பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் சில தொழில்நுட்பப் பயன்பாடு

From HORTS 1993
Revision as of 00:08, 14 March 2020 by Raj (talk | contribs) (1 revision imported)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

கொய்மலர்களின் தலைநகரான ஹாலந்தில், கொய்மலர் வளர்ப்பு கொஞ்சம் சுணக்கம் கண்டிருந்தாலும் (வளர்ப்பு மட்டும்தான்; வணிகமல்ல), கொலம்பியா, ஈக்வடார் மற்றும் கென்யா நாடுகளில் கொய்மலர் வளர்ப்பு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது. ரஷ்யாவின் ரூபிள் சரிவுக்குப் பின் ரஷ்ய ஏற்றுமதி 2014-லிலிருந்து குறைந்தாலும், இந்த ஆண்டு (2017) கொஞ்சம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஆனாலும், ரஷ்யாவிற்கு கொய்மலர் ஏற்றுமதி, என்ணிக்கை உயர்ந்த அளவு, வணிக மதிப்பு அதிகம் உயரவில்லை; ரஷ்யாவின் கொய்மலர் இறக்குமதி எப்போது 2013-ற்கு முன்பிருந்த நிலைமைக்கு வரும் என்றுதான் எல்லா கென்ய ஏற்றுமதியாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்ய சரிவிற்குப்பின், ஆஸ்திரேலிய ஏற்றுமதியும், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்திருக்கிறது.

கடந்த பத்து வருடங்களில் பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் புதிது புதிதாய் ஏதேனும் தொழில்நுட்பங்களும் அல்லது பழைய தொழில்நுட்பங்களில் ஏதேனும் புதிய மேம்பாடுகளும் வந்தவண்ணம்தானிருக்கின்றன. பரப்பளவுகள் அதிகரிக்கும் பண்ணைகளில், மேம்பட்ட கண்காணிப்பிற்கும், மேலாண்மைக்கும் இத்தொழில்நுட்பங்கள் இன்றியமையாததாகவும் ஆகிவிடுகின்றன. அவற்றுள் சிலவற்றை அறிமுகத்திற்காக பார்க்கலாம்.

1. துல்லியமாய் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கண்காணிப்பு ”ஸ்கேரப் ஸொல்யூசன்ஸ்” போன்ற சில நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன. பரப்பளவிற்கு தகுந்தவாறு மாதக்கட்டணம், யூரோவில். இந்தியப் பண்ணைகளுக்கு இக்கட்டணம் கட்டுபடியாகுமா என்பது அவற்றின் பரப்பையும், வருட வருமானத்தையும், போதுமான அளவிற்கு அவற்றுக்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறதா என்பதைப் பொறுத்தது. ஆனால் இதில் பலன்கள் அதிகம்.

1. நோய் மற்றும் பூச்சிகள் தாக்குதலினால் ஏற்படும் பயிரிழப்பை வெகுவாகக் குறைக்கலாம்.

2. மருந்துகளின் செலவை கணிசமாகக் குறைக்கலாம்.

3. கண்காணிப்பிற்கும், கட்டுப்படுத்தலுக்குமான இடைவெளியை குறைக்கலாம்.

4. கண்காணிப்பின் தரத்தை அதிகப்படுத்தலாம்.

முதற்கட்டமாக, பசுங்குடில்களின் இடவமைப்பை அதன் நீள அகலங்களோடு அளந்து செர்வரில் ஏற்றுகிறார்கள். பசுங்குடில்களுக்கு எண்கள் உண்டு; பசுங்குடிலின் உள்ளிருக்கும், கொய்மலர் செடிகள் நடப்பட்டிருக்கும் படுகைகளுக்கும் எண்களிடவேண்டும். அடுத்து பூச்சி மற்றும் நோய்களைக் கண்டறிவதற்கான பயிற்சியும், அதற்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருள் ஏற்றப்பட்ட GPRS கருவிகளில் (சாதாரண ஸ்மார்ட் போன்கள்தான்; மென்பொருள் ஏற்றி உபயோகிக்கலாம்) எப்படி உள்ளிடுவதென்ற பயிற்சியும் கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படும். பசுங்குடில்கள் கண்காணிப்பாளர்களுக்கு பிரித்தளிக்கப்படும். ஒவ்வொருவருக்கும் ஒரு உள்ளிடு கருவி. கண்காணிப்பாளர்கள், ஒவ்வொரு பசுங்குடிலினுள்ளும், ஒவ்வொரு படுகையிலும், நோய் மற்றும் பூச்சி தாக்குதலை அவற்றின் தாக்குதல் அளவிற்கேற்ப கருவியில் உள்ளிட வேண்டும். மாலை வேலை முடிந்தவுடன், செர்வருக்கு கருவியை இணைய இணைப்பின் மூலம் இணைத்து முழு விபரங்களையும் பதிவேற்றிவிடவேண்டும் (நான்கைந்து நிமிடங்கள்தான் ஆகும்).

செர்வரிலிருந்து என்னென்ன விதமான அறிக்கைகள் பெற்றுக் கொள்ளலாம்? 1. அன்றன்றைக்கு மாலையிலேயே, நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள், மேலாளர்கள் அனைவரும் அவர்கள் கணிணியில் பண்ணையின் அனைத்து பசுங்குடில்களின் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் நிலவரத்தை அறியலாம்.

2. எல்லாவகை பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு தனித்தனியே கலர் கோட் கொடுத்துள்ளதால், பார்த்தவுடனேயே தாக்குதல் அளவை பசுங்குடில் வாரியாக அறிந்துகொள்ளலாம். (இணைப்பில் படம்: 1. ஐந்து பசுங்குடில்களில் நோய் மற்றும் பூச்சி தாக்குதலின் பனோரமா வரைபடம்)

3. ஒவ்வொரு பூச்சி மற்றும் நோயிற்கு, தனித்தனியே வரைபட அறிக்கை எடுத்துக்கொள்ளலாம்; தனித்தனி பசுங்குடில்களுக்கும்.

4. முழுப்பண்ணையின் ஒரே வரைபடத்தில், எந்த நோய் அல்லது பூச்சித் தாக்குதல் அதிகமிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

5. அன்றன்று மாலையிலேயே எல்லா அறிக்கைகளும் கிடைத்துவிடுவதால், அடுத்த நாளிற்கான மருந்து தெளிப்புகளை முடிவுசெய்யும் மேலாளர், எந்தெந்த நோய்/பூச்சிகளுக்கு தெளிப்பு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதை விரைவில் முடிவுசெய்ய ஏதுவாக இருக்கும்.

6. மேலும் தாக்குதல் குறைவாக இருக்கும் நோய்/பூச்சிகளுக்கு முழுப் பசுங்குடிலுக்கும் தெளிப்பு அளிப்பதைவிட, அந்தந்த குறிப்பிட்ட படுகை/பகுதிகளில் தெளிப்பு செய்யலாம் (செலவு குறையும்).

7. கண்காணிப்பாளர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம் (அவர்கள் எந்தப் பசுங்குடிலில் எவ்வளவு நேரம் இருந்தார்கள், எந்த நேரம் வேலை ஆரம்பித்தார்கள், மதிய உணவிற்கு எவ்வளவு நேரம் இடைவெளி எடுத்தார்கள், ஒரே இடத்தில் நேரத்தை வீணடித்தார்களா என்பது போன்ற எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ளலாம்).

8. நாலைந்து நாட்கள் இடைவெளியில் ஒரே நோயிற்கான முன்பின்னான இரு வரைபடங்களை ஒப்பிடும்போது, தெளித்த மருந்து சரியாக வேலை செய்திருக்கிறதா என்பதை அறியமுடியும் (தெளிப்பவர்கள் சரியாகத் தெளித்திருக்கிறார்களா என்பதையும் :))

இத் தொழில்நுட்பத்தை நோய்/பூச்சிகளுக்கு மட்டுமல்ல, வேறு எதையெல்லாம் நமக்கு கண்காணிக்க வேண்டுமோ, அதையெல்லாம் கண்காணிப்பு காரணிகளாக இதன் மென்பொருளில் ஏற்றிக்கொள்ளலாம்.

கென்ய சூழலில் பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் மாதாந்திர மருந்து செலவு மட்டுமே ஒரு ஹெக்டருக்கு 800-லிருந்து 1500 அமெரிக்க டாலர்கள் செலவு பிடிக்கும். இதுவே கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அமைந்த பண்ணைகள் என்றால் 2000 டாலர்கள் வரை கூட ஆகலாம். இத்தொழில்நுட்பம் இச்செலவை கணிசமான அளவிற்கு குறைக்கத்தான் செய்கிறது.

துல்லிய நீர்ப்பாசன கண்காணிப்பு மற்றும் மேலாண்மை இதிலும் அடிப்படை தொழில்நுட்பம் அதே GPS-தான். பசுங்குடில்களில் நீர்ப்பாசனம் 95% சொட்டு நீர்ப் பாசனம்தான். உரமிடுதலும், நீரில் கரையும் உரங்களை, நன்றாக நீரில் கரைத்து, சொட்டு நீர் குழாய்களின் வழியே அனுப்பப்படுவது (இதில் சில முன்னெச்சரிக்கைகள் இருபது வருடங்களாகவே பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. உரங்களை நீரில் கரைக்கும்போது சில குறிப்பிட்ட உரங்களை ஒன்றாகக் கரைக்க முடியாது; அவ்வாறு கரைத்தால், அவை வினைபுரிந்து அடியில் கெட்டியாகத் தங்கிவிடும். இதற்காகவே இருவேறு தொட்டிகளில், வெவ்வேறு உரங்களைக் கரைத்து பின் அனுப்பவேண்டும் (AB Tank system).

“அக்வா செக்” போன்ற சில வசதிகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன (இதற்கும் மாதக் கட்டணம்தான் – கருவிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி). “அக்வா செக்” என்பது மண்ணின் ஈரத்தன்மையை ஆயும் ஒரு கருவி (இணைப்பில் படம் 2). இதை கொய்மலர் செடிகள் நடப்பட்ட படுகைகளில் 60 செமீ ஆழம்வரை உட்செல்லுமாறு பதிக்கவேண்டும். ஒவ்வொரு 10 செமீ-ரிலும் இக்கருவியில் ஒரு உணரி (Sensor) இருக்கும். மொத்தம் ஆறு உணரிகள். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும், ஒவ்வொரு உணரியும் மண்ணின் ஈரப்பதத்தை அளந்து மொத்தமாகச் சேர்த்து, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும், ஆன்லைன் மூலம் ஒரு மத்திய செர்வருக்கு பதிவேற்றம் செய்யப்படும். இந்தத் தகவல்களை எங்கிருந்து வேண்டுமானாலும் எந்தக் கணிணியிலும் குறிப்பிட்ட ஆன்லைன் மென்பொருள் மூலம் பார்த்துக்கொள்ளலாம். “அக்வா செக்”-கை “நிலத்தடி கண்கள்” எனலாம்


”அக்வா செக்”-கினால் கிடைக்கும் நன்மைகள் 1. மண்ணின் ஈரப்பதம் தொடர்ந்த கண்காணிப்பில் இருப்பதால், தேவையான போது நீர்ப்பாசனம் செய்தால் போதும். இதன் மூலம் அளவுக்கதிகமான நீர் விரயம், உர விரயங்களைத் தவிர்க்கலாம்.

2. நாம் செய்யும் நீர்ப்பாசனம் படுகையில் எந்த ஆழம் வரை செல்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். நீர்ப்பாசன நேரத்தை கட்டுப்படுத்த இது உதவும்.

3. அளவுக்கதிகமான நீர்ப்பாசனம், மண்ணிற்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிக்கலை உண்டுபண்ணும். இது செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும். இதைத் தவிர்க்க ”அக்வா செக்” உதவும்.

கொய்மலர் பசுங்குடில் வளர்ப்பில் மாதாந்திர உரச் செலவு ஒரு ஹெக்டருக்கு 600 அமெரிக்க டாலர்களிருந்து 1000 டாலர்கள் வரை ஆகும். சில பண்ணைகளில் இது 200/300 டாலர்கள் உயரலாம். ”அக்வா செக்”-கை சரியாக உபயோகித்தால், இச்செலவை குறைக்க முடியும்.


எதிர் சவ்வூடு பரவல் அமைப்பு (Riverse Osmosis Unit) சாதாரணமாய் வீடுகளில் உபயோகிக்கும் சில குடிநீர் வடிகட்டிகளில் பயன்படுத்தும் அதே நுட்பம்தான். இங்கு பசுங்குடில் பாசனத்திற்குத் தேவையான முழு அளவுத் தண்ணீரும் இம்முறையில் சுத்திகரிக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. இது செலவு பிடிக்கும் வேலைதான்; ஆனால் தரமில்லாத நிலத்தடி நீர் இருக்கும் சில இடங்களில் வேறு வழியில்லை. உதாரணமாய் கென்யாவின் நைவாஸா பகுதியில் நிலத்தடி நீரில் சோடியத்தின் அளவு அதிகம்; பைகார்பனேட்டுகளும் அதிகம். இவையிரண்டும் அதிகமிருப்பதால், நீரின் காரத்தன்மையும் (pH) அதிகம். கொய்மலர் நீர்ப்பாசனத்திற்கு நீரின் கார அளவு 6-றிலிருந்து 6.5-க்குள் இருந்தால் நலம். காரத்தன்மையை குறைப்பதற்கு அமிலங்கள் உபயோகப்படுத்தினாலும், ஓரளவிற்கு மேல் உபயோகிப்பதில் சிரமம் ஏற்படும். தரமில்லாத நீர் உபயோகத்தினால் சில வருடங்களிலேயே மூடப்பட்ட பண்ணைகளும் உண்டு.

இம்மாதிரியான இடங்களில்தான் “எதிர் சவ்வூடு பரவல்” அமைப்புகள் நீரை சுத்திகரிக்க உதவுகின்றன. சில இஸ்ரேல் நிறுவனங்கள்தான் ஆரம்பத்தில் சந்தையில் இருந்தன. இப்போது சைனா, பிரிட்டன் போன்ற வேறு சில நாடுகளின் நிறுவனங்களும் உள்ளன; ஒரு புனே நிறுவனமும் உள்ளது; வேறு சில இந்திய நிறுவனங்களும் இருக்கலாம். பாசன நீர்த் தேவை கொள்ளளவிற்கு ஏற்றவாறு, இதை அமைப்பதற்கு செலவாகும்; உதாரணத்திற்கு, மணிக்கு 50000 லிட்டர் நீர்த் தேவைக்கு, ஒரு அமைப்பு அமைக்க கிட்டத்தட்ட 20000 அமெரிக்க டாலர்கள் செலவு பிடிக்கும். மேலும் சவ்வடுக்குகளை ((இணைப்பில் படம் 4. சவ்வடுக்கு) குறிப்பிட்ட நாட்கள்/மாதங்களுக்கொரு முறை சுத்தப்படுத்த வேண்டும். சவ்வடுக்குகளைச் சுத்தப்படுத்துவதற்கென்றே சில தனித்த இரசாயனங்கள் உள்ளன (இவற்றைத் தயாரிப்பதற்கென்றே சில நிறுவனங்கள் உள்ளன; பிரிட்டனின் ”ஜெனிஸிஸ் இண்டர்நேஷனல்” இத்துறையில் புகழ்பெற்றது).


இவைதவிர,

4. பசுங்குடிலினுள் அமைக்கப்படும் வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் அளந்தனுப்பும் “வானிலை மையம்” (இணைப்பில் படம் 7) – இதை தானியங்கி நீர்ப்பாசனம் மற்றும் நீர்த் தெளிப்புக் கருவியுடன் இணைத்துவிட்டால், பசுங்குடிலினுள் நமக்குத் தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்திற்குத் தகுந்தவாறு இயங்கி, பசுங்குடில் தட்பவெப்பத்தை தானே கவனித்துக்கொள்ளும்.

5. மழை, பனி, மிகுவெயில் போன்ற இயற்கை இடர்களிருந்து காக்க, தானியங்கி கூரை கொண்ட பசுங்குடில் அமைப்புகள் சந்தையில் கிடைக்கின்றன.

6. சூரிய வெப்பத்திற்குத் தகுந்தவாறு, பசுங்குடில் கூரைமேல் நீர்தெளித்து பசுங்குடிலை குளிரச்செய்யும் தானியங்கி குளிர்ப்பானகள்.

இவற்றைப்போல் இன்னும் பல தொழில்நுட்பங்கள் உபயோகத்திலும், வருடந்தோறும் மேம்படுத்தப்பட்டும், புதியனவாயும் வந்துகொண்டுதானிருக்கின்றன.

கொய்மலர் வளர்ப்புத்துறையில் கால்பதித்து இந்த 2017-ம் ஆண்டோடு இருபத்தி இரண்டு வருடங்களாகின்றது. இன்னும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்த கற்றுக்கொள்ளலுடன்தான் உற்சாகமாய் நகர்ந்துகொண்டிருக்கிறது.