விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்

From HORTS 1993
Revision as of 00:08, 14 March 2020 by Raj (talk | contribs) (2 revisions imported)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

2016 ஏப்ரலில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் ஜெயமோகனுடனான புது வாசகர் சந்திப்பில் (கோவை காந்திபுரத்தில்) கலந்துகொண்டேன். அப்போதுதான் ஜெ-வை முதன்முதலில் பார்ப்பது. பரவசமும், வியப்பும் கலந்து ஒரு கனவு நிலையில் இருந்தேன். இருநாள் நிகழ்வு. முதல்நாள் மதிய உணவு சாப்பிட்டு முடித்து கைகழுவிக்கொண்டிருந்தபோது, பின்னால் ஜெ நின்றிருந்தார். நான் நடக்க சிரமப்படுவதைப் பார்த்துவிட்டு (வலதுகால் இரண்டு வயதிலிருந்தே இளம்பிள்ளை வாதத்தால் சிறிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது) “நீங்க வெயிட் கம்மி பண்ணணும் (அப்போது என் எடை 95 கிலோவிற்கும் அதிகம்) பேலியோ ட்ரை பண்ணுங்க” என்றார். ஏற்கனவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் விஜய் சூரியன், அரங்கா பேலியோவை வெற்றிகரமாகத் துவங்கி தொடர்ந்துகொண்டிருந்தனர். அதிக கார்பின் (Carbs) எதிர்விளைவுகளை நண்பர்களும் சொன்னார்கள்.Paleo1.jpg

அதன்பிறகுதான் பேலியோ பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். என்றாலும் துவங்குதில் தயக்கமும், தாமதமும் ஆனது. ”பேலியோ என்றாலே அசைவம்தான்; சைவ பேலியோ கடைப்பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்” என்ற வதந்தி வேறு காதுகளில் விழுந்துகொண்டிருந்தது (அசைவம் சாப்பிடுவது நிறுத்தி 27 வருடங்கள் ஆயிற்று). ஒருமாத விடுமுறையும் சீக்கிரம் முடிவுக்கு வந்ததால், அவசர அவசரமாக கென்யாவிற்கு திரும்பினேன். கிட்டத்தட்ட பேலியோவை மறந்தும் போனேன். மல்லிகாதான் மறுபடி இந்தியாவிலிருந்து நினைவுபடுத்தியது. மல்லிகா பேலியோ பற்றிய செல்வன் சாரின் புத்தகத்தையும், மல்லிகை பிரசுரத்தின் பேலியொ அனுபவங்கள் கொண்ட சிறு புத்தகத்தையும் படித்து, யுட்யூபில் வெவ்வேறு நகரங்களில் நடந்த பேலியோ நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு ஃபோன்செய்து “நான் பேலியோ டயட்டிற்கு மாறப் போகிறேன்” என்றது. (மல்லிகாவிற்கு பல வருடங்களாகவே அசிடிடி பிரச்சனை இருந்து வந்தது GERD). என்னையும் துவங்க சொன்னது. நான் இங்கு கென்யாவில் தனியே சமைத்து உண்டு சமாளிப்பதால், என்னால் பேலியோ டயட் சார்ட்டை சரியாக தொடர முடியுமா என்ற சந்தேகத்தில் தட்டிக் கழித்தேன். மல்லிகாவின் இரத்தப்பரிசோதனை முடிவுகளை ஆரோக்யம் & நலவாழ்வு குழுமத்தில் பகிர்ந்தேன். விஜய் சூரியனிடம் தொலைபேசியில் மல்லிகாவிற்கு விட்டமின் டி குறைபாடு பற்றி சொன்னபோது, அவர்தான் சன் செஸ்ஸன் பற்றி விளக்கினார். நானும் பேலியோ துவங்கலாம் என்றும், இங்கு கென்யாவில் என்னென்ன கிடைக்கிறது என்று சொன்னால் வழிகாட்டுவதாகவும் சொன்னார். இதற்கிடையில் என் இரத்த க்ளுகோஸ் அளவுகள் ஏற ஆரம்பித்தன.

2017 மே மாதத்தில் மறுபடி விடுமுறையில் இந்தியா வந்தபோது, முதல் வேலையாய் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது, HbA1c 11.4 காட்டியது. ட்ரைகிளிசரைட், LDL அளவுகளும் அதிகமிருந்தன. இனியும் தாமதிப்பது ஆபத்தானது என்று கோவையில் தியாகு நூலகம் நடத்தும் நண்பர் தியாகுவிற்கு ஃபோன் செய்து யாரைச் சந்திக்கலாம் என்று கேட்டபோது ஈச்சனாரியில் டாக்டர் ஹரிஹரனை பாருங்கள் என்று தொலைபேசி எண் தந்தார்.

தொலைபேசியில் டாக்டர் ஹரிஹரனிடம் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கிக்கொண்டு இயல் மல்லிகாவோடு ஈச்சனாரியில் அவரது கிளினிக்கில் சந்தித்தேன். அதிக கார்ப் உடலில் என்ன செய்கிறது என்று படம்போட்டு விளக்கினார். என் இரத்தப் பரிசோதனை முடிவுகளுக்கான விளக்கத்தையும் டயட் சார்ட்டையும் மின்னஞ்சலில் அனுப்புவதாக சொன்னார். தொடர்ந்து மின்னஞ்சலில் தொடர்பில் இருக்கலாம் என்றார்.

ஜூன் ஒன்றாம் தேதி கிளம்பி கென்யா வந்தேன். மல்லிகா, ஐந்து லிட்டர் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயும், நான்கு கிலோ பாதமையும் கொடுத்தனுப்பியிருந்தது. வெஜ் பேலியோவில் துவங்கலாம் என்றும், முடியவில்லையென்றால் முட்டை அல்லது நான் வெஜ்ஜிற்கு மாறிக்கொள்ளலாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன்.

ஒரு சுபயோக சுபதினத்தில் (ஜூன் மூன்றாம் தேதி) பேலியோ வாழ்வை ஆரம்பித்தேன். இதோ இன்று ஆகஸ்ட் இருபத்தொன்றோடு எண்பது நாட்கள் ஆயிற்று. டாக்டர் ஹரிஹரனோடு தொடர்ச்சியாய் தொடர்பில் இருக்கிறேன்.

பேலியோ ஆரம்பித்த முதல் வாரத்திலேயே டயாபடிக் மாத்திரைகளை நிறுத்திவிட்டேன் (டாக்டர் ஹரிஹரனை ஆலோசித்துவிட்டு). பேலியோ ஆரம்பித்தபோது எடை 91.6 கிலோ. இன்று 76.6 கிலோ. 80 நாட்களில் 15 கிலோ குறைந்திருக்கிறது. LDL 197 mg/dl-லிலிருந்து 117-க்கு வந்திருக்கிறது; ட்ரைகிளிசரைட் 253 mg/dl-லிலிருந்து 121-ற்கு கீழிறங்கியிருக்கிறது.


அறிமுகம் தந்த ஜெ-விற்கு நன்றி. மல்லிகாவிற்கு என் ஸ்பெஷல் ப்ரியங்களும், அன்பும். செல்வன் சாருக்கும், ஹரிஹரன் சாருக்கும், பேலியோ குழுவின் நண்பர்களுக்கும் நன்றி. ஒரு விஷயம் கவனித்தேன் - பேலியோவில் இருக்கும் அனைவரும் எழுத்திலும் பேச்சிலும் அசத்துகிறார்கள் (தல செல்வன் சார் தொடங்கி சவடன் சார், ஃபரூக் சார், சங்கர்ஜி, சிவராம் சார், மனோஜ் ஜி எல்லோரும்). தொடர்ந்து பேச்சினூடே என்னை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்திய பாலாவிற்கு சிறப்பு நன்றிகள். முகநூல் நண்பர் க்வாலாலம்பூர் யுவராஜன் அவர்களுக்கு வணக்கங்கள் (அவரின் பேலியோ அனுபவப் பதிவுதான் எனக்கு முதல் ஊக்கம் தந்தது). பாரா சாரின் பேலியோ பதிவுகள் உற்சாக டானிக்.

மனது விசாலமாகவும், புத்துணர்வோடும், உற்சாகமாகவும் இருக்கிறது. கூடவே நெகிழ்வாகவும். இப்போதெல்லாம் ஆரோக்யம் & நல்வாழ்வு குழுமத்தில், ப்ளட் ரிப்போர்ட் போட்டு டயட் சார்ட் கேட்கும் பதிவுகளைப் பார்க்கும்போதெல்லாம் மனது இயல்பாகவே அவர்களின் நலத்திற்காய் பிரார்த்திக்கிறது.

ஜூன் ஒன்று அதிகாலை ஒரு மணிக்கு, கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் மல்லிகாவும், இயலும் வழியனுப்பியபோது, இயல் சொன்னது “அப்பா, அடுத்தவருடம் இந்தியா வரும்போது நல்லா ஃபிட்டா வரணும்”. எப்போதும் இருக்கும் பயணங்களின் விடைபெறல் தருணத்தின் நெகிழ்விலிருந்தேன். இயல் சொன்னதைக் கேட்டதும், மல்லிகா மற்றும் இயலுக்காகவாவது இதை செய்தே தீருவது என்று முடிவெடுத்தேன். Paleo2.jpg

எனக்கு மிகப்பிடித்த பாரதியின் பாடல்...

”விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன் நசையறு மனங்கேட்டேன் நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன் தசையினைத் தீச்சுடினும் சிவ சக்தியைப் பாடுநல் லகங்கேட்டேன் அசைவறு மதிகேட்டேன் இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?”

இனிமேல் என் ப்ரார்த்தனையும், இலக்கும் இதுதான்; முயற்சிகளும். ஆரோக்யத்தின் மீதான விருப்பையும், வைராக்யத்தையும் என்னுள் எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பாய் இறைவா!

அடுத்த மாதம் செப்டம்பர் பதிமூன்று இயல் பிறந்தநாள். இயலுக்கு பிறந்தநாள் பரிசாகவும், மல்லிகாவிற்கும் என் ஆரோக்கியத்தைத் தவிர வேறென்ன சிறப்பான பரிசாய் தந்துவிடமுடியும்?