Amma
எனக்கே தெரியாது நண்பா...😜😍.
பள்ளி காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதியது.
கல்லூரியில் கூட ஒரு சில எழுதியிருக்கிறேன் கவிதை என்ற பெயரில்😍.
அதன் பிறகு இரண்டாயிரத்து பதிமூன்றில் எனைப் பெற்றவளை நான் எதிர்பாராமல் பறிகொடுத்த போது பித்து பிடித்தவளானேன். ஏற்கனவே குறிப்பிட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். பல நாட்களாக உண்ணாமல் உறங்காமல் கணவரையும் , தவம் இருந்து, நான் பெற்றதையும் கூட மறந்து மதி குழம்பி, அலைந்தேன். உடல் எடை சர சரவென இறங்கியது. மருத்துவரிடம் கூட அழைத்துச் செல்லப்பட்டேன். சில மருந்துகள் உட்கொண்டேன் பலனில்லை. இரவு முழுவதும் இமை மூடாது , விழிகள் விரிந்தே இருக்கும். பேச்சு கூட குறைந்து போனது. எப்படி இந்த ஈடில்லா இழப்பை கடக்க போகிறேன் என தெரியாமலேயே நகர்ந்த நொடிகளில், ஏதோ ஒரு வேகத்தில் விரல்கள் எழுதுகோலை கவ்வியது. மை ஊற்ற மறந்து எனது குருதியை நிரப்பி வார்த்தைகளாக கொட்டினேன். அப்பொழுது இரண்டு வழிகளில் எனது வேதனை இறங்கிக் கொண்டிருந்தது. ஒன்று எழுதுகோல் வழி. மற்றொன்று என் விழி வழி சுடும் நீராக... எப்படி ஆரம்பித்தேன்... எப்போது எப்படி முடித்தேன் என்பது நான் அறியாதது இன்று வரை. பல பக்கங்கள் கடந்து சென்றன என் துக்கங்கள். எனக்கான ..என் தாய்க்கான உணர்ச்சிகள் அனைத்தையும் அவள் மடி சாய்ந்து நான் பகிர்ந்தது போன்ற ஒரு உன்னத உணர்வு. தொண்டையை அடைத்த துக்கம் , தாயின் அரவணைப்பில் கீழிறங்கி ஜீரணமானது போன்ற ஒரு இலேசான உணர்வு. வார்த்தைகளால் அதை வடித்து விட முடியாது. அன்று நின்றது என் அழுகை. ஆனால் அதைப் படித்த ஒவ்வொரு இதயமும் மீண்டும் அழத் தொடங்கின, கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்கள் கழித்து. கண்களில் கண்ணீரோடு எனை நோக்கினர். என் விழிகள் உலர்ந்து இருந்தன. அதன் பிறகு என் தாயை மனதிற்குள் பத்திரப்படுத்தி விட்டேன். அதன் பிறகு அவளுக்காக கண்ணீர் சிந்த வில்லை. நான் அன்றிலிருந்து தான் தெளிவாக நின்றேன். அன்று தான் பசியும் உணர்ந்தேன். நித்திரை நினைந்தேன். எனக்கான வைத்தியம் என் விரலில் தான் இருக்கிறது என்று அன்று புரிந்து கொண்டேன். அதைப் படித்து சில இதயங்கள் , நன்றி சகோதரி நான் இது வரை என் தாயை பார்த்த பார்வை வேறு ... இனிமேல் பார்க்கும் பார்வை வேறு என்று சொல்லிச் சென்றன. அது தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் எழுதிய நீண்ட உரை. பிறகு மீண்டும் இடைவெளி தான். ஆனால் இந்த சில நாட்களாக... குறிப்பாக மலேசியா வந்த பிறகு காலமும் சூழ்நிலையும் எனக்கு ஏதுவாகியது. எழுத தூண்டியது. எனவே இங்கு தான்... இந்த மலேசிய மண்ணில் தான், நான் தமிழை தொடர்ந்து வளர்க்க அதாவது எழுத.... படிக்க கற்றுக் கொண்டேன். கற்றுக் கொண்டும் இருக்கிறேன். எழுத்துலகில் நான் கத்துக்குட்டி...😜. அன்று எனக்காக ... எழுதிய நான்,இன்று எல்லோருக்காகவும் எழுத தொடங்கி இருக்கிறேன். இனி என் மூச்சு உள்ளவரை தொடர முயல்வேன்...🙏🙏🙏.