா, அந்த ஷணம் மேனகாவோட முகம் மனசுக்குள்ள வந்தது.
சௌந்தர்ய லஹரியில வருமே...”ஸகருணாம் பவாநி த்வம்”...“கருணை வடிவான தேவி நீ”-ன்னு. காலேஜ் படிச்சிட்டிருந்த அந்த நாலு வருஷமும் எனக்கு தோணிட்டேயிருக்கும் மேனகா என்னோட இன்னொரு அம்மான்னு...” குணாவிடம் மேலும் மேலும் பேசிக்கொண்டேயிருந்தேன்...
Episode 14 | சிறகில் எனை மூடி...
நான், தண்ணீர்ப் பானையும், குடமும் வைத்திருந்த சமையலறையின் பின் மேடையில் சாய்ந்து நின்றுகொண்டு உஷாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்...இல்லை, உஷா பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். ஆம், உஷா பேச ஆரம்பித்தால், கேட்டுக்கொண்டிருந்தாலே போதும். பேச்சின் விரைவும், சொற்கள் வந்துவிழும் வேகமும் எப்போதுமே ஆச்சர்யம் தரும். உஷா பேசுவதை, மஞ்சுஸ்ரீ நிறுவனத்தில் சேர்ந்தபின்பு, முதன்முதலில் கேட்டபோது, யு.ஜி.-யில் உடன்படித்த மகி-தான் ஞாபகம் வந்தார். மகியும் இப்படித்தான், பேச ஆரம்பித்தால், அவரின் முதல் வரியை நாம் கிரஹிக்கும் முன்பு, அடுத்த ஐந்தாறு வரிகள் பேசி முடித்திருப்பார். உஷாவிற்கு என்னைவிட நான்கு வயது குறைவு. பதின்மத்தின் இறுதியில் இருந்தார். அவ்வயதிற்கே உண்டான யௌவனத்தின் சிறகடிப்பில். ஆனால், பேச்சில் தன் வயதிற்கு ஐந்தாறு வயது மூத்தவர் போன்ற ஒரு மெச்சூரிட்டி.
உஷா, முன் மேடைக்குப் பக்கத்தில் கீழிருந்த மண்ணெண்ணெய் ஸ்டவ் மீது வைத்திருந்த பாத்திரத்தில் கொதித்துக்கொண்டிருந்த நீரில், ராகி மாவைக் கொட்டினார். வலதுபக்க சுவரில் பாத்திரங்களை அடுக்கிவைத்திருந்த ஷெல்ஃபிலிருந்து, ஒரு நீண்ட மர உருளையை எடுத்து மாவைக் கிண்ட ஆரம்பித்தார். ”பார்த்தீங்களா சார், இப்படித்தான் ராகி முத்தாவுக்கு கிண்டிக்கிட்டே இருக்கணும்” முகத்தில் சிரிப்புடன் சொன்னார். “அந்த கடலையை சாப்பிடுங்க சார், ஊர்லருந்து அம்மா கொடுத்துவிட்டது” என்றார். பக்கத்திலிருந்த சில்வர் குடத்தின் மூடியின் மேல், பச்சை வேர்க்கடலை இருந்தது. நான் ஒன்றை எடுத்து உடைத்து வாயில்போட்டுக் கொண்டே, “அம்மா, அப்பா, தம்பில்லாம் எப்படி இருக்காங்க உஷாம்மா?” என்று கேட்டேன். ”நல்லாருக்காங்க சார். அம்மா உங்களை ஒருதடவை ஊருக்கு வரச்சொன்னாங்க” என்றார். வெளியில் ஹாலில் மஞ்சுவிற்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்த தனம்மா, “உஷா, சார் டீ சாப்பிட்டுப் போகட்டும். டீக்கு பாத்திரம் வச்சிரு இன்னொரு அடுப்பில” என்று கன்னடத்தில் குரல் கொடுத்தார். உஷாம்மாவின் வீட்டில் கன்னடம்தான் பேசுவார்கள். தனம்மா, உஷாவின் மூத்த அக்கா. தனம்மாவின் குட்டிப்பையன் மஞ்சுநாத் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். தனம்மாவின் வீட்டுக்காரர் மல்லேஷ், கடைக்குப் போயிருந்தார். தனம்மா, மல்லேஷ், உஷாம்மா மூவருமே எங்கள் பண்ணையில்தான் வேலை செய்தார்கள்.
வீடு சிறிய ஓட்டு வீடுதான். சின்னச் சின்னதாய் ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை, ஒரு ஹால். ஆனால் தனம்மா வீட்டை அழகாக சுத்தமாய் வைத்திருப்பார். உஷா, அக்கா வீட்டில் வந்து தங்கியிருந்தார். உஷாவின் இன்னொரு அக்கா சௌம்யா, கல்யாணமாகி தேன்கனிக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் குடியிருந்தார். “உனக்கு எப்ப கல்யாணம் உஷாம்மா?” என்று ஒருமுறை கேட்டபோது, சிரித்துக்கொண்டே “இப்ப என்ன சார் அவசரம், இன்னும் நாலஞ்சு வருஷம் ஆகும். நான்தான் பத்துக்கு மேல ஸ்கூலுக்குப் போகல; தம்பியவாவது ஒரு ஐ.டி.ஐ-லயாவது சேர்க்கணும் சார்” என்றார். “ஆனா, சொந்தத்திலிருந்து ஒரு பையன் வீட்டிலருந்து ஒரே தொல்லை. அடுத்த வருஷமே வச்சிக்கலாம்னு. நான்தான் அடுத்த வருஷம் முடியாதுன்னு சொல்லிட்டேன். அந்தப் பையன் வெயிட் பண்ணுவான்னு நினைக்கிறேன்” என்று சிரித்தார்.
95-ல் ஓசூர் மஞ்சுஸ்ரீ-யில் வேலைக்குச் சேர்ந்தபோது, உஷா-வை முதன்முதலில் கொய்மலர் ரோஜாக்களை தரம்பிரிக்கும் அறையில்தான் பார்த்தேன். வேலையில் படு சுறுசுறுப்பு. அங்குமிங்கும் நடந்துகொண்டும், அடுக்கிய பூக்களை கணக்கெடுத்துக்கொண்டும் பரபரப்பாக இருந்தார். மேனகாவைப்போல், வட்ட முகமில்லை. கொஞ்சம் நீள்வட்டமான முகம். அட...ஏன் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், உடனே மேனகாவின் முகத்துடன் ஒப்பிட்டுக்கொள்கிறேன் என்று ஆச்சர்யமாக இருந்தது. இது பழக்கமாகிவிட்டது. நான்கு வருடங்கள் கல்லூரி முடித்து வெளியில் வந்தபின், மேனகாவை இனிமேல் எப்போது பார்க்கப்போகிறேனோ என்ற ஏக்கம் உள்ளுக்குள் வளர்ந்து வளர்ந்து, எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், மேனகாவுடன் ஒப்பிட்டுக்கொள்வது, மேனகாவின் சாயல் தென்படுகிறதா என்று உற்றுக்கவனிப்பது தானாகவே வந்துவிட்டிருந்தது. உஷா மேனகாவின் நிறம்தான். உஷாவின் சட்சட்டென்ற சின்னச்சின்ன மேனரிஷங்களில் மேனகாவை நான் கண்டுகொண்டே இருந்தேன். உஷா பத்தாவது வரைக்கும் படித்துவிட்டு, மேலே படிக்காமல் வேலைக்கு வந்துவிட்டிருந்தார். கிராமத்தில் அம்மாவும், அப்பாவும் விவசாயம் செய்கிறார்கள்.
உஷாவின் கிராமம், ராயக்கோட்டா ரோட்டில் குடிசாதனப்பள்ளியிலிருந்து வலதுபுறம் திரும்பி மறுபடியும் பத்து கிமீ உட்செல்லவேண்டும். உஷாவுடன் கூடப்பிறந்தவர்கள் நான்குபேர். இரண்டு அக்காக்கள், ஒரு தங்கை, ஒரு தம்பி. மல்லேஷ்-தனம்மாவின் வீடு ஓசூரிலிருந்து ராயக்கோட்டா செல்லும் ரோட்டில் ஒன்னல்வாடியிலிருந்தது. பண்ணை இருந்த தொரப்பள்ளி, ஒன்னல்வாடிக்கும் பேரண்டப்பள்ளிக்கும் நடுவில். பேரண்டப்பள்ளி, ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி போகும் சாலையில் வரும். “ஓசூர் டூ ஓசூர்” என்னும் டவுன் பேருந்து, ஓசூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்பி, கிருஷ்ணகிரி ரோட்டில் பேரண்டப் பள்ளி போய், தொரப்பள்ளி வழியாக ஒன்னல்வாடி வந்து ராயக்கோட்டா ரோட்டைத் தொட்டு ஒரு சுற்று சுற்றி மறுபடி ஓசூர் பஸ் ஸ்டாண்ட் வரும்.
மல்லேஷூம், தனம்மாவும், உஷாவும் தினமும் ஒன்னல்வாடியிலிருந்து பண்ணைக்கு நடந்துதான் வருவார்கள். இருபது நிமிட நடை. நான் டி.வி.எஸ் 50-ல் பண்ணைக்கு வரும்போதும் செல்லும்போதும் ஒன்னல்வாடியைக் கடக்கவேண்டும். உஷாம்மா நன்கு பழக்கமான பிறகு, மாலையில் வேலை முடித்து, செந்தில்நகர் வீட்டிற்குச் செல்லும்போது உஷாம்மாவின் வீட்டில் பல நாட்கள் டீ சாப்பிட்டுவிட்டுச் செல்வதுண்டு. உஷாம்மாவின் தங்கையும், படிக்கச் செல்ல முடியாமல், கொச்சியில் ஒரு ஆங்கிலோ இந்தியரின் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தார்.
உஷா பேசும்போது அவர் கைவிரல்களின் அசைவுகளையும், கண்களையும் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு பேரனுபவம். சாதாரண நிகழ்வுகள் கூட, உஷா விவரிக்கையில் சுவாரஸ்யம் பெறும். தம்பியின் படிப்பு, அம்மா, அப்பாவின் காட்டு வேலைகள், அப்பா வைத்திருக்கும் மாடுகளின் சேட்டைகள்... எல்லாவற்றைப் பற்றியும் உஷா பேசிக்கொண்டிருந்தார். ராகி உருண்டை தயாரானதும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்தார். “நின்னுட்டே இருக்கீங்க சார், கால் வலிக்கலயா, சேர் எடுத்துட்டு வரட்டுமா?” என்று கேட்டார். நான் “வேண்டாம்” என்று சொல்லிவிட்டு உஷா டீ வைத்திருந்த முன்மேடை அடுப்பின் அருகிலேயே ஏறி உட்கார்ந்துகொண்டேன். “டீ-யில ஏலக்காய் போடட்டுமா சார்?” என்றார். நான் ”சரி” என்றதும், எதிர்சுவரில் ஷெல்ஃப் மேல் அடுக்கில் இருந்த, டப்பாவை எடுத்து, நான்கு ஏலக்காய்களை எடுத்து இடதுகை பெருவிரல் நகத்தால் பிரித்து உள்ளே போட்டார். “இந்த ட்ரெஸ் நல்லாருக்கா சார்? அம்மா எடுத்துக்கொடுத்தாங்க, போன தீபாவளிக்கு” என்றார். நான் சிரித்துக்கொண்டே “புளுவும், புளு சார்ந்த எந்த நிறத்தையும் நான் நல்லா இல்லைன்னு சொல்லவே மாட்டேன் உஷாம்மா” என்றேன். நீலம் மேனகாவால் உள்ளுக்குள் பதிந்துபோன கலர்.
கரண்ட் போனது. “நல்லவேளை, டீ போட்டு முடிச்சாச்சு” சொல்லிவிட்டு மூலையில் சாமி படங்களுக்குப் பக்கத்திலிருந்த மெழுகுவர்த்தியை அடுப்பு வெளிச்சத்தில் எடுத்து பற்றவைத்து ஹாலுக்கு கொண்டுபோனார். மல்லேஷூம் கடைக்குப் போய்விட்டு வந்திருந்தார். உஷா மறுபடியும் சமையலறை வந்து டீயை டம்ளர்களில் ஊற்றிக்கொண்டு “வாங்க சார் வெளியில் உட்கார்ந்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு டம்ளர்களை தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வெளியில் சென்றார்.
நான், தனம்மா, மல்லேஷ், உஷா, குட்டிப் பையன் மஞ்சு எல்லோரும் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்தோம். மெலிதாய் காற்று வீசிக்கொண்டிருந்தது. வீட்டிலிருந்து பார்த்தால் ராயக்கோட்டா ரோடு தெரியும். ரோட்டில் போகும் வண்டிகளின் வெளிச்சங்கள் தவிர, கிராமம் இருளில் மூழ்கியிருந்தது. அங்கங்கே வீடுகளுக்குள் ஏற்றப்பட்ட குட்டி வெளிச்சங்கள். திண்ணைக்கு எதிரிலிருந்த முருங்கை மரத்தின் தொங்கும் காய்கள் நீள நீளமாய் இருட்டில் தெரிந்தன. நான் உஷாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். மல்லேஷ், சௌம்யாவின் வீட்டுக்காரர் ராமகிருஷ்ணப்பாவோடு சேர்ந்து ஒரு நர்சரி ஆரம்பிக்கலாம் என்ற யோசனையிருப்பதாகத் தெரிவித்தார். அதுபற்றிய விபரங்களை கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். மல்லேஷ் அடுத்த தெருவில் கிருஷ்ணப்பாவை பார்த்து ஒரு விஷயம் சொல்லிவிட்டு வருவதாகவும், லேட்டாகி விட்டால் கிருஷ்ணப்பா தூங்கிவிடுவார் என்றும் சொல்லி கிளம்பிப் போனார். உஷா தலையில் வைத்திருந்த முல்லைப் பூவின் மணம் காற்றில் மிதந்துவந்தது. கரண்ட் வருவதுபோல் தெரியவில்லை. “நான் கிளம்பறேன் தனம்மா. மணி ஒன்பதாயிடுச்சுன்னு நினைக்கிறேன்” சொல்லிக்கொண்டே நான் எழுந்துகொண்டேன். “இருங்க சார், வர்றேன்” சொல்லிவிட்டு உள்ளே போய் ஒரு கவரில் வாழைப்பழ சீப்பை உள்ளே வைத்து கொண்டு வந்தார் உஷா. “இதைக் கொண்டுபோங்க. சௌம்யா வீட்டிலருந்து வந்தது” என்றார்.
நான் டி.வி.எஸ் 50-ஐ ரோட்டிலேயே நிறுத்திவிட்டு வந்திருந்தேன். ரோட்டிலிருந்து உஷாம்மாவின் வீட்டிற்கு பாதை மிகச் சரிவாய் இறங்கும். தனம்மா “உஷா, சாரை ரோடுவரைக்கும் விட்டுட்டு வா. இருட்டா வேற இருக்குது" என்றார். வீட்டுக்குள் சென்று சிறிய டார்ச்சை எடுத்து வந்து “போலாம் சார்” என்றார் உஷா. இடதுகையில் வாழைப்பழக் கவரை எடுத்துக்கொண்டார். டார்ச் வெளிச்சம் முன்னால் வழிகாட்ட, நானும், உஷாவும் அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்துசென்று மேடேறினோம். ரோட்டின் அந்தப் பக்கமிருந்த, புதிதாய் ஆரம்பித்த “செயிண்ட் அகஸ்டின்” ஸ்கூலின் சர்ச் கோபுரம் இருட்டில் தெரிந்தது. டார்ச்சை இடதுகைக்கு மாற்றிக்கொண்டு, “கையக் கொடுங்க சார்” என்று கேட்டு, நான் இடதுகையை நீட்டியதும் வலதுகையால் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார் உஷா. ஒரு கணம், நான் கல்லூரியில் இருப்பதாக மனம் பிரமை கொண்டது. இந்தக் கை யாருடைய கை?...
அன்பின் சிறகுகள்தான் எத்தனை மென்மை...
Episode 15 | பூங்காற்று அறியாமல்...
”எனக்கு இந்தமாதிரி, மேனகா கூட உட்கார்ந்து நைட் ஃபுல்லா பேசிட்டே இருக்கணும்னு அப்ப ரொம்ப ஆசையாயிருக்கும் உஷாம்மா. மேனகா, எதிர்ல உட்கார்ந்திருக்கற மாதிரி நினைச்சுக்கிட்டு, காலேஜ்ல ஏதாவது பில்டிங்ல உட்கார்ந்து லேட் நைட் வரைக்கும் புக் படிச்சிட்டிருப்பேன். மேனகா, புக்ஸ் படிப்பாங்களான்னு தெரியாது, அவங்களுக்கு ம்யூசிக் பிடிக்குமானு தெரியாது, எந்த மாதிரி ம்யூசிக் கேட்பாங்கன்னு தெரியாது. எல்லாத்தையும் அவங்ககிட்ட பேசணும், பாலா, தி.ஜா-வோட புத்தகங்கள் பத்தியும், சி.ஆர். வியாஸ் பத்தியும், கௌசிகி பத்தியும், மஹாராஜபுரம் சந்தானம் பத்தியும், ஷிவ் குமார் சர்மா பத்தியும் அவங்ககிட்ட விடிய விடிய பேசணும்னு கனவு கண்டுட்டேயிருப்பேன். அப்பல்லாம் நான் ராக்கோழி. இரவு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பல நாட்கள்ல, நைட்லதான், சைக்கிள்ல சுத்தியிருக்கேன். அது என்னமோ, பகல்ல பரபரப்பா இருக்குற ரோடு, இடங்கள்லாம் நைட்ல வேற முகம் காட்டும். நைட் லாலி ரோடு, நைட்ல மரப்பாலம் ப்ரிட்ஜ், நைட்ல கந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்...எல்லாமே. சில நாள்ல விடியறதுக்கு முன்னாடி, நாலு மணிக்கு எந்திரிச்சி குளிச்சிட்டு சைக்கிளை எடுத்துட்டு காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் போய், மொஃபஸல் பஸ் ஸ்டாண்ட்ல டீக்கடையில டீ குடிச்சிட்டே போற வர்ற பஸ்களையும், மனுஷங்களையும் பாத்துட்டிருப்பேன். பகல்ல அத்தனை ட்ராஃபிக்கும், ஜனக்கூட்டமும் இருக்கும் ஆர்வீ ஹோட்டல் முன்னாடி இருக்குற ரவுண்டானால நைட் இரண்டு மணிக்கு போய் உட்கார்ந்தோம்னா, மனசு அந்த அமைதியை, வெற்று தார்சாலையின் நிதானத்தை அப்படியே உள்ளே இழுக்கும். பல நாள், கேஜி-யில செகண்ட் ஷோ பாத்துட்டு வரும்போது, மரப்பாலம் பிரிட்ஜ் மேல கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வருவேன்...”
நான் உஷாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மனது கல்லூரி நாட்களில் திளைத்துக்கொண்டிருந்தது. அந்த முன்னிரவில், நானும், உஷாவும், “செயிண்ட் அகஸ்டின்” ஸ்கூலின் சர்ச் படிகளில் உட்கார்ந்திருந்தோம். சர்ச் முகப்பில் மேலே மாடத்தில் குண்டு பல்பு ஒன்று சோகையாய் மஞ்சள் வெளிச்சம் தந்துகொண்டிருந்தது. விமானம் ஒன்று விளக்குப் புள்ளிகள் மினுக்கிக்கொண்டே பெங்களூர் பக்கம் நகர்ந்துகொண்டிருந்தது. “இப்ப மேனகா எங்க இருக்காங்க சார்?” உஷா கேட்டார். “தெரியல உஷாம்மா. கடல்கடந்து போயிருந்தாலும் போயிருக்கலாம். ஃப்ரெண்ட்ஸ்ங்க கூட காண்டாக்ஸெல்லாம் நின்னுடுச்சு. மறுபடியும் எல்லாரையும் தேடிப் பிடிக்கணும்.” என்றேன். மேலே மேகத்திலிருந்து நிலா மெதுவாய் வெளியில் வந்துகொண்டிருந்தது. யோசித்துப் பார்க்கும்போது, கல்லூரி விட்டு வந்தபின், எனக்கு பிரியமானவர்களிடத்திலெல்லாம், மேனகாவைப் பற்றி சொல்லாமல் இருந்ததில்லை என்ற நினைவு வந்தது. அன்பை, அன்பானவர்களிடம்தானே சொல்லித்தானே ஆகவேண்டும்.
அன்று கிருஷ்ண ஜெயந்தி. சாயங்காலம் ஆறு மணிக்கு ஓசூர் இஸ்கான் கோவில், ஒரு கல்யாண மண்டபத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. மாலையில் வேலை முடித்துவிட்டு, தனம்மாவிடம் சொல்லிவிட்டு, உஷாவையும் கூட்டிக்கொண்டு ஓசூர் இஸ்கான் கோவில் போயிருந்தேன். உஷா, சிவப்பு நிற தாவணி கட்டியிருந்தார். தலையில் இரட்டை சரமாய் ஜாதிமல்லி வைத்திருந்தார். கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, நிகழ்ச்சிகள் நடக்கும் கல்யாண மண்டபம் போனபோது, குழந்தைகளின் மாறுவேடப் போட்டி நடந்துகொண்டிருந்தது. கிருஷ்ணர்களும், ராதைகளும். “புக் ஸ்டால் போயிட்டு மறுபடி வரலாம் உஷாம்மா" என்று சொன்னேன். எழுந்து, மண்டபம் விட்டு வெளியில் வந்து வரிசையிலிருந்த டி.வி.எஸ் 50-ஐ எடுத்துக்கொண்டு, அதே கடைவீதியின் கடைசியிலிருந்த “இந்தியன் புக் ஷாப்” வந்தோம்.
கடையின் முன் வண்டி நிறுத்தியதும், கடைப்பையன் வரது சிநேகமாய் சிரித்தான். அங்குதான் புத்தகங்கள் வழக்கமாக வாங்குவதால், வரதுவும், வரதுவின் அப்பாவும் நன்கு பரிச்சயமாகியிருந்தார்கள். “வரது, எப்படி இருக்க?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன். பின்னாலேயே உஷா வந்தார். “உனக்கு ஏதாவது புக் வேணுமா உஷாம்மா?” என்று கேட்டுக்கொண்டே ஓஷோ புத்தகங்கள் இருக்கும் அடுக்கிற்குச் சென்றேன். உஷா சிரித்துக்கொண்டே “எனக்கு எதுவும் வேண்டாம் சார்” என்றார். உஷா புத்தகங்கள் படிப்பதில்லை. செய்தித் தாள்களும், அதனுடன் வரும் இணைப்பு புத்தகங்களையும் படிப்பார். “நீ ரமணிசந்திரனாவது படிக்கலாம் உஷாம்மா. அந்த ரேக்கில பாரு” என்று சொல்லி ரமணிசந்திரன் புத்தக வரிசையை காட்டினேன். உஷா சென்று ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்து திருப்பி பார்த்துக்கொண்டிருந்தார். நான் வரதுவிடம் “ஓஷோவோட ’கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும்’ இருக்கா வரது?” என்று கேட்டேன். “வந்திருக்கு சார்” என்று எழுந்துவந்து எடுத்துக்கொடுத்தான் வரது. ”பகவத்கீதை ஒரு தரிசனம்’ - மூணாம் பாகம் இந்தவாரக் கடைசில வந்துரும் சார்” என்றான். நான் நான்கு பத்தகங்கள் எடுத்து வரதுவிடம் கொடுத்து பில் போடச் சொல்லிவிட்டு, உஷா என்ன செய்கிறார் என்று பார்த்தேன்.
கடைசி புத்தக அடுக்கினருகில், சிவப்பு கலர் தாவணியில், தலையில் பூக்களோடு, உஷா வெகு அழகாக இருந்தார். நான் மனதுக்குள் மேனகாவை தாவணியில் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தேன். உஷாவிற்கு ரமணிசந்திரன் புக் ஒன்றும், லக்ஷ்மியின் புக் ஒன்றும் வாங்கினோம். மறுபடியும் நிகழ்ச்சிகள் நடக்கும் கல்யாண மண்டபம் போய், சிறுவர்களின் ஒரு சிறு நாடகம் பார்த்துவிட்டு, பிரசாதமாய் கொடுத்த பாயாசத்தை குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். ராயக்கோட்டா ஹவுஸிங் போர்டு, ரானே ப்ரேக் லைன்ஸ் தாண்டி காரப்பள்ளி வந்தபோது “வீட்டுக்கு ஏதாவது வாங்கணுமா உஷாம்மா? கேட்க மறந்துட்டேன்” என்றேன். “ஒண்ணும் வேண்டாம் சார்” என்றார். செந்தில் நகர் கடந்து, சுவா எக்ஸ்ப்ளோசிவ் ஃபேக்டரியையும் கடந்து ஒன்னல்வாடிக்கு வந்து உஷா வீட்டுக்கு அருகில் ரோட்டின் ஓரத்திலேயே மண்பாதையில் வண்டியை இறக்கி நிறுத்தினேன். எதிரில் ஸ்கூலின் சர்ச் பெருத்த மௌனத்திலிருந்தது. கையிலிருந்த வாட்ச்சை பார்த்துவிட்டு “மணி எட்டாகுது உஷாம்மா. கொஞ்ச நேரம் சர்ச்சில உட்காரலமா?” என்றேன். “சரி” என்று சொல்லிவிட்டு “நான் அக்காகிட்ட நாம ஓசூர்லருந்து வந்துட்டோம்னு சொல்லி சர்ச்ல உட்கார்ந்திருக்கோம்னு சொல்லிட்டு வந்துர்றேன்” என்றுவிட்டு வீட்டிற்கு இறங்கி நடந்துசென்று தனம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தார்.
சர்ச்சில் உட்கார்ந்துதான் மேனகாவின் நினைவுகளை உஷாவிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். “ஸ்கூல்ல ஸிக்ஸ்த் ஆரம்பிச்சுட்டாங்களா உஷாம்மா?” என்றேன். “இல்ல சார் அடுத்த வருஷம் ஆரம்பிக்கறதா பிரின்சிபல் ஸிஸ்டர் சொல்லிட்டிருந்தார். அநேகமா, பத்தாவது வரைக்கும் இன்னும் மூணு வருஷத்துல வந்துரும்னு நினைக்கிறேன்” என்றார். எங்கள் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்க்கும் கோபால் வீடு பக்கத்து தெருவில்தான் இருந்தது. வீடுகளுக்குள் டிவி ஓடிக்கொண்டிருந்தது வெளிச்ச மாற்றங்களினால் தெரிந்தது. ஏதோ ஒரு வீட்டிலிருந்து “வெண்ணிலவே...வெண்ணிலவே” பாட்டு மிதந்து வந்தது. மனது ”ஆஹா”-வென்றது. நான் சாதனா சர்கமின் குரலின் இனிமையில் என்னை இழக்க ஆரம்பித்தேன். உஷா ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் அவரின் பேச்சில் அசையும் உதடுகளையும், நடனமாடும் நெயில் பாலீஷ் போட்ட மென் விரல்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். “இது இருளல்ல...அது ஒளியல்ல...இது ரெண்டோடும் சேராத பொன் நேரம்” ஹரிஹரனின் குரலும், சாதனாவின் குரலோடு இணைந்து குழைந்தது. சர்ச் மேல்விளக்கின் மஞ்சள் ஒளியில் உஷாவின் வலது மூக்குத்தியின் சிறிய வெண்கல் அவ்வப்போது மின்னியது.
“எட்டாத உயரத்தில் நிலவை வைத்தது யாரு?...கையோடு சிக்காமல் காற்றை வைத்தது யாரு?”...சாதனாவின் குரலில் தேன் தடவியிருந்தது. ”எங்கிருக்கிறாய் மேனகா?...இப்போது இந்த நிமிடம், கடவுளின் ஒரு முன்னிரவுப் பொழுதில், உஷா எனும் தேவதையின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, உன் பெயரை என் மனம் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறதே?...உனக்குக் கேட்கிறதா?” மனம் ஏதேதோ அரற்றியது. “பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்கவேண்டும். பூக்கூட அறியாமல்...” அந்தக் குரலின், அந்த இசையின் தெய்வீகத்தில் மனம் கரைந்துகொண்டிருந்தது. “அட...உலகை ரசிக்கவேண்டும் நான்...உன்போன்ற பெண்ணோடு...” பாடலின் இறுதியில் வரும் ஆண்குரலும், பெண்குரலும் இணைந்து வளைந்து உருகும் அந்த ஹம்மிங்...தாங்கமுடியாத உணர்வெழுச்சியைத் தந்தது...மனது அக்குரல்களோடு இணைந்து வளைந்து நெளிந்து சுழன்றுகொண்டிருந்தது.
Episode 16 | ராதே...மாதவி...
”இது ஆதி தாளம் வெங்கி” என்று சொல்லி, எப்படி வருமென்று தொடையில் தட்டிக் காண்பித்தான் குரு.
நானும், குருவும், ஆர்.எஸ். புரத்தில், ஒரு வார ராம நவமிக் கொண்டாட்டத்தின் மூன்றாம் நாள் கச்சேரியை பார்த்துக்கொண்டிருந்தோம். உமையாள்புரம் சிவராமன் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார். குரு ஒவ்வொரு பாடலின் ராகத்தையும், தாளத்தையும் சொல்லி, தாளம் எப்படி சீராக வருகிறது என்று தட்டிக் காண்பித்துக்கொண்டிருந்தான்.
கூட்டம் அதிகமில்லை. நூற்றைம்பது பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பந்தல் கம்பங்களில் ட்யூப் லைட் மாட்டியிருந்தார்கள். ஒவ்வொரு ராம நவமியின்போதும், இங்கு ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் முன்னிரவுகளில் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடக்கும். கூட்டம் இசையில் மெய்மறந்து போயிருந்தது. சிவராமன் தனி ஆவர்த்தனத்தில், மாயாஜாலம் காட்டிக்கொண்டிருந்தார். பாலாவும் எங்களுடன் வருவதாயிருந்து, கடைசி நேரத்தில் வர முடியாமல் போனது. கல்லூரி விடுதியிலிருந்து மாலை ஆறு மணிக்கு கிளம்பியபோதே மேகங்கள் அடர்த்தியாய் மூடி மழை வரும்போலிருந்தது.
”ஆதி தாளமும், மாயாமாளவ கௌளையும் பேஸிக்” என்றான் குரு. நான் ராகங்களுக்கிடையிலான வித்தியாசங்களைப் புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஒன்றிரண்டு ராகங்களுக்கு, நினைவுக்கு வந்த சினிமா பாடல்களை உதாரணம் சொன்னான் குரு. பன்னீர் புஷ்பங்களின் எந்தப் பாடலைக் கேட்டாலும் எனக்கு மேனகாவின் முகம்தான் ஞாபகம் வரும். உமா ரமணனின் “ஆனந்த ராகம்...”-மும், மலேசியா வாசுதேவனின் “கோடைகாலக் காற்றே...”-வும் முதல் வரியிலேயே அந்த களங்கமில்லா, பளிங்கு முகத்தை மனதில் மேல்கொண்டு வரும். நிறம் மாறாத பூக்களின் “ஆயிரம் மலர்களே மலருங்கள்...”-கூட. “காலதேவன் சொல்லும் பூர்வஜென்ம பந்தம்...நீ யாரோ...நான் யாரோ...”-வரிகள் கேட்கும்போது, மேனகாவின் முகம்தான் மனதில் நிறைந்திருக்கும். கால ஓட்டத்தில், மேனகாவுடனான இந்த நான்கு வருடங்கள் - கனவல்ல நிஜம்தான் என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்... இது நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது...ப்ள்ஸ் டூ முடித்தவுடன் ப்ரொஃபஸனல் காலேஜ் எதிலும் இடம் கிடைக்காமல், மனம் வெறுத்து விருதுநகர் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி சேர்ந்திருந்தேன். ஒரு மாதம் கழித்துதான், தோட்டக்கலைக்காக கவுன்ஸிலிங் லெட்டர் வந்தது. ஆர்ட்ஸ் காலேஜின் சூழ்நிலையில் அந்த ஒரு மாதத்திலேயே மனம் மரத்துப்போயிருந்தது. அங்கிருந்த ஒரே ஆறுதல், அக்கல்லூரியின் நூலகம். அங்குதான் என் தீவிர வாசிப்பு துவங்கியது. புத்தகங்களுக்குள் நான் மூழ்கிக்கொண்டேன். சில நேரங்களில் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு நூலகத்திலேயே உட்கார்ந்திருப்பேன். தோட்டக்கலை சேரும்போதும் மனம் அந்த விரக்தியிலிருந்து முற்றிலும் விலகாமல்தான் இருந்தது.
ஆனால், தோட்டக்கலை கல்லூரியில் மேனகா கண்களில் எழுந்தருளிய அந்த முதல் நாள்...அன்றிலிருந்து வாழ்வு மாறித்தான் போனது...நான், வகுப்பறை கட்டிடத்தின்முன் மரத்தடியில் சைக்கிளை நிறுத்திவிட்டு, என் குறிப்பு நோட்டுக்களை எடுத்துக்கொண்டு, வாசலுக்கு முன்னாலிருக்கும் நீள்பாதையில் செல்ல மேலேறும்போது, இடதுபக்கம் யதேச்சையாய் பார்வை போக, அவர் வந்துகொண்டிருந்தார். இள நீல உடை; இடதுகையில் புத்தகங்களை அணைத்துப் பிடித்திருந்தார். உடன்வந்த தோழியுடன் இடதுபுறம் திரும்பிப் பேசிக்கொண்டே. மனம் ஒரு நிமிடம் நின்று திகைத்தது... இந்த முகத்தை கனவில் பார்த்திருக்கிறேன்... இந்த முகத்தின் கனிவை, தெளிவை, தெய்வீகத்தை ஏற்கனவே உணர்ந்திருக்கிறேன்... எனக்கு என்ன ஆகியது என்று தெரியவில்லை. மனம் பரபரத்து, பரவசம் கொண்டு, நாக்கு வறண்டது. மறுபடியும் திரும்பி நடந்துபோய் சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு அருகிலிருந்த சிறிது உயரமான மேடையில் உட்கார்ந்துகொண்டேன். கைகள் நடுங்குவது போலிருந்தது. வலது கையிலிருந்த நோட்புக்ஸை அருகில் கீழே வைத்துவிட்டு கையை திருப்பி திருப்பி பார்த்தேன். இல்லை, கை நடுங்கவில்லை, மனம் நடுங்குகிறது. மறுபடியும் தலைநிமிர்ந்து பார்த்தபோது அவர் ஃபேகல்டிக்குள் செல்ல திரும்பிக் கொண்டிருந்தார். அவரின் நடை, காலணி அணிந்த அவர் பாதங்கள் “மென்மை...மென்மை” என்று மௌனத்தில் சப்தமிட்டன. எனக்கு அப்போது அவர் நடந்துவந்த பாதையிலிருந்த மரங்களெல்லாம் ஜகராண்டாவாக மாறி நீலப் பூக்களால் நிறைந்து மிகுந்த சந்தோஷத்தில் திளைப்பது போலிருந்தது. காட்சிகளெல்லாம் சலனங்கலாய் இருந்தன. இளையராஜாவின் 16 வயதினிலே “செந்தூரப் பூவே...” பாடலில், பாடல் ஆரம்பிக்குமுன் ஒரு முன் இசை வருமே...அந்த இசையின் உணர்வு வடிவமாய் மனம் இருந்தது. நடந்துவந்த ஆகாஷின் “ஏண்டா, இங்க உட்கார்ந்திருக்க, உள்ளே வரலயா?” என்ற குரல் கேட்டுத்தான் மனம் கீழிறங்கியது. நான் வகுப்புக்குள் போகலாமா, இல்லை யுனிவர்சிடி கேண்டீன் போய் டீ சாப்பிட்டு வரலாமா என்று யோசித்தேன். வகுப்பு ஆரம்பிக்க இன்னும் ஐந்து நிமிடம்தான் இருந்தது. ப்ளஸ் டூ வரை தமிழ் மீடியத்தில் படித்திருந்ததால், ஆர்ட்ஸ் காலேஜின் வகுப்புகள் கூட கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். இங்கும் வகுப்பு ஆசிரியர்களின் ஆங்கில உச்சரிப்புகள், வகுப்பு நடத்தும் முறை குறித்த மெல்லிய பயம் இருந்தது. ஆனால் மேனகாவைப் பார்த்ததும், அவரும் ஒரே வகுப்புதான் என்று தெரிந்ததும் வகுப்புகள் குறித்த பயம் அகன்றுபோனதை நினைத்து புன்னகைத்துக் கொண்டேன். ஆசிரியர்கள் எப்படி இருந்தால் என்ன...எப்படி பாடம் நடத்தினால் என்ன...அதுதான் எல்லா வகுப்புகளிலும் மேனகா இருக்கப் போகிறாரே என்று நினைத்துக்கொண்டேன்.
அந்த ஷணம், அந்த விநாடி என் மனதில் ஏற்பட்ட உணர்வு, இதோ இந்த நான்காம் வருடம் வரை, மேனகாவைப் பார்க்கும் நிமிஷங்களிள் எல்லாம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மேடையில் பாடிக்கொண்டிருந்தவர், கடைசி துக்கடாவில் “குறையொன்றுமில்லை...” பாட ஆரம்பித்தார். “இது ராகமாலிகை” என்றான் குரு. “கலிநாளுக்கிறங்கி, கல்லிலே இறங்கி...”-மனம் யோசித்தது, மேனகாவிலும் ஒரு சக்தி இறங்கி பிரகாசிக்கிறது... அது எல்லோருக்கும் அருள்புரியும் ஒரு பேரன்பின் சக்தி. “ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை...” பாடகரின் குரல் உள்ளத்தை நெகிழ்த்தியது.
கச்சேரி முடிந்தபோது மனம் நிறைந்திருந்தது. “ஸ்டார் ம்யூசிக்கல்ல, ஒரு ஆடியோ கேஸட் ரிகார்ட் பண்ண குடுத்திருந்தேன். வாங்கிட்டு ஹாஸ்டல் போலாம் குரு” என்றேன். இருவரும் சைக்கிளில், ஆர்.எஸ்.புரம் ரோட்டில் அன்னபூர்ணா ரோட்டுக்கு இரண்டு தெருக்கள் தள்ளியிருந்த ஸ்டார் ம்யூசிக்கல் வந்தோம். கேசட்டை வாங்கிக்கொண்டு மறுபடி சைக்கிள் எடுத்தபோது, மழை ஆரம்பித்தது. “நின்னவுடனே போலாம்” என்று சைக்கிளை ஸ்டேண்ட் போட்டுவிட்டு திரும்பி வந்து கடை வாசலில் நின்றுகொண்டோம். மழை, அடித்துப் பெய்தது. நான் கடைக்காரப் பையனிடம் “கேசட்ல லாஸ்ட்ல இடம் இருந்ததுன்னா ”ஹவ் டு நேம் இட்” பதியச் சொல்லியிருந்தேன், போட்டிருக்கீங்களா?” என்றேன். பையன் சிரித்துக்கொண்டே “ஆமாம், ரிகார்ட் பண்ணியிருக்கேன்” என்றான். மழை நிற்பதுபோல் தெரியவில்லை. இன்னும் வலுத்துப் பெய்தது. “நனையலாம் குரு. மழையில சைக்கிள் ஓட்டிட்டுப் போகலாம். எனக்குப் பிடிக்கும்” என்றேன். வால்பாறையில் தேயிலை பயிர் பயிற்சியின்போது, ஒரு நாள் மதிய வேளையில், தங்கியிருந்த விடுதிக் கட்டிடத்தின் அருகில் வேண்டுமென்றே கொட்டும் மழையில் நனைந்தது ஞாபகம் வந்தது. பஸ்ஸிற்குள் உட்கார்ந்திருந்த வேணி “ஏன் வெங்கடேஷ் மழையில நனையறே?” என்று குரல் கொடுத்தார். அவர் குரல் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தேன். ”நான் பஸ்ஸுக்குள்ள உட்கார்ந்திருக்கேன், இங்க” என்று மறுபடி குரல் வந்தது. நனைந்த கண்ணாடியினூடே, வேணியின் முகம் கலங்கலாகத் தெரிந்தது. “நான் நனையறேன் வேணிம்மா, எனக்கு நனையணும் போல இருக்கு” என்றேன். மதிய உணவிற்கு முன்னதான வகுப்பில்தான் மேனகாவைப் பார்த்து மனம் பரவசத்தின் உச்சத்தில் இருந்தது.
கடையில் ஒரு பாலிதீன் கவர் வாங்கி, எல்லாவற்றையும் உள்ளே வைத்து நான்கைந்து மடிப்புகள் மடித்து, பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, நானும் குருவும் மழையிலேயே கிளம்பினோம். சிறிது நேரத்திலேயே உடைகள் நனைந்து தொப்பலாயின. எனக்கு அணிந்திருந்த கண்ணாடி முழுதும் நனைந்து ரோடே தெரியவில்லை. வெளிச்சப் புள்ளிகள் சிதறி கலங்கி தெரிந்தன. மனது மிகவும் உற்சாகமாகிவிட்டிருந்தது. ஒவ்வொரு முறை சைக்கிள் பெடல் மிதிக்கையிலும், மனது உற்சாகத்தில் துள்ளி கத்தவேண்டும் போலிருந்தது. பால் கம்பெனி எப்போது கடந்துபோனதென்று தெரியவில்லை. மேனகாவின் முகத்துடன், இளையராஜாவின் பாடல்களை மனம் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டு வந்தது. தலையில் விழுந்த நீர்த்தாரை முகத்திலும் பின்னிலும் வழிந்துகொண்டிருந்தது. மார்கழியின் அதிகாலையில் கவியும் மென்குளிர் பனி மேனகாவை ஞாபகப்படுத்துவது போல், மழையும் மேனகாவைத்தான் ஞாபகப்படுத்துகிறது.
நல்லவேளை மறுநாள் ஏதும் காய்ச்சல் வரவில்லை. சாயங்காலம் கிளம்பி சைக்கிளில் சாய்பாபா காலனியில் இருக்கும் இஸ்கான் கோவிலுக்குச் சென்றேன். அப்போது இஸ்கானுக்கு கோவிலில்லை. ஒரு வீட்டில்தான் கிருஷ்ணா, ராதா, பலராம் டெய்ட்டிஸ் வைத்து கோவிலாக்கியிருந்தார்கள். முன்னிரவு ஏழு மணிக்கு, துளஸி ஆரத்தியும், கிருஷ்ண ஆரத்தியும், பஜனும் நடக்கும். முடிந்ததும் இரவுணவாக பிரசாதம். இஸ்கானில், விக்கிரகங்களுக்குச் செய்யும் உடையலங்காரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அன்றைய உடையலங்காரம் எல்லாருக்குமே நீல வண்ணத்தில். மணியடித்து திரை விலக்கியதுமே, அந்த நீலம் கண்களில் நுழைந்து, மனதில் இறங்கி நெகிழ்த்தியது. நான் கைகூப்பினேன். சரிகை நிரம்பிய அந்த நீலப்பட்டாடை மேனகாவிற்கு பொருத்தமாய் இருக்கும் என்று மனம் நினைத்தது. “ஜெய ராதா மாதவா...” பஜன் பாடல் மனதைக் கரைத்தது. பஜனும் ஆரத்தியும் முடிந்து கீதை வகுப்பும் முடிந்து பிரசாதம் சாப்பிட்டபிறகு, வெளியில் வராண்டாவில் நின்று செக்ரட்டரி ஸ்வாமிஜியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர், ஐஸ்வர்யதாஸ், ஐடிஐ முடித்தவர். டேபிளில் புத்தகங்களும், ஆடியோ கேசட்டுகளும் அடுக்கி வைத்திருந்தார்கள், தேவையானவர்கள் வாங்கிக்கொள்ள. “ஜாக்ஜித் சிங் ‘சமர்ப்பண்’ கேசட் வந்ததா ஸ்வாமிஜி?” என்று கேட்டேன். ”இன்னும் வரலைன்னு நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு டேபிள் பக்கத்திலிருந்த இன்னொரு ஸ்வாமிஜியிடம் கேட்டார். அவர் இன்னும் வரவில்லையென்றார். நான் கீதையின் சில ஸ்லோகங்களில் சந்தேகங்கள் கேட்டுக்கொண்டிருந்தேன்.
உள்ளிருந்து, சாமிகளுக்கு அணிவித்து அலங்கரித்திருந்த பூமாலைகளை மற்றொரு ஸ்வாமிஜி வெளியில் கொண்டுவந்து எல்லோருக்கும் விநியோகித்தார். ஐஸ்வர்யதாஸ் ஸ்வாமிஜி, அவரிடமிருந்து ஒரு மாலையை வாங்கி, “ஹரே கிருஷ்ணா” என்று சொல்லிக்கொண்டே முன்னால் நின்றிருந்த என் கழுத்தில் போட்டார். நான் எதிர்பார்க்கவில்லை. ஒற்றைச் சரமாய் கட்டப்பட்ட, சம்பங்கி மாலை உயிர் உருக்கும் மணத்தோடு, மெல்லிய கனமாய் என் கழுத்தில் நெஞ்சு வரை தவழ்ந்திருந்தது. என் மனம் கரைந்து நெகிழ்ந்தது. கண்கள் ஈரமாயின. எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றிருந்தேன். ஐஸ்வர்யதாஸ் பிரபுபாதாவைப் பற்றி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். சம்பங்கியின் மணமும் மேனகாவின் முகம்தான்...உள்ளே ஆரத்தியின் போது, திரிகளின் மஞ்சள் ஒளியில் பிரகாசித்த ராதையின் குறுஞ்சிரிப்பான முகம்...அது மேனகாவின் முகமா...நான் ராதையின் பாதங்களை மானசீகமாக வணங்கினேன்.
“ராதே...”
Episode 17 | சரக்கொன்றை
”இப்ப மறுபடியும் மேனகாவ பாத்தீங்கன்னா, உங்க ரியாக்ஷன் எப்படி இருக்குங்கண்ணா?”
யமுனா கேட்டதும், துணி துவைத்துக் கொண்டிருந்த அம்மு (மல்லிகா) திரும்பி யமுனாவைப் பார்த்து புன்னகைத்தார். யமுனா, செல்வா-வின் மனைவி. செல்வா, என்னுடன் மஞ்சுஸ்ரீயில் வேலை செய்யும் நண்பன். சொந்த ஊர் ராசிபுரம் அருகே செல்லங்காடு. நான் மலர்த்துறையில் வேலை பார்த்தேன். செல்வாவிற்கு விதை இனப்பெருக்கத் துறையில் வேலை. அண்ணாமலை பல்கலையில் எம்.எஸ்.சி முடித்தவன். எள் பயிரில் ஆராய்ச்சிக்காக விண்ணப்பித்திருந்தான். நாங்கள் செல்லமாக “எள்ளண்ணா” என்று கூப்பிடுவதுண்டு. செல்வாவிற்கும், யமுனாவிற்கும் திருமணமாகி எட்டு மாதமாகிறது. யமுனாவும் ராசிபுரம்தான். யமுனாவின் அப்பா ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியாவில் மேனேஜர்.
செந்தில் நகரில், செல்வாவின் வீடும், என் வீடும் அருகருகில். வடக்கு பார்த்த வாசல். செந்தில் நகரில் மொத்தமே பத்து, பனிரெண்டு வீடுகள்தான். முகப்பில் இருக்கும் செந்தில் விநாயகர் கோவிலுக்குப் பின் இருக்கும் வீட்டில், சங்கர், புவனாவோடு வசிக்கிறான். சங்கர் எனக்கும் செல்வாவிற்கும் கொலீக். செல்வாவோடு அண்ணாமலையில் படித்தவன். நாங்கள் பேச்சிலராக இருந்தபோது எல்லோரும் சேர்ந்து ஒரே வீட்டில் இருந்தோம். திருமணமானபின், செந்தில் நகரிலேயே தனித்தனி வீடுகள் வாடகைக்கு எடுத்துக்கொண்டோம்.
எங்கள் வீட்டிற்கு காம்பவுண்ட் கிடையாது. துணி துவைப்பதென்றால் பாத்ரூமில்தான் துவைக்கவேண்டும். வாஷிங் மெசின் இன்னும் வங்கியிருக்கவில்லை. செல்வாவின் வீடு காம்பவுண்டுடன், வீட்டின் பின் வாசலுக்கும், காம்பவுண்ட் சுவருக்குமிடையே துணி துவைப்பதற்கு இடுப்புயர சரிவான கல் பதிக்கப்பட்டிருக்கும். தரையும் சிமெண்ட் தளம் போட்டது. துணிகளை அலசுவதற்கு, சுவற்றில் கிச்சனிலிருந்து இணைப்பு கொடுத்து ஒரு குழாய் இருந்தது. அதனால், துணிகள் துவைப்பதற்கு பகலில் அம்முவும், நானும் சனிக்கிழமைகளில் அங்குதான் செல்வது. சனிக்கிழமை எனக்கு வார விடுமுறை. ஞாயிற்றுக் கிழமைகள் வேலை நாட்கள்.
அது ஒரு மார்கழி மாதத்தின் சனிக்கிழமை. முன்பகல் பதினோரு மணி இருக்கும் என நினைக்கிறேன். துணிகளை பக்கெட்டில் எடுத்துக்கொண்டு நானும், அம்முவும் செல்வா வீட்டிற்கு வந்திருந்தோம். நான் கூடவே டேப் ரிகார்டரையும், இளையராஜாவின் ஐந்தாறு ஆடியோ கேசட்டுகளையும் எடுத்துக்கொண்டேன். கிச்சனில் இருந்த ப்ளக் பாய்ண்டில் வயரை மாட்டி, ஜன்னல் வழியே வயரை எடுத்து வெளியில் ஜன்னல் மேடையில் டேப் ரிகார்டரை வைத்து பாடல்கள் கேட்டுக்கொண்டே, அம்மு துணிகளுக்கு சோப்பு போட்டு தேய்த்துவிட்டு, பேஸினில் போட, நான் குழாயருகில் உட்கார்ந்து, தண்ணீரில் முக்கி அலசி பிழிந்து இன்னொரு பக்கெட்டில் போட்டுக்கொண்டிருந்தேன். டேப் ரிகார்டரில் ”என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்...” பாடிக்கொண்டிருந்தது. யமுனா கிச்சனில் சமைத்துக்கொண்டே ஜன்னல் வழியே எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். செல்வா வேலைக்குப் போயிருந்தான். அவனுக்கு மறுநாள் ஞாயிறுதான் விடுமுறை. யமுனா அம்முவிடம் “நான் முதன்முதல்ல உங்களைப் பார்த்தப்ப உங்க முகம், ஆக்ட்ரெஸ் மோனிஷா முகம் மாதிரியே இருக்குன்னு நினைச்சேன் மல்லிகா” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். “ஆமா, ரோட்ரிக்ஸ் வொய்ஃப், ஃபர்ஸ்ட் டைம் பாக்குறப்ப அவரும் இப்படித்தான் சொன்னார்” என்றார் அம்மு சிரித்துக்கொண்டே.
துவைக்கும் கல்லிலும், அலசும் குழாயடியிலும் காம்பவுண்ட் சுவர் அருகிலிருந்த பெரிய சரக்கொன்றை மரத்தின் நிழல் படர்ந்திருந்தது. அம்முவின் முகத்தில் வெளிச்சமும், இலை நிழல்களும் சேர்ந்து ஓவியம் வரைந்திருந்தன. சரக்கொன்றை மரத்தில் அடர்த்தியாய் பூத்திருந்த மஞ்சள் பூக்களின் நிறம் அம்முவின் முகத்தில் பிரதிபலிப்பது போலிருந்தது. அம்மு காலையில் தலைக்குக் குளித்துவிட்டு, முடியை தளரப் பின்னி முல்லைப் பூ வைத்திருந்தார். கட்டியிருந்த நீலச்சேலையின் வலதுபுறத்தை ஒரு இஞ்ச் தூக்கி இடுப்பில் சொருகியிருந்தார். ரிகார்டரில் அடுத்த பாடல் “ஒரே நாள்...உனை நான்...நிலாவில் பார்த்தது...” ஆரம்பித்தது.
”நல்லா அலசணும் பாவா, இல்லண்ணா சோப்பு அப்படியே துணியில இருக்கும். ஒரே தண்ணியில அலசக் கூடாது. தண்ணி ரெண்டு மூணு டைம் மாத்தணும். சொன்னா, கேக்க மாட்டீங்களா?” சிரிப்புடன் சொல்லிக்கொண்டே சோப்பு நுரையை அள்ளி என்மேல் வீசினார் அம்மு. நான் “சரி...சரி” என்று சொல்லிக்கொண்டே, சிரிப்புடன், அலசிய பேஸின் நீரை கீழே சிமிண்ட் தரையில் கவிழ்த்தேன். சோப்பு நுரைகளுடன், நீர் ஓடிச்சென்று மருதாணியிட்ட அம்முவின் கொலுசணிந்த பாதங்களைத் தொட்டுவிட்டுத் திரும்பியது.
நேற்றிரவு சமையலறையில் வேலைகளை முடித்துவிட்டு, அம்மு படுக்கையறைக்கு வந்தபோது நான் பாலாவின் “தாயுமானவன்” (இரண்டாம் முறை) படித்துக்கொண்டிருந்தேன். “என்னன்னு தெரியல பாவா, இந்த இடது கணுக்கால், சாயங்காலத்துலருந்தே வலிச்சிட்டிருக்கு” என்றபடி இடதுகாலை மடக்கி முன் கொண்டுவந்து, பாதத்தை அழுத்திக்காட்டினார். “அயோடெக்ஸ் தேய்க்கலாம் அம்மு” என்று சொல்லிவிட்டு, நான் புத்தகத்தை படுக்கைக்கு இடது ஓரமிருந்த சிறிய டேபிளில் வைத்துவிட்டு, ட்ராயரை இழுத்து அயோடெக்ஸை எடுத்தேன். “நான் போட்டு விடறேன், காலைக் கொண்டா...” என்றேன். “ஐயோ...கால் எனக்கு கூசும்” என்றார். “பரவால்ல...” என்று சொல்லிவிட்டு அம்முவின் இடது காலை நீட்டச் சொல்லி என் மடியில் வைத்துக்கொண்டேன். சின்னச் சின்ன மணிகளுடன் வெள்ளிக்கொலுசு மருதாணியின் சிவந்த டிசைனை சுற்றியிருந்தது.
செந்தில் நகரில், தாத்தா, பாட்டி, முதல் தம்பி சத்யன் எங்களுடன்தான் இருந்தார்கள். சத்யன் ஓசூர் சிப்காட்டில் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான். அம்முவிற்கு நாள் முழுதும் ஓயாது வேலையிருக்கும். மூன்று நேர சமையல், எல்லாருடைய துணிகளையும் துவைத்துப் போடுவது, பாத்திரம் கழுவுவது...அப்போது வீட்டு வேலைகளுக்கு ஆள் வைக்கவில்லை. நான் அயோடெக்ஸை கொஞ்சமாய் விரல்களில் எடுத்து அம்முவின் கணுக்காலில் வைத்து சுற்றிலும் தேய்த்துவிட்டேன். அம்முவின் பாதம், ரோஜா இதழ்களின் மென்மை கொண்டிருந்தது. “கஷ்டமாருந்தா வேலைக்கு ஆள் வச்சிக்கலாம் அம்மு. சண்முகம் சார் வீட்டுக்கு வர்ராங்கல்ல, கமலம்மா, அவங்களையே இங்கயும் அரை நாள் வரச் சொல்லலாம்” என்றேன். “வேணாம் பாவா, ரொம்ப வேலை ஜாஸ்தியாச்சுன்னா, அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு “என்ன படிக்கிறீங்க?” என்று கேட்டுக்கொண்டே புத்தக அட்டையைப் பார்த்துவிட்டு “தாயுமானவனா? எத்தனை டைம் படிப்பீங்க?” என்று கேட்டார். மறுநாள் விடுமுறை என்பதால், பேச்சு பாலாவின் கதைகளோடு நீண்டுகொண்டே போனது. அந்த இரவு ஓர் இனிமையான இரவு.
சமையலறையிலிருந்து யமுனா “டீ போடவாங்கண்ணா?” என்றார். “தெய்வமே, கொடுங்க...” என்றேன் சிரித்துக்கொண்டே. அம்மு சிரித்துக்கொண்டே “அவருக்கு மட்டும் போடுங்க யமுனா. எனக்கு வேண்டாம். இவர், அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை டீ குடுத்தாலும் குடிப்பாரு” என்றார். டீ போட்டு எடுத்துக்கொண்டு வந்தார் யமுனா. நான் குழாயடியிலிருந்தே வாங்கிக்கொண்டேன். சமையல் வேலை முடிந்ததால் எங்களுக்கு அருகிலேயே சேர் போட்டு உட்கார்ந்துகொண்டார். துணிகளைப் பார்த்த யமுனா “என்ன மல்லிகா, சேலைங்க எல்லாமே புளூ கலராவே இருக்கு, லைட் புளூ...டார்க் புளூ...வயலெட்னு..” என்று கேட்டார். “இவருதான், எங்க போனாலும் ஒரு புளூ சாரி வாங்கி கொண்டு வந்துர்றார்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அம்மு. ரிகார்டரில் “ஆகாய கங்கை...” பாடலின் ஜானகியின் ஹம்மிங் துவங்கியது.
பேச்சு அங்கு தொட்டு, இங்கு தொட்டு...நான் கல்லூரி கதைகளை சொல்லிக்கொண்டிருந்தேன். அம்முவிற்கு, மேனகாவைப் பற்றி முன்கூட்டியே சொல்லியிருந்தாலும், யமுனாவிற்கு முதன்முதலில் அப்போதுதான் சொல்கிறேன். மேனகாவைப் பற்றி எல்லாம் கேட்டுவிட்டுத்தான், அந்த கேள்வியை யமுனா கேட்டார் “இப்ப மேனகாவ மறுபடியும் பாத்திங்கண்ணா, உங்க ரியாக்ஷன் எப்படி இருக்குங்கண்ணா?”
நான் குழாயிலிருந்து பக்கெட்டில் விழும் நீரையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். நிமிர்ந்து யமுனாவைப் பார்த்து, “மேனகாவப் பார்க்கணும் யமுனாம்மா. ஒரு தடவையாவது பார்க்கணும். மல்லிகாவோட சேர்ந்து. மல்லிகாவுக்கு மேனகாவ அறிமுகப்படுத்தி வைக்கணும். சந்தர்ப்பம் தானா அமையாட்டாலும், எப்படியாவது கண்டுபிடிச்சி ஒருதரம் பார்க்கணும். பார்க்கறப்ப, முன்னாடி மாதிரி மனசு பரபரப்பா பொங்காட்டாலும், கனிஞ்சு பொங்குற மனச அடக்கிட்டு, நெஞ்சு நிறைய அன்போட, மனசோட ஆழத்துலருந்து, ரெண்டு கையையும் சேர்த்து கைகூப்பி “தேங்ஸ்..”-னு சொல்லி கும்பிடணும். அந்த ‘தேங்ஸ்’ ‘நன்றி’ எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் யமுனாம்மா. அந்த நாலு வருஷமும், நான் எவ்வளவோ மேனகா-ட்டருந்து கத்துட்டிருந்திருக்கேன். மேனகா-ட்டருந்து எடுத்திட்டிருந்துருக்கேன். அது மேனகாவுக்கே தெரியாது. அன்பு-ன்றது ஒரு குவாலிட்டிதானே யமுனாம்மா?, ஒரு ஸ்டேட் ஆஃப் மைண்ட்-தான?. அது, கூடும், குறையுமா என்ன?. காலேஜ் டேஸ்-ல மேனகா மேல வச்ச ஒரு அன்பு, ஒரு உணர்வு, இன்னைக்கும் கனிஞ்சு உள்ளுக்குள்ள அதே அளவுலதான் இருக்கு. அவங்க எங்கேயிருந்தாலும், குடும்பத்தோட சந்தோஷ்மாயிருக்கணும்-னுதான் அடிக்கடி நெனைச்சுக்கிறேன்.
“இனிது இனிது காதல் இனிது”-னு பாலாவோட புக் ஒண்ணு. அதுல ஒரு ஸ்டோரி. நாணுவும், துர்காவும் அக்ரஹாரத்துல பக்கத்து பக்கத்து வீடு. ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. ஆனா சந்தர்ப்ப வசத்தால, நாணு குடும்பம் டெல்லிக்கு போயிடறது. துர்கா வீட்டில இந்த லவ்வுக்கு எதிர்ப்பு வேற. இருபது, இருபத்தஞ்சு வருஷம் கடந்து போறது. துர்காவுக்கு கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தை. பேரு கௌசல்யா-னு நினைக்கிறேன். நாணு டெல்லியில செக்ரட்டரியேட்ல நல்ல வேலையில இருக்கார். ஒரு டைம் ஊருக்கு வரும்போது, துர்கா வீட்டுக்கு வர்றார். கௌஸி-யப் பார்த்தா அவருக்கு சின்ன வயசு துர்கா-வப் பாக்கற மாதிரியே இருக்கு. துர்கா, துர்கா-வோட வீட்டுக்காரர், கௌஸி மூணு பேர்கிட்டயும் பேசிட்டிருந்துட்டு கிளம்பும்போது, கௌஸி “நான் அங்கிள் கூடப் போய், ஏர்போர்ட்-ல வழியனுப்பிட்டு வர்றேன்”-னு நாணு கூட காரில் வருகிறார். நாணு கௌஸி-ட்ட படிப்பு பத்தியும், எதிர்கால கேரியர் ப்ளான் பத்தியும் பேசிட்டு வர்றார். ஏர்போர்ட் காபி ஹவுஸ்-ல ரெண்டு பேரும் காபி குடிக்கிறாங்க. ஃப்ளைட் அன்னவுன்ஸ்மெண்ட் வந்தப்புறம் லக்கேஜ் எடுத்துட்டு பை சொல்லிட்டு கிளம்பும்போது “வர்றேன் துர்கா”-ன்றார். கௌஸி சிரிச்சுட்டே “ஐ...அம்மாவ நீங்க இன்னும் மறக்கல”-ன்றார்.
படிச்சிட்டிருந்தப்ப சட்னு கண்ல தண்ணி வந்தது யமுனாம்மா. அன்பு-ன்றது, காதல்-ன்றது உடல் சார்ந்தத தான் இருக்கணுமா என்ன?. மேனகா மேல காலேஜ் டேஸ்ல நான் வச்சிருந்த உணர்வு, இப்ப உருமாறி கனிஞ்சு வேற ஃபார்ம்-ல இருந்தாலும் அளவு அதே அளவுதான் இருக்குண்ணு தோணுது” - என்றேன்.
பக்கெட்டில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. அம்மு துவைத்து முடித்திருந்ததால், குழாயருகில் வந்து மீதித் துணிகளை அலசி பக்கெட்டில் போட்டுக்கொண்டிருந்தார். அம்முவிற்கு நீளமான முடி. ‘முடியப் புடிச்சி இழுக்காதீங்க பாவா” அம்மு அடிக்கடி சொன்னாலும், அம்முவின் பின்னலைப் பார்த்தால் கை பரபரக்கும். டேப் ரிகார்டரில் “அடி பெண்ணே...பொன்னூஞ்சல் ஆடும் இளமை...” ஜென்ஸியின் குரல் வழிந்துகொண்டிருந்தது. அம்மு அக்குரலுடன் சேர்ந்து பாடலை ஹம் பண்ணிக்கொண்டிருந்தார். மெலிதாய் காற்று ஒன்று கடந்துபோனது. சரக்கொன்றையின் மஞ்சள் பூக்கள் சில அம்முவின் தலையில் மரத்திலிருந்து உதிர்ந்து சொரிந்தன.
Episode 18 | மார்கழிப் பூக்கள்...
அம்முவும், நானும் டி.வி.எஸ் 50-ல் உழவர் சந்தையைக் கடக்கும்போது விடிகாலை மணி 4.30. ஓசூரின் மார்கழி வைகறைப் பனி சல்லாத் துணி போல் நகரைப் போர்த்தியிருந்தது. உழவர் சந்தை அந்நேரத்திலேயே பரபரப்பாகவும், மனிதக் கூட்டத்தோடும் சுறுசுறுப்பாயிருந்தது. நுழைவாயிலின் இருபுறமும் காம்பவுண்ட் சுவரை ஒட்டி தள்ளு வண்டிகள் வரிசை கட்ட ஆரம்பித்திருந்தன. வண்டிகளில் வெங்காயக் குவியலும், பலாப்பழங்களும், அடுக்கிய சீப்புகளாய் புள்ளி வாழைப்பழங்களும் கண்களில் பட்டன. காய்கறி லோடு வண்டிகள் உள்ளே போவதும், வெளிவருவதுமாய் சந்தை உயிர்பெற்றிருந்தது. சைக்கிளில் ஒருவர் கேட் அருகே ”சுக்கு காபி” என்று சப்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். சந்தை முன்னாலிருந்த சிறிய இடத்திலும் சின்னச் சின்ன கடைகள் முளைக்க ஆரம்பித்திருந்தன.
“ஏதாவது வாங்கணுமா அம்மு?” பின்னால் லேசாகத் தலை திருப்பி அம்முவிடம் கேட்டேன். “வரும்போது வாங்கிக்கலாம் பாவா. காய்கறி கொஞ்சம் வாங்கணும். இப்ப க்ளாஸூக்கு லேட்டாயிடும்” என்றார். அது ஈஷா யோகா மையத்தின் பதின்மூன்று நாள் பயிற்சி வகுப்பு. ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம். காலை வகுப்பு ஐந்திலிருந்து எட்டு மணி வரை. மாலையில் நாலரையிலிருந்து ஏழரை மணி வரை. இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அம்மு, காலை நேரம்தான் நல்லது என்று காலை வகுப்பில் சேர்ந்திருந்தார். வகுப்புகள், அத்திப்பள்ளி போகும் சாலையில், அசோக் லெய்லாண்ட்-ற்கு முன்னால், செய்ண்ட் ஜோஷப் பள்ளியில் நடந்துகொண்டிருந்தன. காலையில் மூன்று மணிக்கே எழுந்து குளித்துவிட்டு கிளம்பி நான்கு பத்துக்கு செந்தில் நகரில் வீடு விட்டு கிளம்பினால்தான், 4.50-க்கு பள்ளி சென்று சேரமுடியும். எட்டு மணிக்கு வகுப்பு முடிந்தவுடன், அம்முவை ஏற்றிக்கொண்டு செந்தில் நகரில் வீட்டில் இறக்கிவிட்டு, நான் தொரப்பள்ளி பண்ணைக்கு வேலைக்கு போகவேண்டும். சிறிய சிரமங்கள் இருந்தாலும், அந்த வகுப்பை அம்மு தவறவிடக் கூடாதென்ற விருப்பமிருந்தது. நான் திருமணத்திற்கு முன்பே அப்பயிற்சி வகுப்பை முடித்திருந்தேன். அவ்வகுப்பினால் மனதில் உண்டான மலர்ச்சியினால்தான், அம்முவையும் அவ்வகுப்பில் சேர்ந்து கலந்துகொள்ளச் செய்து, பயிற்சி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன்.
எனக்கு வகுப்பு எடுத்தது ஸ்ரீராம் என்கிற ஒரு அண்ணா. இப்போது அம்மு வகுப்பிற்கு ஆஸ்ரமத்திலிருந்து காயத்ரி அக்கா வந்திருந்தார். உதவிக்கு இன்னும் இருவர். மூன்று மணி நேர வகுப்பில், முதல் ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் வகுப்பு ஆசிரியர் பேசுவார். அடுத்து பயிற்சிகளை ஆஸ்ரமத்தின் உறுப்பினர் ஒருவர் செய்து காட்டுவார். அடுத்து பங்கேற்பவர்கள் அனைவரும் செய்யவேண்டும். ஈஷா வகுப்புகளின் ஒழுங்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் பயிற்சியெடுத்தபோது உடன் வேலை செய்யும் குணாவும் வகுப்பில் கலந்துகொண்டான். அப்போதெல்லாம் எட்டு மணிக்கு வகுப்பு முடிந்து, வண்டி எடுத்துக்கொண்டு பண்ணைக்குச் செல்லும்போது, அந்த இளங்காலைப் பொழுதும், மென் குளிரும் இணைந்து மனது சிறகடிக்கும். அம்மு வகுப்பில் இருக்கும்போது நான் வகுப்பின் பின்னால் உட்கார்ந்திருப்பேன். வகுப்பை முன்பே முடித்தவர்கள், தன்னார்வலராக வகுப்பிற்கு சிறு சிறு உதவிகள் செய்யலாம்.
அன்று, காயத்ரி அக்கா பேசி முடித்ததும், குண்டலினி தியானத்தை எப்படி செய்வது என்று, உதவியாளர் வகுப்பின் முன் செய்துகாட்டினார். அவர் முடித்ததும் வகுப்பில் இருந்தவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள். பத்மாசனத்தில் அமர்ந்து, கையிரண்டிலும் சின் முத்திரை கொண்டு இரண்டு தொடைகளின் மேல் வைத்துக்கொண்டு அரைக்கண் மூடி அறையிலிருந்த ஐம்பது பேரும், ஒரேகுரலில் “அஉம் நம... சிவாய...” என்று சொல்லி குனிந்து எழுந்தபோது மனது அதிர்ந்தது. அது இருபது நிமிடத்திலிருந்து முப்பது நிமிடப் பயிற்சி. முதல் பதினைந்து நிமிடங்கள் அக்குரல்களின் ஸ்ருதியும் பாவமும் லயம் கொண்டு ஒரேசீராக எழுந்து அடங்கிக் கொண்டிருந்தன. உதவியாளர் ஒவ்வொருவர் அருகிலும் சென்று முத்திரை சரியாக வைத்திருக்கிறார்களா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
சட்டென்று ஒரு குரல் அழ ஆரம்பித்தது. கேவலோ, விசும்பலோ அல்ல, பெருங்குரலில் ஒரு உரத்த அழுகை. அம்முதான். மற்ற அனைவரும் கண்மூடி தியானம் தொடர்ந்துகொண்டிருந்தார்கள். அம்மு கண்மூடி கைகளில் முத்திரை வைத்திருந்தாலும், மந்திரம் சொல்வது நின்று வாய்விட்டு அழுதுகொண்டிருந்தார். என் மனது பரபரப்பும் பதட்டமும் கொண்டது. வகுப்பின் முன் சேரில் உட்கார்ந்திருந்த காயத்ரி அக்கா, வாயில் விரல் வைத்து அமைதியாயிருக்கும்படி எனக்கு சைகை செய்தார். அடுத்த பத்து நிமிடங்கள் தியானம் தொடர்ந்து, காயத்ரி அக்கா மைக்கில் மெல்லிய குரலில் ”சாந்தி” என்று சொன்னதும், குரல்கள் சட்டென்று அமைதியாயின. தொடர்ந்த உச்சரிப்புகளின் பின்னான சட்டென்ற அமைதி, மன எழுச்சி தருவதாய் இருந்தது. அறையில் அனைவரும் கண்மூடி அமர்ந்திருந்தார்கள். சிலரது உடல் அசைந்துகொண்டிருந்தது. சிலரது முகங்கள் மேல்நோக்கி அண்ணாந்திருந்தன. அம்முவின் அழுகை இப்போது சத்தம் குறைந்து விசும்பலுடன் தொடர்ந்துகொண்டிருந்தது. காயத்ரி அக்கா, மைக்கில் “கண் திறக்கலாம்” என்று சொல்ல எல்லோரும் மெதுவாக கண் திறந்தார்கள். அறையில் விளக்கமுடியாத ஒரு அமைதி வியாபித்திருந்தது.
“அசதோ மா...” மந்திரத்துடன் வகுப்பு முடிந்தது. ஒவ்வொருவராய் எல்லோரும் அறையிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்க, அம்மு எழுந்து வந்து பின்னால் நின்றிருந்த என்னை இறுக்கமாய் கட்டிக்கொண்டார். நான் அம்முவின் முதுகில் கைவைத்து அணைத்துக்கொண்டேன். முன்னால் சேரிலிருந்து, தன் வெண் உடை மேலிருந்த காவி சால்வையை சரி செய்துகொண்டே எழுந்து வந்த காயத்ரி அக்கா அருகில் வந்து புன்னகைத்து “நல்லதுதான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாடிசுத்தி பண்ணச் சொல்லுங்க வெங்கடேஷ்...” சொல்லிக்கொண்டே அம்முவின் கைபிடித்து “நீங்க வெள்ளியங்கிரி வாங்க, பாவஸ்பந்தனா வகுப்பு சத்குரு முன்னாடி அட்டெண்ட் பண்ணா நல்லது” என்றார். அம்முவின் முகத்தில் அழுகை மறைந்து நிதானித்திருந்தார்.
வகுப்பறையின் வெளியில் கருப்பட்டி கலந்து காய்ச்சிய சத்துமாவு கஞ்சி எல்லோருக்கும் கொடுத்தார்கள். வாங்கிக் குடித்துவிட்டு, காயத்ரி அக்காவிடம் மறுநாள் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு கிளம்பினோம். வண்டியில் திரும்ப போகும்போது “என்னாச்சு அம்மு? ஏன் அழுத நடுவுல?” எனக்கு பதில் தெரிந்திருந்தாலும், அம்மு என்ன சொல்கிறார் என்று தெரிந்துகொள்வதற்காகக் கேட்டேன். கொஞ்ச நேரம் அமைதியாயிருந்துவிட்டு அம்மு “தெரியல பாவா, பண்ணிட்டிருக்கும்போது சட்னு என்னமோ நடந்தது. என்ன பண்றதுன்னு தெரியாம அழுகை வந்துருச்சு” என்றார். எனக்குப் புரிந்தது. இந்த ஆனந்தத்தின், விகசிப்பின் கண்ணீர்ப் பூக்கள் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவைதான். தம்பி சத்யன், “பாவஸ்பந்தனா” வகுப்பு ஆஸ்ரமத்தில் முடித்துவிட்டு, காந்திபுரம் வந்து எனக்கு ஃபோன் செய்தபோது, ஃபோனிலேயே அழுதிருக்கிறான். நான் “என்னாச்சு?...என்னாச்சு?...” என்று பதட்டத்துடன் கேட்க, “ஒன்றுமில்லை...ஒன்றுமில்லை” என்று சொல்லிக்கொண்டே ஐந்து நிமிடங்கள் அழுதான்.
திருமணத்திற்கு முன்பு ஒருமுறை உடன் வேலை செய்யும் மிஸ்ரா-வுடன் பெங்களூருக்கு ஒரு ஹிந்துஸ்தானி கச்சேரிக்குப் போயிருந்தேன். மிஸ்ரா உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவன். ஓஷோவின் மேல் மிகுந்த ஈடுபாடு. முறையாக ஒரு குருவிடம் விபாஷனா தியானம் கற்றிருக்கிறான். ஓசூர் பஸ்தி ஏரியாவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தான். பல நாட்கள், மாலையில் வேலை முடிந்ததும், கிளம்பி, டூ வீலரை பஸ் ஸ்டாண்டில் தெரிந்தவர் கடையில் விட்டுவிட்டு, பெங்களூர் போய்விடுவோம் - கச்சேரிக்கு அல்லது சினிமா பார்ப்பதற்கு. அன்று சௌடையா மெமோரியல் ஹாலில், பண்டிட் ஜஸ்ராஜின் கச்சேரி. கூடவே சந்தூர் ராகுல் சர்மாவும். கோடக் மகிந்திரா ஏற்பாடு செய்திருந்தது. பெங்களூர் ஹெட் ஆபீஸில் சொல்லி முன்னரே இரண்டு டிக்கெட் புக் செய்திருந்தோம்.
கச்சேரி ஆரம்பிப்பதற்கு கால் மணி நேரத்திற்கு முன்னால், எல்லோரையும் உள்ளே அனுமதித்து, சரியான நேரத்திற்கு நிகழ்ச்சி துவங்கியது. அரங்கு நிறைந்திருந்தாலும் துளி சப்தம் கிடையாது. இரண்டு நிமிட அறிமுக உரைக்குப் பின், அரங்கின் விளக்குகள் அணைக்கப்பட்டு, மேடையில் மட்டுமான வெளிச்சத்தில் ஜஸ்ராஜ் பாடத் துவங்கினார். அடுத்த ஒன்றரை மணி நேரம் எந்த உலகத்தில் இருந்தோம் என்றே தெரியவில்லை. விளக்குகள் போடப்பட்டு பதினைந்து நிமிடங்கள் இடைவேளை நேரம் என்றும் அடுத்து ராகுல் சர்மாவின் சந்தூர் கச்சேரி என்றும் அறிவித்தார்கள். நான் பக்கத்தில் திரும்பி மிஸ்ரா-வைப் பார்த்தேன். கன்னத்தில் கண்ணீர் வழிய உட்கார்ந்திருந்தான். எனக்குப் புரிந்தது. மெதுவாக அவன் கையைப் பிடித்து “வா, டீ சாப்பிட்டு வரலாம்” என்று கூட்டிக்கொண்டு வெளியில் வந்தேன். அத்தனை கூட்டமிருந்தும், வெளியில் ஸ்டாலில் ஒரு அதிர்ந்த சப்தமில்லை. டீ வாங்கிக்கொண்டு இருவரும் விளக்கு வெளிச்சத்தில் மரத்தினடியில் நின்றுகொண்டோம். மிஸ்ரா எதுவும் பேசவில்லை. எனக்கு, கல்லூரி நாட்களில், பலமுறை, நள்ளிரவில், விடுதி அறையில், ஆர்.ஐ பில்டிங்கில், ஃபேகல்டியின் வாசல் முன்பு மேனகாவின் நினைவின் எழுச்சியில் நான் அழுத நாட்கள் ஞாபகத்துக்கு வந்தன.
"கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்குப் போகலாம் பாவா” என்றார் அம்மு. “சரி” என்றுவிட்டு, உழவர் சந்தை கடந்து வலதுபுறம் திரும்பி பின்னாலிருந்த ஐயப்பன் கோவிலுக்குப் போனோம். வண்டியை நிறுத்தியவுடன் நான் பண்ணைக்கு ஃபோன் செய்து நான் பண்ணைக்கு வர ஒரு மணி நேரம் தாமதாகும் என தகவல் தெரிவித்தேன். கோவிலில் கூட்டமில்லை. ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தவர்கள் ஏழெட்டு பேர் கறுப்பு உடையுடன் பிரகாரம் சுற்றிக் கொண்டிருந்தார்கள். வாசல் முன்னால் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் முல்லைப் பூ வாங்கி தலையில் வைத்துக்கொண்டார் அம்மு. இளங்காலையின் கிழக்கு வெளிச்சம் பதினெட்டு படிகளின் கரும் மொசைக் தளத்தின் மீது விழுந்திருந்தது. மேலேறி, தரிசனம் செய்துவிட்டு, பிரகாரம் சுற்றிவிட்டு திரும்பும்போது “கொஞ்ச நேரம் உட்காரலாம் பாவா” என்றார் அம்மு. அம்மு மேல்படியின் இடது ஓரத்தில் உட்கார்ந்துகொள்ள, நான் அடுத்தபடியில் அம்முவின் வலதுபாதம் அருகே உட்கார்ந்துகொண்டேன். அம்மு என் தோளில் கைவைத்திருந்தார். எதிரில், எழுந்துகொண்டிருக்கும் சூரியன். வீரமணியின் குரலில் ஐயப்பன் பாடல்கள் மெல்லிய வால்யூமில் ஒலித்துக் கொண்டிருந்தது.
மார்கழியின் அன்றைய பாடல் “சிற்றஞ்சிறு காலே...”. என்னவோ நினைத்துக்கொண்டு, ஏதோ நினைவு வர, பின்னால் திரும்பி “’சிற்றஞ் சிறுகாலே... பாடுறயா அம்மு?” என்றேன். அம்மு புன்னகைத்துவிட்டு சிற்றஞ்சிறுகாலே பாடத் துவங்கினார். “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு...” வரியை அம்மு தொட்டபோது, மனம் நெகிழ்ந்து, கண் நிறைந்து அம்முவின் வலது மடிமேல் தலைசாய்த்துக் கொண்டேன்.
“உற்றோமே யாவோம்...உனக்கே நாம் ஆட்செய்வோம்”
Episode 19 | விண்மீன்கள் வானின் மேலே...
விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் பிரகாசமாயிருந்த மேடையில் இன்னிசைக் குழுவின் நடத்துநர், வாத்தியக்காரர்கள் அனைவரையும் ஒரு சுற்று பார்த்து, “ரெடி...” என்று கேட்டு, வலது கையை ஆட்டி எண்ணிக்கை முடிக்க, படீரென்று இசை ஒன்றுசேர்ந்து துவங்கியது. உதயகீதம் படத்தின் “சங்கீத மேகம்...” பாடலின் முன்னிசை, ஸ்பீக்கர்களில் அதிரத் தொடங்கியது. அந்த இன்னிசைக் குழுவின் பெயரும் “உதயகீதம் இன்னிசைக் குழு”-தான். அந்த இசை அவர்கள் நிகழ்ச்சிகளின் அறிமுக இசை. மதுரையிலிருந்து அக்குழு வந்திருந்தது. மேடையின் இருபுறமும், நான்கு ஆளுயர ஸ்பீக்கர்கள். அவை தவிர மைதானத்தில் மக்கள் கூட்டத்தின் பக்கவாட்டிலும் இரண்டு பக்கமும் அங்கங்கு இடைவெளி விட்டு ஸ்பீக்கர்கள் வைக்கப்பட்டிருந்தன. மேடையை ஒட்டி கீழே ஒலி அளவுகளை கட்டுப்படுத்த ஒருவர் உட்கார்ந்திருந்தார். இன்னொருவர் கலர் விளக்குகளை சுற்றுவதற்கு விளக்கினருகே நின்றிருந்தார்.
அது அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மிகப்பெரிய விளையாட்டு மைதானம். ஒவ்வொரு வருடமும் திருமங்கலத்தில் அம்மன் திருவிழாவின்போது, அங்குதான் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் பொருட்காட்சி நடக்கும். எல்லா நாட்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். திருவிழா நாட்களின் உற்சாகமும் சந்தோஷமும் எல்லா முகங்களிலும் பிரகாசிக்கும். ராட்டினங்கள், டில்லி அப்பளக் கடைகள், மிளகாய் பஜ்ஜி, வடை, போண்டா கடைகள், வளையல் கடைகள், கீசெய்ன் கடைகள், துணிக்கடைகள், சமையல் பாத்திரக் கடைகள், மேஜிக் ஷோ...மைதானம் முழுதும் விளக்குகளும், மக்களும் நிறைந்திருப்பார்கள். ஒவ்வொரு நாளும், மைதானத்தின் மேற்கு மூலையில் அமைக்கப்பட்ட உயர மேடையில் ஏதேனும் கலைநிகழ்ச்சிகள் இருக்கும். இன்று இன்னிசைக் கச்சேரி.
நானும், அப்பாஸூம், ஹூசேனாவும், பானு-வும் கச்சேரி மேடையின் முன்னால் அமர்ந்திருந்த மக்கள் கூட்டத்தின் பின்னால் மணலில் உட்கார்ந்திருந்தோம். பானு அப்பாஸின் தங்கை. ஹூசேனா அப்பாஸின் உறவினர். நான் அம்மாவிடம் பொருட்காட்சிக்குப் போவதாய் சொல்லிவிட்டு, சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்பி சைக்கிளை எடுத்துக்கொண்டு மம்சாபுரத்திலிருந்து, அப்பாஸ் வீட்டிற்கு வந்து, ஹூசேனா, பானு, அப்பாஸூடன் கிளம்பி வந்தேன். அப்பாஸின் அம்மா “சீக்கிரம் வந்துருங்கடா. அது இதுண்ணு கண்டதையும் வாங்கிச் சாப்பிடாதீங்க. சாப்பிட வீட்டுக்கு வந்துருங்க” என்றார். ஹூசேனா, சின்னச் சின்ன கண்ணாடிகள் பார்டரில் பதித்த பிங்க் நிற தாவணியில் வானிலிருந்து கீழிறங்கிய அப்ஸரஸ் மாதிரி இருந்தார். நெற்றியில் நீளமாய் பிங்க் நிற ஸ்டிக்கர் பொட்டு. ”விஜி, ஸ்கூல் வரைக்கும் நடந்துருவியா? நீ வேணா சைக்கிள்ல முன்னாடி போ. நாங்க நடந்து வர்றோம்” என்றார் ஹூசேனா என்னைப்பார்த்து. ஹூசேனா என்னை “விஜி” என்றுதான் கூப்பிடுவார். பள்ளியிலும், கல்லூரியிலும் நான் “வெங்கடேஷ்” என்றாலும், வீட்டில் அம்மா என்னை “விஜயா” என்றுதான் கூப்பிடுவார். ஹூசேனா ஒருமுறை வீட்டிற்கு வந்திருந்தபோது, அம்மா என்னை ”விஜயா” என்று கூப்பிடுவதைப் பார்த்தபிறகு, அவரும் என்னை “விஜி” என்று கூப்பிட ஆரம்பித்திருந்தார். “இல்ல ஹூசேனாம்மா, சைக்கிள உருட்டிட்டே நானும் உங்ககூட நடந்து வரேன்” என்றேன். அப்பாஸ் வீட்டிலிருந்து, கிழக்கில் நடந்து, வலதுபுறம் சாமிப் பாட்டி வீடிருக்கும் குறுக்குத் தெருவில் நுழைந்து, சந்தைத் தெருவை கடந்தோம். உசிலம்பட்டி ரோட்டில், கடை வைத்திருந்த நண்பன் தினகரன் கடைக்குள்ளிருந்து சிரித்துக்கொண்டே கையசைத்தான்.
பொருட்காட்சியில் எல்லாக் கடைகளிலும் நுழைந்து வெளியில் வந்தோம். நான் எதுவும் வாங்கவில்லை. கீ செய்ன் கடையில், தாஜ்மஹால் தொங்கும் செய்னை வாங்கி, வளையத்தில் தொங்கிய மரச்சில்லில் ”விஜயன்” என்று எழுதச்சொல்லி, எனக்குத் தந்தார் ஹூசேனா. பானு, வளையல்களும், பாசி மாலைகளும் வாங்கினார். அப்பாஸ் “வாங்க, பர்சேஸ் பண்ணது போதும். ஆர்கெஸ்ட்ரா பார்க்கப் போகலாம்” என்றான்.
இன்னிசைக் குழுவினர் பக்திப்பாடலாக முதலில் “சரவணப் பொய்கையில் நீராடி...”-யும், அடுத்து “ஜனனி...ஜனனி”-யும் பாடினார்கள். குழுவின் அறிவிப்பாளர், பாடல்களுக்கு நடுவே, எக்கோ சவுண்டோடு அடுத்து வரும் பாடல்கள் பற்றிய அறிவுப்புகள் செய்துகொண்டிருந்தார். அப்பாஸ் எழுந்து சென்று எல்லோருக்கும் மிளகாய் பஜ்ஜி வாங்கி வந்தான். ஹூசேனா கையில் வைத்திருக்க ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டோம். நான் ஹூசேனா பக்கத்தில் வலதுபக்கம் உட்கார்ந்திருந்தேன். ஹூசேனாவின் இடதுபுறம் பானு உட்கார்ந்திருக்க, அப்பாஸ் நின்றுகொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தான். பஜ்ஜி சாப்பிட்டு முடிந்ததும், டீ வாங்கி வருவதற்காக பானுவும், அப்பாஸூம் கிளம்பிப் போனார்கள். மேடையில் ”காதல் பரிசு” படத்திலிருந்து “ஹே...உனைத்தானே...” பாடல் பாடிக்கொண்டிருந்தார்கள்.
ஹூசேனாவின் அருகாமையில் என் மனம் குதூகலித்திருந்தது. ஹூசேனா இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்கள் பத்து பதினைந்து போட்டிருந்தார். அவர் பேசும்போது கையசைக்கையில், வளையல்களின் சப்தமும், உடையின் சரிகைகள் ஒலியும் என்னுள் இனம்புரியாத நெகிழ்வை உண்டாக்கிக் கொண்டிருந்தன. தம்பிகளைப் பற்றியும், அம்மாவைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். “அப்புறம் விஜி, மேனகா என்ன சொல்றாங்க?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். ஹூசேனா சிரிக்கும்போது, மென் இட்லி போன்ற அவரது கன்னங்களும், மையிட்ட அவரது கண்களும் சேர்ந்து சிரிக்கும். மேனகா-வைப் பற்றி, அப்பாஸிடம் சொல்லவேண்டாமென்று கேட்டுக்கொண்டு, எல்லாவற்றையும் ஹூசேனா-விடம் முன்னரே சொல்லியிருந்தேன். நான் புன்னகைத்துக்கொண்டே “அவங்களுக்கென்ன ஹூசேனாம்மா. ராஜாத்தி. க்ளாஸ்ல மட்டும் பார்க்கறதுதான். அவங்ககிட்ட நான் பேசறதில்ல. பயம்...” என்றேன். அப்பாஸும், பானுவும் இரண்டு கைகளிலும் இரண்டு டீ கப்புகளோடு வந்தார்கள்.
அறிவிப்பாளர் எக்கோ ஒலியோடு அடுத்த பாடல் ”உயிரே உனக்காக” படத்திலிலிருந்து “பல்லவி இல்லாமல் பாடுகிறேன்” என்று அறிவித்தார். “என்னோட காலேஜ் க்ளாஸ்மேட் குமரன்-னு ஒரு ஃப்ரெண்ட் ஹூசேனாம்மா. அப்படியே எஸ்.பி.பி வாய்ஸ் அவனுக்கு. சூப்பரா பாடுவான். அவனோட வாய்ஸ்-ல இந்தப் பாட்ட கேக்கணும். அருமையா இருக்கும்” என்றேன்.
டீ குடித்து முடித்ததும் பானு கறுப்பு துப்பட்டா ஒன்று வாங்கவேண்டுமென்றும், வாங்கி வருவதாகவும் சொல்லி அப்பாஸைக் கூட்டிக்கொண்டு போனார். “இந்த படம் “உயிரே உனக்காக” பார்த்துட்டியா ஹூசேனாம்மா?. அப்பாஸை கேஸட் எடுத்துட்டு வரச் சொல்லி பாரு. நல்ல படம். “தேனூறும் ராகம்”-னு இன்னொரு பாட்டு இருக்கு. அருமையான பாட்டு. படத்துல தூங்கப் போறதுக்கு முன்னாடி, இரவு நேரம் பாடற மாதிரி. ரொம்ப இயல்பா, நேச்சுரலா சீன்ஸ் எடுத்துருப்பாங்க...” என்றேன். பேச்சு ம்யூசிக் டைரக்டர்கள் பற்றித் திரும்பியது. மேடையில் ராஜாவின் “பூமாலையே...” பாடல் துவங்கியது.
பதினோரு மணிக்கு நாங்கள் கிளம்பியபோதும் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. கூட்டம் சிறிது குறைந்திருந்தது. திரும்பும்போது தெருக்களில் பாதி வீடுகள் உறங்கியிருந்தன. அப்பாஸ் வீட்டில், எல்லோரும் தூங்கியிருந்தார்கள். ஹூசேனா, கொண்டுவந்திருந்த இன்னொரு சாவி வைத்து கதவைத் திறந்தார். “நாளைக்கு காலையில அம்மாகிட்ட நல்லா திட்டு இருக்கு” என்றார் பானு. சமையலறையில் நான்கு பேரும் வட்டமாக உட்கார்ந்து இட்லி சாப்பிட்டோம். ஹூசேனா செய்திருந்த தக்காளி சட்னி வழக்கம்போல் அமிர்தம். அப்பாஸூம், பானுவும் சாப்பிட்டு முடித்ததும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, தூங்கப் போவதாக சொல்லிப் போனார்கள்.
நானும், ஹூசேனாவும் பேசிக்கொண்டிருந்தோம். நான் கிச்சனுக்கும், முன் ஹாலுக்கும், நடுவிலிருந்த வெளியில் துவைக்கும் கல்லின்மீது கால்களைத் தொங்கவிட்டு உட்கார்ந்திருந்தேன். ஹூசேனா சாப்பிட்ட தட்டுக்களையும், பாத்திரங்களையும் குழாயடியில் போட்டு கழுவிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார். 20 வாட்ஸ் குண்டு பல்பின் மெல்லிய வெளிச்சம் மட்டும் குழாய்க்கு மேலே ஒளிர்ந்துகொண்டிருந்தது. நான் ச்மீபத்தில் படித்துமுடித்த லா.ச.ரா-வின் “பாற்கடல்” நாவல் பற்றி ஹூசேனா-விடம் சொல்லிக்கொண்டிருந்தேன். பாத்திரங்கள் கழுவி எடுத்து, சமையலறையில் அடுக்கிவிட்டு, கிச்சன் விளக்கையும், குழாயடி விளக்கையும் அணைத்துவிட்டு, துவைக்கும் கல்லின் முன் சுவர் அருகே பித்தளை பக்கெட்டை கவிழ்த்துப் போட்டு உட்கார்ந்துகொண்டார் ஹுசேனா.
பௌர்ணமி கடந்த மென் நிலவொளி எங்கள் மேல் கவிழ்ந்திருந்தது. பேச்சு, மெல்லிய குரலில், ரம்ஜான் பற்றியும், ஒருமாத விரதம் பற்றியும், நான் படித்த புத்தகங்கள் பற்றியும் சுற்றிச் சுற்றி தொடர்ந்துகொண்டிருந்தது, . ஹூசேனா காதில் அணிந்திருந்த ஜிமிக்கி கம்மல்கள் மெலிதாய் ஆடிக்கொண்டிருந்தன. ஹாலில் மாட்டியிருந்த சுவர்க்கடிகாரம் ஒரே ஒரு தடவை அடித்து ஓய்ந்தது. “மணி ஒண்ணாச்சா...,ஹூசேனாம்மா, உனக்குத் தூக்கம் வரலயா?. காலையில வாப்பாக்கு ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணனுமே சீக்கிரம்?” என்றேன். ஹூசேனா சிரித்துக்கொண்டே “அதெல்லாம் எந்திரிச்சிருவேன்” என்றார்.
எனக்கு அந்த இரவு பேச்சோடு அப்படியே நீண்டுகொண்டே செல்லக்கூடாதா என்று ஏக்கமாயிருந்தது. அன்று வானத்தில் மேகங்களில்லை. எனக்குப் பிடித்தமான ஐந்து நட்சத்திரங்கள் சேர்ந்த ஒரு கோபுர இணைப்பு எங்கிருக்கிறது என்று அண்ணாந்து தேடிக் கண்டுபிடித்தேன். நட்சத்திரங்கள் பார்த்ததும் நான் மௌனமானேன். ஹூசேனாவும் மௌனமானார். ஐந்து நிமிடங்களாய் கடந்த அந்த மௌனம் பலநூறு வார்த்தைகளை உள்ளுக்குள் உருவாக்கி உருவாக்கி அழித்தது. ஏதோ நினைத்துக்கொண்டவன் போல் சட்டென்று கல்லிலிருந்து இறங்கி “நீ படுத்துக்கோ ஹூசேனாம்மா. நான் கிளம்பறேன். நாளைக்கு சாயந்திரம் வர்றேன்” என்று சொல்லி கிளம்பினேன். வாசல்படிகளின் இரண்டாம் படியில் நாய் ஒன்று படுத்துக்கிடந்தது. அதைத்தாண்டி மூன்றாம் படியில் கால்வைக்க முடியவில்லை. ஹூசேனாவின் கைபிடித்துக்கொண்டு மெதுவாய் தாண்டினேன். “குட் நைட் ஹூசேனாம்மா” சொல்லிவிட்டு வீடெதிரில் செங்கல் அடுக்கில் சாய்த்து வைத்திருந்த சைக்கிள் எடுத்து கிளம்பினேன். ஹூசேனா வழக்கம்போல் “பாத்து பத்திரமா போ” என்றார். இரண்டு தெருக்கள் தாண்டி மம்சாபுரம் போவதற்காக இடதுபக்கம் திரும்பியபோது பார்வை தானாக அப்பாஸ் வீட்டு முகப்பிற்குச் சென்றது. தூரத்தில் வீட்டு வாசலில் ஹூசேனா இன்னும் வீட்டிற்குள் போகாமல், நான் தெரு திரும்பும் வரை பார்ப்பதற்காக விளக்கு வெளிச்சத்தில் நின்றுகொண்டிருந்தார்.
என் மனம் தத்தளித்தது...”என்ன தவம் செய்தேன்...அன்பெனும் எங்கும் நிறை பரப்ரம்மம்”...
Episode 20 | ஆனந்த ரூபிணி-1
"வீட்ல இருக்குற பொண்ணுங்கள அழவைக்கவே கூடாது விஜயா. அவங்க மனசு கஷ்டப்பட்டு கண்ல தண்ணி விட்டாங்கன்னா அந்த வீடு விளங்காது. தரித்திரம் பிடிக்கும். லட்சுமி அந்த வீட்டை விட்டுப் போயிடுவா. எந்தப் பொண்ணுமே மனசு நொந்து ஒரு சாபம் விட்டான்னா, அது தலைமுறை தலைமுறைக்கும் தொடர்ந்து வரும். அம்மா, பாட்டி, தங்கச்சி, அக்கா, உனக்கு வரப்போற மனைவி, உனக்கு பொறக்கப்போற பொண்ணு...” என்று சொல்லி நிறுத்தி சிறிது இடைவெளி விட்டு “உனக்கு பொண்ணு பொறக்கணும்னு இந்த ஷணத்துல நான் ஆசீர்வாதம் பண்றேன்...” என்று வலது கையை என் தலையில் வைத்துவிட்டு “எல்லாப் பொண்ணுங்களும் சக்தி ஸ்வரூபம்தான். அதை எப்பவும் மனசில பதிச்சு வச்சுக்கணும். வீட்டுல இருக்கற லட்சுமிங்க, சக்தி சின்னதாக் கூட மனசு கோணிறக் கூடாது. அது வீட்டுக்கு ஆகாது” என்றார் தாத்தா.
ஓடைப்பட்டி கிராமத்து வீட்டின் பூஜை அறையின் முன்னாலிருந்த நீண்ட வராண்டாவில் பொட்டுத் தாத்தாவின் முன் உட்கார்ந்து “அபிராமி அந்தாதி” கேட்டுக்கொண்டிருந்தேன். கடந்த ஒருமணி நேரமாக அந்தாதி கேட்டுக்கொண்டிருந்ததில் என் மனம் நெகிழ்ந்து கிடந்தது. பாடல்களை பொருள் சொல்லி விளக்குவதில் தாத்தா வல்லவர். தாத்தா அதிகம் பேசுபவரல்ல. பேசும்போதும் மிக மெல்லிய குரலில்தான் பேசுவார். “துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும்...” பாடலை வாசித்துவிட்டுதான், இப்படி சொல்லிக் கொண்டிருந்தார். முன்பகல் நேரம். ஏறுவெயிலில் வராண்டாவின் முன்பகுதியில் விழுந்திருந்த எதிர் வீட்டின் நிழல் சுருங்கிக்கொண்டேயிருந்தது. வடக்குச் சுவரோரம் கறுப்பு எறும்பு வரிசையொன்று ஊர்ந்துகொண்டிருந்தது. தாத்தா வேஷ்டி கட்டிக்கொண்டு, மேல்சட்டை போடாமல் சிவப்புத் துண்டால் உடல் போர்த்தியிருந்தார். நெற்றியில் திருமண் இரண்டு வெண்கோடுகளுக்கு நடுவே சிவப்புக்கோடு நீண்டு பளீரென்றிருந்தது. எனக்கும் காலையில் பூஜை அறைக்கு வந்தபோது திருமண் வைத்துவிட்டிருந்தார். எனக்கு அபிராமி அந்தாதி ஒவ்வொரு பாடல் வாசித்து முடிக்கும்போதும், மேனகாவின் முகம் மின்னி மின்னி மறைந்தது. தாத்தாவிடம் மேனகாவைப் பற்றி தயக்கமில்லாமல் சொல்லலாம்தான் என்றாலும், ஏதோ ஒன்று என்னை சொல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
விடுமுறைக்கு கோவையிலிருந்து திருமங்கலம் வீட்டிற்கு வரும்போதெல்லாம், எப்படியாவது கிராமத்திற்கு கொஞ்ச நேரமேனும் வந்து போய்விடுவது வழக்கமாயிருந்தது. திருமங்கலத்தில் பஸ் ஏறினால் அரை மணி நேரத்தில் கிராமத்திற்கு வந்துவிடலாம். அவசரமென்றால், மருதங்குடி போய் திரும்பி வரும் அதே பஸ்ஸில் திரும்ப திருமங்கலம் வந்துவிடலாம். கிராமத்திற்கு வரும்போதெல்லாம் பொட்டுத் தாத்தாவிடம் கதைகளும், பாடல்களும் கேட்பதுண்டு. தாத்தாவிடம் நிறைய ஆன்மீகப் புத்தகங்கள் உண்டு. கிருஷ்ண பக்தி இயக்கத்தின் புத்தகங்களும், ஆன்மீக மாத இதழ்களும், பைண்ட் செய்யப்பட்ட பழுப்பேறிய தேவி பாகவதமும், பாகவதமும், சுந்தரகாண்டமும் மர அலமாரியில் அடுக்கி வைத்திருப்பார். இம்முறை நான் ஊருக்கு வந்திருப்பது வீரப் பெருமாள் புரத்திலிருக்கும் குல தெய்வம் கோவில் திருவிழாவிற்காக. வீரப் பெருமாள் புரத்தில்தான், இன்னொரு தாத்தாவான “வண்டித் தாத்தா”-வின் வீடிருந்தது. மறுநாள் திருவிழாவிற்கு வீரப்பெருமாள்புரம் சென்று, அங்கேயே தாத்தா வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்துவிட்டு, மூன்றாம் நாள் அங்கிருந்து திருமங்கலம் திரும்புவதாக ஏற்பாடு.
எதிர்வீட்டிலிருந்து பெரியப்பா பெண் மகாலட்சுமி, எனக்கும் தாத்தாவிற்கும், டம்ளரில் காபி கொண்டுவந்தார். அபிராமி அந்தாதியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, காபி குடித்துக்கொண்டே, என் கல்லூரிக் கதைகளையும், மறுநாள் திருவிழா ஏற்பாடுகளையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சாமிக்கு நேர்ந்துவிட்ட வெள்ளாடுகளை, வெண்டர் ராஜ் மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வாசு அண்ணா, வீரப்பெருமாள்புரத்திற்கு வண்டியிலேயே வரப்போவதாகவும், நாமெல்லோரும் பஸ்ஸில் போகப் போவதாகவும் லட்சுமி சொன்னார். மறுபடியும் கல்லூரிக்குத் திரும்பிச் செல்லும்போது வீட்டில் செய்த பஞ்சாமிர்தம் இரண்டு பாட்டில் எடுத்துக் கொண்டு போகுமாறு தாத்தா சொன்னார். கோவை கல்லூரியில் முதல் வருடம் என்பதால், வகுப்புகள் எப்படி இருக்கின்றன, விடுதி எப்படியிருக்கிறது, நண்பர்கள் எப்படி என்று கேட்டுக்கொண்டிருந்தார் தாத்தா.
திருமங்கலம் பேருந்து நிலையத்தில் 6-ம் நம்பர் கொக்குளம் பஸ், நுழைவாயிலில் திரும்பியதுமே, காத்திருந்த கூட்டம் மொத்தமும் பஸ்ஸை நோக்கி ஓடியது. பெரியப்பா என்னிடம், மெதுவாக வருமாரும், தான் இடம் போட்டு வைப்பதாகச் சொல்லி பஸ்ஸை நோக்கி விரைந்தார். எல்லோரும் வீரப்பெருமாள்புரம் திருவிழாவிற்குச் செல்பவர்கள்தான். என்னால் பஸ்ஸினுள் ஏறவே முடியவில்லை. கூட்டம் பிதுங்கியது. தட்டுத் தடுமாறி உள்ளேறியதும், “விஜயா, இக்கட ராரா” என்ற பெரியப்பாவின் குரல் கேட்டது. கூட்டத்தில் நீந்தி பெரியப்பா உட்கார்ந்திருந்த சீட் அருகே போனதும் பெரியப்பா எழுந்துகொண்டு என்னை உட்காரச் சொன்னார். பக்கத்தில் நின்றிருந்த உடன் பள்ளியில் வேலை செய்யும் வாத்தியாரிடம், “தம்பி சீனி பையன். கோயம்புத்தூர் அக்ரி காலேஜில படிக்கிறான்” என்றார். பஸ்ஸினுள் கால்வைக்க இடமில்லாமல் கூட்டம் நிறைந்திருந்தது. டிரைவர் டீ குடிக்கக் கூட இறங்காமல், அப்போதே வண்டியை எடுத்தார். பஸ் இடதுபக்கம் கொஞ்சம் சாய்ந்தவாறே பஸ் ஸ்டாண்டை விட்டு பாண்டியன் ஹோட்டல் வழியாக வெளியில் வந்தது.
மேலக்கோட்டை தாண்டி தூம்பக்குளம் விளக்கில் இடதுபுறம் திரும்பியதும்தான் பஸ்ஸினுள் கொஞ்சமாக காற்று வந்தது. அரசபட்டி ரயில்வே கேட் மூடியிருந்தது. கேட் கீப்பர் கூட்ஸ் ரயில் கடக்கும் என்றார். பஸ் டிரைவர் பஸ்ஸை நிறுத்தி இஞ்சினை அணைத்ததும், கூட்டம் காற்று வாங்க கீழிறங்கியது. தூரத்தில் அரசபட்டி கிராமத்தில், சிவன் கோவில் கோபுரத்தின் உச்சியில் மாட்டியிருந்த குழாய் ஒலிபெருக்கியில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டிருந்தார். ரோட்டின் இருபுறமுமிருந்த வெட்டவெளியிலிருந்து காற்று தாராளமாய் பஸ்ஸினுள் நுழைந்து சுழன்றது.
“அட, மல்லியா...எப்ப வந்திங்க?...ஏன் ஓடைப்பட்டிக்கு வரலை?” என்ற பெரியப்பாவின் குரல் கேட்டு முன்னால் பார்த்தேன். இளம் பச்சை நிற தாவணியில் மல்லிகா கம்பியைப் பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தார். இடதுகையால், நெற்றித் தலைமுடியை விரலால் எடுத்து காதின்பின் சொருகியவாறு, பெரியப்பாவிடம் சிரித்துக்கொண்டே, பல்லடத்திலிருந்து விடிகாலையில்தான் கிளம்பியதாகவும், ஆரப்பாளையம் வந்து, அங்கிருந்து திருமங்கலம் வந்து, பஸ் ஏறியதாகச் சொன்னார். அம்மா வரவில்லையென்றும், காந்தி அண்ணனைக் கூட்டிக்கொண்டு வந்ததாகவும் சொல்லி, கீழிறங்கி மூடிய கேட் அருகில் நின்றுகொண்டிருந்த காந்தியைக் காட்டினார். நான் மல்லிகாவைப் பார்த்து புன்னகைத்தேன். மல்லிகா, அத்தை பெண். பல்லடம் அருகில் லட்சுமி மில்ஸ்-ல் வீடு. அங்கிருக்கும் இந்திரா காலனி அரசுப் பள்ளியில் பத்தாவது படித்துக்கொண்டிருந்தார்.
கூட்ஸ் வண்டியின் “பாம்” என்ற ஒலிச்சத்தம் கேட்டது. இருபது/இருபத்தைந்து பெட்டிகள் கொண்ட கூட்ஸ் வண்டி தடதடத்து கடந்துசென்றது. கேட் கீப்பர் அறையின் வெளியில் நின்று பச்சைக் கொடியை அசைத்துக் கொண்டிருந்தார். நான் மல்லிகாவைப் பார்த்தேன். மல்லிகா புன்னைகையுடன் கடந்துசென்ற கூட்ஸ் வண்டியை பார்த்துக்கொண்டிருந்தார். காதில் அணிந்திருந்த ஜிமிக்கி கம்மல்கள் காற்றில் மெலிதாய் ஆடிக்கொண்டிருந்தன. யௌவனத்தின் பூரிப்பு கன்னங்களிலும். இதழ்க் கோடியிலும் பூத்திருந்தது. நேற்று தாத்தாவிடம் கேட்ட “துணையும் தொழும் தெய்வமும்...” பாடல் வரிகள் மனதில் ஓடியது.
“அம்மே...” என்ற வார்த்தை சுருங்கி மனதினுள் “அம்மு...” என்றானது. நான் மனசுக்குள்ளேயே ”அம்மு...அம்மு...” என்று சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.
Episode 21 | ஆனந்த ரூபிணி-2
வீரப்பெருமாள்புரம் விளக்கில், பஸ் சாய்ந்துகொண்டே திரும்பியதும், வலதுபக்கம் பாதி நிரம்பிய தண்ணீரோடு, நடுவே வளர்ந்து கிளைபரப்பிய கருவேல மரங்கள் தலைகாட்டிக் கொண்டிருந்த அந்தப் பெரிய ஏரி கண்களில் விழுந்தது. தூம்பக்குளம் செல்லும் இந்த 6-ம் நம்பர் பஸ் எப்போதும் ஊருக்குள் செல்வதில்லை. ஊர் எல்லை துவங்கும் சந்திப்பிலேயே ஆட்களை இறக்கியும், ஏற்றியும் செல்லும். திருவிழா என்பதால் கடந்த ஒருவாரமாய் ஊருக்குள் போய்வருகிறது. தார் சாலை நெடுகிலும், வரகு கதிர்களும், நெற்கதிர்களும் வெயிலில் பரப்பப்பட்டிருந்தன. கோவிலில் தூரத்தில் ஒலிபெருக்கியில் பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. நேராக கோவிலுக்குச் செல்பவர்கள், ஏரிக் கரையின் மேலேயே நடந்து செல்வதற்காக, பஸ்ஸை நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டார்கள். பாதி பஸ் காலியாகிவிட்டது. பஸ் உள்ளேயிருந்து பார்த்தபோது, கோவில் இப்போது தெளிவாகத் தெரிந்தது. ஊரின் வீடுகள் முடியும் இடத்திலிருந்து, கோவில் முகப்பு வரை, வயல்வெளிகளின் நடுவில் வரப்பை அகலப்படுத்தி, நெடுகிலும் ஓலைப்பந்தல் போட்டு வண்ணக் காகிதங்களால் அலங்கரித்திருந்தார்கள். கோவிலுக்குப் பக்கத்திலேயே கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மேடை போடப்பட்டு, முன்னால் பெரிய மைதானம் உருவாக்கப்பட்டிருந்தது. மைதானத்தின் ஓரத்தில் சிறுவர்களுக்கான ராட்டினங்கள் இரண்டு சுற்றிக்கொண்டிருந்தன. பொம்மைக் கடைகளும், இனிப்புத் திண்பண்டக் கடைகளும் முளைத்திருந்தன.
மானசீகமாய் மேனகாவிடம் சொல்லிக் கொண்டேன் “இதுதான் என் ஊர் மேனகா. இங்குதான் என் வேர். என் சுயமும், என் இயல்பும் வேஷங்களற்று வெளிப்படுவது இங்குதான். நான் அழுந்த தரையில் நிற்பது இங்குதான். உன் ஊரையும், வீட்டையும் பார்க்கவேண்டும் போல்தான் இருக்கிறது. உனக்கும் என் ஊரையும், என் மனிதர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆசைதான். இப்போதெல்லாம் எனக்குப் பிடித்த இடங்களில் நான் இருக்கும்போதெல்லாம், உடன் நீயிருந்தால் எத்தனை சந்தோஷமாயிருக்கும் என்று மனது எண்ணிப் பார்க்கிறது.” - மனதுக்குள் உரையாடல்கள் சங்கிலித் தொடராய் நீண்டுகொண்டிருந்தன.
எங்களின் குலதெய்வங்கள் “தும்மம்மாள்-பாப்பம்மாள்” என்ற சகோதரிகள் இருவர். முன்பு உருவமில்லாது, ஏரியின் தெற்குக் கரையோரம், வேப்ப மரத்தின் அடியிலிருந்தனர். பூஜைகளும், நைவேத்தியங்களும், படையல்களும் அங்குதான் நடக்கும். சென்ற வருடம்தான் சிலைகள் செய்து, கர்ப்பக் கிரகத்திற்குள் வைத்து, மேலே கோபுரம் கட்டி, பக்கத்திலேயே சிறிய கல்யாண மண்டபமும் அமைத்து, கோவிலையும், கல்யாண மண்டபத்தையும் சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பியிருந்தார்கள். இந்த ஆண்டு திருவிழா மிகுந்த விஷேஷம் என்பதால்தான், ஜனக் கூட்டமும் அதிகமிருந்தது.
பஸ் ஊருக்குள் நுழைந்து மந்தையில் இருந்த பெரிய புளியமரத்தைச் சுற்றி நின்றதும், பஸ் மொத்தமும் காலியாகியது. இறங்கியதும் எதிர்ப்புறம் டீக்கடை வைத்திருந்த அய்யனார் தாத்தா “வாங்கப்பா, சந்திரா பையந்தானே நீ?” என்றார். பெரியப்பா வீரப்பெருமாள்புரம் பள்ளியில் கொஞ்சநாள் வாத்தியாராய் இருந்ததால் அவருக்கு அங்கு எல்லோரையும் தெரியும். சிரித்துக்கொண்டே பெரியப்பா “ஆமாம்” என்றார். மல்லிகாவையும், லதாவையும் காட்டி “இவங்க, விமலா புள்ளைங்க” என்றார். ஊரினுள் இரண்டு தெரு தள்ளியிருந்த வண்டித் தாத்தா வீட்டிற்குப் போனோம். வீட்டிற்குள் நுழைந்ததும் தாத்தா முகம் முழுதும் சிரிப்புடன் “அடடா...வாங்க வாங்க வாங்க” என்றார். பாட்டி சமையல் உள்ளிலிருந்து வெளியில் வந்து கையைப் பிடித்துக்கொண்டார். வீட்டிற்குள்ளிருந்த இடதுபக்கத் திண்ணையில் வேர்க்கடலை உரிப்பதற்காக ஏழெட்டு மூட்டைகள் கவிழ்த்து குவிக்கப்பட்டிருந்தது. “திருவிழா வந்துருச்சா, உரிக்கிறதுக்கு ஆள் கிடைக்கல, முடிஞ்சதும்தான் ஆள் கூப்பிடணும்” என்றார் தாத்தா.
பாட்டி, மண் விறகடுப்பில் டீ போட்டு எல்லோருக்கும் தந்தார். வீடெதிரில் வெள்ளாடுகள் சில மேய்ந்து கொண்டிருந்தன. சேவல்கள் இரண்டும், நாலைந்து கோழிகளும் குறுக்கும் நெடுக்குமாய் வீட்டிற்குள்ளேயே ஓடிக்கொண்டிருந்தன. எனக்கு மல்லிகாவிடம் பேசுவதற்கு கூச்சமாக இருந்தது. பேசும் சந்தர்ப்பங்களிலெல்லாம் வார்த்தைகளை மென்று விழுங்கிக்கொண்டிருந்தேன். “மத்தியானம் சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்குறதானா தூங்குங்க; ராத்திரி கோயில்ல ஒயிலாட்டம், கும்மி இருக்கு. அது முடிஞ்சதும் அரிச்சந்திரா நாடகம் இருக்கு” என்றார் தாத்தா. பெரியப்பா ஊருக்குள் அவர் நண்பர்களைப் பார்ப்பதற்காக கிளம்பிச் சென்றார். பாட்டி, வேகவைத்த பச்சைக்கடலை ஒரு தட்டிலும், வீட்டில் செய்த அதிரசமும், முறுக்கும் மற்றொரு தட்டிலும் வைத்து சாப்பிடக் கொடுத்தார். “கோவிலுக்கு சாமி கும்பிட சாயங்காலம் போகலாம். முளைப்பாரி எடுத்துட்டு ஊருக்குள்ள வருவாங்க. அவங்க கூட சேர்ந்து கோவிலுக்குப் போகலாம்” என்றார் பாட்டி.
மாலையும், முன்னிரவும் ஊரே ஜெகஜ்ஜோதியாய் இருந்தது. உற்சாகமும், கேளிக்கையும் ஊரெங்கும் வியாபித்திருந்தது. இருபது, முப்பது முளைப்பாரிகள் மேள தாளத்தோடு முன்னால் செல்ல, நாங்கள் பின்னால் நடந்து கோவிலுக்குச் சென்றோம். கோவில் கோபுரம் முழுதும் சீரியல் விளக்குகள் சுற்றியிருந்தார்கள். பந்தல் நெடுகிலும் இரண்டு பக்கமும் ட்யூப் லைட்கள். மைதானமும், சுற்றிலும் விளக்குகளால் ஒளி வெள்ளத்திலிருந்தது. முளைப்பாரிகளை மைதானத்தின் நடுவில் வட்டமாய் அடுக்கிவைத்து கும்மி அடிக்கும் நிகழ்ச்சி ஆரம்பித்தது. மைக்கில், கும்மி அடிக்க பயிற்சி கொடுக்கும் நடுவயது அத்தை கடவுள் வாழ்த்துப்பா பாடிவிட்டு கும்மிப் பாடல் ஆரம்பித்தார். புத்தம் புதிய உடைகளுடன், இளமையின் களிமிகுந்த, அந்த உற்சாக கிராமத்து தேவதைகள் கையில் டம்போரின் இசைத் தட்டுகளோடு வட்டமாய் சுழன்று, உடன் பாடிக்கொண்டே முளைப்பாரிகளைச் சுற்றி ஆட ஆரம்பித்தார்கள். என் மனது அந்த கோரஸ் நாட்டுப்புறப் பாடல்களின் ரிதத்திலும், டம்போரின்களின் “சல்...சல்” என்ற இசையொலியிலும், அப்பெண்களின் நடன அசைவுகளிலும் லயித்து அமிழ்ந்தது.
கோவிலில் கூட்டமாய் இருந்தது. பாட்டி, “நான் விஜயனைக் கூட்டிட்டு அப்புறம் சாமி கும்பிடப் போறேன். நீங்க போயிட்டு வாங்க” என்று தாத்தாவோடு லதாவையும், மல்லிகாவையும் அனுப்பி வைத்தார். கூட்டம் வட்டமாய் நின்று கும்மியை ரஸித்துக்கொண்டிருந்தது. பாடல்களின் இரண்டு மூன்று நிமிட இடைவேளைகளில், கும்மிப் பெண்கள் அவர்களுக்குள் மெல்லிய குரலில் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
”விஜீஈஈ...” என்ற உற்சாகக் குரலோடு, கும்மிப் பெண்களின் நடுவிலிருந்து ஓடி வந்த தாமரை அக்கா, கூட்டத்தின் முன்வரிசையில் பாட்டி அருகே நின்றுகொண்டிருந்த என்னை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டார். எதிர்பாராத அந்த பேரன்பின் அணைப்பில் நான் தடுமாறினேன். எப்படி கும்மி அடிக்கும் பெண்களினூடே இருந்த தாமரை அக்காவை கவனிக்கத் தவறினேன் என்று சிறிது குற்ற உணர்வு கொண்டேன். அக்கா தலையில் வைத்திருந்த மல்லிகைப் பூவின் மணமும், மகிழம் பூவின் மணமும் கலந்து மனதில் நுழைந்து பால்யத்தின் நினைவுகள் கிளறின. என் இடுப்பை வளைத்திருந்த கைவிலக்காமல், சிரித்த முகம் மட்டும் பின்னால் சாய்த்து “எப்ப வந்த?” என்றார். “காலையிலதான்” என்றேன். தாமரை அக்காவைப் பார்த்து நாலைந்து வருடங்களிருக்குமா?; தாமரை அக்காவிற்கு வயது ஏறுவதேயில்லை இல்லை என்று நினைத்துக்கொண்டேன். பாட்டி, தாமரை அக்காவை ரோஸி என்றுதான் கூப்பிடுவார். பாட்டி சிரிப்புடன் “நீ எப்ப வந்த ரோஸி, காரியாபட்டியிலிருந்து? சீனி வந்திருக்கானா?” என்று கேட்டார். தான் மாமாவோடு போன வாரமே வந்துவிட்டதாக தாமரை அக்கா சொன்னார்.
மைக்கில் பாட்டு பாடும் அத்தை தூரத்திலிருந்து தாமரை அக்காவைப் பார்த்து முறைத்து, சைகையில் கும்மியடிக்கப் போகச் சொன்னார். தாமரை அக்கா சைகையிலேயே அடுத்த பாட்டுக்கு சேர்ந்துகொள்வதாக சொன்னார். தாமரை அக்கா, என்னைவிட ஆறு வயது பெரியவர். சுடர்விடும் அழகு. நான் ஓடைப்பட்டியிலும், சென்னம்பட்டியிலும் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது, விடுமுறைக்கு தாத்தா ஊருக்கு வரும்போதெல்லாம், எல்லா நாட்களும் தாமரை அக்காவின் வீட்டில்தான் கிடப்பேன். அம்மாவுடன் கூடப்பிறந்த தம்பிகளான மாமாக்கள் இருவர் இருந்தனர், சுந்தரராஜ், ரெங்கராஜ் என்று. ஒருமுறை தாமரை அக்காவின் வீட்டில் தட்டாங்கல் ஆடிக்கொண்டிருந்தபோது “நீங்க, எங்க மாமா ரெண்டு பேர்ல, ஒருத்தரக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?" என்று கேட்டேன். அக்கா சிரித்துக்கொண்டே “ஏண்டா?” என்றார். “அதுக்கப்புறம் எங்க வீட்டிலேயே நீங்க இருப்பீங்கதானே?” என்றேன். அக்கா சிரித்துக்கொண்டே என் தலையில் கைவைத்தார் ஆசீர்வசிப்பது போல்.
ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன், சொந்தத்திலேயே தூரத்து உறவில் சீனி மாமாவைத் திருமணம் செய்துகொண்டு காரியாபட்டிக்கு குடிபோய்விட்டதாக பாட்டி சொன்னார். நான், தாமரை அக்காவின் திருமணத்திற்குச் செல்லவில்லை. “என்னோட கல்யாணத்துக்குக் கூட நீ வரலையில்ல?” என்றார் அக்கா. குறுஞ்சிரிப்பில் அவ்வெண்ணிலவு முகத்தின் ஒளி மனத்தின் இருட்பிரதேசங்களையெல்லாம் வெளிச்சமாக்கி கழுவியது போலிருந்தது. ”ஏன், நெத்தியில பொட்டு வைக்கல?. இன்னும் கோவில் உள்ள போயிட்டு வரலயா?” என்று கேட்டுவிட்டு “இரு வரேன்” என்று என் இடுப்பிலிருந்து கையை விடுவித்துக்கொண்டு போய், முளைப்பாரிக்கருகில் சென்று, செம்பு பாத்திரத்தின் வெளியில் சந்தனத்தின் நடுவில் வைத்திருந்த குங்குமத்தை வலது கை நடுவிரலில் தேய்த்துக் கொண்டுவந்தார்.
அவராகவே இடதுகையால் என் முகத்தை லேசாக நிமிர்த்தி, வலதுகை விரலில் இருந்த குங்குமத்தை என் நெற்றியில் இட்டார். அக்காவின் நடுவகிட்டில் இருந்த குங்குமம் தழல் போல் சுடர்ந்தது. “உதிக்கின்ற செங்கதிர்...உச்சித் திலகம்”.
என், நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளும் பழக்கம் அன்று தொடங்கியதுதான்.
Episode 22 | ஆனந்த ரூபிணி-3
”நான், உன்ன ‘அம்மு’-ன்னு கூப்பிடட்டுமா மல்லி?” தயங்கித் தயங்கி மல்லிகாவிடம் கேட்டேன். திரும்பி புன்னகைத்து “சரி” என்றார்.
நானும் அம்முவும், வீரப்பெருமாள்புரம் தாத்தா வீட்டின் மொட்டைமாடியில் இரண்டாம் தளத்தின் உள்விளிம்பில் கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நேற்றிருந்த தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து இன்று சகஜமாய் பேசமுடிந்தது. அந்தப் பின்னிரவின் ஆடிக்காற்று தலைமுடியை கோதிக்கொண்டிருந்தது. அம்முவின் சந்தனக் கலர் தாவணி, தெரு விளக்கு வெளிச்சத்தில் தங்கநிறம் காட்டியது. அம்மு நெற்றியில் சந்தனம் இட்டிருந்தார். தாத்தா, பாட்டி, காந்தி, லதா எல்லோரும் மொட்டை மாடியின் கிழக்கு ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். இரவுணவு கறியும், சோறும் சாப்பிட்டு விட்டு, தாத்தாவோடு மொட்டைமாடிக்கு வந்தோம். பாட்டி, ஒரு தட்டில் அடுக்கிவைத்த வெற்றிலைகள், உருண்டையான பாக்குகள் கொண்டுவந்தார். தாத்தா இரண்டு வெற்றிலையில் சுண்ணாம்பு வைத்து, பாக்கோடு மடித்துத்தர, நான் போட்டுக்கொண்டேன். அம்மு தானும் வெற்றிலை போட்டுக்கொள்வதாக சொல்லி, தாத்தாவிடம் வாங்கி போட்டுக்கொண்டார். தாத்தா “ஒருசில பாக்கு லேசா தலை சுத்தும்” என்றார் சிரித்துக்கொண்டே. தாத்தா, ஒருவகை உறவுமுறையில், அம்முவிற்கு பெரியப்பா முறை. “நாக்கு சிவந்திருக்குதா பெரியப்பா?” என்று நாக்கை நீட்டி, அம்மு தாத்தாவிடம் கேட்டார். அம்முவின் நாக்கும், உதடுகளும் நன்கு சிவந்திருந்தன.
தாத்தா என்னிடம் “நல்லா படிக்கிறியா?” என்றார். “படிக்கிறேன் தாத்தா. பனிரெண்டாம் வகுப்பு தமிழ் மீடியத்துல படிச்சதுனால, காலேஜ்-ல முதல் வருஷம் எல்லாமே இங்கிலீஷ்ல கொஞ்சம் கஷ்டமாருக்கு. பழகிடும்-னு நினைக்கிறேன்” என்றேன் தாத்தாவிடம். “நல்ல நண்பர்கள் வச்சுக்க. இந்த வயசு ரொம்ப முக்கியமான காலம். உன்னோட மொத்த எதிர்காலமும், இப்ப நீ வச்சிருக்கற நண்பர்கள் தான் தீர்மானிப்பாங்க” என்றார் தாத்தா. மனதில் கல்லூரி நண்பர்கள் தாமு, ரமேஷ், சதாசிவம், கண்ணகுமார் உள்ளிட்ட அனைவரும் வந்துபோனார்கள். மேனகாவின் முகமும் நிலா போல் வந்துபோனது. மேனகாவின் முகம் தோன்றியதுமே, ஏனோ ”வழி தவறமாட்டேன்” என்ற நம்பிக்கையும் கூடவே எழுந்தது.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு தாத்தாவும், பாட்டியும் அன்றைய வேலை களைப்பினால் சீக்கிரம் தூங்கிப் போனார்கள். பாவம் பாட்டிக்குத்தான் அதிக வேலை. முப்பது, நாற்பது பேருக்கு சமைக்க வேண்டியிருந்தது. சுற்று ஊர்களிலிருந்து தாத்தாவிற்கு தெரிந்தவர்களெல்லாம் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டுப் போனார்கள். தாத்தா, வீட்டிலிருந்த இரண்டு வெள்ளாடுகளை திருவிழாவிற்காக வெட்டியிருந்தார். சமைத்தது போக மீதமிறிந்த கறியை பாட்டி உப்புக் கண்டமிட்டு கயிற்றில் கட்டி திண்ணைக்கு மேல் கட்டித் தொங்கவிட்டிருந்தார்.
நேற்று “ஹரிச்சந்திரா” நாடகம் பார்த்துவிட்டு, கோவிலிலிருந்து வீட்டிற்கு வரும்போது மணி விடிகாலை மூன்றாகிவிட்டது. பாட்டி பாதி நாடகத்திலேயே, மறுநாள் சீக்கிரம் எழவேண்டும் என்பதால், தூங்குவதற்கு வீட்டிற்குப் போனார். வீட்டிலிருந்து போர்வைகள் கொடுத்தனுப்பியிருந்தார். நாடகம் நடக்கும் மைதானத்தில் நாங்கள் சணல் சாக்குப் பைகளை விரித்து உட்கார்ந்திருந்தோம். போர்வைகள் அந்த விடிகாலை வெட்டவெளி குளிருக்கு இதமாக இருந்தன. நாடகம் முடிந்து, விடிகாலையில் போர்வை போர்த்திக்கொண்டு வீட்டிற்குத் திரும்பியபோது, தாத்தா மயில் ராவணனைப் பற்றி சொல்லிக்கொண்டு வந்தார்.
நாளை திருமங்கலம் திரும்ப வேண்டும். இரண்டு நாட்கள் சட்டென்று பறந்துவிட்டன. அம்முவுடன் பேசிக்கொண்டிருக்கும் இந்த இனிமையான இரவு, இன்னும் வெகு நாட்களுக்கு மனதில் பசுமையாய் தங்கியிருக்கப் போகிறது என்று தெரிந்தது.
“டென்த்-ல எத்தனை மார்க் எடுப்ப அம்மு?” என்று கேட்டேன். அம்மு சிரித்துக்கொண்டே “450 டார்கெட் பண்ணணும். பார்க்கலாம்” என்றார். “அப்புறம் ப்ளஸ் ஒன்ல என்ன கோர்ஸ் எடுக்கப் போற?” “ஃப்ர்ஸ்ட் குரூப்தான். எனக்கு மேத்ஸ் ரொம்பப் பிடிக்கும்”. “நீங்க ப்ள்ஸ் டூ-ல எத்தனை மார்க் பாவா?” என்றார். நான் “998” என்று சொல்லிவிட்டு “அம்மாவுக்கு ரொம்ப வருத்தம், நான் ஆயிரத்துக்கு மேல மார்க் எடுக்கலன்னு. அக்ரி காலேஜ்-லயும் இடம் கிடைக்காம விருதுநகர் ஆர்ட்ஸ் காலேஜ்-ல பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி சேர்ந்திருந்தேன் அம்மு. நல்லவேளை ரெண்டு மாசம் கழிச்சு ஹார்ட்டிகல்சர் கோர்ஸூக்கு கவுன்சிலிங் லெட்டர் வந்தது. அப்புறம்தான் மனசு கொஞ்சம் சமாதானாமாச்சு” என்றேன்.
இருவரின் அம்மாக்கள் பற்றியும், கிராமத்தின் அழகைப் பற்றியும், நான் படித்த புத்தகங்கள் பற்றியும் பேசிக்கொண்டேயிருந்ததில் நேரம் போவதே தெரியவில்லை. அம்முவின் அருகாமை மனதில் பெரும் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தந்துகொண்டிருந்தது. ”என்னை விட்டா விடியற வரைக்கும் பேசிக்கிட்டே இருப்பேன் அம்மு. உனக்குத் தூக்கம் வந்தா, தூங்கலாம்” என்றேன். அம்மு கண்களில் தெரிந்த சிறிய களைப்புடன் “நாளைக்கு கோயம்புத்தூர் போகும்போது பஸ்ல தூங்கிக்கறேன்” என்றார் சிரித்துக்கொண்டே. கீழே வீட்டின் முன்னால் கல் பெஞ்சின் அடியில் அடைந்திருந்த சேவல் ஒன்று கூவியது. ”விடியப் போகுதா?. நீ கொஞ்ச நேரமாவது தூங்கு அம்மு. இல்லன்னா தலை சுத்தும். அப்புறம் தாத்தா எந்திரிச்சார்னா, நீங்க இன்னும் தூங்கலயான்னு திட்டுவார்” என்றேன். “இன்னொரு பத்து நிமிஷத்துக்கப்புறம் தூங்கப் போறேன்” என்றார்.
தூரத்தில் கோவிலிலும், மைதானத்திலும் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. குலதெய்வம் தும்மம்மாளின் பெயர்தான் பாட்டிக்கும். நேற்று, பாட்டியுடன் கோவிலுக்குள் சென்று கூட்டத்தில் சாமி கும்பிடும்போது, பாட்டி ஆரத்தியை ஒற்றி கண்களில் வைக்கையில் கண்கலங்கினார். உள்ளே தும்மம்மாள் பாப்பம்மாள் கற்சிலைகள் இதழ்க்கோடியில் முறுவலோடு கைகளில் அபயம் காட்டிக்கொண்டிருந்தன. கர்ப்பக்கிரகத்தின் இடதுபக்கமிருந்த கல்சுவரில் உபயதாரர்களின் பெயர்கள் வெள்ளை பெயிண்டால் கறுப்பு பேக்ரவுண்டில் எழுதப்பட்டிருந்தன. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, டாக்டர் அத்தை, மாமா எல்லோர் பெயரும் இருந்தது. வெளிப் பிரகாரத்தில் இருந்த கணபதியையும், நாகலிங்கரையும் கும்பிட்டுவிட்டு, திருமண மண்டபத்தின் திண்ணையில் நானும், பாட்டியும் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தோம். சுற்றிவந்த, அப்பாவின் நெருக்கமான ஃப்ரெண்ட் மரகதம் ஆண்டி, என்னைப் பார்த்துவிட்டு, “விஜயனா, எப்ப வந்த? எப்படி இருக்க?” என்று கேட்டார். நான் நன்றாயிருப்பதாக சொல்லிவிட்டு, கோயம்புத்தூரில் காலேஜில் சேர்ந்திருப்பதாக சொன்னேன். “நல்லா படி” என்று சொல்லி நின்று பேசிவிட்டுப் போனார். கோவில் உள்ளே யாருக்கோ சாமி வந்தது. அந்த சூழலே சக்தியின் பெரும்பிரவாகம் போல் காலவெளியில் மிதந்துகொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.
அம்மு, “தண்ணி கொண்டுவரேன்” என்று சொல்லி கீழிறங்கிப் போனார். அம்மு காலில் அணிந்திருந்த கொலுசுகள் சப்தமெழுப்பிப் போயின. எனக்கு இரண்டு நாட்கள் முன்பு பொட்டுத் தாத்தாவின் முன் அமர்ந்து கேட்ட அபிராமி அந்தாதியின் வரிகள் மனதுள் விரிந்து எழுந்தன. “ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றுமில்லா வெளியே, வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே, அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே”. ஆம், அதிசயம்தான்; சுற்றிலும் இருக்கும் சக்தி, ரூபம் கொண்டு நம்முன் நடமாடுவதும், நம்மை இயக்குவதும், நாம் உணர்ந்து அறியும் அளவிற்கு நமக்கு ஆசியளித்திருப்பதும் நாம் முன்செய்த புண்ணியத்தினால்தான். மறுபடியும் கொலுசொலி மேலேறி வந்தது. ”தண்ணி குடிக்கிறீங்களா பாவா?” என்று கேட்டு எவர்சில்வர் சொம்பை நீட்டினார்.
கீழே மறுபடி சேவல் கூவியது. கிழக்கில் மெல்லிய வெளிச்சம் பரவத்துவங்கியது. நான் அம்முவின் முகத்தைப் பார்த்தேன். அம்முவின் இதழ்க்கோடியின் அந்தக் குறுஞ்சிரிப்பை, நேற்று தும்மம்மாளிடம் கண்டிருந்தேன். “ஆனந்த ரூபிணி...” என்னையறியாமல் என் வாய் முணுமுணுத்தது.
Episode 23 | தத் ப்ரணமாமி...
ஓசூர் இளங்காலைப் பொழுதின் மெல்லிய குளிர் காதுமடல்களைக் குளிர்வித்திருந்தது. நான் உள்ளங்கைகள் இரண்டையும் சேர்த்து பரபரவென்று தேய்த்துக்கொண்டேன். காலை ஆறரை மணி இரயில்வே ஸ்டேஷன் அழகாய்த்தான் இருந்தது. கிழக்கில் அப்போதுதான் சூரியன் மஞ்சள் ஒளி விசிறி எழுந்திருந்தான். தூரத்தில் மலை மேல் சந்திர சூடேஸ்வரர் கோவிலின் கோபுரம் தெரிந்தது. நான் முதல் ப்ளாட்ஃபார்மின் மரபெஞ்ச்சில் உட்கார்ந்திருந்தேன். பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் செல்லும், இண்டர்சிட்டி எக்ஸ்ப்ரெஸ் வர இன்னும் அரைமணி நேரமாவது ஆகும். டீ கேன் தூக்கிக்கொண்டு போனவரிடம் டீ வாங்கிக்கொண்டேன்.
செந்தில்நகர் வீட்டிலிருந்து டி.வி.எஸ்-50-ல் வந்து, வண்டியை ஸ்டேஷன் டூ வீலர் ஸ்டாண்டில் விட்டிருந்தேன். நாளை சாயங்காலம் இதே இண்டர்சிட்டியில் திரும்பும்போது, இறங்கி வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போகவேண்டும். ரிஷர்வ் செய்திருந்த S1 பெட்டி, சரியாய் உட்கார்ந்திருக்கும் பெஞ்ச்சின் முன்னால்தான் வரும் என்பதால் பெட்டிக்காக நடந்து செல்லும் சிரமமிருக்காது. இரண்டு, மூன்று பேராய் கொஞ்சம் கொஞ்சமாய் ப்ளாட்ஃபார்ம் ஆட்களால் நிரம்பிக்கொண்டிருந்தது.
லட்சுமி மில்ஸில் அம்முவைப் பார்ப்பதற்காகத்தான் இந்தக் குறும் பயணம். திருப்பூரில் இறங்கி, கோயம்புத்தூர் பஸ் ஏறினால், அரை மணி நேரத்தில் லட்சுமி மில்ஸில் இருக்கும் அத்தை வீட்டிற்குப் போய்விடலாம். அத்தை, மங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். ஓசூரிலிருந்து, திருப்பூருக்கு ட்ரெயின் ஐந்து மணி நேரத்தில் போய்விடும். பயணக் களைப்பில்லாமல் போய்வருவதற்கு ட்ரெயின்தான் வசதியாயிருந்தது. களைப்பென்ன, அம்முவைப் பார்ப்பதற்காக, ஐந்து மணி நேரம் என்ன, ஐம்பது மணி நேரம்கூட பயணம் செய்யலாம் என்று மனம் குதூகலித்தது; அம்முவைப் பார்க்கும் எந்த நிமிஷமும், இறந்த காலம் மறந்து, மனம் நிகழிலேயே தங்கும் விந்தையை ஆச்சர்யத்துடன் எண்ணிப் பார்த்துக்கொண்டேன்.
S1-ல் ஏறி, ரிஷர்வ் செய்திருந்த சீட் நம்பர் தேடிப் போனபோது, இளம்பெண் ஒருவர் அந்த ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்திருந்தார். நான் சந்தேகம் கொண்டு, பாக்கெட்டிலிருந்து என் டிக்கெட்டை எடுத்து சீட் நம்பரை சரிபார்த்தேன். அதற்குள் அப்பெண்ணே “இது உங்க சீட்டுங்களா? சாரி, உங்களுக்கு ஆட்சேபணை இல்லண்ணா...” வலதுபக்கம் எதிரிலிருந்த சீட்டைக்காட்டி “இங்க உட்கார்ந்துக்கிறீங்களா, ப்ளீஸ்?” என்று தயக்கத்துடன் கேட்டார். அம்முகம்...அந்த கண்கள்...எனக்குப் பேச்சே எழவில்லை. இண்டர்சிட்டியில் எல்லாமே மூன்று, மூன்று பேராய் அமரும் சிட்டிங் சீட்டுக்கள்தான். “ஓகே, பரவால்ல” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு வலது எதிர்புறம் அமர்ந்துகொண்டேன். “நாங்க ஈரோடுல இறங்கிருவோம். நீங்க கோயம்புத்தூர் போறீங்களா?” என்றார். நான் மறுபடியும் மெல்லிய குரலில் “இல்ல, திருப்பூர்” என்றேன். அப்பெண்ணிற்கு என்னைவிட இரண்டு/மூன்று வயது குறைவாயிருக்கலாம். கொஞ்சம் நீண்ட அழகிய முகம். அஞ்சனக் கண்கள். அக்கண்களில், மேனகாவின் கண்களில் தெரியும் சாந்தமும், தாய்மையும், ஆசீர்வதிக்கும் பாவமும் வியாபித்திருந்தது. நெற்றியில் சிவப்பில் சன்னமாய் பிறை போல் பொட்டிட்டிருந்தார். கழுத்தில் இரட்டையாய் போடப்பட்ட சிறிய துளசி மாலை. பக்கத்தில் பத்து/பனிரெண்டு வயது சிறுமி. தங்கையாக இருக்கவேண்டும். சிறுமிக்குப் பக்கத்தில் நடுத்தர வயதில் ஒரு பெண்மணி. அவர்களுக்கு எதிரில் மூன்று இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அப்புறம்தான் கவனித்தேன், அந்த ஆறுபேரும் ஒரே மாதிரி பொட்டு வைத்திருந்தார்கள். இளைஞர்கள் அனைவரும் வெண்மை உடையில்; கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருந்தார்கள்.
என் டீ சர்ட்டைப் பார்த்துவிட்டு “நைஸ் டீ சர்ட். என் பேர் சிவா” என்று கைகொடுத்தார் ஓரத்தில் அமர்ந்திருந்த இளைஞர். நான் கைகொடுத்துவிட்டு “என் பெயர் வெங்கடேஷ்” என்றேன். நான் அணிந்திருந்தது உடுக்கை படம் போட்ட ப்ரௌன் நிற டீ ஷர்ட். உடுக்கையின் கீழே பாம்பு மேலெழுவது போல் அம்மு எம்பிராய்டரி செய்து தந்திருந்தார். நானும் இஸ்கானில் வாங்கிய துளஸி மாலை அணிந்திருந்தேன். நெற்றியில் திருமண் பார்த்துவிட்டு இன்னொரு இளைஞர், “இஸ்கான்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். நான் “ஆம்” என்றேன். அவர்கள் அனைவரும் பெங்களூரிலிருந்து வருவதாகவும், ஈரோட்டில் உறவினர் வீட்டிற்குப் போய்விட்டு, அவர்களையும் கூட்டிக்கொண்டு ஊட்டி குருநித்யா குருகுலத்திற்குப் போவதாகச் சொன்னார். பேண்ட்ரியின் ஆட்கள், டீ, காபி, காலை உணவுகளை எடுத்துக்கொண்டு இங்குமங்குமாய் நடந்துகொண்டிருந்தார்கள். கிழக்கின் மேலேறும் சூரிய வெளிச்சம், ஜன்னல் வழியே கம்பார்ட்மெண்ட் உள்ளில் நடுப்பாதை வரை நீண்டு கிடந்தது.
”ஏதாவது பாடு அபி” அவ்விளம் பெண்ணிடம் அந்த நடுத்தர வயதுப் பெண்மணி சொன்னார். “ஓ...பெயர் ”அபி”-யா, இன்னொரு அபிராமி” என்று மனதுள் நினைத்துக்கொண்டேன். அபி, ”ஆயர்பாடி மாளிகையில்” பாட ஆரம்பித்தார். குரலும், பாவமும், மதுரம் கொண்டிருந்தன. மிக நன்றாகப் பாடினார். வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டிருப்பார் போலும். ஒரு தேர்ந்த பாடகியின் குழைவும், நெளிவும் கொண்டு கண்ணன் அங்கு உருப் பெற்றான். அந்தக் குரலின் மென்மையும், அபியின் கண்களும், பாடலின் தாலாட்டும் தனமையும், என் மனதை கனிந்து உருகச் செய்தது. அனுமன் பாடல், விநாயகர் பாடல், கண்ணன் பாடல் என்று கலந்துகட்டி வரிசையாக அவ்விளைஞர்களும் பாடல்கள் தொடர்ந்து பாடினார்கள். அந்த S1 கம்பார்ட்மெண்ட் முழுதும் இசையால் நிறைந்து வழிந்தது. “நீங்களும் ஏதாவது பாடுங்க” என்றார் அபி என்னைப்பார்த்து. நான் இதை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் தடுமாறினேன். “எனக்கு சரியா பாட வராது” என்றேன். “பரவால்ல, ஏதாவது கொஞ்சம் தெரிஞ்ச பாட்டு பாடுங்க, நாங்க பின்னாடி சேர்ந்து பாடுறோம்” என்றார் அபி. நான் கொஞ்சம் தயங்கிவிட்டு, இஸ்கானில் பாடும் “நமஸ்தே நரசிம்ஹா”-வைப் பாடினேன். முடித்ததும், அபி கைகொடுத்து “நல்லாதானே பாடறீங்க” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். என் வலதுகை விரல்களில், இரத்த ஓட்டம் அதிகரித்தது போலிருந்தது.
ட்ரெய்ன் தருமபுரியில் நின்று கிளம்பியது. தருமபுரியிலிருந்து, சேலம் இறங்கும் போது ட்ரெய்ன் பாதையின் இடதுபுறம் மிகப் பசுமையாய் இருக்கும். ஒவ்வொரு முறையும் பயணிக்கும்போது அந்தப் பசுமையை உள்வாங்க நான் தவறியதேயில்லை. இம்முறை அபியின் “அமர ஜீவிதம்” பாடலோடு, அந்தப் பசுமை இன்னும் அழுத்தமாய் மனதில் நுழைந்தது. அபி, “லிங்காஷ்டகம்” பாட ஆரம்பித்தார்.
”ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஸித சோபித லிங்கம் ஜன்மஜ து:க்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ”
”தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்” வரி பாடும்போது அந்த இனிமையான குரலின் பாவமும், வரியின் ராகமும் என்னை கண்கலங்கவைத்தது. நான் தலைகுனிந்து கொண்டேன். அபி லிங்காஷ்டகம் பாடி முடிக்கும்வரை என்னால் தலைநிமிர முடியவில்லை. நிமிர்ந்து அபியைப் பார்த்தால் கண்களின் நீர் கன்னத்தில் வழிந்துவிடுமோ என்று பயமாக இருந்தது. எஸ்.பி.பி உட்பட நிறைய பாடகர்களின் குரல்களில் லிங்காஷ்டகம் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால், இன்றுதான் லிங்காஷ்டகத்தின் உண்மையான உயிரை அறிந்தேன். ”நன்றி பெண்ணே” மனம் நிறைந்து மனசுக்குள் அபியை நமஸ்கரித்துக்கொண்டேன்...”தத் ப்ரணமாமி”
சேலம் வந்தது. சிவா இறங்கி ப்ளாட்ஃபாரக் கடையில் வாழைப்பழங்கள் வாங்கி ஜன்னல் வழியே அபியிடம் தந்தார். நான் இறங்கி, தள்ளுவண்டியிலிருந்த புத்தகக் கடையில், ஓஷோவின் “And The Flowers Showered" புத்தகம் வாங்கினேன். உள்ளே வந்து சீட்டில் உட்காரும்போது, என் கையில் புத்தகத்தைப் பார்த்துவிட்டு “என்ன புக் வாங்கினீங்க? காட்டுங்க” என்றார் அபி. நான் அபியிடம் புத்தகத்தைக் கொடுத்தேன். “ஓ...சூப்பர் புக்...ஜென் பத்தினது. ஓஷோவோட “I Say Unto You" படிச்சிருக்கீங்களா?” என்று கேட்டார். நான் “இன்னும் இல்லை” என்றேன். “கண்டிப்பா படிங்க, ஜீஸஸ் பத்தினது” என்றார்.
சங்கரி துர்கில், ட்ரெய்ன் மெதுவாகி நின்றது. எப்போதும் நிற்பதுதான்; எதிரில் வரும் இன்னொரு ட்ரெய்ன், வழக்கமாய் சங்கரி துர்கில் கிராஸ் ஆகும். எங்களின் ட்ரெய்ன் நாலாவது ட்ராக்கில் நின்றுகொண்டிருந்தது. எதிர் ட்ரெய்ன் முதல் ப்ளாட்ஃபார்மில் க்ராஸ் ஆவதற்காக, கையில் பச்சை, சிவப்பு கொடிகளோடு ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் காத்துக்கொண்டிருந்தார். அபியும், சிறுமியும், சிவாவும் ட்ரெய்ன் விட்டிறங்கி, மூன்றாவது ட்ராக்கில் நின்றார்கள். சிறுமி ட்ராக்கின் கற்களை கைகளில் எடுத்து ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்தார். சிவாவும், அபியும் கைகளைப் பிடித்துக்கொண்டு ட்ராக்கில் இங்குமங்குமாய் சிரித்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தார்கள். அபியின் புன்னகையும், சிரிப்பும் அடுத்தவரையும் தொற்றக்கூடியது. பத்தரை மணி வெயில் சுளீரென்று அடித்துக்கொண்டிருந்தது. அபி, வெண்ணிற சுடிதாரின் மேல் போட்டிருந்த சிவப்பு துப்பட்டாவில், தலை மேல் முக்காடிட்டுக் கொண்டார். ரயில்வே ட்ராக்கில், வெண் உடையில் சிவப்பு முக்காடிட்ட அபியின் சிரித்த முகம், ட்ரெய்ன் உள்ளே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த என் மனதில் ஆழமாய் பதிந்தது.
லட்சுமி மில்ஸ் வீட்டில், உள்ளே நுழைந்ததும், சிரித்துக்கொண்டே “வாங்க பாவா” என்று சொல்லி கையிலிருந்த பையை வாங்கிக்கொண்ட அம்முவிடம், “அம்மு, இன்னைக்கு ட்ரெய்ன்ல வரும்போது, அபி-யைப் பார்த்தேன்...” - என்று சொல்ல ஆரம்பித்தேன்...
Episode 24 | ஸாய்
"இது பெங்களூர் ஸ்டேஷன் போகாதில்ல ஸாய்ம்மா? நீ எங்க இறங்கிக்குவ?” என்று கேட்டேன். “ஆமா, இந்த வண்டி ஜோலார்பேட், பங்கார்பேட் வழியா போயிடும். நான் பங்கார்பேட்-ல இறங்கிக்குவேன். அங்கேயிருந்து காலேஜுக்கு டாக்ஸில போயிடுவேன்” என்றார் ஸாய்.
ஸாய், சீதா அத்தையின் மூத்த பெண். பெயர் அனுபமா என்றாலும், எங்களுக்கெல்லாம் ஸாய்-தான். சீதா அத்தைக்கு புட்டபர்த்தி ஸாய்பாபாவின் மேல் பக்தி என்பதால், குழந்தையிலிருந்தே அனுவை ஸாய் என்றுதான் கூப்பிடுவோம். ஸாய், பெங்களூரில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கிறார். என்னைவிட இரண்டு வயது இளையவர். சீதா அத்தையின் பெயரும் சீதம்மாள்-தான். சீதா அத்தை, அப்பாவின் தங்கை. எம்.பி.பி.எஸ், டி.ஜி.ஓ முடித்துவிட்டு மருத்துவராய் அரசுப் பணியில் சேர்ந்து முட்டம், நத்தம், வெள்ளளூரில் வேலைசெய்துவிட்டு தற்போது அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில், பணிசெய்துகொண்டிருந்தார். எங்கள் அப்பா தலைமுறையில், குடும்பத்தின் முதல் டாக்டர். அத்தை தீவிர ரஜினி ரசிகர். “தம்பிக்கு எந்த ஊரு” ரிலீஸான முதல் நாள் படம் பார்ப்பதற்காக செகண்ட் ஷோவிற்கு அலங்காநல்லூரிலிருந்து மதுரைக்கு அத்தையுடன் வந்திருக்கிறோம். மாமா ராமசாமி திருப்பத்தூரில் ஒரு கல்லூரியில் பேராசிரியாய் வேலை செய்துகொண்டிருந்தார். மாமாவும், அத்தையும் காதல் திருமணம் புரிந்தவர்கள்.
மதுரை ரயில்வே ஜங்ஷனின் முதல் ப்ளாட்ஃபார்ம், அந்த முன்னிரவில், விளக்கு வெளிச்சங்களோடு, வழக்கமான மக்கள் கூட்டத்தோடு பரபரப்பாயிருந்தது. வழியனுப்ப வந்தவர்கள், ட்ரெய்ன் நெடுகிலும் ஜன்னலருகே நின்று உள்ளிருப்பவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். வெவ்வேறு ப்ளாட்ஃபார்ம்களிலிருந்து கிளம்பும் ரயில்களின் “பாம்” ஒலி, ஒலிபெருக்கியின் அறிவிப்புகள், ப்ளாட்ஃபார்மிலிருந்த கடைகளின் மக்கள் கூட்டம், ட்ரெய்னிற்காக காத்திருக்கும் பயணிகளின் முகங்கள்...எனக்குப் பிடித்த ஒரு காட்சிக்குள், சூழலுக்குள் நுழைந்ததுபோல் இருந்தது. ரயில்வே ஸ்டேஷன் எனக்கு மிகவும் பிடித்த இடம். கோயம்புத்தூர் கல்லூரி ஹாஸ்டலிலிருந்து, ஞாயிறுகளில், நினைக்கும்பொழுதெல்லாம், சைக்கிளை எடுத்துக்கொண்டு ரயில்வே ஸ்டேஷன் வந்துவிடுவேன். ஏதேனும் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.
”இருங்க பாவா, பேக்கை வச்சிட்டு வர்றேன்” ஸாய் S5-ல் ஏறி ரிஷர்வ் செய்திருந்த சீட்டில் பேக்கை வைத்துவிட்டு கீழிறங்கினார். ட்ரெய்ன் கிளம்ப இன்னும் அரைமணி நேரம் இருந்தது. ஸ்டேஷனுக்கு வருவதற்கு முன்புதான், நான், ஸாய், சீதா அத்தை மூவரும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலிருந்த வசந்தம் ஹோட்டலில் இரவுணவு சாப்பிட்டு வந்திருந்தோம். சீதா அத்தை தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாகச் சொல்லிக் கிளம்பினார். நானும், ஸாய்-ம் வலதுபக்கம் கொஞ்சம் தள்ளியிருந்த புத்தகக்கடையில் புத்தகங்கள் வாங்கப் போவதாகச் சொல்லிவிட்டு நடந்தோம்.
ஸாய்-உடன் பக்கத்தில் நடந்துசெல்வது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது. ஸாய்-க்கு ஒரு சாயலில் நடிகை சிவரஞ்சனியின் முகம். ரெங்கம்மா பாட்டியின் மூக்கு. ஒளிவீசும், பளிச்சிடும், பேசும், பார்த்தவுடன் பாஸிடிவ் என்ர்ஜி தரும் கண்கள். ஸாய் உடன் பத்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தாலே போதும், மனது முழுதும் பாஸிடிவ் எனர்ஜியால் நிரம்பிவிடும். அவநம்பிக்கையும், தாழ்வுணர்ச்சியும் எப்போதெல்லாம் மனதை ஆக்ரமிக்கிறதோ, சட்டென்று ஸாய்-ன் முகத்தை நினைத்துக்கொண்டால் மனதில் புது நம்பிக்கை முளைத்துவிடும். பெரியப்பா ஸ்ரீராமஜெயம் எழுதுவதைப் பார்த்து, ஸாய்-ன் மேலான இன்ஃபேட்சுவேஷனில், எட்டாவது படிக்கும்போது, ஒரு நாற்பது பக்க நோட்டு முழுவதிலும் ஸாய்...ஸாய்...என்று எழுதி, அந்த நோட்டை அம்மாவிற்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்தது ஞாபகம் வந்து மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டேன்.
சீதா அத்தைக்கு மூன்று பெண்கள். ஸாய், அப்புறம் வித்யா, கடைசியில் ராணி. பள்ளி விடுமுறைகளில் மூவரும் அடிக்கடி சீதா அத்தையோடோ, அல்லது ரெங்கம்மா பாட்டியோடோ ஓடைப்பட்டிக்கு வருவதுண்டு. வருடாவருடம், சிவராத்திரிக்கு நடக்கும், கருப்பண்ண ஸ்வாமி திருவிழாவிற்கு கண்டிப்பாக வந்துவிடுவார்கள். அவர்களுடன் நகரும் விடுமுறை நாட்களும், சிவராத்திரியும் கொண்டாட்டமானவை.
சிவராத்திரிக்கு, பக்கத்து கள்ளிக்குடி ராஜா தியேட்டரில் ஒரு டிக்கெட்டிற்கு இரண்டு படம் பார்க்கலாம். சிவராத்திரிக்கு மட்டும் மிட்-நைட் ஷோ உண்டு. செகண்ட் ஷோ பத்து மணிக்கு ஆரம்பித்து பனிரெண்டே முக்காலுக்கு முடியும். மற்றொரு படம் மிட்-நைட் ஷோ ஒரு மணிக்கு துவங்கும். பள்ளிப் பருவத்தில், வண்டித் தாத்தாவின் மாட்டு வண்டியில், கீழே வைக்கோல் பரப்பி அதன் மேல் ஜமுக்காளம் விரித்து, எல்லோரும் உட்கார்ந்துகொண்டு ராஜா தியேட்டருக்குப் போனது இன்னும் பசுமையாய் மனதில் இருக்கிறது. ஒரு சிவராத்திரியில் ஆட்டுக்கார அலமேலுவும், கரடி என்றொரு படமும் பார்த்தோம். மூன்று மணிக்கு வீடு திரும்பும்போது மாட்டு வண்டியிலேயே தூங்கியிருக்கிறோம்.
ஒரு சிவராத்திரியின் மறுநாள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் விளையாட்டுப் போட்டிகள் பகலில் நடத்திவிட்டு, இரவு, ஊர் மந்தையில் பெரிய வெள்ளை ஸ்கிரீன் கட்டி, விருதுநகரிலிருந்து ப்ரொஜெக்டர் கொண்டுவந்து, மனோகரா படம் போட்டார்கள். வீடு மந்தையில்தான் என்பதால், நாங்கள் எல்லோரும், மொட்டை மாடிக்கு பாய் தலையணை எல்லாம் கொண்டுபோய், விரித்து உட்கார்ந்து கொண்டு, அங்கிருந்தே படம் பார்த்தோம். எல்லோரும் பாதியிலேயே தூங்கிவிட, ராக்கோழியான நான் மட்டும் கொட்டக்கொட்ட விழித்து பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த இரவில் சினிமா பார்த்ததைவிட, அமைதியாய் தூங்கும் ஸாய்-ன் சாந்தம் தவழ்ந்த முகத்தை பார்த்துக்கொண்டிருந்த நேரம்தான் அதிகம்.
ஒருமுறை PKN பள்ளி விடுமுறையில் அலங்காநல்லூர் போயிருந்தபோது, தனியாய் படம் பார்க்க சாந்தி தியேட்டருக்குப் போனேன். “டார்லிங் டார்லிங் டார்லிங்” ஓடிக்கொண்டிருந்தது. மதியக் காட்சிக்கு தரை டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே போனேன். ரெங்கம்மா பாட்டி தந்த ஐந்து ரூபாய் பையில் இருந்தது. படத்தில் பாக்யராஜ் பாடும் “ஓ நெஞ்சே...நீதான்" பாடல் மனதை என்னவோ செய்தது.
”தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன் சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில் செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில் என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை”
வரிகள் ஏன் ஸாய்-ன் முகத்தை தொடர்ந்து கண்முன் கொண்டுவந்தென்று தெரியவில்லை.
புத்தகக்கடையில், ஸாய் எரிக் ஸீகலின் “டாக்டர்ஸ்” புத்தகம் வாங்கினார். நான் ஓஷோவின் “வெற்றுப் படகு” எடுத்துக்கொண்டேன். “இன்னும் வேற புத்தகம் ஏதாவது வேணுண்ணா எடுத்துக்கங்க பாவா” என்றார் ஸாய். “அத்தை திட்டுவாங்க, போதும்” என்றேன். ஸாய்-தான் கவுண்டரில் காசு கொடுத்தார். இருவரும் S5 அருகே சென்றபோது, அத்தை தன்ணீர் பாட்டிலும், ஸ்நேக்ஸ் நிரம்பிய கேரி பேக்குடனும் நின்றிருந்தார். ட்ரெய்ன் கிளம்புவதற்கான அறிவிப்பு வந்தது. ஸாய் உள்ளே ஏறி ஜன்னல் அருகே உட்கார்ந்துகொண்டார். நானும், அத்தையும் வெளியில் நின்றுகொண்டிருந்தோம்.
அத்தை என்னிடம் “போன மாசம் ஹாஸ்டல் ஃபீஸ் கட்டிட்டயா? நான் அனுப்பட்டுமா?” என்று கேட்டார். நான் “வேண்டாம், கட்டியாச்சு” என்றேன். ஸாய் என்னிடம் “திரும்பிப் போகும்போது பத்திரமாப் போங்க. 48 பஸ்தானே?” என்று கேட்டுவிட்டு “போகும்போது வெளியில இருக்குற சர்ச்சுக்குப் போயிட்டுப் போங்க” என்றார். நான் புன்னகைத்து “சரி” என்றேன். ஸாய் பர்ஸிலிருந்து 500 ரூபாய் எடுத்து என் கையில் திணித்தார் “செலவுக்கு வச்சுக்கங்க”. நான் “வேண்டாம்” என்று மறுத்து கையைப் பின்னுக்கிழுத்தேன். அத்தை சிரித்துக்கொண்டே “அவனுக்கு ஏன் காசு தர? புக்ஸ் வாங்கியே கரைச்சுருவான்” என்றார். “நான் எது கொடுத்தாலும் வாங்கிக்கணும். வேண்டான்னு சொல்லக்கூடாது” என் கையைப் பிடித்திழுத்து ஸாய் மறுபடி பணத்தைத் திணித்தார். ட்ரெய்ன் எஞ்சின் ஒலி எழுப்பியது. “பத்திரம் ஸாய்ம்மா” என்றேன். அத்தை ஸாயிடம் காலேஜ் போனதும் ஃபோன் செய்யச் சொன்னார்.
ட்ரெய்ன் நகரத் துவங்கியது. ஸாய் டாடா காட்டிவிட்டு சிரித்துக்கொண்டே “மேனகாவக் கேட்டதா சொல்லுங்க பாவா” என்றார்.
Episode 25 | பெயரே தெரியாத பறவை...
க்லென்மார்கனில், TNEB குவார்ட்டஸில், பாபு-வின் வீட்டின் முன்னால் இருந்த தண்ணீர் ஏரியின் கரையில், ஏரியைப் பார்த்தவாறு மரத்தடியில் புல் தரையில் உட்கார்ந்திருந்தேன். கையில் பரதியார் கவிதைகள் புத்தகம் இருந்தது. முன்காலைப் பொழுது. இளவெயிலில் ஏரித் தண்ணீர் மினுங்கிக் கொண்டிருந்தது. மரத்தில் சிறு பறவைகளின் கீச்சுக்கள். மனது, பாரதியின் வரிகளில் மயங்கி, பரவசத்தின் ஆழத்தில் அமிழ்ந்திருந்தது. “மேனகா-வின் ஊரும் வீடும் இங்கு பக்கத்தில் எங்காவதுதானே இருக்க வேண்டும்?” என்று மனது எண்ணிக்கொண்டது.
திருமங்கலத்தில் ப்ளஸ் டூ முடிக்கும் வரை வெளியில் எங்கும் தனியாய் பயணித்ததில்லை. எந்த வெளியூர்களும் இடங்களும் சரியாய் பரிச்சயமில்லாத பருவம் அது. கோயம்புத்தூரில் கல்லூரியில் சேர்ந்த முதல்வருடம் கூட, விடுமுறையில் ஊர் போய் திரும்பும்போது இரண்டு/மூன்று முறை மாமாவோ, தாத்தாவோ உடன் வந்து கல்லூரியில் விட்டுச் சென்றிருக்கிறார்கள். ப்ளஸ் டூ-விலேயே பாரதி கவிதைகள் படித்திருந்தாலும், கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம் மேனகா-வைப் பார்த்த பிறகு, குயில் பாட்டும், கண்ணம்மா கவிதைகளின் வரிகளும் உயிர் பெற்று அர்த்தங்கள் பொலிந்து பரவசப்படுத்தியிருந்தன. மேனகா-விற்காகவே, சங்கப் பாடல்களில் அகத்திணையை குறிப்பாய் குறுந்தொகை மொத்தத்தையும் மறுவாசிப்பு செய்யவேண்டும் போலிருந்தது.
க்லென்மார்கனின் சூழலும், பாபுவின் வீடும் மிகவும் பிடித்துப் போயிருந்தது. பாபுவின் அப்பா அட்டகாசமான மனிதர். பார்த்தவுடன் அவரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும், இளமையான மனது கொண்டவர். பாபு, பவுன் அண்ணாவைப் பற்றிச் சொல்லியபோது, “சயண்டிஃபிக் கால்குலேட்டர அக்கு அக்காப் பிரிச்சி மறுபடியும் அஸ்ஸெம்பிள் பண்ணிடுவான் அவன்” என்று சொல்லியிருக்கிறான். ஸ்டோர் ரூமில் ஒரு அட்டைப் பெட்டி நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தது. நேற்று, பைகாரா டன்னலுக்கு கூட்டிச் செனறு சுற்றிக் காட்டினான் பாபு. வின்ச்சில் கீழிறங்கும் போது, அங்கு நிறைய சினிமா சூட்டிங் நடக்குமென்றும் சமீபத்தில் கூட நடிகை கஸ்தூரியோடு வின்ச்சில் கீழே போனதாகச் சொன்னான். வின்ச் பயணம் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
வைதேகி அக்காவும், பாபு-வும் மரத்தடிக்கு வந்தார்கள். “எவ்வளவு நேரம்டா மரத்தடியில் உட்கார்ந்திருப்ப?” என்று கேட்டுக்கொண்டே அருகில் உட்கார்ந்தான் பாபு. வைதேகி அக்கா கையில் கொண்டு வந்திருந்த கேக் தட்டை நீட்டி, “கேக் எடுத்துக்கோ. இப்பத்தான் பண்ணது. மிக்ஸிங்ல ஏதோ மிஸ்டேக் போலருக்கு. ஷேப் சரியா வரல” என்றார் சிரித்துக்கொண்டே. நான் எடுத்துக்கொண்டதும், வீட்டிற்கு திரும்பிச் சென்றார். “மதியம் சாப்பிட்டுட்டு பைகாரா டேம் போகலாமா?” என்று பாபு கேட்டான். நான் ”சரி”யென்றேன். "இந்த இடம் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு பாபு. ராஜாவோட ‘நத்திங் பட் விண்ட்’ மனசுக்குள்ள பிஜிஎம்-மா ஓடுது” என்றேன். மனது நெகிழ்வாய் அமைதியாய் இருந்தது. "இந்த கவிதையக் கேளேன்” என்று சொல்லிவிட்டு, புத்தகம் பிரித்து வரிகளைப் படித்தேன்...
மாலைப் பொழுதிலொரு மேடைமிசையே வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சுசெலுத்தி, நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே சாலப் பலபலநற் பகற்கனவில் தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.
ஆங்கப் பொழுதிலென் பின்புறத்திலே, ஆள்வந்து நின்றெனது கண்மறைக்கவே, பாங்கினிற் கையிரண்டுந் தீண்டியறிந்தேன், பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன், ஓங்கி வருமுவகை யூற்றிலறிந்தேன்; ஒட்டு மிரண்டுளத்தின் தட்டிலறிந்தேன்; ‘வாங்கி விடடிகையை யேடிகண்ணம்மா, மாய மெவரிடத்தில்?’ என்றுமொழிந்தேன்.
சிரித்த ஒலியிலவள் கைவிலக்கியே,
நிறுத்தி விட்டு பாபுவிடம் “கொஞ்சம் மெலோடிராமாவா தெரிஞ்சாலும், பின்னாடியிருந்து கண்ணைப் பொத்தற இந்தக் காட்சி எனக்குப் பிடிச்சிருக்கு பாபு” என்றேன் புன்னகையுடன். “அதுசரி. இந்த வயசுக்கு இப்படி எல்லாத்தையுமே புடிக்கும்தான்” என்றான் பாபு சிரித்துக்கொண்டே.
ஏதோ நினைத்துக் கொண்டவன் போல “பண்டிசோலா எங்க இருக்கு பாபு?” என்று கேட்டேன்; பாபு என்னைத் திரும்பிப் பார்த்தான் “ஏன்?, இங்க நிறைய பண்டிசோலா இருக்கே?” என்றான். நான் “ஓ அப்படியா? ஹேவ்லாக் ரோடு?” என்றேன் சாதரணமாய். ”அது ஊட்டிக்குள்ள இருக்கலாம்; தெரியல. குன்னூர் பக்கத்துல, கோத்தகிரி ரோட்ல ஒரு பண்டிசோலா இருக்குன்னு நினைக்கிறேன்” என்றான் பாபு. நான் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு, பேச்சை மாற்றி “இந்த வருஷம் முத்தமிழ் விழாவுக்கு செலிப்ரிடீஸ் யார் யார் வர்றாங்கனு தெரியுமா பாபு?” என்று கேட்டேன். “முடிவு பண்ணிட்டாங்களான்னு தெரியல. ஃபோல்க் சாங்ஸ் விஜயலட்சுமி ப்ரோக்ராம் ஒரு நாள் இருக்கும்னு நினைக்கிறேன்” என்றான் பாபு. விடுமுறை முடிந்து கல்லூரி திறக்க இன்னும் ஒருவாரம் இருந்தது. மனதின் மூலையிலிருந்து, “இன்னும் மேனகாவைப் பார்ப்பதற்கு ஒரு வாரம் காத்திருக்கவேண்டும்” என்ற ஆயாசத்துடன் கூடிய ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் காற்று நுழையும் பலூன்போல் மனதுக்குள் உப்பி நிரப்பிக் கொண்டிருந்தது. மரத்தின் இலை மறைவிலிருந்து, ஒரு பறவையின் வித்தியாசமான குரலில் சங்கீதம் ஒலித்தது. ஏரியின் தண்ணீர், மேனகாவின் முகம் போல களங்கமில்லாமல், தெளிவாய் ஸ்படிகமாய் சூரிய ஒளியை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அரைமணி நேரம் கல்லூரிக் கதைகளைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, வீட்டிலிருந்து அம்மாவின் குரல் சாப்பிடக் கூப்பிட எழுந்து வீட்டுக்குப் போனோம்.
.
ஊட்டி பஸ் ஸ்டாண்டில், கோயம்புத்தூர் போர்ட் போட்ட பஸ்ஸில் ஏறி படிக்கருகிலிருந்த சீட்டில் உட்கார்ந்திருந்தேன். பஸ் இன்னும் எடுக்கவில்லை. மணி இரண்டரை. கண்கள் ப்ஸ் ஸ்டாண்டின் ஜனத் திரளையும், கடை வரிசைகளையும் இலக்கில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தாலும், மனது முழுதும் மேனகா-தான் வியாபித்திருந்தார். மனது மெல்லிய தவிப்புடன் இருந்தது. இடது தோளில் மாட்டி, மடியில் வைத்திருந்த தோள்பை கனக்கவே கழட்டி சீட்டின் மேல் வைத்தேன். “மோகமுள்”-தான் கனக்கிறது. ”மோகமுள்” புத்தகத்தை பையிலிருந்து வெளியில் எடுத்து பிரித்தேன். பாபு, யமுனா வீடிருக்கும் துக்கம்பாளையத் தெருவில் சுற்றிக் கொண்டிருந்தான். மனது சட்டென்று யோசித்தது, “எத்தனை பண்டிசோலா இருந்தாலும், எத்தனை ஹேவ்லாக் ரோடுகள் இருந்தாலும், எல்லாவற்றையும் சுற்றி விட்டு வந்தாலென்ன?”. பஸ்ஸில் டிரைவர் ஏறியதும், நான் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, பஸ்ஸை விட்டுக் கீழிறங்கினேன்.
ஊட்டியின் ஹேவ்லாக் ரோட்டில் இலக்கில்லாமல் நடந்தலைந்தேன். வெஸ்ட் கோஸ்ட் பேக்கரியைப் பார்த்ததும் விமலா அத்தைக்கு வரிக்கி பிஸ்கட் வாங்கி பையில் வைத்துக்கொண்டேன். ஒரு டீக்கடைக்குள் நுழைந்து டீ குடித்தேன். டீ குடித்துக்கொண்டிருக்கும்போது “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எனக்கு என்ன வேண்டும்? என் எதிர்பார்ப்புகள் என்ன?” மனதின் ஒரு பகுதி கேள்விகள் கேட்டது. அந்த பெயர் தெரியாத பறவையின், உணர்வின், சிறகடிப்பில் திளைத்த மனதின் மற்றொரு பகுதி கேள்விகளை அலட்சியமாய் இடக்கையால் புறந்தள்ளியது.
குன்னூரில் இறங்கி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிருந்த ஆட்டோ வரிசையில் ஒரு ஆட்டோவில் ஏறி, “பண்டிசோலா போகணும்” என்றேன். “எங்க ப்ராவிடன்ஸ் காலேஜா சார்?” என்றார் ஆட்டோ டிரைவர். நான் சிறிது யோசித்துவிட்டு தயக்கத்துடன் “ஆமா, அதுக்குப் பக்கத்துல” என்றேன் தயக்கத்துடன். ஆட்டோ கோத்தகிரி ரோட்டில் நீல்கிரீஸ் பேக்கரியை கடந்தது. மேற்கில் சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது.
சுற்றி அலைந்துவிட்டு, மறுபடி குன்னூர் பஸ் ஸ்டாண்ட் வரும்போது மணி ஆறரை ஆகியிருந்தது. கோயம்புத்தூர் பஸ்ஸோ மேட்டுப்பாளையம் பஸ்ஸோ கண்ணில் படவில்லை. களைப்பாயிருந்தது. ஒரு டீக்கடையில் தன்ணீர் வாங்கி முகம் கழுவிவிட்டு டீ குடித்தேன். கால்கள் வலித்தன. அம்முகத்தின் புன்னகை மட்டும் நெஞ்சுக்குள் மறையவில்லை. மறுபடி பாரதியின் வரிகள்தான் மனம் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது...
புன்னகை செய்திடுவாள், -- அற்றைப் போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்.......
Episode 26 | நெடு நல் மழை
”எப்படி இவ்வளவு சூடா குடிக்கறீங்க பாவா?” என்றார் அம்மு. “பழக்கமாயிடுச்சு அம்மு. கொஞ்சம் ஆறினாக் கூட குடிச்ச மாதிரியே இருக்கறதில்ல” சிரிப்புடன் சொல்லிக்கொண்டே, அம்மு தந்த காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தேன். அம்மு காபியோ, டீயோ குடிப்பதில்லை. என்பொருட்டு, அவரும் குடிப்பதற்காக, இன்னொரு டம்ளரில் கொஞ்சமாய் ஊற்றி கொண்டு வந்து, ஆறுவதற்காக சேர் அருகிலிருந்த மாவாட்டும் உரல்மேல் வைத்திருந்தார். உரல் அருகில் காய்ந்த தென்னை மட்டைகள் பரப்பிக் கிடந்தன.
நானும் அம்முவும், அம்மு வீட்டுக் கொல்லையில் கொய்யா மரத்தடியில் சேர் போட்டு எதிரெதிரில் உட்கார்ந்திருந்தோம். அம்முவின் அக்கா லதா, கிச்சனில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார். வானம் கருமேகங்களால் மூடி, மழைக்கு முந்தைய குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. “மழை வரும் போலருக்கு. மழைக்கு முன்னாடி அம்மா வந்துட்டா பரவால்ல” மேகங்களைப் பார்த்தவாறே சொன்னார் அம்மு. விமலா அத்தை பல்லடம் அருகில், மங்கலத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்து வந்தார். மங்கலத்திலிருந்து பல்லடத்திற்கு பஸ் ஏதும் இல்லாததால், திருப்பூர் போய்தான் பஸ் மாறி லட்சுமி மில்ஸ் வரவேண்டும். ”வந்துருவாங்க. மணி எத்தனை அஞ்சாகப் போகுதா? இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவாங்கதானே?” என்றேன். “சூலூர் ஸ்கூல் எப்படி இருக்கு அம்மு?” என்று கேட்டேன். அம்மு, சூலூர் கவர்ன்மெண்ட் கேர்ள்ஸ் ஸ்கூலில் பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். “டீச்சருங்கல்லாம் புதுசு பாவா. நாங்க ஏதாவது சந்தேகம் கேட்டா, அவங்களுக்கும் தெரியறதில்ல. பப்ளிக் எக்ஸாம நெனச்சாதான்...” என்று சொல்லிவிட்டு சிரித்தார் அம்மு. என் மடியிலிருந்த பாலாவின் “பந்தயப் புறா” நாவலை பார்த்துவிட்டு “போன லீவுல சாண்டில்யனோட ‘யவனராணி’ படிச்சேன் பாவா. எனக்குப் பிடிச்சிருந்தது. எனக்கு ‘பொன்னியின் செல்வன்’-ஐ விட் ‘யவனராணி’-தான் ரொம்பப் புடிச்சிருந்தது” என்றார். நான் சிரித்துக் கொண்டே “தி.ஜா-வோட “உயிர்த்தேன்” நீ படிக்கணும் அம்மு. நல்லாருக்கும்” என்றேன்.
பேசிக்கொண்டிருக்கும்போதே விமலா அத்தை வந்துவிட்டார்கள். முன் வாசலிலிருந்து பார்த்தாலே பின் கொல்லைப்புரம் தெரியும். என்னைப் பார்த்ததும் “அடடே, விஜயா, எப்ப வந்தே?” என்றார். நான் மதியம் வந்தேன் என்றும், காலேஜ் இரண்டு நாள் லீவ் என்றும் சொன்னேன். அத்தை கையில் கொண்டுவந்த பையை லதா வந்து வாங்கிக் கொண்டு போனார். “பைக்குள்ள ஜிலேபியும், காளான் பப்ஸூம் இருக்கும்மா. பாவாவுக்கு தட்டுல வச்சு எடுத்துட்டு வா” என்றார் அத்தை. அத்தைக்குத் தெரியும் எனக்கு காளான் பப்ஸ் பிடிக்கும் என்று.
லதா, அம்முவின் நண்பிகள் மூன்று பேர் வந்தார்கள். அம்மு அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். ”இவங்க ரேணு, இவங்க ரெண்டு பேரும் லல்லி. ஒரு லல்லி நம்ம தெருவிலேயே, நம்ம லைன்ல ரெண்டு வீடு தள்ளியிருக்கா. இன்னொரு லல்லி நம்ம வீட்டுக்குப் பின்னாடி இருக்கா” என்றார். “எங்க பாவா, கோயம்புத்தூர் அக்ரி யுனிவர்ஸிட்டியில படிக்கிறாங்க” என்று என்னை அறிமுகப்படுத்தினார். லதா மடக்கு சேர்கள் கொண்டுவந்து அவர்களுக்கும் கொல்லையிலேயே போட்டார். “நைட் சாப்பாட்டுக்கு பூரி போடவா, சப்பாத்தி போடவா பாவா?” லதா கேட்டார். நான் “எதுன்னாலும் பரவால்லம்மா” என்றேன். அம்மு “பூரி” என்றார் சிரித்துக்கொண்டே. அத்தை “ரேணு, லல்லிஸ் சாப்பிட்டு போங்கடி” என்று சொல்லிவிட்டு வாங்கி வந்திருந்த விகடன், குமுதம், ராணி பத்திரிக்கைகளை என்னிடம் தந்தார்.
TNAU-ஐப் பறறியும், திருப்பூர் ஏற்றுமதி பனியன்களில் கலர் பாசிகள் கோர்க்கும் வேலை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். “காலேஜூக்கு வாங்க. நல்ல பெரிய கார்டன் இருக்கு. ஒருநாள் கூட்டிட்டு வா அம்மு” என்றேன். மழைத்தூறல் ஆரம்பிக்கவே, சேர்களை ஹாலுக்கு உள்ளே எடுத்துச் சென்று, பின்வாசலைப் பார்த்தவாறு போட்டுக்கொண்டு உட்கார்ந்தோம். எனக்குப் பிடித்த மண்வாசனை கிளம்பி நாசி நிறைத்தது. நான் ஆழ்ந்து சுவாசித்தேன். மழை மேனகாவின் முகத்தை மனதில் கொண்டுவந்தது. மேனகா, மலைகளின் ராணி மட்டுமல்ல, குறிஞ்சியின் ராணி, மழையின் ராணி-கூடத்தான் என்று நினைத்துக் கொண்டேன். அதோ தூறலில் நனையும் அந்தச் சிவப்பு செம்பருத்தியும் மேனகா-தான். அடுத்தமுறை அம்மு கல்லூரி வரும்போது வாய்ப்பிருந்தால் மேனகாவை அம்முவிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். அம்மு என்னைவிட மூன்று வயது இளையவர் என்றாலும், மனதின் மெச்சூரிட்டியிலும், எதையும் சட்டெனப் புரிந்துகொள்வதிலும் என்னைவிட விரைவானவர். என்னைப் போல் பகற்கனவுகளில் ஆழ்ந்து விடாமல், எதையும் ப்ராக்டிகலாக அணுகுபவர்.
வெளியில் சடசடவென்று தூறல்கள் அதிகரித்து, மழை ஆரம்பித்தது. கொல்லையிலிருந்த இரண்டு தென்னை மரங்களும், கொய்யா மரமும் மகிழ்ச்சியில் தலைகுளித்துக் கொண்டிருந்தன. லதா தட்டுகளில் ஜிலேபியும், பப்ஸ்களும், சூடான வாழைக்காய் பஜ்ஜிகளும், தேங்காய் சட்னியும் கொண்டுவந்தார். அம்முவின் நண்பிகள் உற்சாகமான, இளமைக்கே உரித்தான குறும்புகள் கொப்பளிக்கும் பேச்சு கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து எல்லோருக்கும் காபி கொண்டுவந்தார் அத்தை. அம்மு என்னிடமும் ஒரு டம்ளரை கொடுத்துவிட்டு சிரித்துக்கொண்டே “இன்னிக்கு இது எத்தனாவது காபி?” என்றார்.
மழை நிற்கவில்லை. இன்னும் வலுத்திருந்தது. மழை நிற்கும்வரை கேரம் ஆடினோம். “எங்கூட செஸ் ஆடுவாருல்ல அம்மு, அந்த தாத்தா பேரு என்ன?” என்றேன். “தாத்தாவா அவரு உங்களுக்கு?” என்றார் அம்மு சிரித்துக்கொண்டே. “அவரு ராமசாமி நாயக்கர் மாமா” என்றார். நான் லட்சுமி மில்ஸூக்கு வரும்போதெல்லாம், என்னுடன் செஸ் ஆடுவதற்காகவே ராமசாமி மாமா, அம்மு வீட்டிற்கு வந்துவிடுவார். அவரிடம் ஒருமுறை கூட நான் ஜெயித்ததில்லை. என்னிடம் “நல்லாதான் ஆடற. ஆனா, இன்னும் கொஞ்சம் யோசிச்சு ப்ளான் பண்ணி ஆடணும்” என்பார். என்ன ஒரு கஷ்டம் என்றால், ஆடும்போது தொடர்ந்து பீடி பிடித்துக் கொண்டிருப்பார். நாமும் அந்த புகையை சுவாசிக்க வேண்டியிருக்கும்.
மழை இரண்டு மணி நேரம் அடித்துப் பெய்து, கொஞ்சம் கொஞ்சமாய் ஓய்ந்து மென்தூறலில் இருந்தது. கிண்டலும், கேலியும் சிரிப்புமாய் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. “நாங்க வர்றோம் அம்மு, வந்து ரொம்ப நேரமாயிடுச்சு” என்றார் ரேணு. “இருங்க, சாப்பிட்டுப் போகலாம்” என்றார் அத்தை. சாப்பிட்ட பஜ்ஜியிலேயே வயிறு நிறைந்து விட்டதாகவும், வீட்டிற்கு போனாலும் சாப்பிடப் போவதில்லையென்றும் சொல்லிவிட்டு மூவரும் கிளம்பினர்.
அத்தையும், லதாவும் அடுத்த அறையில் டி.வி பார்க்கப் போனார்கள். கேரம் காய்ன்களை எடுத்து பாக்ஸில் போட்டுக் கொண்டிருந்த அம்முவிடம், “உன்னோட ஃப்ரெண்ட் நம்ம ஸ்ட்ரீட் லல்லி ரொம்ப அழகு அம்மு” என்றேன். அம்மு சிரித்துவிட்டு “ஏன், புளூ கலர் தாவணி போட்டிருந்ததனாலயா?” என்றார். காய்ன் பாக்ஸை அலமாரியில் வைக்க எழுந்து போகும்போது, என் தலையில் ஒரு குட்டு வைத்தார் அம்மு. “அவளுக்கு மாப்பிள்ளை நிச்சயமாயிடுச்சு. அடுத்த வருஷம் கல்யாணம். மாப்பிள்ளை துபாய்ல வேலை பார்க்கிறார்” என்றார் மறுபடியும் சிரித்துக்கொண்டே.
பக்கத்து அறையில் டிவி=யில் ஓடிக்கொண்டிருந்த ஒளியும் ஒலியுமில் உமா ரமணன் குரல் “ஆனந்த ராகம்...கேட்கும் காலம்” பாடிக்கொண்டிருந்தது. “கீழ் வானிலே...ஒளிபோல் தோன்றுதே...”