வாசிப்பனுபவம் - புல்வெளிதேசம்

From HORTS 1993
Revision as of 00:08, 14 March 2020 by Raj (talk | contribs) (1 revision imported)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

புல்வெளி தேசம் - மறுவாசிப்பு

முன்னரே அன்றன்று தளத்தில் வந்தபோது படித்ததுதான் என்றாலும், ”புல்வெளி தேசம்” புத்தகமாய் வந்தபின் ஒருமுறை படிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன். காரணமிருக்கிறது.

ஆஸ்திரேலியா, நாங்கள் கொய்மலர் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. கொய்மலர் வணிகம், ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் நாடு. கென்ய கொய்மலர் நிறுவனங்களின் ஆஸ்திரேலிய ஏற்றுமதி வருடாவருடம் உயர்ந்துகொண்டுதான் இருக்கிறது, சில செய்முறைச் சிக்கல்கள் இருந்தாலும். உதாரணத்திற்கு, ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்வதாயிருந்தால் ரோஜாக்களை, பூக்களின் அடிப்பாகத்திலிருந்து தண்டின் கீழ்வரை களைக்கொல்லியில் குறிப்பிட்ட நேரம் அமிழ்த்தி, அதன் கண்களை மலட்டுத்தன்மை அடையச் செய்து, உலர்த்தி, அதன்பின்புதான் பேக் செய்யமுடியும். அங்கு இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், தண்டின் கண்களை வைத்து புதிய செடிகள் உருவாக்கிவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வேற்பாடு. இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியா மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்டது. இரண்டு வருடங்கள் முன்பு நடந்தது - ஆஸ்திரேலிய ஏற்றுமதிக்கு அதிகம் மெனக்கெட வேண்டுமென்பதால், சில சோம்பல் கென்ய கொய்மலர் நிறுவனங்கள், அச்செய்முறை செய்யாமலேயே மலர்களை ஏற்றுமதி செய்யும். இரண்டு வருடங்களாக கண்காணித்த ஆஸ்திரேலிய அரசு மூன்றாம் வருடம், இங்கிருக்கும் ஆஸ்திரேலிய எம்பஸிக்கு தெரிவித்து, எம்பஸியிலிருந்து கென்ய மலர் கூட்டமைப்பிற்கு, இது தொடர்ந்தால் கென்யாவிலிருந்து கொய்மலர் இறக்குமதியை தடைசெய்ய வேண்டியிருக்கும் என கடிதம் அனுப்பியது. அதன்பின்புதான் பதறி விழித்த மலர் கூட்டமைப்பு ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யும் மலர் நிறுவனங்களுக்கு தங்கள் குழுவை ஆய்விற்கு அனுப்ப ஆரம்பித்தது.

வேலை அதிகமென்றாலும், ஆஸ்திரேலிய ஏற்றுமதியில் நல்ல வருவாய் இருக்கிறது. முன்பு சிட்னியிலும், மெல்பர்னிலும்தான் மலர் வணிகம் அதிகமிருந்தது. இப்போது பெர்த்-ம் அவ்வரிசையில் இணைந்திருக்கிறது.

”புல்வெளி தேசம்” நண்பர் சக்தி இந்தியாவிலிருந்து கொண்டுவந்திருந்தார். புத்தகமாய் வாசித்தது, நல் அனுபவமாய் இருந்தது ஜெ. எவ்வளவு விரிவான குறிப்புகள்! இணையத்தில் படிக்கும்போது, எத்தனை தவறவிட்டிருக்கிறேன் என்று இப்போது தெரிந்தது.

நீங்கள் சொல்லியது போல் “பயணம் எப்போதும் ஒரு பெரும் கவர்ச்சி”தான். பயணங்களில்தான் மனதில் எண்ணங்கள் (கற்பனைகள்?) தொடர்ச்சியாய், விரிவாய் வருவதாக எனக்கு ஒரு பிரமை உண்டு. திரும்பிப் பார்க்கும்போது, சிறு பயணமோ அல்லது நெடும் பயணமோ, பயணங்களின் எல்லா நிகழ்வுகளுமே ஞாபகத்தில் இருக்கின்றன.

ஒவ்வொரு அத்தியாயமும்/கட்டுரையும், ஒரு இந்திய அனுபவம்/நினைவில் இருந்து ஆரம்பித்து ஆஸ்திரேலியாவில் விரிந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. புதர்த்தீ நிகழ்ந்து முடிந்த “மேரீஸ்வில்” கிராமத்தின் ஒரு ஓய்வான நாளின் திருவிழா போன்ற காட்சி பரவசமான ஒரு கற்பனையை மனதில் உருவாக்கியது. தங்கவேட்டை நடந்த பலாரட், கலிபோலி போர்க்குறிப்புகள், கான்பெரா போர் நினைவுக் குறிப்புகள், ஜாக் சிம்ப்ஸனின் கழுதை, கான்பெரா கலைக்கூடம், வீ ஜாஸ்பரின் கேரி பிலக் குறிப்புகள், அந்த ஊர் செம்புலிங்கம் “ரெட் கெல்லி”-யின் கதை, கந்தராஜாவின் “வெள்ளிக்கிழமை விரதம்” - எல்லாமே இந்த இரண்டாம் வாசிப்பில் மனதில் பதிந்துவிட்டன.

என்னுடன், தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளங்கலை தோட்டக்கலை படித்த மஹாலட்சுமி, இப்போது தென் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் வசிக்கிறார்; முன்பு இங்கு பாண்டிச்சேரியில் பஜன்கோ-வில் உதவி பேராசிரியராய் வேலை பார்த்தார். தற்போது அடிலெய்டில் ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார். எங்கள் தோட்டக்கலை வகுப்பின் வாட்ஸப் குழுமத்தில் அவ்வப்போது ஆஸ்திரேலியா பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்வார். தமிழ் எழுத்துக் கூட்டி மெதுவாய் வாசிப்பார். “புல்வெளி தேசம்” அவருக்கு அனுப்பவேண்டும்.

2007-லிலும், 2009-லும் இருமுறை கொய்மலர் வணிகத்தில் ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் வாய்ப்பு அருகில் வந்து விலகிச் சென்றது. வயது நாற்பத்தைந்தாகிறது என்றாலும் மறுபடியும் ஏதேனும் நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்பட்சத்தில், தயங்காமல் ”ஆம்” சொல்லவேண்டும் :).

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பெட்டியில் கத்தரிக்கோல் கிடைத்த கணத்திலிருந்து வாசிக்கும்போது அங்கங்கே சிரித்துக்கொண்டும் புன்னகைத்துக் கொண்டுமிருந்தேன். சொம்பில் பால் கறக்கும் ஒலிபோல் கேட்ட ஸீட் பெல்ட் போடும் ஒலி, “பர்கரைச் சாப்பிட ஏற்ற வாயுள்ளவர்கள் ஆப்பிரிக்கர்கள்தான்”, “பொம்பள சிரிச்சாப் போச்சு; பர்கரைப் பிரிச்சாப் போச்சு” என்று ஒரு பழமொழி இருக்கு தெரியுமா?”, “மம்மத ராசா” என்று ஓலமிடும் மொத்த மதுரை, “குற்றாலத்தில் குரங்குகள் என்றால் “போஸ்” கூடக் கொடுக்கும்”, கூட்டு முயற்சியில் ஆக்கப்பட்ட திகசி-யின் ஆகச் சிறந்த படைப்பு, “எவளாரெடே நெயனதாரெயோ?” என்றேன்; அதன்பின் அருண்மொழி ஒருமணி நேரம் என்னிடம் பேசவில்லை...எல்லாம், பேலியோவின் சூரியக் குளியல் நேரமான அந்த நண்பகல் வாசிப்பின்போது வெடிச்சிரிப்பினை உண்டாக்கின.

ஆம், உலகப் புகழ்பெற்ற சிற்பியான டாரில் ஜாக்சன் உட்பட பல சிற்பிகள் இணைந்து வடிவமைத்த “க்ரௌன் காஸினோ” 1997-ல் திறக்கப்பட்ட நாளில் நடந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை அங்கு செய்தியாக மட்டும் குறித்து வைக்காமல், படமும் வைத்திருக்கலாம்!