Difference between revisions of "முண்டாசு நாயகன்"
(Created page with "Category: Kalavathi 200px|rightஎட்டையபுரத்து முண்டாசு நாயகன். தூத்துக்குடி கண்டெடுத்த முத்து. சின்னச்சாமியும் இலக்குமி அம்மாளும் நமக்கு கொடுத்த சொத்து. சுப்பையாவாய் மலர்ந்து...") |
(No difference)
|
Latest revision as of 14:31, 12 December 2022
எட்டையபுரத்து முண்டாசு நாயகன்.
தூத்துக்குடி கண்டெடுத்த முத்து. சின்னச்சாமியும் இலக்குமி அம்மாளும் நமக்கு கொடுத்த சொத்து. சுப்பையாவாய் மலர்ந்து, சுப்ரமணியாய் முழக்கமிட்டு, பாரதியாய் என்றுமே எல்லோர் மனதிலும் பதியமானவன். பாட்டுக்கு ஒரு தலைவன் நம் பாரதி பாடிய பாடல்கள், வடித்த கவிதைகள் அனைத்தும் நம் தமிழ் பொக்கிஷங்கள். அன்பாய்... காதலாய்... கனிவாய்... நகைச்சுவையாய்... கோபமாய்... திமிராய்... தைரியமாய்... நெருப்பாய்... வெறுப்பாய்... இப்படி அத்தனை உணர்ச்சிகளையும் தன் பேனா முனையால் வார்த்தைகளாய் பிரசவித்தவன் பிரசவமான நாள் இன்று...!
செல்லம்மாவின் துணைவன். தங்கம்மாள், சகுந்தலாவின் தகப்பன்.
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டுக்கு சொந்தக்காரன். பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி தந்த புதுக் கவிதையின் தந்தை. ஷெல்லிதாசன், காளிதாசன், சக்திதாசனாய் வாழ்ந்தவன். மக்கள்கவி, மகாகவி, தேசியகவி, உலககவி, அமரகவியாய் இன்றும் என்றும் வாழ்பவன்.
காலச் சக்கரம் சுழலும் வரை அவன் கவிதை சக்கரம் சூறாவளியாய் சுற்றி சுழன்று தமிழ் வளர்க்கும். அவன் காலமாகி நின்றாலும் அவன் பிரசவித்த கவிக் குழந்தைகள் தலைமுறைகள் கடந்து வளர்ந்து கொண்டேதான் இருக்கும். அந்த மகாகவியின் இன்றைய 141 வது பிறந்த நாளில் உங்களுடன் சேர்ந்து நானும் கவிதையாய் மகிழ்கிறேன்.
இதோ... அடிக்கடி எனைச் சுடும் அவனின் கங்குக் கவிதை..👇
விசையுறு பந்தினைப்போல் — உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன், — நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீச்சுடினும் — சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; — இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? – மகாகவி பாரதியார்.
வாழ்க பாரதி. வளர்க தமிழ்...🙏