வாசிப்பனுபவம்

From HORTS 1993
Revision as of 16:53, 21 August 2016 by All>Anandabhay (Created page with "==உடையார்-பாலகுமாரன்== நண்பர் பாலாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

உடையார்-பாலகுமாரன்

நண்பர் பாலாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். உடையார் ஆறு பாகங்களையும் மொத்தமாக படிக்க கொடுத்ததோடு, திருப்பி கொடுக்க அவசரப்படுத்தவேயில்லை. மெதுவாகத்தான் படித்து முடித்தேன். அவர் கொடுக்கவில்லையென்றால் உடையாரை வாங்கி படித்திருப்பேனா என்பது சந்தேகம்தான். கல்லூரி பருவத்திலிருந்த பாலகுமாரன் பித்து அடுத்தடுத்த வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துபோனது. அது அசோகமித்திரன், ஜெயமோகன் எழுத்துக்கள் அறிமுகமானதால் இருக்கக்கூடும். மேலும் பாலாவின் மிகை உணர்ச்சி நடை அலுப்புத்தட்ட ஆரம்பித்தது (விக்ரமனின் “வானத்தை போல” என்ற ரசனை குறை சினிமாவை நினைவு கூர்கிறேன்). முன்பிருந்த மோகம் குறைந்துவிட்டாலும், இப்போதும் பாலாவின் புத்தகம் எங்கே பார்த்தாலும் எடுத்து பிரிக்கிறேன். சமீபத்தில் கூட ஒருநாள் முன்னிரவில் புத்தக அலாமாரியை மேய்ந்துகொண்டிருந்தபோது தலையணை பூக்கள் கடைசி அத்தியாயத்தை மறுபடி வாசித்தேன். தாயுமானவனின் “நெஞ்சுக்குள் நெருப்பு வைத்து...” அத்தியாயத்தையும், மெர்க்குரி பூக்களின் முதல் அத்தியாயம் முடிந்து, இரண்டாம் அத்தியாய ஆரம்பத்தையும் மறுபடி புரட்டினேன். திருப்பூந்துருத்தியை இன்னுமொரு முறை படிக்கவேண்டும்போலிருக்கிறது. “இனிது இனிது காதல் இனிது” நாணாவும், துர்காவும் மருதமலை கோவிலில் படித்துக்கொண்டிருந்தபோது ஏற்படுத்திய பரவசத்தை இப்போதும் நினைத்துக்கொள்கிறேன். உடையார் பல்சுவை மாத நாவலில் ஆரம்பித்தபோது படித்தது. அதன்பிறகு பாலாவை தொடர்வதை விட்டு எட்டு வருடங்களாகிறது. மேலும் புத்தக படிப்பு கென்யா வந்த இந்த ஐந்து வருடங்களில் மிக குறைந்திருந்தது. ஜெ-ன் வலையை தினமும் படிப்பதோடு சரி. முன்பிருந்த படிப்பு வேகம் இப்போதில்லை. கல்லூரியில் மோகமுள்ளை இரண்டே விடுமுறை நாட்களில் முடித்துவிட்டு, முடித்த அந்த பின்னிரவில் பாபு, யமுனாவோடு டீ சாப்பிட சைக்கிளில் லாலிரோடு பேக்கரி போனது இன்னும் பசுமையாய் ஞாபகமிருக்கிறது. உடையாரின் பின்னான பாலாவின் அர்ப்பணிப்பும், உழைப்பும் அசரவைக்கிறது. ஜெ-ன் வெண்முரசுக்கு முன்னால் இது ஒப்பிட முடியாதென்றாலும், உடையார் மிக குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்று நாவல். ஒரு தமிழக மன்னனை முழுமையாய் அறிந்துகொள்ளவும், அக்கால சோழர் பண்பாட்டையும், நாகரிகத்தையும் நம்முன் விரித்ததற்கும் (கொஞ்சம் புனைவு கலந்து), ஒரு கற்கோவிலின் பின்னான வரலாற்றை நுணுகிய அவதானிப்புகள், ஆராய்ச்சிகளோடு நமக்கு தந்ததற்கும் பாலாவை மனதால் அன்போடு கைபிடித்துக்கொள்கிறேன். எனக்கு கதை ஏன் அந்தணர்கள், வேளாளர்கள், வைசியர்கள், சிற்பிகள், மறவர்கள், கருமார்கள் இவர்களுக்கிடையேயான/இவ்வினங்களுக்கிடையேயான பூசல்களும், புரிதல்களும், சிக்கல்களுமாகவே நகர்கிறது என்று தோன்றியது. ஒருவேளை அக்காலம் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று நினைத்தேன். வரலாற்றை எழுதுவது எத்தனை கடினம் என்று இணையத்தில் “வரலாற்றை தேடி...” இணைய பக்கம் நடத்தும் நண்பர் பாலா சொல்லியிருக்கிறார். ஒருவரி விஷயத்திற்கே எத்தனை சரிபார்க்க வேண்டியிருக்கிறது?. உடையாருக்காக பாலா எவ்வளவு உழைத்திருப்பார்?. கோவிலின் விவரணைகளும், குறிப்புகளும், தஞ்சையின் மானசீக வரைபடமும் மிகச்சிறப்பாய் வந்திருக்கின்றன. நாவல் இன்னும் முழுமையாய் உள்போக தஞ்சை கோவிலை நாலைந்து முறையாவது சென்று உள்வாங்கி வரவேண்டுமென்று நினைக்கிறேன். நமது தென்னிந்திய கோவில்களை கட்டியவர்கள் சாதாரணமானவர்களல்ல. எந்தரோ மகானுபாவுலு...அந்தரிகி வந்தனமுலு...

நளபாகம்-தி.ஜா

படித்தவரை அடையாளமாய் பேப்பர் மடித்துவைத்து மூடி படுக்கலாம் என்று முடிவுசெய்து முடியாமல், தி.ஜா.-வின் உரைநடையில் சொக்கி, நெகிழ்ந்து, கனப்போர்வையை உடல்முழுதும் மூடி காதுவரை போர்த்திக்கொண்டு (குளிர் எட்டு/ஒன்பது டிகிரி சி-யாயிருக்கலாம்; கென்யாவின் ஆகஸ்டு மாத குளிர்) சரசரவென்று காமேச்வரனோடும், பங்கஜத்தோடும் பயணித்து முடித்தபோது மணி இரவு ஒன்று. பத்துமணிக்கு லேசான கொட்டாவியோடு வந்த தூக்கம் காணாமல் போயிருந்தது. எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்து மறுபடி போர்வைக்குள் நுழைந்துகொண்டு துரை, ரங்கமணி, அய்யங்கார், முத்துசாமி எல்லோரையும் மனசு அசை போட்டுக்கொண்டிருந்தது.

தி.ஜா.-வின் எழுத்து அறிமுகமான காலத்திலிருந்து இப்போதுவரை அலுக்கவேயில்லை. இப்போது எழுத்துப் பயிற்சிக்காக இன்னும் கூர்ந்து வாசிக்கும்போது வியப்பு இன்னும் அதிகரிக்கத்தான் செய்கிறது. மனுஷன் உரைநடையை என்னமாய் எழுதறார்! எழுதுவதற்கு இன்னும் அவதானிப்புகள் எத்தனை அதிகரிக்கவும், கூர்மையாகவும் வேண்டும் என்று புரிகிறது. இட விவரிப்பாகட்டும், பாத்திரங்களின் குணங்களாகட்டும், சிக்கலான உணர்வுபூர்வமான சம்பவங்கள்/சமயங்களை எழுத்து ரசவாதத்தால் ஆழ்ந்து கடந்து போவதிலாகட்டும்...தி.ஜா.-வை நினைத்து வியந்துகொண்டே புத்தகத்தை மறுபடி முன்னாலிருந்து புரட்டிக்கொண்டிருந்தேன்.

யாத்திரை ஸ்பெஷல் ரயிலில் உணவு காண்ட்ராக்ட் நாயரிடம் தலைமை செஃப்-ஆக வேலை செய்கிறான் கும்பகோணம் காமேச்வரன். ஒருமுறை யாத்திரை ஸ்பெஷலில் வரும் ரங்கமணியம்மாள் வேண்டுகோளை ஏற்று, அவர்கள் நல்லூர் வீட்டிற்கு சமையல்காரனாக போகிறான். ரங்கமணியம்மாள் வீட்டில் ரங்கமணி, ரங்கமணியின் தத்துப்பிள்ளை துரை, துரையின் மனைவி பங்கஜம். துரைக்கும், பங்கஜத்திற்கும் திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை பாக்கியமில்லை. காமேச்வரனின் வரவு அந்த குடும்பத்திலும், நல்லூரிலும் என்னவிதமான நேர்முக விளைவுகளை உண்டாக்குகிறது...

பல வருடங்கள் குடும்பம் நடத்தியும், துரையை பங்கஜம் அன்று முதன்முதலாய் புதுமனிதனாய் பார்த்து, வியந்து, பேசி...முன்னிரவு தொடங்கும் அந்த அத்தியாயம், மறுநாள் விடிகாலை பூஜை அலமாரி முன் கண்மூடி பங்கஜம் கண்மூடி உட்கார்வது வரை...இரண்டுபேருக்குமே உலகமே மாறிவிடுகிறது.

தி.ஜா. எப்படி எழுதியிருக்கிறார், உரையாடல்களை எப்படி கையாண்டிருக்கிறார், எதை எழுதி எதை எழுதாமல் புரிய விட்டிருக்கிறார்...என்று மறுபடி மறுபடி பார்த்துக்கொண்டேயிருந்தேன். பாலகுமாரனுக்கெல்லாம் அப்பா! மரப்பசுவையும், உயிர்த்தேனையும் படித்துவிட்டு நள்ளிரவில் இதுமாதிரி வியந்துபோய் கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். நளபாகம் உயிர்த்தேன் அளவிற்கு இல்லையென்றாலும்...நான் சிலவற்றை கற்றுக்கொண்டேன்.

அன்றைய வைகறை கனவில் செங்கம்மா...