தஸாவெஸ்கி
Intro
இதோ தஸாவெஸ்கியின் சிந்தனைகளில் இருந்து சில துளிகள் உங்கள் பார்வைக்கு...
"வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தங்களை புரிந்து கொள்ளும் முன்பு, வாழ்க்கையை நேசிக்க வேண்டும்"
"அன்பைப் போல மன்னிப்பும் நிபந்தனையற்றது. மன்னிக்க முடியாததை மன்னிப்பதுவே அன்பு.... காதல்...அறம்."
"ஒரு அப்பாவி குழந்தை துன்புறுத்தப்பட்டால் அக் குழந்தையின் கண்களில் இருந்து விழுகின்ற ஒரு துளி கண்ணீரின் பொருட்டு, நான் எனது சொர்க்கத்திற்கான நுழைவுச் சீட்டை மிக தாழ்மையுடன் திருப்பிக் கொடுத்து விடுவேன்..."
"எவ்வளவோ இழப்புகள் ... இருந்தாலும் நான் வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன். வாழ்க்கையை வாழ்க்கைக்காக மட்டுமே நேசிக்கிறேன்..."
"மனச்சாட்சியைக் கொண்ட மனிதன் தன் பாவத்தை உணரும் போது துன்பப்படுகிறான். அதுவே அவனுடைய தண்டனை..."
🙏🙏🙏.
- தமிழச்சி கலாவதி அய்யனார்#.
பியோதர் மிக்கைலோவிச் தஸ்தயேவ்ஸ்கி
இந்த பெயர் உலக இலக்கியத்தில் தனக்கென்று ஒரு உன்னத இடத்தை மிக உயரிய நிலையில் பெற்றுள்ளது. தந்தையர் நாடான, ரஷ்ய இலக்கிய உலகின் கதாநாயகனாக, கடவுளாக வாழ்ந்து வரும் தஸ்தயேவ்ஸ்கி பற்றி, சில சிந்தனைகளை என் எழுத்துக்கள் மூலம் உங்களுடன் பகிர்வதில், நானும் கொஞ்சம் தஸ்தயேவ்ஸ்கியை படிக்க, அன்பு செலுத்த முயற்சி செய்து இருக்கிறேன்.
உருசிய நாட்டின் பெரும் படைப்பாளியான, உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுக்க முயன்ற அந்த மனிதாபிமானம் மிக்க, இரக்கத்தின் சாயலை, அன்பின் தேடலை,தன் ஆத்மார்த்தமான சிந்தனைகளால் அனைவரையும் இன்று வரை கட்டிப் போட்டு இருக்கும் அந்த மாபெரும் இலக்கியவாதியை, தத்துவமேதையை முழுவதுமாக என்னால் கொடுத்து விட முடியாது. அந்த பெருங்கடலின் ஒரு சிறு துளியைத் தான் உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். இதிலிருந்து நீங்கள் அவசியம் அதன் ஆழத்திற்குள், ஆளுமைக்குள் செல்ல முயலுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
உலக இலக்கிய வரலாற்றில் மிக முக்கிய ஐந்து மேதைகளை கணக்கிட்டால் அதில் பெரும்பாலும் உருசிய மேதைகளே வருவார்கள் என்ற கருத்தும் கூட இலக்கிய உலகில் நிலவுகின்றது. அந்த வகையில் இவான் துர்கனேவ் மார்க்சியம் கார்க்கி , புஷ்கின், டால்ஸ்டாய் போன்ற புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களிடமிருந்து, சிறிது வேறுபட்டு உணர்ச்சிகளின் குவியலாக உருவாக்கப் பட்டவர் தான் தஸ்தயேவ்ஸ்கி.
ஆயிரத்து எண்ணூற்றி இருபத்து ஒன்றில் , மாஸ்கோவில் பிறந்த தத்துவஞானி தான் இந்த தஸ்தயேவ்ஸ்கி. ரஷ்யாவின் தலைநகரில் பிறந்த தஸ்தயேவ்ஸ்கி , மனித மனங்களின் ஆழங்களை அறிய முற்பட்டு, மிகச் சிறந்த உளவியலாளராக உருவானவர்.
மருத்துவரான தந்தைக்கும், அன்பே உருவான தாய் மரியாவிற்கும், எட்டு பிள்ளைகளுள் இரண்டாவதாக பிறந்தவர். இளமையிலேயே பாட்டி அலேனா சொன்ன கதைகள் மூலம் இலக்கிய ஆர்வம் முளை விடத் தொடங்கியது தஸ்தயேவ்ஸ்கிக்கு. தாய், பைபிள் வழியாக எழுதப் படிக்க கற்றுக் கொடுத்த இனிய குழந்தைபருவம் அவருடையது. வளர்ந்து பின்னர் புஷ்கின், ஷேக்ஸ்பியர், பிளாட்டோ போன்ற ஆளுமைகளை தேடித் தேடி படிக்கத் தொடங்கினார்.
இவரின் குழந்தை பருவத்தில் விடுமுறை நாட்களில், தரவோயே என்னும் தோட்டத்தில் , பண்ணை வீட்டிலும் அங்கு பணியில் இருந்த விவசாயிகளுடனும் கழிக்கும் சிறு சந்தோஷம் மட்டுமே வாய்க்கப் பெற்றிருக்கிறார். அன்றைய வாழ்க்கையில் அந்த ஒரு சில நாட்கள் தான் அவருக்கு மறக்க முடியாத பொழுதுகளாக இருந்திருக்கின்றன. மிக இளம் வயதிலேயே தாயை இழந்தார். அதே வருடத்தில் தான் அவர் மிகவும் மதித்த மிகப் பெரும் இலக்கியவாதி புஸ்கினும் இறந்தார். தன்னால் அதிகம் அன்பு செலுத்தப்பட்ட, தான் விரும்பிய இரண்டு உயிர்களை அடுத்தடுத்து இழந்தது அவரை மிகவும் பாதித்தது.
அதே வேளையில் தான், பள்ளிப் படிப்பு முடிந்து இராணுவ பொறியியல் மையத்தில் சேர்க்கப்பட்டு இருந்தார். தந்தைக்காக பொறியியலில் சேர்ந்த போதும், இலக்கியமே அவரை இழுத்துச் சென்றிருக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் தனது அண்ணன் மிகயீலுடன் , கல்லூரி படிப்பு. இருவரும் வேறு வேறு மையத்தில் சேர்க்கப்பட்டு படிப்பை தொடர்ந்தனர். இருந்த போதும் தஸ்தயேவ்ஸ்கியின் கவனம் முழுவதையும் இலக்கியமே ஆக்கிரமித்து இருந்தது. பீட்டர்ஸ்பர்க் நகரத்தில், தனக்கான,தன் ரசனைக்கான ஒரு புதிய பாதையை வீதியெங்கும் நடந்தே தேடித் திரிந்த காலங்கள் அவை. பீட்டர்ஸ்பெர்க்கின் மூலை முடுக்கெல்லாம் நடந்து திரிந்து, தன்னை அறிய முற்பட்ட விடலைப் பருவம் அது. மாஸ்கோவில் பிறந்தவரேயானாலும், அவருக்கு பீட்டர்ஸ்பர்க் தான் மிக நெருக்கமாகிப் போனது. எங்கும் தேவாலயங்கள் நிறைந்த மாஸ்கோவை விட, புதுமைகள் நிறைந்த இந்த பீட்டர்ஸ்பர்க் நகரமே தஸ்தயேவ்ஸ்கி யால் நிறைய நேசிக்கப் பட்டு இருக்கிறது. அவருடைய வெண்ணிற இரவுகள் நாவலில் இந்த பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் வீதிகள் எல்லாம் உலா வருகின்றனவாம்.
தாயை இழந்து இரண்டே ஆண்டுக்குள், சற்று முரண்பாடான குணம் கொண்ட தந்தை, ஒரு சிலரால் கொடுமையாக கொல்லப்பட்டார் என்ற செய்தி அறிந்து, முதன்முதலில் அவருக்கு வலிப்பு நோய் வந்ததாக சொல்லப்படுகிறது. பெரிதாக நேசிக்கப்படாத தந்தையேயானாலும், இழந்த போது அதுவும் கொடூரமாக இழந்த போது மிகவும் பலவீனமாகிப் போகிறார்.
பீட்டர் பால் கோட்டையில், அரசுக்கு எதிரான குற்றவாளியாக, செய்யாத குற்றத்திற்கு அடைக்கப்பட்டு, இரண்டாம் வரிசையில் மூன்றாம் ஆளாக, பதினாறு பேர்களில் ஒருவராக நின்று கொண்டு இருந்த தஸ்தயேவ்ஸ்கி, ஜார் மன்னரின் ஆணையால் மரண தண்டனையில் இருந்து கடைசி நிமிடத்தில் தப்பிக்கிறார். மரணம் உரசிச் சென்ற அந்த நொடியில் மீண்டும் அவருக்கு வலிப்பு.
தனது இருபத்தெட்டாவது வயதில், மரணம் வரை சென்று திரும்பியதாலோ என்னவோ, அதன் பிறகு வாழ்வை முழுமையாக நேசிக்க முடிவு செய்தார். மறுபிறவி போல் உணர்ந்து, அடுத்து கிடைத்த முப்பத்திரண்டு வருடங்களையும், தன் எழுத்துக்கு ஒப்புக் கொடுத்தார். கதைகள், கட்டுரைகள் என தொடர்ந்த வாழ்வில் தத்துவங்களை மனித மனங்களுக்கு கொடுத்துச் சென்றார்.
மரணம் தான் தள்ளிப் போனதே தவிர, துன்பம் அவரை தொடர்ந்து வந்தது. மரணத்திற்கு பதிலாக சிறைவாசம். அதுவும் தண்டனை தேசமான சைபீரியாவில்...! பதினெட்டு நாட்கள் பயணத்திற்கு பிறகு, ஒரு கொடுமையான வாழ்க்கை சைபீரிய சிறையில். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ரண வாழ்க்கை. இருந்த போதிலும் அங்கும் மனிதர்களை நேசிக்க பழகியவர். அவரின் சிந்தனையால் ஒரு சிறைக்கைதி தற்கொலை எண்ணத்தையே மறந்து, வாழ முயற்சித்திருக்கிறான்.
அன்றைய சிறைச்சூழல் தாங்க முடியாத வேதனையை தந்திருக்கிறது. அந்த வேதனை நிரம்பிய வார்த்தைகளை அவர் எழுத்துக்களிலிலேயே தருகிறேன்.
இதோ...
கோடைகாலத்தில், தாங்க முடியாத புழுக்கம். பனிக்காலம், பொறுக்கமுடியாத குளிரைத் தருவது. எல்லாத் தரைகளும் பூஞ்சை பூத்திருக்கும். ஒரு அங்குலம் அளவு கூட தேவையற்ற கழிவுகள் தரையில் தேங்கியிருக்கும். யாரேனும் வழுக்கி விழலாம். பீப்பாயில் அடைக்கப்பட்ட மீன்கள் போல நாங்கள் இருந்தோம். திரும்புவதற்கு கூட இடம் இருக்கவில்லை. விழிப்பதிலிருந்து துயிலும்வரை சேற்றுப் பன்றிகள் போல் நடந்துகொள்ளாமல் இருப்பது மிகக்கடினம் அங்கு ஊரும் பேன்கள், தாவும் விட்டில்கள், சுற்றி வரும் கருவண்டுகள் ...[49].
இத்தகைய கஷ்டங்களுக்கு இடையில், வலிப்பு நோயும் மூலமும் அவரை அடிக்கடி சோர்வடைய செய்தது. கழிவறையின் வீச்சம் கட்டிடம் முழுவதும் பரவியிருந்ததாம். எப்போதேனும் இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் தஸ்தயேவ்ஸ்கி, அங்கு தான் நாளிதழ்களையும் நாவல்களையும் படித்திருக்கிறார்.
அந்த சிறைவாழ்வில் , உணவும் உடையும் அளித்த டிசம்பரிச பெண்கள் அவருக்கு ஒரு புதிய ஏற்பாட்டை கொடுத்து, படிக்கச் சொல்லி இருக்கிறார்கள் வாழ்வின் நம்பிக்கை வளர்த்த நிமிடங்கள் அவை. அதே சிறை வாழ்வில் ஒரு நாள் ஒரு சிறுமி கொடுத்த ஒரு நிக்கல் (நாணயம்) மற்றும் ஏதோ ஒரு பெண்ணினால் அன்பாகக் கொடுக்கப் பட்ட அந்த ' புதிய ஏற்பாடு' புத்தகம் இரண்டையும் இறுதி வரை அவர் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.
எங்கோ யாரோ இரக்கத்தின் பேரில் செய்த, மிகச் சிறிய செயலும் அவரால் புனிதமாகப் பார்க்கப் பட்டு இறுதி வரை பாதுகாக்கப் பட்டு இருக்கிறது. அனைத்திற்கும் மேலாக அவரின் மரணப்படுக்கையில் அந்த கடைசி நொடிகளில் அவர், அவர் மனைவியிடம் அந்த பைபிளைத் தான், எடுத்து வரச் சொல்லி, சில வசனங்களை அதிலிருந்து படிக்கச் சொல்லி இருக்கிறார். கூடவே அன்போடும் அக்கறையோடும் அதை தமக்கு , தம்முடைய கஷ்டகாலங்களில் கொடுத்த அந்த சக கைதியின் மனைவியை நன்றியோடு நினைத்திருக்கிறார் .
எத்தனையோ அனுபவங்களை சுமந்து கொண்டு, தஸ்தயேவ்ஸ்கி சிறைவாசம் முடிந்து வெளியேறிய போது அவருடைய அண்ணன் மிகயீலிடம், அவர் விரும்பி கேட்டது சில மேதைகளின் புத்தகங்களைத் தான். குறிப்பாக ஹெகலின் புத்தகங்கள். ஹெகலுக்குள் போனவர்கள் மீண்டு வருவது கடினம் என்ற வாசகம் பின்னாளில் தஸ்தயேவ்ஸ்கிக்கும் பொருத்திப் போனது நம் முன்னால் நாம் உணரும் உண்மை...!
அவரே தன் சிறை அனுபவத்தை ' சவங்களின் வீடு' என்று ஒரு நாவலாக வெளியிட்டார்... அதுவே ரஷ்யாவின் சிறை பற்றிய முதல் நாவலாக சொல்லப்படுகிறது.
தனது முப்பத்தி மூன்றாவது வயதில், அலெக்சாண்டர் மற்றும் மரியா குடும்பத்தினரை சந்திக்க நேர்ந்தது. தாயின் பெயர் கொண்டவள் என்பதாலோ...இல்லை தாய் போல் அன்பையும் காட்டியதாலோ என்னவோ, அவர் இன்னொருவரின் மனைவி என்று தெரிந்தும், ஒரு மகனுக்கு தாய் என்று அறிந்தும் மரியா மேல் அளவு கடந்த பாசம் வைத்தார்.அதுவே காதலாகவும் மாறியது.
நண்பனாகிப் போன அலெக்சாண்டருக்காகவும், தான் அன்பு செலுத்தும் அவருடைய மனைவிக்காகவும் அவர்கள் குடும்பத்திற்கு பல உதவிகள் செய்தார். இதை மரியா அறிந்தும் அமைதி காத்தாள். அடுத்த ஓராண்டில் குடி போதையால் உடல் நலம் குன்றி அலெக்சாண்டர் காலமானார்.
தஸ்தயேவ்ஸ்கி, அவளையும் அவள் மகன் பாவலையும் அழைத்துக் கொண்டு பர்னோலுக்கு சென்றார். திருமணம் பற்றிய தன் கோரிக்கையையும் மரியாவிடம் வைத்தார். முதலில் மறுத்தவள் பின் தன் பிள்ளைக்கு உத்தரவாதம் வாங்கி ஒப்புதல் அளித்தாள். அவள் குடும்பத்திற்கே பணி விடை செய்து , பார்த்து பார்த்து காதலித்த பெண்ணை ஆசை ஆசையாக மணமுடித்துக் கொண்டார் தஸ்தயேவ்ஸ்கி.
இந்த அவருடைய முதல் திருமண வாழ்வு பற்றி தஸ்தயேவ்ஸ்கியே கூறுவது... " நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இல்லை... இருந்தபோதும் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்பினோம்...பிரிந்தே வாழ்ந்த போதும் , ஒருவரை ஒருவர் நெருங்கிக் கொண்டும் இருந்தோம்..."
விசித்திரமான உறவாகப் படுகிறதல்லவா நமக்கு...!
ஆம் இந்த நிலை மரியாவின் விசித்திரமான குணாதிசயங்களால் தான் என்று தஸ்தயேவ்ஸ்கியே மொழிகிறார்.
இருந்த போதும் அவள் இருந்த வரை அவளை... அந்த முதல் காதலை அதிகம் நேசித்தார்.
தடம் மாறி, தான் வளர்த்த காதல் என்றாலும் அந்த காதலுக்கு உண்மையாக இருந்தார்.
ஏழாண்டுகள் மட்டுமே அவருடன் இருந்து, மரித்துப் போனாள் மரியா.
இருப்பினும் மகன் பாவலுக்கு இறுதி வரை தந்தையாக இருந்து மனைவி மரியா வின் வாக்கை காப்பாற்றியவர் தஸ்தயேவ்ஸ்கி.
மனைவி மரியா வும், சகோதரன் மிகயீலும் அடுத்தடுத்து இறந்து போக, மரியா வின் மகனுக்காகவும், சகோதரனின் குடும்பத்திற்காகவும் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டார்.
இத்தகைய சூழலில் அவருக்கு இரண்டாம் காதலும் வந்தது.
ஆனால் அது ஒருதலைக் காதல்.
அழகில்லாத, நோயாளியான, பணமில்லாத உன்னை நான் காதலிப்பதா என மறுத்து அவரை உதறிச் செல்கிறாள் ' போலினா சுஸ்லோவா' என்னும் பணக்கார பேரழகி...!
ஆனால் அவள் மட்டும் தான் போனாள்.
அடுத்தடுத்து அவரின் கதைகளில் எல்லாம் அவள் பெயர் கதாபாத்திரங்களாக வாழ ஆரம்பித்தது.
சூதாட்டம் கற்றிருந்த தஸ்தயேவ்ஸ்கி பலமுறை அதில் தன்னையும், தன் பொருளையும் தொலைத்திருக்கிறார்.
இதற்கிடையே அவரின் ' குற்றமும் தண்டனையும்' நாவல் வெளிவருகிறது.
சூதாட்டத்தில் பழகிப் போகும் தஸ்தயேவ்ஸ்கி அதைப் பற்றியே ஒரு நாவலை ' சூதாடி' (The Gambler) என்று எழுதுகிறார் ஒரு இருபது வயது சின்ன பெண்ணின் சுருக்கெழுத்தின் துணை கொண்டு.
அங்கு... நாவல் வளர்ந்த போதே வயதைக் கண் மறைத்து , தஸ்தயேவ்ஸ்கிக்கு அந்த ' அன்னா' என்ற பெண்ணின் மீது காதலும் வளர்ந்தது. அன்னா வும் அவரை அல்லது அவரின் அறிவை, ஆற்றலை அல்லது அந்த சராசரி உயரம் கொண்ட உடலுக்குள் அல்லது சாம்பல் மற்றும் நீலநிறம் கலந்த அந்த கண்களுக்குள் இருக்கும் மனதை விரும்பி இருக்க வேண்டும்...
ஆரோக்கியமற்ற முகத்தோற்றம் கொண்டவரேயானாலும், அந்த கரும்புள்ளிகள் நிரம்பிய முகத்திற்குள் மறைந்து இருந்த அன்பின் ஏக்கத்தை அவள் உணர்ந்திருக்க வேண்டும். எனவே சில காலம் பொறுத்து,அவருக்கு ஒரு நல்ல துணையாக இருக்க ஒப்புக் கொண்டு, அவரின் இறுதி காலம் வரை அவரை மிகச் சரியாக பார்த்துக் கொண்டு, ஆதரவாக இருந்தாள். எப்பொழுதும் பணத்துக்கு கஷ்டப்பட்ட தஸ்தயேவ்ஸ்கியை, மிக நிதானமாக, நேர்த்தியாக கூடவே இருந்து பெலன் கொடுத்தவள் இந்த அன்னா.
இவரின் முதல் காதலான மரியா விடம், முழுமை பெறாத வாழ்வு அன்னா விடம் நிறைவேறியது. அன்னா வுடனான அவரது ஒன்பது ஆண்டு கால திருமண வாழ்க்கையில் அவரது வாழ்வு முழுமை பெற்றது. இலக்கியத்தில் வெற்றி கண்டவர், வாழ்க்கையிலும் வெற்றி கண்டது அன்னா வுடன் தான். அன்னா வினால் தான்.
பொருள்களை விற்றுக் கிடைத்த பணத்தில் ஜெர்மனியில் தேனிலவு அன்னா வுடன். பெர்லினில் புகழ்பெற்ற ட்ரெஸ்டன் ஓவிய அருங்காட்சியகத்தில் நேரத்தை செலவிட்டனர். அங்கும் எல்லா இலக்கிய வாதிகள் போலவே கதைக்கான கருவைத் தேடித் தான் அலைந்தார் தஸ்தயேவ்ஸ்கி. பேடன் பேடனில் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்தார்கள்.
இவர்களின் முதல் குழந்தை சோனியா ஜெனிவாவில் பிறந்து, மூன்று மாதங்களில் இறந்தது. தன் முதல் வாரிசை இழந்த நிமிடங்களில் அவர் அழுது துடித்த வலிகளை, அன்னா வே விளக்கியுள்ளார்.
அறியப்பட வேண்டிய ஒரு முக்கிய செய்தி... உலகப் புகழ்பெற்ற நாவலான ' போரும் அமைதியும்' (War and Peace) என்ற நாவலை எழுதிய டால்ஸ்டாய் யின் மரணப்படுக்கையில் அவரின் தலைமாட்டில் அவர் வைத்திருந்தது ... தஸ்தயேவ்ஸ்கியின் ' கரமசோவ் சகோதரர்கள் ' எனும் புத்தகத்தைத் தான். தஸ்தயேவ்ஸ்கி யோ தன் சிறை வாழ்வில் தனக்கு பரிசாக ஒரு பெண்ணால் கொடுக்கப்பட்ட, புதிய ஏற்பாட்டைத் தான் தேடியிருக்கிறார்.
லியோ டால்ஸ்டாயும், தஸ்தயேவ்ஸ்கியும் சம காலத்தவர்கள் ஆன போதும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போனது. டால்ஸ்டாய் வசதியாக வாழ்ந்த, வாழ்க்கையை அனுபவித்த மனிதர். தஸ்தயேவ்ஸ்கி யோ போராட்டத்தினூடே வாழ்க்கையை, அன்பை தேடிய மனிதர். இருவருமே ஒருவரையொருவர் புரிந்து, மரியாதை செய்தவர்கள்.
அரசன் போல் வாழ்ந்த டால்ஸ்டாய் தன்னை ஒரு ஞானியாகத் தான் பார்க்கிறார். தஸ்தயேவ்ஸ்கி யோ ஒரு தீர்க்கதரிசி போல வாழ முயற்சித்திருக்கிறார். எத்தனை பெரிய இன்னல்களுக்கு மத்தியிலும் தஸ்தயேவ்ஸ்கி இதயங்களை படிக்கவே முற்பட்டு இருக்கிறார். வலிகளோடு வாழ்ந்ததனாலோ என்னவோ, மனங்களின் வலிகளை புரிந்து கொள்கிறார்.
அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தனக்கு முன்னோடி தஸ்தயேவ்ஸ்கி என கூறியதாக சொல்லப்படுகிறது. இப்படி அறிவியலாளரையும் தன் சிந்தனைகளால் கவர்ந்த தத்துவமேதை தஸ்தயேவ்ஸ்கி.
தான் வாசிக்க விரும்பிய உலகின் சிறந்த பத்து புத்தகங்களை பட்டியலிட்ட ' ஓஷோ' வின் வரிசையில் மூன்று இடங்கள் தஸ்தயேவ்ஸ்கி யின் புத்தகங்களுக்கே...!
இவரின் மிக பிரபலமான நாவல்களின் வரிசையில் வெண்ணிற இரவுகள், கரமசோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டனையும், அசடன் போன்றவைகள் முக்கியமானவைகள்.
அவரின் வெண்ணிற இரவுகளே நமக்கு ' இயற்கை' யாக திரையில் விரிந்தது. அவரின் கதைகளில் உலா வந்த கதாபாத்திரமான ' மிஸ்கின்' என்ற பெயரின் தாக்கத்தால் இன்றும் நம்மிடையே ஒரு மிஸ்கின் உலா வருகிறார்.
கிறித்துவத்தில் வளர்ந்து, மதத்தின் பற்றுக் கொண்டிருந்த தஸ்தயேவ்ஸ்கி, பிரஞ்சு அறிஞர்கள் மூலம் சோஷலிசத்திலும் ஈடுபாடு கொண்டு இருந்தார். சமய நம்பிக்கை கொண்டிருந்த தஸ்தயேவ்ஸ்கி ' போட்டியஸ் துறவி' என்று கூட அழைக்கப்பட்டு இருக்கிறார்.
சொல்லிக் கொள்ளும்படி வசதி வாய்ப்புகள் இல்லாதபோதும், வாழ்க்கையை முழுமையாக உணர்ந்து வாழ முயன்ற, உன்னத இதயம் படைத்த, இலக்கியவாதி தான் இந்த தஸ்தயேவ்ஸ்கி.
எல்லாவற்றையும் விட, எந்த நிலையிலும் பெண்களை மிகவும் மதிக்கத் தெரிந்த மனிதராக வாழ்ந்திருக்கிறார். அது அவரின் தாய் மரியாவின் பாதிப்பாகவே இருக்கலாம். கண்டிப்பான, மிகவும் கடுமையான தந்தையைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ அவர் மனதில் பெண்மைக்கே மரியாதை அதிகமாக இருந்திருக்கிறது.
இறுதிவரை பார்த்துக் கொள்ளவே முடியாமல் போன டால்ஸ்டாய், குறைந்தபட்சம் அவரது மனைவியையாவது சந்திக்கலாமே என்ற நோக்கத்தில், தஸ்தயேவ்ஸ்கி யின் மறைவிற்குப் பிறகு அன்னா வை சந்திக்க வருகிறார். அன்று அவர் கண்டது ஒரு பெண் தஸ்தயேவ்ஸ்கி. ஆம் அன்னா, டால்ஸ்டாயினால் தஸ்தயேவ்ஸ்கியாகவே உணரப்படுகிறார்.
நடை , உடல்மொழி அனைத்தும் தஸ்தயேவ்ஸ்கி யிடமிருந்து அன்னா விற்கு இடமாறி இருந்தது அவர்கள் இருவருக்குமான ஆழமான புரிதலை விளக்குகிறது. இதை அன்னாவே ஒப்புக் கொள்கிறார். ஒன்றுபட்ட மனங்களின் முன் வித்தியாசங்களும் குறைந்து கொண்டே வருமோ...! டால்ஸ்டாயின் மனைவி சோபியா வியிடம் கூட அப்படி ஒரு ஒற்றுமை இருந்ததாக சொல்லப் படுகிறது.
" ஒருகணம் மேலெழுந்து வந்த அதிருப்தி அத்துடன் இல்லாமல் போனது" இது அன்னா வின் கூற்று...! நன்றி அன்னா... அது இல்லாமல் போனதால் தான் இந்த உலகிற்கு ஒரு தஸ்தயேவ்ஸ்கி கிடைத்தார்... மிகப் பெரும் இலக்கியவாதி கிடைத்தார்... நோயாலும், வலியாலும், வேதனையாலும்,கடனாலும் உழன்ற போதும், உடன் இருந்து அவர் ஏங்கிய அன்பு தந்ததால் தான் இன்று வரை தஸ்தயேவ்ஸ்கி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்... இனி என்றும் வாழ்வார் ... இதற்கெல்லாம் காரணமான உனக்கு நன்றி *அன்னா"...🙏
ஒவ்வொரு புரட்சியாளருக்கும், ஒவ்வொரு தத்துவஞானிக்கும், ஒவ்வொரு சீர்திருத்தவாதிக்கும், ஒவ்வொரு தீர்க்க தரிசிக்கும், ஒவ்வொரு ஞானிக்கும், முக்கியமாக ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பின்னால் உங்களைப் போல் ஒரு அன்னா வோ, ஒரு ஜென்னி யோ, ஒரு சோபியா வோ இருக்கிறார்கள்... என் எழுத்துக்களை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்... சிந்தனைகள் பிறந்தது வேறு இடமாக இருந்தாலும், அவை முழுமையடைய, தங்கு தடையின்றி பெருக்கெடுத்து ஓட, அவர்களின் எண்ணங்களை எழுத்துக்களாக்க, நிழலாய் இருந்து, மறைந்தே வாழ்ந்து, மறைந்து போகும் உங்கள் விரல்களுக்கு சமர்ப்பணம் இந்த என் எழுத்துக்கள்! இதைத் தான் இந்த கட்டுரையின் நாயகன், கரமசேவ் சகோதரர்கள் எனும் உலகப் புகழ்பெற்ற நாவலைத் தந்த இதயங்களை, குறிப்பாக இளைஞர்களின் இதயங்களை வென்ற உன்னத படைப்பாளி எங்கள் தஸ்தயேவ்ஸ்கி யும் விரும்புவார்.
எந்த தேடலும் இல்லாமல் மனத்திருப்திக்காக எழுதிக் கொண்டு இருந்த என்னை, தனது பேச்சாற்றலாலும், இலக்கிய அறிவாலும் கவனிக்க வைத்து, ஆத்மார்த்தமான தேடலோடு, இலக்கியங்களை படிக்க, அவற்றை படைத்த மேதைகளை படிக்க, அத்தோடு நின்று விடாமல் அவற்றை நான் அறிந்த வகையில் என் எழுத்துக்கள் மூலம் கொண்டு வர மிகப் பெரிய தூண்டுகோலாக இருக்கிற சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
🙏🙏🙏.
-தமிழச்சி கலாவதி அய்யனார்.
Comments
Senthil_M
அருமை கலா! முழுமையாக படித்து பின்பு கருத்துக்களை பதிவிட கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டேன்... இடையில் என் "ஜென்னி"யை பற்றி எழுத வேண்டியதாகி விட்டது! ரஷ்யா ஒரு மிகப்பெரிய கலைக்கூடம்... இலக்கியத்திற்கும்... வாழ்வியல் தத்துவத்திற்கும்... ரஷ்யாவின் பங்களிப்பு ஏராளம் ஏராளம்! எஸ். ரா வுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் இந்த "தஸ்தயேவ்ஸ்கி". அடிக்கடி அவர் பேச்சில்...இவர் வந்து போவதை பார்க்கலாம்! இவரையும் படிக்க வேண்டும்....! பாரதி சொன்ன,
சென்றுடுவீர் எட்டுத் திக்கும்....கலைச்செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்....என்று சொன்னது இந்த தஸ்தயேவ்ஸ்கி என்ற கலை பொக்கிஷத்தையும் சேர்த்துத்தான்!
🙏
(ஆமா....இப்படி.....எழுதி...எழுதி தள்ளுறீங்க....சமையல் எல்லாம் எப்ப நடக்குது....? ! 😜)