இனக்குழு அரசியல் சூழலின் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தல்

From HORTS 1993
Revision as of 00:08, 14 March 2020 by Raj (talk | contribs) (1 revision imported)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

கென்யா முழுதும் வானிலை மெல்லிய பதட்டம் கொண்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ஜனாதிபதி தேர்தல். 2013 தேர்தல் எதுவும் கலவரங்கள் இன்றி அமைதியாகவே முடிந்தது. எதிர்தரப்பின் ரய்லா அமைதியாக இருந்ததே காரணம். ஆனால் இவ்வருடம் அப்படி இருக்கப் போவதில்லை என்று சூழ்நிலைகள் உணர்த்துகின்றன. ஆளும் உகுரு கென்யாட்டா இரண்டாம் முறை பதவியை தக்கவைத்துக்கொள்ள பிரயத்தனம் மேற்கொண்டுள்ளார். ரய்லா இம்முறை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. ஒருவருடம் முன்பிருந்தே அவர் பேசத்தொடங்கி விட்டார். பாவம் மக்கள்தான் பதட்டம் கொள்ளத் தொடங்கிவிட்டனர். 2007 தேர்தல் முடிவின் பின்னான வன்முறையும், கலவரங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் அவர்கள் மனங்களில் பதிந்திருக்கின்றன.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு பண்ணையை விட்டு வெளியில் செல்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். ஃபோனில் பாலாவும் அதையே சொன்னார். உணவிற்குத் தேவையான அனைத்தும் வாங்கி வைத்துவிட்டேன். பேலியோவில் இருப்பதால் மிகச் சுலபமாயிருந்தது; அதிகம் ஒன்றும் தேவைப்படவில்லை. அப்படியே அவசர உணவுத் தேவையென்றாலும், உள்ளேயே கோழிப் பண்ணை இருக்கிறது; முட்டைகளை வைத்தே பலநாட்கள் சமாளிக்கலாம் என்று பாலாவிடம் சொன்னேன்.

இங்கு மலர்ப் பண்ணைகள் இரண்டு மாதங்கள் முன்பே ஆகஸ்ட் மாதத்தை எப்படி சமாளிக்கலாம் என்று திட்டங்கள் தீட்டத் தொடங்கிவிட்டன. ஏனெனில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்து தங்கி வேலைசெய்யும் வேறு இனக்குழுக்கள் தேர்தலின்போது அவரவர்கள் பகுதிகளுக்கு சென்றுவிடுவார்கள். பணியாளர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையும். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அவர்களின் சொந்தப் பகுதிக்கு நகர்வு தொடங்கிவிட்டது. அடுத்த நான்கு நாட்களுக்கு நகர்வு அதிகமிருக்கும். பயணத்திற்கு மடாடுக்களில் (சிறு பேருந்து) இடம் கிடைப்பது கடினம். அவர்கள் நிர்ணயிக்கும் அதிக பயணக் கட்டணத்தில்தான் பயணப்பட வேண்டும்.

நகுருவும், நைவாஷாவும் 2007 கலவரத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள். தற்போது என் கீழ் பணிபுரியும் ஜார்ஜ் 2007 வன்முறையில் தன் முதல் மனைவியையும், தங்கையையும் பறிகொடுத்தவர். மலர்ப் பண்ணைகளில் வேலை செய்யும் இந்திய மேலாளர்கள் கணிசமானோர் விடுப்பு எடுத்துக்கொண்டு இந்தியா சென்றுவிட்டனர். கடைகள் நடத்தும் குஜராத்திகள் ஒரு வாரமாவது கடைகளை மூடிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். நகுருவில் 70 வருடங்களாக ஆயில் பிஸினஸூம், டிம்பர் பிஸினஸூம் செய்யும் மோடி சந்த்திடம் (அவர்கள் வீட்டின் பின் போர்ஷனில்தான் மல்லிகாவும், இயலும் இங்கிருக்கும்போது தங்கியிருந்தார்கள்) இரண்டு வாரங்கள் முன்னால் பேசிக்கொண்டிருந்தபோது, தேர்தல் சமயத்தின்போது எல்லாவற்றையும் மூடிவிட்டு நைரோபி உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிடப் போவதாக சொன்னார்.

பெரும்பாலான மலர்ப் பன்ணைகள் இருக்கும் பகுதி கிகுயு இனக் குழுப்பகுதி. இங்கு ஒரு இனக்குழு அதிகமிருக்கும் பகுதியில், மற்றொரு இனக் குழுவின் யாரும் வந்து கடையோ தொழிலோ சொந்தமாக நடத்திவிட முடியாது. இந்தியர்கள் நடத்தும் பண்ணைகளில் வேலைசெய்து கொள்ளலாம். ஆனால் அப்பண்ணைகளிலும், அந்நிலப் பகுதிக்கான இனக்குழுவிடம் கவனமாக தகராறில்லாமல் இருந்துகொள்ளவேண்டும். அதிலும் கிகுயுக்கள் என்றால், மற்ற இனக் குழுக்களிடம் கொஞ்சம் பயம் இருக்கிறது. ஆளும் ஜனாதிபதி உகுரு ஒரு கிகுயு. உகுருவின் அப்பா ஜோமோதான் கென்யாவின் முதல் ஜனாதிபதி. கிகுயுக்கள் இங்கு சதவிகிதத்தில் அதிகம். மற்ற இனக்குழுக்கள் கிகுயுக்களைப் பற்றிச் சொல்லும்பொழுது “சர்வ சாதாரணமாக தலை கொய்வதில் தயக்கமில்லாதவர்கள்” என்பார்கள். உண்மைதான். இங்கு முதலில் நான் பணிபுரிந்த பண்ணையில், நான் சேருவதற்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை சொன்னார்கள். ஒரு பசுங்குடிலின் சூப்பர்வைசர் வேறு இனக்குழு. அப்பெண்ணின் கீழ் அக்குடிலில் வேலை செய்யும் மற்றொரு பணிப்பெண் கிகுயு. வேலை விஷயமாக கிகுயு பெண்ணிற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் அந்த வேற்றின சூப்பர்வைஸர். அக் கிகுயு பெண்ணின் ஆண் நண்பனிடத்திலிருந்து அந்த சூப்பர்வைஸருக்கு மிரட்டல் வந்திருக்கிறது. ஆனாலும் பணியிடத்தில், அந்த கிகுயு பெண்ணிற்கு சூப்பர்வைஸரிடமிருந்து தொந்தரவு தொடரவே, ஓரிரவில் அந்த சூப்பர்வைஸரின் கழுத்தை அறுத்து பண்ணைக்கு வெளியில் ஓடும் கால்வாயில் வீசிவிட்டார்கள்!

இப்போது இரண்டாம் முறையாக பதவிக்கு போட்டியிடுகிறார் கிகுயு இனத்தின் உகுரு. களஞ்சியன் இனத்தின் ரூடோவின் ஆதரவைக் கோரியிருக்கிறார். எதிரில் லூவோ இனத்தைச் சேர்ந்த ரய்லா. ரய்லா, கம்பா இனத்தின் முஸ்யோகாவோடு கூட்டு சேர்ந்திருக்கிறார். தேர்தல் முன் கணிப்புகள் ரய்லா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றன. இதுதான் சூழலை பரபரப்புள்ளாக்கியிருக்கிறது. 2007-ன் அதே சூழல். 2007-ல் தேர்தல் முடிவுகளில் எதிர்தரப்பு வெற்றிபெற்றவுடன் ஆளும் தரப்பு தாங்கமுடியாமல், எல்லாவிதமான சாம பேத தண்டங்களை உபயோகித்து தாங்கள்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வைத்தார்கள். கிகுயு இனத்தின் கிபாகி பதவியேற்றதும் கோபமடைந்த ரய்லா இனக்குழு ஒரு கிராம சர்ச்சில் கிகுயு இனத்தின் பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேரை உள்ளே வைத்து பூட்டி உயிரோடு தீ வைத்தார்கள். அதன்பின் நடந்ததெல்லாம் கென்யாவின் ரத்த சரித்திரம். எல்லா பெரும் நகரங்களிலும், கிராமங்களிலும் மக்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டார்கள். ஐ.நா.வின் கோஃபி அன்னன் வந்ததும்தான், இரு தரப்புமே பேச்சு வார்த்தைக்கு சம்மதித்தது.

இப்போதும் உயிர்க் கொலைகள் துவங்கிவிட்டன. ஜூலை இறுதியில், ரூடோவின் வீட்டினுள் துப்பாக்கியுடன் நுழைந்திருக்கிறான் ஒருவன். நல்லவேளை வீட்டில் ரூடோவும் அவர் குடும்பமும் இல்லை. அங்கிருக்கும் காவலாளியை பிணைக் கைதியாக பிடித்துக்கொண்டு மிரட்டிக்கொண்டிருந்தான். கடைசியில் அவனை சுட்டுக் கொன்றார்கள். பிணைக் கைதியை அவன் கொன்றுவிட்டான்.

ஒருமாதம் முன்பு, ஜனாதிபதியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாய் இருந்தவர், முதல்நாள் ஜனாதிபதியின் ஒரு நிகழ்வில் பங்கெடுத்துவிட்டு வீட்டிற்கு சென்றவர், மறுநாள் காலையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். ஜூலை 27-ல், “இண்டிபெண்டண்ட் எலக்டோரல் அண்ட் பவுண்டரீஸ் கமிஸன்”-ன் (IEBC) இன்ஃபர்மேஷன், கம்யூனிகேஷன் அண்ட் டெக்னாலஜி பிரிவின் தலைவர் ம்சாண்டோ ஒரு பெண்ணுடன் சேர்த்து கொல்லப்பட்டார். கொன்றது ஆளும் தரப்பு என்கிறது எதிர்தரப்பு. இருக்கலாம்; தோல்வி பயத்தில் எதைச் செய்யவும் தயாராகிக் கொண்டிருக்கிறது ஆளும் உகுருவின் கட்சி.

எங்கள் பண்ணையின் ஏரியா சீஃப்பை அழைத்து, எங்களின் பணியாளர்களிடம் பேசச் செய்தோம். இரண்டு/மூன்று நாட்களுக்கு பண்ணையின் காவலாளர்களை அதிகப்படுத்தியிருக்கிறோம். முடிந்தால் ஆகஸ்ட் 8/9-ல் சில லோக்கல் போலீஸ்களை பண்ணைக்கு அனுப்பி வைப்பதாய் சீஃப் சொல்லியிருக்கிறார்.

எல்லாம் நல்லபடியாய் கடந்துபோக வேண்டும்.