கொய்மலர் வளர்ப்பும் வர்த்தகமும்
பன்னாட்டு மலர்வர்த்தக கண்காட்சி 2016 கென்யா
இயல் நான்காம் வகுப்பின் முதல் மூன்று மாதங்கள் படித்த ஆஸ்வால் பள்ளியின் மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட வளாகத்தின் முகப்பில் நுழைந்தபோது, கடந்த ஐந்து வருடங்களாய் வருடம் தவறாமல் சந்திக்கும் ஹாலந்து ஜெஸ்பர் புன்னகையுடன் கைகொடுத்தார். பன்னாட்டு மலர்வர்த்தக கண்காட்சி ஜூனில் எட்டு தொடங்கி மூன்று நாட்கள் நைரோபியில் ஆஸ்வால் வளாகத்தில் நடைபெற்றது. இது வருடாந்திர நிகழ்வுதான். ஜெஸ்பர் கண்காட்சியை பல்வேறு நாடுகளில் ஒருங்கிணைக்கும் HPP குழுமத்தில் வேலை செய்கிறார். ஆஸ்வால் வளாகம் உயரமான மேற்கூரை கொண்ட ஆறுபெரும் அறைகளோடு, ஒரு நீண்ட நிலத்தடி அறையும் கொண்டது.
கண்காட்சி வளாகத்தின் அருகில் பட்டமளிப்பு விழா அரங்கில் திறப்புவிழா நடந்தது. அரசு வேளாண் அமைச்சக செயலர் ஒருவர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நிலத்தடி தளத்தில்தான் நுழைவு அனுமதி பதிவுகள் நடந்தது. முதல் நாளானதால் நல்ல கூட்டம். உள்ளே அரங்குகளில் பாதுகாப்பு சோதனை நடப்பதால் பத்து நிமிடங்கள் காத்திருக்குமாறு அறிவித்தனர்.
கென்யாவின் மற்ற மலர்ப்பண்ணைகளில் வேலைசெய்யும் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். உகாண்டா, டான்சானியா, எத்தியோப்பாவிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தனர். பதினைந்து வருடங்களாக பார்க்காத இந்திய நண்பர்கள் சிலரை பார்த்தது சந்தோஷமாயிருந்தது. கண்காட்சிக்காக பயணித்து வந்ததாய் சொன்னார்கள்.
கோவை வேளாண் பல்கலையில் தோட்டக்கலை முடித்து 1995-ல் ஓசூரில் பிர்லா குழுமத்தின் மலர்ப்பண்ணையில் வேலைக்கு சேரும்போது தெரிந்திருக்கவில்லை கடலின் கரையில் கால்நனைக்கப் போகிறேன் என்று. இருபத்தோரு வருடங்கள் கடந்துவிட்டன; இன்னும் அலைப்பகுதியில்தான் இருப்பது போன்ற உணர்வு. கொய்மலர் வளர்ப்பின் பிரமிப்புகளும், வியப்புகளும், ஆச்சர்யங்களும் அறிமுகமான அந்த தொண்ணூறுகளின் பின்பாதி இன்னும் பசுமையாய் ஞாபகமிருக்கிறது. ஓசூரில் பதினோரு வருடங்கள் முடித்து, மும்பைக்கு 2006-ல், ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனத்தின் மலர்ப்பிரிவில் சேர்ந்தபோது எல்லைகள் அகலமாயின. 2011-ல் கென்யா வந்தபின்தான் மலர்த்துறையின் பிரமாண்டம் கண்முன் விரிந்தது.ஆச்சர்யங்களால் விரிந்த கண்களும் மனமும் இன்னும் அப்படியே இருக்கின்றன.
B ஹாலின் நுழைவாயிலில் கண்காட்சி வரைபடம் பங்கேற்பாளர்களின் பெயர்களோடு வைக்கப்பட்டிருந்தது. எங்கள் நிறுவன அரங்கு ஹால் D-ல் இருந்தது. கிட்டத்தட்ட 170-க்கும் மேலான அரங்குகள்.
வான், தரை, கடல் வழி போக்குவரத்து நிறுவனங்கள், விமான நிலைய பெரிஷபிள் சரக்கு கையாளும் நிறுவனங்கள், உர, மருந்து விற்பனையாளர்கள், மலர் சஞ்சிகைகள், மலரினப்பெருக்க நிறுவனங்கள், விருத்தி வர்த்தகர்கள், மலர் உற்பத்தி பண்ணைகள், இடைநிலை புரோக்கர்கள், பசுங்குடில் வடிவமைப்பாளர்கள், நீர்ப்பாசனத்துறை நிறுவனங்கள், பன்னாட்டு மலர் ஏல நிறுவனங்கள்...
மலர்கள் விரைவாக வாடாமலிருக்க...
1. வளர்ப்பு பண்ணையில், பசுங்குடிலில் மலர்களை கொய்வதிலிருந்தே, அவற்றுக்கான செயல்முறை சங்கிலித்தொடர் ஆரம்பிக்கும். கொய்தவுடன் அடிப்பாகம் உள்ளிருக்கும்படி குறிப்பிட்ட வேதிக்கரைசல் கொண்ட பக்கெட்டுகளில் வைக்கவேண்டும். பக்கெட்டுகள் அரை மணிக்குள்ளாக 8 - 10 டிகிரி செல்சியஸ் கொண்ட குளிர் அறைக்கு கொண்டுவரப்படும். 4-5 மணிநேரத்திற்குப்பின் அவை வெளியில் எடுக்கப்பட்டு தரம் பார்க்கப்பட்டு, நீளம் மற்றும் பூ விரிந்த அளவு வைத்து பிரித்து அடுக்கி ஒருமுக க்ராஃப்ட் அட்டை சுற்றப்பட்டு மறுபடி வேறு வேதிக்கரைசலில் வைக்கப்பட்டு 2-4 டிகிரி செல்சியஸ் கொண்ட வேறு குளிர் அறைக்கு மாற்றப்படும். (இந்த 2-4 டிகிரி செ வெப்பநிலை கடைசி வாடிக்கையாளருக்கு பூக்கள் சென்றடையும்வரை தொடரவேண்டும்)
2. க்ராஃப்ட் சுற்றப்பட்ட கொத்துக்கள் வாடிக்கையாளர்களின் ஆர்டருக்கு தகுந்தவாறு தடித்த திண்மையான அட்டை பெட்டிகளில் பேக் செய்யப்பட்டு விமான நிலையம் செல்லும். (போக்குவரத்து வாகனங்களும் வெப்பக் கட்டுப்பாட்டு கருவிகொண்டவை; 2.-4 டிகிரி செல்சியஸ்) .
3. பூபெட்டிகள் கையாளும் சரக்கு விமானங்களும், இறக்கியபின் டெலிவரிக்கு முன்னால் அடுக்கிவைக்கும் கிடங்குகளும் இந்த வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
4. எங்கள் நிறுவனம், ருஷ்யா, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, சைனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி செய்கிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரே நாளில் சென்றுவிடும். ருஷ்யாவில் வான்வழி இறக்குமதி கெடுபிடிகள் அதிகம் என்பதால், ருஷ்யா செல்லும் ஆர்டர்கள் வான்வழி ஹாலந்து சென்று, அங்கிருந்து தரை மார்க்கமாக ருஷ்யா செல்ல ஒரு வாரமாகும். தொலைவுக்கு தகுந்தவாறு, பூ விரியும் அளவு வைத்து அறுவடை செய்யவேண்டும்.
5. கொய்மலர் ஏற்றுமதி வர்த்தகத்தில் முதலில் இருப்பது ரோஜாதான். ரோஜாவில் ஆயிரத்துக்கும் மேலான வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர். இவை தவிர ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்க நிறுவனங்கள் புதுவகைகளை வெளியிடும். குறிப்பிட்ட இனப்பெருக்க நிறுவனத்தின் குறிப்பிட்ட ரோஜா வகையை நாம் வளர்த்து ஏற்றுமதி செய்யவேண்டுமென்றால், அந்நிறுவனத்திற்கு காப்புரிமை கட்டணம் செலுத்தவேண்டும். வகைக்கும் இனப்பெருக்க நிறுவனத்திற்கும் தகுந்தவாறு காப்புரிமை கட்டணம் ஹெக்டருக்கு 40000 யூரோக்களிலிருந்து 60000 யூரோக்கள்.
கென்யாவின் வளர்ப்பு பண்ணைகள்
அலுவலக சந்திப்புகளில் எங்களின் இயக்குநர் அடிக்கடி சொல்லும் வாசகம் “இங்கு கென்யாவில் நாம் பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் முக்கியமாய் கவனித்து தொடரவேண்டியது, இஸ்ரேலிகளை போல் செடி மேலாண்மை செய்யவேண்டும்; டச்சுக்காரர்களை போல் நீர் தரவேண்டும்”. எனக்கு முதலில் ஆச்சர்யமாயிருந்தது. இஸ்ரேலிகள்தானே நீர் மேலாண்மையில் அசகாயர்கள்?; ஏன் இயக்குநர் கென்யாவிற்கு அது ஒத்துவராது என்கிறார் என்பது போக போக புரிந்தது.
எங்கள் நிறுவனத்திற்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரண்டு ஆலோசகர்கள் வருகிறார்கள். ஒருவர் இஸ்ரேலி - பசுங்குடில் வளர்ப்பின் செடிகள் மேலாண்மைக்கு ஆலோசனைகள் தருபவர். இன்னொருவர் ஃரெஞ்சுக்காரர் - பூக்கள் அறுவடைக்கு பின்னான தரம்பிரித்தல், கொத்துகள் உருவாக்குதல் மற்றும் மதிப்பு கூட்டும் செயல்சங்கிலிக்கு ஆலோசனைகள் தருபவர்.
இஸ்ரேலிகளின் நீர்ச்சிக்கனம் நாளடைவில் பூக்களின் சிறிதான தரக்குறைவிற்கு காரணமாவதை கண்டுபிடித்தோம். அவர்களை சொல்லி தவறில்லை; நீர் சிக்கனம் அவர்கள் இரத்தத்தில் ஊறிய ஒன்று!. அதிலிருந்து அந்த இஸ்ரேல் ஆலோசகர் ஒரு சதுர மீட்டருக்கு மூன்று லிட்டர் தண்ணீர் தரச்சொன்னால் நாங்கள் மூன்றரை அல்லது நான்கு லிட்டர் தருவதை வாடிக்கையாக கொண்டோம்.
கென்யாவின் மலர் தொழில்துறையின் சிறப்பு எல்லா நாட்டினரும் இங்கிருக்கிறார்கள் என்பதுதான். ரோஜா வகைகளை வெளியிடும் ஸ்பெயின், ஜெர்மனி, ஈக்வடார், ஆஸ்ட்ரேலியா, ஃப்ரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் கிளைகளை கென்யாவில் வைத்துள்ளன. தங்கள் சோதனை குடில்களில் அவர்களின் வகைகளை பயிரிட்டு வளர்ப்பு நிறுவனங்களை அழைத்து அறிமுகம் செய்கிறார்கள்.
பெரிய வளர்ப்பு பண்ணைகள் அதிகம் வைத்திருப்பது குஜராத்திகள். ஃப்ரான்ஸ், நெதர்லாந்து, டச்சுப் பண்ணைகளும் உண்டு. தமிழ்நாட்டின் திருவையாறுக்காரர் கென்யாவில் ஆறு கொய்மலர் வளர்ப்பு பண்ணைகளும், இரண்டு இடைநிலை மலர் வர்த்தக நிறுவனங்களும் நடத்துகிறார்; பார்ப்பதற்கும், பழகுவதற்கும் எளிமையானவர்; முப்பது வருடங்களுக்கு முன்பு துபாயில் தொழில் தொடங்கியவர்; மாதம் ஒருமுறை வந்துபோவார். நான் கென்யா வந்தபுதிதில் வேலை செய்தது அவரின் ஒரு மலர்வளர்ப்பு பண்ணையில்தான்.
அப்போது பள்ளிசெல்லும் வசதிக்காக மல்லிகாவும், இயலும் நக்குரு என்னுமிடத்தில் வீடெடுத்து தங்கியிருந்தனர். நான் பண்ணைக்குள்ளேயே விருந்தினர் இல்லத்தில் ஓர் அறையில் தங்கியிருந்தேன். வாரம் ஒருமுறை இயல், மல்லிகாவை பார்த்துவிட்டு வருவேன். பள்ளி விடுமுறையின்போது அவர்கள் பண்ணைக்கு வந்துவிடுவார்கள்.
விருந்தினர் இல்லத்திற்கு அவ்வப்போது இந்தியாவிலிருந்து அவரின் நட்புகள், உறவினர்கள் என வந்துபோவார்கள். ஒருமுறை “என் சுவாசக்காற்றே” படத்தயாரிப்பாளர் அன்சர் அலி குடும்பத்தோடு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். இரவுணவின்போது அவரிடம் பேசிக்கொண்டிருந்தது நல்ல அனுபவம். ஏ ஆர் ரகுமான் நண்பரென்பதால் படம் தயாரித்ததாகவும், படம் தோல்வியடைந்தாலும் பாடல்கள் விற்பனையில் கொஞ்சம் காசு வந்ததாக சொன்னார்.
மற்றொருமுறை, அன்றைய நாள் வேலை முடித்து அறைசென்று குளித்து தயாராகி இரவுணவு அறைக்கு சென்றபோது, உணவு தயாரிக்கும் அகஸ்டின், விருந்தினர்கள் வந்திருப்பதால் இன்றைக்கு இரவுணவு எல்லோரும் வெளியில் சாப்பிட ஏதுவாக சேர்களும் உணவும் வெளியில் புல்தரையில் அமைத்திருப்பதாக சொன்னார். வெளியில் மேஜைகளில் வெண் துணிகள் விரித்து உணவுகள் அடுக்கப்பட்டிருந்தன. பாபிக்யூவில் இறைச்சி துண்டுகளை திருப்பிக்கொண்டிருந்தது ரோஸ். ஸ்வெட்டரையும் மீறி மெல்லிய குளிர் உள்ளேறியது.
நிறுவன நிதி இயக்குநர் விருந்தினர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அருகில் சென்றதும் விருந்தினர்களுக்கு மலையாளத்தில் அறிமுகம் செய்துவைத்தார் ”இவர் வெங்கடேஷ்; மதுரைக்காரர்; உற்பத்தி பிரிவில் இருக்கிறார்”. நான் கைகொடுத்துவிட்டு “நீங்க சார்...” என்றேன். அவர் புன்னகைத்துவிட்டு “நான் கேரளா பாராளுமன்ற உறுப்பினர்” என்றார். நான் வியந்து “சாரி சார்; அரசியல்ல நான் கொஞ்சம் மக்கு” என்றேன். “பரவால்ல; ஆனா அப்பாவ உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்; கேரளா ஃபைனான்ஸ் மினிஸ்டர்; தொடர்ந்து ஆறேழு தடவையா இருக்கார்” என்றார்.
மொழி
"நீங்க டச்சு கத்துக்கணும் வெங்கி. இத்தனை வருஷமா இந்த பூ துறையில இருந்துகிட்டு, டச்சு இன்னும் கத்துக்கலைனா கொஞ்சம் வெட்கப்படணும்; தெரியாம இருக்கிறது தப்பில்ல; கத்துக்கிட்டா இந்த துறையிலிருக்கும் உங்களுக்கு நல்லது; உங்க உலகம் பெரிசாயிடும். நட்பு வட்டம், வாய்ப்புகள், துறைசார் அறிவு அதிகமாகும்” - ஒரு வருடம் முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது செந்தில் அண்ணா சொன்னபோதுதான் உறைத்தது. ஆமாம், இத்துறையில் இருபது வருடங்கள் அனுபவங்கள் ஆகியும் ஏன் எனக்கு இது தோணவேயில்லை என்று யோசித்தேன்.
செந்தில் அண்ணா ஸ்பெயினை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு பசுங்குடில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகிறார். கென்யா, டான்சானியா, எத்தியோப்பியா, ஸ்பெயின், தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் என்று அலுவல் நிமித்தமாய் பன்னாடுகள் பயணித்துக்கொண்டே இருப்பவர். அவர் அப்பா தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தலைமை பேராசிரியராய் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
மலர் சஞ்சிகைகளின் ஆங்கில இந்திய பதிப்பு வெளியீடுகள் மேலோட்டமானவை என்றும், பன்னாட்டு ஆங்கில மாத மலர் இதழ்களும் எல்லைகள் கொண்டவை என்றும் சொன்னார். உண்மையில் மலர் தொழில்துறை பற்றிய அறிவை வளப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் டச்சு மொழியில் வெளியாகும் மாத இதழ்கள்தான் உகந்தவை என்றார். அடுத்தமுறை அவர் நெதர்லாந்து கண்காட்சிக்கு சென்றபோது “ஆங்கில-டச்சு” அகராதி வாங்கிவர சொன்னேன்; வாங்கிவந்து பரிசளித்தார். “கோர்டஸ்” எனும் மலரினப்பெருக்க நிறுவனத்தின் ஆப்ரிக்க தலைவரை தொடர்புகொண்டு “புளோமிஸ்ட்ரை” எனும் டச்சு மலர் மாத இதழின் பழைய இரண்டுவருட வெளியீடுகளை அள்ளிவந்தேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அகராதி துணைவைத்து எழுத்து கூட்டி படித்து கொண்டிருக்கிறேன். உண்மைதான், கொய்மலர் தொழில் துறையின் பிரமாண்டமும், அதன் பரந்த உலகும் எனக்கு புரிந்தது.
இஃப்ரைம் எனும் இஸ்ரேல் ஆலோசகரிடமிருந்து, ஹீப்ரு கற்றுக்கொள்ளும் நூலும், ஜூவான் எனும் ஸ்பெயின் நண்பரிடமிருந்து ஆங்கில வழி ஸ்பானிஷ் அகராதியும், ஃப்ரான்ஸின் லூசியிடமிருந்து ஃப்ரென்ச் ஆரம்பநிலை பாடங்களும் வாங்கி வைத்து அவ்வப்போது புரட்டி கொண்டிருக்கிறேன். பேசும் அளவுக்காவது இந்த மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டுமென ஆசையிருக்கிறது. அலுவலக இணைய கடித தொடர்புகளில் காலை மாலை வணக்கங்கள், இனிய நாளுக்கான வாழ்த்துக்கள் போன்ற சின்ன சின்ன சொற்றொடர்களை அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் மொழியில் எழுதி அனுப்பும்போது அவர்கள் கொள்ளும் உற்சாகம், அவர்களின் பதில் கடிதங்களில் தெரிகிறது.
பசந்த்குமார் பிர்லாவிற்கு மூன்று வாரிசுகள்; ஒருவர் ஆதித்யா குழுமங்களின் தலைவர் குமாரமங்கலம்; மற்ற இருவர் மஞ்சுஸ்ரீ மற்றும் ஜெயஸ்ரீ. மஞ்சுஸ்ரீ குழுமத்தின் ஓசூர் மலர்ப்பண்ணையில்தான் நான் ஆரம்பத்தில் பணிபுரிந்தது. ஜெயஸ்ரீயின் “செஞ்ச்சுரி” மலர்வளர்ப்பு பண்ணை புனேயில் இருந்தது. அங்கு மேலாளராய் வேலை செய்த சித்தார்த்-ஐ 98-ல் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். 2015-ல் கென்யா நைவாஸாவில் தோட்டக்கலை கண்காட்சியில் சுற்றிக்கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து தோளில் கைவிழ திரும்பி பார்த்தால் சித்தார்த் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தார். “எப்படியும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றில்தான் மறுபடியும் சந்திப்பேன் என்று தெரியும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
பசுங்குடில் பயன்பாடும் கொய்மலர் வளர்ப்பும் - ஓர் அறிமுகம்
எண்பதுகளில் கொய்மலர் வர்த்தகத்தின் தலைநாடான ஹாலந்திலிருந்து நிபுணர் குழு ஒன்று வந்து இந்தியாவெங்கும் சுற்றி ஆய்வு செய்து பசுங்குடிலில் கொய்மலர் வளர்ப்பதற்கான சாதகமான தட்பவெப்ப சூழல் எங்கு நிலவுகிறது என்று அறிக்கை ஒன்றை அரசுக்கு தாக்கல் செய்தது (ஆய்வில் விமான போக்குவரத்து வசதிகளும் கணக்கில் கொள்ளப்பட்டன). அதில் குறிப்பிடப்பட்ட இரு இடங்கள் - 1. பெங்களூர் சுற்றுப்புறம் (ஓசூர் வரை) 2. புனே சுற்றியுள்ள இடங்கள் (தலேகான் வரை).
கொய்மலர் வளர்ப்பிற்கு முக்கியத்தேவை சாதகமான தட்பவெப்பம். கடல்மட்டத்திலிருந்து 600 மீ முதல் 2800 மீ வரை உயரம் கொண்ட பகுதிகள் உகந்தவை. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு; மும்பையின் பன்வெல் அருகே நான் வேலை செய்த “சம்பாலி” பண்ணை வெறும் 50 மீ உயரத்தில் அமைந்தது; உயரம் குறைவான பகுதிகளின் அமைந்த பண்ணைகளில் வளர்ப்பு சவால்கள் அதிகம்.
பசுங்குடில் அமைப்பதற்கு, சமதளமான நிலப்பரப்பிருந்தால் சௌகர்யம். கென்யாவின் மிகப்பெரும் அனுகூலம் கடல்மட்டத்திலிருந்து 1000 மீ மேலும் 3000 மீ வரை பல்லாயிரக்கணக்கான ஹெக்டர்கள் சமதளமாய் இயற்கை நிலப்பரப்பு. கொய்மலர் வளர்ப்பிற்கு லட்டு மாதிரியான சூழல்; கென்யாவின் முக்கிய அந்நிய வருவாய் கொய்மலர் ஏற்றுமதியில்தான். பசுங்குடில் அமைப்பது உள்ளே சீதோஷ்ணத்தை நாம் கட்டுப்படுத்தலாம் என்பதற்காகத்தான்; மேலும் வெளி இயற்கை இடர்களிலிருந்து (அதிக வெப்பம், தொடர்மழை) காப்பதற்கும்; உள்வெப்பநிலை 20 டிகிரி செல்ஸியஸிலிருந்து 30 வரை வைக்கப்படவேண்டும்; உள்காற்றின் ஈரப்பதம் 60 விழுக்காட்டிற்கு குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
சொட்டுநீர்ப்பாசனமும், நீரில் கரையும் உரங்களும் அவசியமானவ. கொய்மலர் வளர்ப்பில் இயற்கை வேளாண்மையின் சாத்தியங்கள் குறைவு; ஆனாலும் முடியாதென்பதில்லை; ஆய்வுகளும் முயற்சிகளும் நடந்துகொண்டுதானிருக்கின்றன. நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடுகள் இயற்கை முறையில் வெற்றிகரமாக செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் ஊட்டி, குன்னூர், கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்கள் சுமார் 1800-லிருந்து 2000 மீ உயரத்தில் இருந்தாலும், பெரும் பண்ணைகளுக்கான பசுங்குடில்கள் அமைப்பதற்கேற்ற சமதள நிலப்பரப்பற்றவை. மேலும் கொய்மலர்கள் கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைந்தவை; விமானநிலைய சிக்கல்களும் உண்டு. விமானநிலைய குளிர்கிடங்கு வசதிகள் முக்கியமானவை. இவ்விடங்களில் குறும்பண்ணைகள் அமைக்கலாம்; ரோஜாவல்லாமல், கார்னேஷன், ஜெர்பேரா, லில்லி, கிரைசாந்திமம் போன்ற இதர கொய்மலர்கள் வளர்க்கலாம். பசுங்குடில் அமைப்பதற்கும், சொட்டுநீர் பாசன வசதிக்கும், பண்ணையில் குளிர்சாதன அறைகள் அமைப்பதற்கும் அரசு APEDA, NABARD, தேசிய தோட்டக்கலை வாரியம் மற்றும் சில துறைகள் மூலம் மான்யமும் கடன்களும் அளிக்கிறது.
தொண்ணூறுகளின் பின்பாதியிலும், நூற்றாண்டின் துவக்கத்திலும் ஓசூரில் கொய்மலர் உற்பத்தி உச்சத்தில் இருந்தது. நான் பணிபுரிந்த பிர்லா குழுமத்தின் பண்ணை, டாடாவின் “ஓரியண்டல்” பண்ணைக்கு அடுத்து 93-ல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கொய்மலர்களோடு பசுங்குடில்களில் காய்கறி வளர்ப்பும் நடக்கிறது; அதுவும் லாபகரமான தொழில்தான். தற்போது ஓசூர் சுற்றுவட்டாரத்தில் விவசாயிகளின் குறும்பசுங்குடில் குடைமிளகாய் வளர்ப்பு ரோஜா கொய்மலர் வளர்ப்பிற்கு இணையாய் பிரசித்திபெற்றது. மரக்கட்டைகளாலும் பசுங்குடில் அமைக்கலாம்; ஆனால் வாழ்நாள் குறைவு. துத்தநாகம் பூசிய கால்வனைஸ்டு இரும்பு குழாய்களாலான பசுங்குடில்களின் வாழ்நாள் அதிகம்.
கொய்மலர் வர்த்தகத்தில் முதலிடம் ரோஜாவுக்குத்தான். ரோஜாக்களின் தரமும், உற்பத்தி எண்ணிக்கையும் பண்ணை அமைந்த கடல்மட்ட உயரத்திற்கு தகுந்தாற்போல் வேறுபடும். உயரம் அதிகமாக அதிகமாக தரம் அதிகரிக்கும்; ஆனால் உற்பத்தி குறையும். வளர்ப்பு பண்ணை அமைக்கும்போது, முதலில் எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய்ப்போகிறோம் என்று முடிவுசெய்வதிலிருந்து துவங்கவேண்டும். அந்த நாடுகளில் எந்த வகை அல்லது நிறங்கள் அதிகம் விற்பனையாகின்றன என்று கவனித்து அதற்கு தகுந்தாற்போல் தேர்வுசெய்து பயிரிடவேண்டும். பசுங்குடிலில் ரோஜாக்கள் ஒருமுறை நடவுசெய்தால் ஐந்தாறு வருடங்கள் தொடர்ந்து பூக்கள் அறுவடை செய்யலாம்.
கொய்மலர் வர்த்தகத்தில் இன்னொரு பிரகாசமான வருவாய் ஈட்டும் வழி, இடைநிலை விற்பன்னராய் வர்த்தகம் செய்வது. ஆர்டர் பிடித்து பல வளர்ப்பு பண்ணைகளிலிருந்து பூக்கள் வாங்கி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யலாம். எனக்கு தெரிந்து சிறிய அளவில் வாங்கி விற்க ஆரம்பித்த பலர் இன்று வருடம் ஒன்றிற்கு இரண்டிலக்க இலட்சங்களிலும், கோடிகளிலும் வியாபாரம் செய்கிறார்கள். இந்தியாவின் கொய்மலர் உள்நாட்டு விற்பனை வருடாவருடம் வளர்ந்துகொண்டுதானிருக்கிறது. கடந்த பிப்ரவரி காதலர் தின பருவத்தில் “தாஜ்மஹால்” என்ற சிவப்பு ரோஜா வகை, ஒரு பூ 18 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
உலக நாடுகளில் அதிகளவில் பூக்கள் இறக்குமதி செய்து பயன்படுத்தும் நாடுகளில் முக்கியமானவை ஜெர்மனி, அமெரிக்கா, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ருஷ்யா மற்றும் ஸ்விஸ். சமீபத்திய இணைப்புகள் ஆஸ்திரேலியாவும், மத்திய கிழக்கு நாடுகளும். உலகின் மிகப்பெரிய மலர் விற்பனை மையமான நெதர்லாந்தின் ஆல்ஸ்மீர் மலர் ஏல மையத்தின் தோராய வருடாந்திர விற்பனை மதிப்பு ஐந்து மில்லியன் டாலர்களுக்கும் மேல். உற்பத்தி அளவிலும், தரத்திலும் இந்தியா எட்டிப்பிடிக்க வேண்டிய நாடுகள் கொலம்பியா, ஈக்வடார் மற்றும் கென்யா.
ப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்
1. கென்ய மலர் மன்றம் தன் சுற்றறிக்கையில், ப்ரெக்ஸிட் முடிவினால் கென்ய கொய்மலர் ஏற்றுமதி குறிப்பிட்ட அளவு சரிவடையக்கூடும் என்று அறிவித்துள்ளது.
2. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான பிரிட்டன், மலரும், மலர் சார்ந்த பொருட்களிலும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் யூரோக்கள் சந்தை பங்கு கொண்டதும், நெதர்லாந்தின் இரண்டாவது பெரிய இறக்குமதி சந்தையுமாகும். அதன், 2015-ன் நெதர்லாந்திலிருந்து கொய்மலர் மற்றும் உள்ளரங்க செடிகள் இறக்குமதி மதிப்பு 900 மில்லியன் யூரோக்கள். பிரிட்டனின் மொத்த கொய்மலர் விற்பனையில் 15 சதவிகிதம் மட்டுமே உள்நாட்டு உற்பத்தி. பிரிட்டனின் மலர் இறக்குமதி நிறுவனங்கள் மெல்லிய பதட்டத்திலுள்ளன. ஜெர்மன், இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளின் மலர் வர்த்தக நிறுவனங்கள் குழப்பத்தில். கொலம்பியாவும், ஈக்வடாரும் கூட ஏற்றுமதியில் சரிவு காணக்கூடும். இடைநிலை வர்த்தக நிறுவனமான யூனியன் ஃப்ளூயர்ஸ் “இப்போதைக்கு எதுவுமே தெளிவில்லாமல், நிச்சயமற்றதாய் இருக்கிறது. பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய இனிமேல் ஐரோப்பிய இறக்குமதி கொள்கைகளை பயன்படுத்த முடியாது. பிரிட்டன் புதிய கொள்கைகளை அறிவித்தபின் அதன் சாதக/பாதக அம்சங்களை ஆராயவேண்டும். யூரோ, பிரிட்டன் பவுண்டிற்கு இடையிலான பரிமாற்ற மதிப்பின் நிலைத்தன்மையும் கேள்விக்குறிதான்” என்கிறது. பிரிட்டனில் கிளைகள் வைத்திருக்கும் சில நிறுவனங்கள் தற்காலிகமாக வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு நகர ஆரம்பித்திருக்கின்றன. ஒரு மலர் இனப்பெருக்க நிறுவனத்தில் வேலை செய்யும் ஃப்ரான்ஸின் லூசியிடம், “ப்ரெக்ஸிட் முடிவு மலரினப்பெருக்க நிறுவனங்களை பாதிக்குமா?” என்று கேட்டபோது “நிச்சயமாக சொல்லமுடியாது” என்றார். அவருடனான விவாதத்தில் அவரின் “போனால் போகட்டும்” என்ற புன்னகை மனநிலையை காணமுடிந்தது. “வருத்தப்படவேண்டியது பிரிட்டானியர்கள்” என்றார்.
3. ஐரோப்பாவின் வேலையாட்கள் இல்லாமல், பிரிட்டனின் தோட்டக்கலை துறை சரிவை சந்திக்க நேரும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகள் அறுவடை செய்யும் பருவங்களில், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான வேலையாட்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு பயணிக்கிறார்கள். பிரிட்டனின் தோட்டக்கலை நிறுவனங்கள், புதிய மாற்றங்களால் பயணக் கட்டுப்பாடுகள் வரும் பட்சத்தில் விளைவு மோசமாக இருக்ககூடும் என்கிறார்கள். பிரிட்டனின் 7 சதவிகித வேலையாட்கள் (கிட்டத்தட்ட இரண்டு மில்லியன்களுக்கும் மேல்) ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள்.
பிரிட்டனின் தோட்டக்கலை மற்றும் உருளைக்கிழங்கு துறையின் தலைமை ஆலோசகர் “பிரிட்டனின் பொதுஜனத்திற்கு தோட்டக்கலை துறை எப்படி செயல்படுகிறது என்றும், அவர்கள் சமையலறை மேஜைக்கு பழங்களும், காய்கறிகளும் எப்படி வந்துசேருகின்றன என்பதை பற்றிய புரிதலும் இல்லை” என்கிறார்.
பிரிட்டனின், பெரும்பாலும் ஐரோப்பிய வேலையாட்களை பருவ பணிகளுக்கு எடுக்கும் பச்சை இலை காய்கறி வளர்க்கும் ”நிக்”கும், தானிய உற்பத்தியாளர் லாரன்சும், அவர்களின் ஐரோப்பிய வேலையாட்கள் பொருட்கள் வாங்க வணிக வளாகங்களுக்கு செல்லும்போது பிரிட்டானியர்கள் அவர்களை அணுகி “உங்களை நாங்கள் இனிமேல் வரவேற்க போவதில்லை” என்று கூறுவதாக தெரிவிக்கின்றனர். உள்ளூர் வேலையாட்கள் கிடைப்பது மிகப்பெரும் சவால் என்றும், அவர்கள் நிரந்தர வேலைதான் கேட்பார்களென்றும், பருவ வேலைகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை என்றும் கூறுகின்றனர்.
“ஷெர்-கருத்தூரி”
2007 செப்டம்பரில், பெங்களூரு கருத்தூரி குழுமம், கென்யாவில் ஹாலந்தின் கொய்மலர் பண்ணையான “ஷெர்”-ஐ கெர்ரிட் மற்றும் பீட்டர் பார்ன்ஹூனிடமிருந்து எழுபத்தியோரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியது, அப்போது இந்திய மலர் தொழில்துறையில் பெரும் பரபரப்புச்செய்தி. “ஷெர்” பின்னர் “ஷெர் கருத்தூரி” ஆனது. தோட்டக்கலை படித்து ஓசூர் கொய்மலர் பண்ணைகளில் மேலாளர்களாயிருந்த சீனியர்கள் சிலர் உடன் வேலைவாய்ப்பு பெற்று கென்யா வந்து ஷெர் கருத்தூரியில் இணைந்தனர்.
ஷெர் கருத்தூரி மிகப்பெரிய பண்ணை. 188 ஹெக்டர்கள் பசுங்குடில்களில் கொய்மலர் ரோஜா வளர்ப்பு; ஹாலந்து உட்பட ஏழெட்டு நாடுகளுக்கு ஏற்றுமதி. பண்ணை அமைந்திருந்தது நைவாஸாவின் மிகப்பெரிய ஏரியின் தெற்குக்கரையில். தினசரி பணியாட்கள் கிட்டத்தட்ட ஏழாயிரம் பேர். பண்ணையில் வேலை செய்யும் பணியாட்களுக்காகவே நிறுவனத்தால் தொகுப்பு வீடுகளோடு “கசரனி” என்னும் சிறிய குடியிருப்பு பகுதியே தெற்கு ஏரி சாலையோரம் உருவாக்கப்பட்டது. தோராயமாக 2000/2500 குடும்பங்கள் அங்கு தங்கியிருந்தன.
பணியாட்களின் மருத்துவ வசதிக்காக, நிறுவனத்தின் உள்ளேயே 40 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை - எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் அறுவை சிகிச்சை வசதிகளுடனும்.
குழந்தைகள் படிப்பதற்கு நிறுவன எல்லைக்குள் ஒரு ஹையர் செகண்டரி பள்ளி. இங்கு கென்ய சிலபஸில், கல்வி அமைப்பை “8-4-4” முறை என்கிறார்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டுவரை ஆரம்பநிலை (Primary); அடுத்து “ஃபார்ம்” ஒன்றிலிருந்து நான்கு வரை செகண்டரி; அடுத்த நான்கு வருடங்கள் பல்கலையில்.
சின்னக் குழந்தைகளை கவனித்துக்கொள்ள பொறுப்பான பணியாட்களோடு உள்ளேயே “பேபி கேர்” அறைகள். நிறுவனத்திற்கென்று தனியாக கால்பந்து அணி இருந்தது; நைரோபி அல்லது நைவாஸாவில் நடக்கும் வருடாந்திர கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்ளும்.
2012-ல் நண்பர்களை பார்க்க ஷெர் கருத்தூரி சென்றிருந்தபோது பண்ணையை சுற்றிப்பார்க்க வியப்பாக இருந்தது (இதைவிட பெரிய கனவுப் பண்ணையை 2013-ல் பார்க்க முடிந்தது; ஷெர் கருத்தூரியிலிருந்து ஏரியின் தெற்குச்சாலையிலேயே 20 கிமீ தொலைவில் அமைந்த “ஒசேரியன்” எனும் 250 ஹெக்டர்கள் டச்சு நிர்வாக பண்ணை பற்றி தனியே ஒரு பதிவு எழுதவேண்டும்).
மிகச்சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஷெர் கருத்தூரி 2013-லிருந்து சரிய ஆரம்பித்தது. தலைமை நிர்வாக குளறுபடிகள்; கருத்தூரி குழும தலைவர் அகலக்கால் வைத்தது. கென்யாவில் ஷெர்-ஐ வாங்கியபின், எத்தியோப்பாவில் அரசின் ஐம்பது விழுக்காடு மானியத்தோடு அங்கும் பத்தாயிரம் ஹெக்டர்கள் கருத்தூரி தலைமை வாங்கியது. மலையும் மலைசார்ந்த இடமும்; அந்த நிலப்பரப்பை கொய்மலர் பசுங்குடில் அமைக்க சீரமைக்கவே மெஷினரிகள், நிர்வாகிகள், அரசுசார் செலவினங்கள் என பணத்தை கொட்டவேண்டியிருந்தது; அந்த பணம் கென்ய ஷெர் கருத்தூரியிலிருந்து கொண்டுபோகப்பட்டது.
இங்கு கென்யாவில் ஷெர் கருத்தூரி திறமையில்லாத நிர்வாகிகளாலும், தீவிர கண்காணிப்பும், மேற்பார்வையும் இல்லாததாலும், பர்சேஸ் மற்றும் மனிதவளப் பிரிவுகளில் ஊழல்களாலும் சீரழிந்து 2015-ன் இறுதியில் தரைதொட்டது. பர்சேஸ் பிரிவில், தீவிர கண்கணிப்பு இல்லையென்றால் ஊழல் வானமெட்டும்; 180 ஹெக்டர்கள் கொய்மலர் வளர்ப்புப் பண்ணையின் மாதாந்திர உரம் மற்றும் மருந்துகள் பர்சேஸ் மதிப்பே 450000 அமெரிக்க டாலர்கள் வரும்; பெரிய உரம் மற்றும் மருந்து நிறுவனங்கள், வளர்ப்பு பண்ணைகளின் பர்சேஸ் மேனேஜரை மாத கமிஷன் அடிப்படையில் பேரம் பேசி கைக்குள் வைத்துக்கொள்வார்கள்.
ஷெர் கருத்தூரியின் விஷயங்கள் இங்கு கென்ய மலர் கூட்டமைப்பில் கடும் விவாதத்திற்குள்ளானது. (ஒரு கட்டத்தில், குஜராத்திகளை தலைமையாக கொண்ட பண்ணைகள் நன்றாக நடைபெறும்போது, ஏன் இந்த தென்னிந்திய தலைமை தோல்வியடைந்தது என்றும் பேச்சு வந்தது). வங்கிகளுக்கு கட்டவேண்டிய தவணைகள் பாக்கி; அரசுக்கு செலுத்தவேண்டிய வரி பாக்கிகளை செலுத்தாமல் கருத்தூரியின் இயக்குநர்கள் நாட்டைவிட்டு பறந்துவிட்டதாக கென்ய ரெவின்யு அதாரிட்டி குற்றம் சாட்டியிருக்கிறது. 2015-ல் ஒரு வங்கி நிறுவனத்தை கையில் எடுத்துக்கொண்டு, வேறொரு நிர்வாகத்தை வைத்து சில மாதங்கள் பண்ணையை நடத்தியது; கருத்தூரி தலைமை அந்த வங்கிக்கெதிராய் கென்ய கோர்ட்டில் கேஸ் போட்டது. என்ன நடந்தது/என்ன நடக்கிறது என்றே தெளிவாய் ஒன்றும் தெரியவில்லை. இதில் கருத்தூரியின் தலைவர் ராமகிருஷ்ணாவுக்கு ஒன்றும் பெரிய நஷ்டமில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள்; அது எப்படி என்றும் புரியவில்லை.
ஷெர் கருத்தூரி கீழிறங்கியதற்கான பல காரணங்களில் ஒன்று “கோஸ்ட் லேபர்” - இதைப்பற்றி தனியாகவே ஒரு பதிவெழுதலாம்!