நோஸ்டால்ஜிக் இண்டர்சிட்டி & பெங்களூரு டே
File:Bangalore meet.jpg யஷ்வந்த்பூர் ஸ்டேஷனுக்கு ராஜ் வழியனுப்ப வந்திருந்தான். ராஜ் வீட்டிலிருந்து பத்து நிமிடத்தில் ஸ்டேஷன் வந்துவிட்டது. மணி இரவு பதிணொன்று. “வாசல்ல இறக்கிவிட்டு, வீட்டுக்குத் திரும்பிடு ராஜ்; காலையில ஆபீஸ் போகணுமே?” என்றேன். “இல்ல உள்ளே வர்றேன்”, சொல்லிவிட்டு காரை பார்க் செய்துவிட்டு, உள்ளே நுழைந்தோம். நல்லவேளை ஆறாம் எண் ப்ளாட்ஃபார்ம் முதலிலேயே இருந்தது; ட்ரெயின் அங்கிருந்துதான் கிளம்புவதால் அதுவும் நின்றுகொண்டிருந்தது. கோச் பார்த்து ஏறி சீட்களில் உட்கார்ந்துகொண்டோம். ராஜ்-ம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தான். இரவுணவிற்கு விஜி செய்த தோசையும், சாம்பார், சட்னியும் வயிறை நிரப்பியிருந்தது; அதுவும் எனக்குப் பிடித்த முருங்கைக்காய் சாம்பார் வேறு.
நேற்று மதியம் இண்டர்சிட்டியில் திருப்பூரிலிருந்து கிளம்பியது. ஒன்றைரை நாள் - மனது நிறைந்திருந்தது. கென்யாவிலிருந்து மே-யில் இந்திய விடுமுறை முடிவானவுடன், இம்முறை ஒருநாளாவது பெங்களூரு சென்றுவரவேண்டுமென்று நினைத்தேன். மூன்று காரணங்கள் - 1. இண்டர்சிட்டியில் பயணிக்கவேண்டும் 2. ஓசூரில் பழைய நண்பர்களைக் காணவேண்டும் 3. பெங்களூருவில் ராஜ், வாசுகி, செந்திலைச் சந்திக்கவேண்டும்.
ஓசூரில் 1995-லிருந்து வசித்தாலும், கோயம்புத்தூர்-பெங்களூரு இண்டர்சிட்டி அறிமுகமானது மல்லிகாவுடன் திருமணத்திற்குப் பின் (1999). விமலா அத்தை வீடு, பல்லடம் லட்சுமி மில்ஸில். திருப்பூரிலிருந்து பஸ்ஸில் அரைமணி நேரம். இண்டர்சிட்டியில் ஓசூரிலிருந்து திருப்பூருக்கு ஐந்து மணி நேரம். மிகவும் வசதியாயிருந்தது. ஓசூரில் காலை ஏழு மணிக்கு ஏறி உட்கார்ந்தால் நண்பகல் பனிரெண்டு மணிக்கு திருப்பூரில் இறங்கி, அத்தை வீட்டிற்கு மதிய உணவிற்கு சென்றுவிடலாம். பிரயாணக் களைப்பே தெரியாது. அதேபோல் அங்கிருந்து கிளம்பும்போது, மதிய உணவு முடித்து கிளம்பினால் இரவு ஏழு மணிக்கு ஓசூர் வீட்டிற்கு வந்துவிடலாம். மறுநாள் ஆபீஸ் போகும்போது முதல்நாள் பிரயாணம் செய்துவந்ததே தெரியாது. திருமணம் முடித்து முதல்முறை ஓசூர் வரும்போது, குர்லாவில் வந்தது இன்னும் பசுமையாய் ஞாபகம் இருக்கிறது. அப்போது குர்லா அதிகாலை 4 மணிக்கு கோயம்புத்தூரில்.
99-க்குப்பின் அடுத்த ஏழு வருடங்கள் இண்டர்சிட்டி வாழ்க்கையின் அங்கமாகவே மாறிப்போனது. வாழ்வின் பல நெகிழ்வான தருணங்கள், மறக்கமுடியாத சம்பவங்கள் இண்டர்சிட்டியோடு சேர்ந்துதான் மனதில் பதிந்திருக்கின்றன. மல்லிகாவை முதல் பிரசவத்திற்கு விமலா அத்தை வீட்டில் விட்டது; விட்டுவிட்டு, வீட்டிலிருந்து கோயம்புத்தூர் ஸ்டேஷன் வந்து தனியாய் சேரில் உட்கார்ந்து இண்டர்சிட்டிக்கு காத்திருக்கையில், மனது மல்லிகா இல்லாத நாட்களை எண்ணி எதை எதையோ யோசித்து பாரமாகி, மல்லிகாவிற்கு ஃபோன் செய்து ஃபோனில் விம்மினேன். இப்போதும் துல்லியமாய் ஞாபகமிருக்கிறது. கண்களில் வழியும் நீரை யாரும் பார்த்துவிடக் கூடாதென்று குனிந்துகொண்டேன். அப்பயணத்தில் சேலம் தாண்டியதும் படியில் வந்து உட்கார்ந்துகொண்டேன். ஓசூர் வரும்வரை படியில்தான் உட்கார்ந்திருந்தேன். சேலம் தாண்டியதும், தருமபுரிக்கு ட்ரெயின் மேலேறும். கண்கள் வெறுமையாய் மலைமுகடுகளையே பார்த்துக்கொண்டிருந்தன. இனம்புரியாத துக்கம் ஒன்று மனதை ஆட்கொண்டிருந்தது. பாலக்கோடு தாண்டியதுமே இருட்டியிருந்தது. இருட்டில் நகரும் தூரத்தின் விளக்கு வெளிச்சங்கள் எல்லாமே மனதை மென்மேலும் நெகிழ்த்தின.
இயல் பிறந்து சில மாதங்கள் கழித்து, ஓசூர் கூட்டி வந்ததும் இண்டர்சிட்டியில்தான். சீட்டிற்கு நடுவே சேலையில் தொட்டில் கட்டி மல்லிகா இயலைப் படுக்க வைத்திருந்தது. ஈரோட்டில் தூங்க ஆரம்பித்தது, ஓசூர் வந்ததும்தான் இயல் எழுந்தது.
இண்டர்சிட்டியின் பேண்ட்ரி எப்போதும் பரபரப்புடன் இருப்பது. வரிசையாய் ஏதேனும் வந்துகொண்டேயிருக்கும். பேண்ட்ரி ஆட்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருப்பார்கள். வாழைக்காய் பஜ்ஜியும், மிளகாய் பஜ்ஜியும் வந்தால் கோச்சே வாசத்தால் மணக்கும் (ருசியிருக்காது என்பது வேறு விஷயம்; ஏர் அரேபியாவின் வெஜிடபிள் பிரியாணி மாதிரி - வாசம் ஜம்மென்றிருக்கும்; சாப்பிட்டால் உப்புச்சப்பில்லாமல் இருக்கும்). கோபி மன்சூரியன், கட்லெட், வடை, போண்டா, சமோசா, டொமேடோ சூப், மசால் தோசை...ஒவ்வொரு முறை பயணிக்கும்போதும் ஒன்றொன்றாய் வாங்கி உண்டு பார்ப்பது. மற்ற எக்ஸ்பிரஸ் ட்ரெயின்களை விட (மும்பையில் இருந்த ஐந்து வருடங்களில் பல ட்ரெயின்கள் பழக்கமாகியிருந்தன) இண்டர்சிட்டியின் பேண்ட்ரி ஐட்டங்கள் எவ்வளவோ பரவாயில்லை.
ஓசூர் ஸ்டேஷன் நிரம்ப மாறியிருந்தது. முதல் ப்ளாட்பாரத்திற்கும், இரண்டாம் ப்ளாட்ஃபாரத்திற்கும் இடையே உயர் நடைப் பாலம் வந்திருந்தது; ஆனால் அப்போதும் இரண்டாம் ப்ளாட்ஃபார்மில் இறங்கிய மக்கள் ட்ரெயின் லைனில் கீழிறங்கிதான் முதல் ப்ளாட்ஃபார்மில் ஏறினார்கள். வெளியில் வந்து ஆட்டோ லைனில் “தனஞ்செய் ஹோட்டல் போகணும்” என்றபோது முதலிருவர் வரமறுத்தார்கள். மூன்றாமவர் “நூத்தி இருபது ரூபாய்” என்றார். வேறு வழியில்லாமல் ஏறினோம். ரயில்வே ஸ்டேஷனின் எதிர்ப்புறம் நேரு நகரில்தான் ஒருவருடம் குடியிருந்தோம் 2005-ல். அந்தப் பகுதியே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. ட்ராஃபிக்கில் சிக்கி தனஞ்செய் வந்துசேர முக்கால் மணி நேரமானது.
அய்யண்ணன் தான் தனஞ்செய்-யில் ரூம் போட்டிருந்தார். அய்யண்ணன் நான் மஞ்சுஸ்ரீயில் வேலை செய்தபோது அங்கு சூபர்வைஸராக பணிசெய்தவர். டிப்ளமோ அக்ரி முடித்துவிட்டு, மஞ்சுஸ்ரீயில் கொஞ்ச நாள் வேலை செய்துவிட்டு, இன்னொரு டிப்ளமோ அக்ரி நண்பர் தக்ஷிணா மூர்த்தியுடன் சேர்ந்து உரம் மற்றும் மருந்துக்கடை துவங்கினார். இப்போது போடு போடென்று போட்டுக்கொண்டிருக்கிறார். அவரின் வருடாந்திர வணிக விற்றுமுதல் பனிரெண்டு/பதினைந்து கோடியைத் தாண்டுமென்றார். எழுபது/எண்பது லட்சத்தில் பஸ்தி ஏரியாவில் சொந்தவீடு கட்டிக்கொண்டிருக்கிறார். அடுத்தமுறை வரும்போது வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றார்.
நான் ஓசூரிலிருந்தபோது, சீனிவாசா லாட்ஜாக இருந்ததைத்தான், புதுப்பித்து தனஜ்செய் ஆக்கியிருந்தார்கள். இரண்டாம் மாடியில் ரூம். ரூம் நன்றாகவே இருந்தது. குளித்து, டின்னர் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்ததும் ஒன்பது மணிக்கு அய்யண்ணன் வந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது, மல்லேஷூம், தனம்மாவும் வந்தார்கள். இருவரும் மஞ்சுஸ்ரீயில் முன்பு வேலை செய்தவர்கள். மல்லேஷ் இப்போது அய்யண்ணன் கடையில் இருக்கிறார். மல்லேஷிற்கு தலைமுடி நரைத்திருந்தது. தனம்மா குண்டாகியிருந்தது. பழைய கதைகள் பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் போனதே தெரியவில்லை. தனம்மாவின் தங்கை உஷா ஃபோன் செய்திருந்தது.
காலையில், தொட்டஹள்ளி ஃபால்ஸில் எட்டுமணிக்கு சந்திக்கலாமென ராஜ் மெசேஜ் செய்துவிட்டு கூகுள் மேப் அனுப்பியிருந்தான். அய்யண்ணனே வண்டிக்கு ஏற்பாடு செய்துவிடுவதாய் சொன்னார். ஏழு மணிக்கு வண்டி வந்துவிடுமென்றார். கிருஷ்ணகிரி கேவிகே-யில் வேலை செய்யும் ரமேஷ் காலையில் வந்து சேர்ந்துகொள்வதாய் சொல்லியிருந்தான் (மினியும் குழந்தைகளும் நாகர்கோவில் போயிருந்தார்கள்).
காலையில் குளித்து கிளம்பிக்கொண்டிருந்தபோது ரமேஷ் ஆறரை மணிக்கு வந்துசேர்ந்தான். காபி ஆர்டர் செய்து குடித்துக்கொண்டே கல்லூரிக் கதைகள் பேசினோம். ரமேஷ் கல்லூரி விடுதியில் என் ரூம் மேட். ரமேஷின் ஊர் நாகர்கோவில் அருகில் மணவாளக்குறிச்சி.
கீழேயேயிருந்த தனஞ்செயின் ரெஸ்டாரண்டில் காலை உணவை முடித்துக்கொண்டு, ரூம் காலிசெய்துவிட்டு கிளம்பினோம். டிரைவர் “தொட்டஹள்ளி ஃபால்ஸ் எங்க சார்?” என்றார். ராஜ்-ற்கு ஃபோன் செய்து கேட்டபோது “யாருக்குத் தெரியும்?; நாங்களே தேடி, கேட்டு இப்பதான் போயிட்டிருக்கோம். நைஸ் ரோட்டில வந்து கனகபுரா ரோடு கட் பண்ணிக்குங்க” என்றான். “ஃபால்ஸ்ல தண்ணியெல்லாம் இருக்காது. ஆள் நடமாட்டமெல்லாம் அவ்வளவா இருக்காது. நல்ல இடமாயிருக்கும்னு நினைக்கிறேன்” என்றான். அவன் அப்படித்தான்; ஐடிசி-யில் வேலை செய்கிறான். வார இறுதிகளில், பெங்களூரு ஜன சந்தடியிலிருந்து தப்புவதற்காகவே, எங்கேனும் காட்டுப் பகுதிக்கு குடும்பத்தோடு கிளம்பிவிடுவான்; பெரும்பாலும் புதுப்புது பகுதிகள். விஜி, கவின், சௌமி எல்லோருமே ட்ரெக்கிங் செய்பவர்கள்.
“தொட்டஹள்ளி ஃபால்ஸ்”-ஐ தேடிக் கண்டுபிடித்து போய்சேர இரண்டுமணி நேரமானது. விஜியும், ராஜூம் ஒரு பாறைமேல் உட்கார்ந்திருந்தார்கள். ராஜூம் சௌமியும் பைக்கிலும், விஜியும் கவினும் காரிலும் பெங்களூரிலிருந்து வந்திருந்தார்கள்.
எதிர்பார்த்தது போலவே அருவியில் தண்ணீர் எதுவுமில்லை. அங்கிருந்த பெரிய மரத்தினடியில் குலதெய்வம் கோவில் ஒன்றிருந்தது. பக்கத்திலேயே பெரிய மண்டபம் ஒன்று - சமைத்துச் சாப்பிடுவதற்கு. வந்திருந்த இரண்டு குடும்பங்கள் சமைத்துக் கொண்டிருந்தது. ஒருவர் பெரிய இலை பரப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து ராஜின் பசி அதிகமானது.
கொஞ்சம் உள்சென்று நானும், மல்லிகாவும், ரமேஷூம் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டோம். ராஜ், விஜி, கவின், சௌமி, இயல் எல்லோரும் ஒரு மினி ட்ரெக்கிங் போனார்கள். தொட்டஹள்ளி அருவியிலிருந்து “தொட்ட ஆலமரா” செல்வதாக ராஜ் ப்ளான் செய்திருந்தான். அப்பெரிய ஆலமரம் சுமார் மூன்று ஏக்கரில் பரந்து விரிந்தது. ஆனால் ட்ரெக்கிங் முடித்துவர லேட்டானதால், ஆலமரம் செல்லும் ப்ளானை கட் செய்துவிட்டு பெங்களூரு கிளம்பினோம். ராஜ் வீட்டிற்கு சென்று ரெடியாகி, விஜியும் குழந்தைகளும் ஓலாவிலும், மற்றவர்கள் ராஜின் காரிலும் வாசுகி வீட்டிற்கு சென்றோம்.
மதிய உணவு வீட்டில் ஏற்பாடு செய்வதாக வாசுகி சொல்லியிருந்தது.
வாசுகி IIHR-ல் வேலை செய்கிறது. ஓசூரில் இருந்தபோது ஒருமுறை வீட்டிற்கு வந்திருக்கிறது - மாமரங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்க. உற்சாகமான பெண். இன்பா மற்றும் நித்யா - இரண்டு குழந்தைகள். வாசுகியும், பெருமாள் சாரும் விருந்து உபசரிப்பில் அசத்துபவர்கள் என்று ராஜ் சொல்லியிருக்கிறான். நேரில் கண்டேன். வெஜ், நான் வெஜ் என வாசுகி டேபிள் நிறைத்திருந்தது. சூப்பில் ஆரம்பித்து, ஐஸ்கிரீமில் முடிக்கும்போது வயிறு “போதும்...போதும்” என்றது. வாசுகி ஒவ்வொரு ஐட்டமாய் எல்லோருடைய ப்ளேட்டையும் நிறைத்துக்கொண்டிருந்தது. இனிப்புகள், பழங்கள் வேறு.
வாசுகியின் தம்பியும் இருந்தார். சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு நீட் பற்றியும் திரும்பியது. ராஜின் கவினும், சௌமியும் ஓபன் சிலபஸில் படிக்கிறார்கள். ஃபார்மல் ஸ்கூலிங் சிஸ்டத்தில் அவனுக்கு நம்பிக்கையில்லை.
வாசுகி கிளம்பும்போது பழங்கள் பையில் போட்டு ஆளுக்கொன்று கொடுத்தது. வாசுகி வீட்டிலிருந்து ராஜ் வீட்டிற்கு வந்துசேரும்போது ஆறுமணிக்கு மேலாகிவிட்டது. ரமேஷ் எங்களுடன் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸில் வருவதாயிருந்து ட்ரெயின் நள்ளிரவு பனிரெண்டுக்கு மணிக்கு என்பதால் ப்ளானை மாற்றி பஸ்ஸிலேயே போய்விடுகிறேன் என்றான். விஜி முருங்கைக்காய் சாம்பாரும், தேங்காய் சட்னியோடும் தோசை பரிமாறியது. வாசுகி வீட்டில் சாப்பிட்ட மதிய உணவே செரிக்காமலிருந்தாலும், முருங்கைக்காய் சாம்பார் என்பதால் மூன்று நான்கு தோசைகள் உள்ளே தள்ளினேன். ரமேஷிற்கும், எனக்கும் எங்களின் www.horts.in வெப்சைட்டை எப்படி மேக்ஸிமம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று ராஜ் விளக்கினான். ரமேஷ் கிளம்ப, ராஜ் பக்கத்து மெட்ரோ ஸ்டேஷனில் ரமேஷை விட்டுவந்தான். பத்தேமுக்காலுக்கு நாங்களும் கிளம்பினோம்.
ராஜ் விடைபெற்றுச் சென்ற பத்துநிமிடத்தில் ட்ரெயின் கிளம்பியது. மனம் கடந்த ஒன்றரை நாட்கள் நிகழ்வுகளை அசைபோட ஆரம்பித்தது. கல்லூரி கால நண்பர்களை சந்திப்பதுதான் எத்தனை மகிழ்ச்சியாய், புத்துணர்ச்சி தருவதாய் இருக்கிறது. செந்திலைத்தான் சந்திக்க முடியவில்லை. அடுத்த இந்திய விடுமுறையில் சென்னை ட்ரிப் ஒன்றை செட்யூல் செய்து சென்னை நண்பர்களைச் சந்திக்கவேண்டும்.
சென்னையும் எனக்கு ஒரு நோஸ்டால்ஜிக் நகரம்தான். பாரீஸ் கார்னரும், மெரீனாவும், திருவல்லிக்கேணியும், தி.நகரும்...இப்பொழுதே நினைவுகள் மேழெழுகின்றன.