பேலியோ - ஜெ-விற்கு ஒரு கடிதம்

From HORTS 1993
Revision as of 00:08, 14 March 2020 by Raj (talk | contribs) (1 revision imported)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

அன்பின் ஜெ, வணக்கம்.

நலம்தானே?

பேலியோ குறித்த வெற்றிச்செல்வன் கேள்விக்கு தங்களின் பதில் கண்டேன். கடந்த எட்டு மாதங்களாக பேலியோ உணவுமுறையில் இருப்பவன் என்ற முறையில் எனது சில அவதானிப்புகள்.

2016 ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் கோவையில் ஒரு புதுவாசகர் சந்திப்பில் உங்களுடன் இருந்தபோது, எனது எடையையும், இளம்பிள்ளை வாதத்தால் சிறுவயதிலிருந்தே கொஞ்சம் பாதிக்கப்பட்டிருந்த வலதுகாலினால் நான் கொண்ட சிரமங்களைக் கவனித்த நீங்கள், “நீங்க பேலியோ ட்ரை பண்ணுங்க” என்று அறிவுறுத்தினீர்கள். அப்போதுதான் நான் பேலியோ பற்றிக் கேள்விப்படுகிறேன்.

நண்பர்களைத் தொடர்புகொண்டும், இணையத்தில் தேடிப் படித்தும் அவ்வுணவு முறையைப் பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். இரண்டாம் வகை டயபடிக்கின் ஆரம்ப நிலையிலிருந்தேன். குறைந்த அளவு மில்லிகிராமில் மாத்திரைகள் எடுத்துக்கொண்டும். மெல்லிய உயர் இரத்த அழுத்தம் எனக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. அவ்விடுமுறை முடிந்து, கென்யாவிற்குத் திரும்பிய பிறகு, இங்கு தனியாக பேலியோ உணவுமுறையைச் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகத்தில் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன். இன்னொரு சிக்கல் இருந்தது. சிறு வயதிலிருந்தே அசைவ உணவுப் பழக்கம் கொண்டிருந்தாலும், கோவை வேளாண் பல்கலையில் சேர்ந்தபிறகு ஹரே கிருஷ்ணா ஹரே ராமா இயக்கத்தின்மேல் கொண்ட ஈர்ப்பினால் முழுதுமாக அசைவ உணவை கடந்த இருபத்தைந்து வருடங்களாக விலக்கியிருந்தேன். ”பேலியோ என்றாலே அசைவம்” என்ற தவறான புரிதல் இருந்தது. பேலியோவிற்காக மறுபடியும் அசைவ உணவு துவங்க வேண்டுமா என்ற பெரும் தயக்கமிருந்தது. வெள்ளை சர்க்கரையை நிறுத்திவிட்டு வெல்லம் உபயோகித்தேன். அரிசியை நிறுத்திவிட்டு ராகி, கம்பு, சோளம் ஆரம்பித்தேன்.

2017 மே மாதத்தில் விடுமுறைக்கு வந்தபோது எடை இன்னும் ஏறியிருந்தது. மல்லிகா, பேலியோ பற்றி படித்தும், வெவ்வேறு நகரங்களில் நடந்த பேலியோ சந்திப்புகளின் காணொளிகளைப் பார்த்தும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருந்தார். பேலியோ உணவுமுறைக்கு மாறுவதற்கு முன் சில அடிப்படை இரத்தப் பரிசோதனைகள் செய்யப் பரிந்துரைக்கிறார்கள் - லிபிட் ப்ரொஃபைல், தைராய்டு ப்ரொஃபைல், கிட்னி ப்ரொஃபைல், ஃபேட்டி லிவருக்கான ஸ்கேன்...போன்று சில. விடுமுறை முடிவதற்கு ஒருவாரம் இருக்கும்பொழுது, மல்லிகாவின் வற்புறுத்தலின் பேரில் சென்று இரத்தப் பரிசோதனை செய்தபோது வந்த முடிவுகள்...

எனக்கு அதிர்ச்சியளித்தன. HbA1c (கடந்த மூன்றுமாத சராசரி இரத்த சர்க்கரை அளவு), கொலஸ்ட்ராலின் ட்ரைகிளிசரடு மற்றும் LDL எகிறியிருந்தன. தினசரி மாத்திரைகளில் விருப்பமில்லாத எனக்கு முன்னால் இருந்த ஒரே நல்வழி பேலியோ உணவுமுறை மட்டுமே. இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்று, அரங்காவிடமும், கோவை தியாகு நூலகத்தின் தியாகுவிடமும் ஆலோசனை கேட்டுவிட்டு, மல்லிகாவைக் கூட்டிக்கொண்டு ஈச்சனாரியில் பேலியோ பரிந்துரைக்கும் டாக்டர் ஹரிஹரனைச் சந்தித்தேன்.

இதோ இந்த ஜனவரியோடு எட்டு மாதங்களாகின்றன. டயாபடிக் மாத்திரைகளை பேலியோ ஆரம்பித்த ஒரே வாரத்தில் நிறுத்திவிட்டேன். எடை 91.6 கிலோவிலிருந்து 70-ஆகக் குறைந்திருக்கிறது. டோட்டல் கொலெஸ்ட்ரால் 257-லிலிருந்து (mg/dl) 170-ற்கு வந்திருக்கிறது. LDL 197-லிலிருந்து 111-க்கு. ட்ரைகிளிசரைட்ஸ் 253-லிலிருந்து குறைந்து 88-ல்.

பேலியோ நாட்கள்...

1. உற்சாகமாய் இருக்கிறது. பழைய அதி கார்ப் வாழ்க்கை மறந்தே விட்டது; அதற்கான ஏக்கமும் துளியும் இல்லை. எனது சமையலறை நேரங்கள் மிகக் குறைந்துவிட்டன. நானே சமைத்துக் கொள்வதால், முன்பெல்லாம் எல்லா நேரமும் என்ன சமைப்பது என்ற யோசனையிலேயே மனது இருக்கும்; அதற்கான திட்டமிடலை முன்னரே செய்யவேண்டியிருக்கும். இப்போதெல்லாம் சமையலைப் பற்றிய சிந்தனையே அதிகம் வருவதில்லை.

2. விடுமுறை நாட்களின் மதிய உணவிற்குப் பின்னான பகல் தூக்கங்கள் தொலைந்துபோய் விட்டன. நாளின் எந்த நேரமும் உடலும், மனமும் களைப்படைந்ததாகவே உணர்வதில்லை. அலுவலக நேரங்களில், சுற்றியிருப்பவர்களுடனும், இயக்குநர்களுடனுமான தொடர்புத் தரம் மேம்பட்டிருக்கிறது.

3. மனது, தானாகவே உருவாக்கிக் கொண்ட பல கற்பனைத் தடைகளிலிருந்து வெளிவந்திருக்கிறது. இரண்டு வயதில் ஏற்பட்ட இளம்பிள்ளை வாதத்தினால் வலது கால் சிறிது பாதிப்படைந்திருந்தது. எனது பணியிடம் (கொய்மலர் வளர்ப்புப் பண்ணை) அதிகம் சுற்றவேண்டிய வேலைகள். பெரும்பாலும் இரண்டு சக்கர வாகனத்தில்தான் மேற்பார்வைகளுக்குச் செல்வேன் (பசுங்குடில்களின் உட்புறங்களில் கூட). பேலியோ ஆரம்பித்தபின்னான கடந்த ஐந்து மாதங்கள், இவ்விஷயத்தில் மிகப் பெரும் விடுதலையை எனக்குத் தந்தன. வாகனத்தில் சுற்றுவது குறைந்து நடை அதிகமாயிருக்கிறது. பணியின் தரம் உயர்ந்திருக்கிறது.

4. தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு புதிய முயற்சியில் இறங்கவோ, கருத்துக்களை பேச்சின்போது அடுத்தவர்களுக்கு தெரியப்படுத்துவதிலோ பெரும் தயக்கமிருக்கும்; அது உடைந்திருக்கிறது.

5. புதியவர்களுடனான அறிமுகமும், தொடர்பும் இயல்பானதாய் இனிமையாய் துவங்குகிறது. முன்பெல்லாம், மெல்லிய தாழ்வு மனப்பான்மையோடு, “இண்ட்ராவெர்ட்” என்று எனக்கு நானே பொய்யாய் கற்பித்துக்கொண்ட பிம்பத்தோடு சுற்றிக் கொண்டிருப்பேன். சமீபத்தில் எங்கள் நிறுவனத்தில் ஸ்காட்டிஷ்காரரான ஜேம்ஸ் பணிக்குச் சேர்ந்தார். முன்பிருந்ததுபோல் இருந்திருந்தால், இடைவெளியோடுதான் இருந்திருப்பேன். ஆனால் இப்போது, நட்பு ஏற்படுத்திக் கொள்வதில் தயக்கம் ஏதுமில்லை. அவரும் புத்தகங்களின் பிரியர் என்பதால், அவருடனான நட்பு பலப்பட்டு தொடர்கிறது.

முன்பெல்லாம் காலையில் பண்ணைக்குக் கிளம்புமுன் காபி குடிக்காமல் சென்றதில்லை. மார்கழி துவங்கிய சென்ற மாதத்தில் ஒருநாள் அதிகாலை மல்லிகாவிடம் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும்போது “காபி குடிச்சிட்டீங்களா?” என்றார். அப்போதுதான் நினைவில் வந்தது - பேலியோ ஆரம்பித்த கடந்த ஏழெட்டு மாதங்களாக காலையில் காபியோ டீயோ குடிக்கவில்லையென்று (காலை உணவின்போதும், மாலையிலும் வெண்ணையோ அல்லது நெய்யோ கலந்த டீ மட்டும்); அதன் ஞாபகமே எழவில்லை.

பா.ராகவன், சைவ பேலியோவிற்கான என் உந்துசக்தியாக இருந்தார். விமலாதித்த மாமல்லன் அவருக்கேயுரித்தான முறைப்படுத்தப்பட்ட பேலியோவில் இருக்கிறார். அவர் வழிகாட்டுதலில் ரமேஷ் பிரேதனும் பேலியோ துவங்கி அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அறிந்தேன்.

என் புரிதல்கள்...

1. பேலியோ, வெறும் எடைக் குறைப்பிற்கான உணவுமுறை மட்டுமல்ல. உயர் இரத்த அழுத்தம், டயாபடிக் (அலோபதி மாத்திரைகளில் கட்டுப்படுத்த ஆரம்பித்தால் அதற்கு முடிவில்லை; கொஞ்சம் கொஞ்சமாய் டோஸ் அதிகரித்து, அப்புறம் இன்சுலின் இஞ்செக்சன் துவங்கி அதுவும் டோஸ் அதிகரித்து, கிட்னி பழுதாகி அதற்கு டயாலிஸிஸ்...நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது), GOUT, PCOD, ஃபேட்டி லிவர் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக பேலியோ இருக்கிறது. பேலியோவினால் ஆயிரக்கணக்கானோர் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு இயல்பிற்குத் திரும்பியிருக்கிறார்கள்.

2. அறிவியல் பூர்வமானது. ஆரம்பிக்கும் முன் எடுக்கும் இரத்தப் பரிசோதனை தவிர ஒவ்வொரு மூன்று மாதம் அல்லது 100 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. பரிசோதனை முடிவுகளுக்கேற்ப உணவுமுறையில் சிறு மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.

3. அடிப்படை குறை மாவு நிறை கொழுப்பு என்றாலும், ஒவ்வொருவருக்கும் அவரது உடல்நிலைக்கேற்ற உணவுமுறைதான் பரிந்துரைக்கப்படுகிறது. முதல் நூறு நாட்கள் முறையாகக் கடைப்பிடித்து, நாம் விரும்பும் ஆரோக்யம்/உடல்நிலை பெற்றபின், உணவுமுறையில் சிறு மாற்றங்கள் செய்துகொள்ளலாம் டாக்டரின் ஆலோசனை பெற்று (மறுபடி உடல்நிலை பாதிக்காவண்ணம்).

4. இது மேற்குலகில் முன்னரே அறிமுகமாகி, இருந்துவந்த உணவுமுறை என்றாலும் இப்போதாவது இங்கு வந்ததே அதுவரையில் எனக்குச் சந்தோஷமே. எத்தனை பேருக்கு அவர்களின் வாழ்வை மீட்டெடுத்திருக்கிறது!. எதிர்காலம் இருண்டுபோய், அல்லோபதி மருந்துகளின் ஆதிக்கத்தோடு, நோய்களோடு வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்த பலர் வாழ்வில் ஒளியேற்படுத்தியிருக்கிறது.

5. உடல் பற்றிய விழிப்புணர்வை, அவதானிப்பை அதிகரித்திருக்கிறது. விட்டமின் டி பற்றியும், அபோ எ, அபோ பி பற்றியும், கிரியேட்டினின் பற்றியும், LLDL பற்றியும், HSCRP பற்றியும் சாதாரண மக்களையும் அறிந்துகொள்ளச் செய்திருக்கிறது.

6. நமது இயல்பான பழக்க வழக்கங்களால், நமது உணவுமுறையால், நாம் ஆரோக்யமாக இருந்தால் நமக்கு உணவுமுறையில் மாற்றம் ஏதும் தேவையில்லைதான். மேலும் உங்கள் உணவுக் கட்டுப்பாட்டையும், உங்கள் உணவு ஒழுங்கையும் நானறிவேன்; நீங்கள் பசிக்காமல் உண்பதில்லை, பெரும்பாலும் இரவுணவு பழங்கள், மாலைக்கு மேல் டீ, காபி குடிக்கமாட்டீர்கள் என்று வாசித்திருக்கிறேன். மேலும் படைப்பூக்கத்தின் உச்சத்திலிருக்கும் உங்களைப் போன்ற ஒருவருக்கு, இயல்பான உணவு முறையில் மாற்றம் என்பது திசை திருப்பும், தொந்தரவு செய்யும் ஒரு விஷயமாயிருக்கலாம்.

ஆனால் என்னைப் போன்று தவறான உணவுப் பழக்கங்களினால், தன் உடலை தானே தவறான நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் பெரும்பான்மை சதவிகிதத்தினருக்கு இது ஒரு நம்பிக்கை கீற்று. என் அம்மா வழி தாத்தா முற்றிய சர்க்கரை நோயினால்தான் இயற்கை எய்தினார். அப்போது இவ்வுணவு முறை பற்றி எனக்குத் தெரியாது; தெரிந்திருந்தால் அவர் ஆயுளை இன்னும் கொஞ்சம் வருடங்கள் நீட்டித்திருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.

எழுதலும் அடங்கலும் இயல்பே; எனக்குப் புரிகிறது. ஆனால் எழும்போது எத்தனை பேருக்கு நன்மை செய்கிறது என்பதும் முக்கியம்தானே?

பேலியோவை எனக்குச் சொல்லி, என் ஆரோக்கியத்திற்கு நல்வழி காட்டிய உங்களுக்கு என் ஆழ்ந்த இதயம் கனிந்த அன்பும் வணக்கங்களும் நன்றியும். கடந்த மே-யில் நாகர்கோவிலில் வீட்டிற்கு வரும்போது அதிக உடல் எடையுடன், நடக்கச் சிரமப்பட்டுத்தான் மல்லிகாவுடனும், இயலுடனும் வந்தேன். இவ்வருடமும் மே-யில் இந்தியா வருகிறேன். வாய்ப்பிருந்தால், உங்கள் அனுமதியோடு, உங்களையும், அருண்மொழி மேடத்தையும், அஜி, சைதன்யாவையும் சந்திக்கவேண்டும். எல்லோருக்கும் அன்பு.