காமராசர்

From HORTS 1993
Revision as of 07:24, 15 July 2020 by Raj (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search
Error creating thumbnail: File missing

மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த, பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் பிறந்த தினம் இன்று. அந்த சிவகாமியின் செல்வன் பற்றி ஒரு சில நினைவலைகள் இன்று உங்கள் பார்வைக்கு.

1903 ல் விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி நாடாருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் பிறந்த இவருக்கு குலதெய்வமான காமாட்சி என்ற பெயரே சூட்டப்பட்டது. தாயார் சிவகாமி இவரை அன்புடன் ராசா என்றே அழைப்பாராம். பின்னர் காமாட்சியும் ராசாவும் இணைந்து காமராசர் ஆகிப் போனார் நம் கர்மவீரர். இவருக்கு நாகம்மாள் என்ற உடன் பிறந்த தங்கையும் உண்டு.

சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் ஆறாம் வகுப்போடு கல்வி நின்று போய், மாமாவின் துணிக் கடையில் வாழ்க்கை ஆரம்பமானது.

வரதராஜ நாயுடு, ராஜாஜி போன்றோரின் பேச்சால் கவரப்பட்ட காமராசர், பதினாறு வயதிலேயே காங்கிரசில் இணைந்து மக்கள் பணி செய்யத் தொடங்கியவர்.

முதன்முதலில் 1930 ல் வேதாரண்ய உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அதன் பிறகு பல்வேறு போராட்டங்களுக்காக ஒன்பது ஆண்டு கால வாழ்க்கையை சிறையிலேயே கழித்தவர் இந்த தென்னாட்டு காந்தி.

சிறந்த பேச்சாளரான சத்திய மூர்த்தியை தன் குருவாக ஏற்றுக் கொண்டவர். சுதந்திர இந்தியாவின் செய்தி கேட்டவுடன் , முதன் முதலாக சத்திய மூர்த்தியின் வீட்டிற்குச் சென்று தான், தேசிய கொடியை ஏற்றினார்.

ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாமல் போன காமராசர் தான், அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் எண்ணிலடங்கா பள்ளிகள் உருவாக்கி கல்வி கண் திறந்த காமராசர் ஆனார்.

கல்வி கொடுத்து செவி நிறைத்ததோடல்லாமல் இலவச மதிய உணவும் வழங்கி , வயிற்றை யும் நிறைத்தவர் இந்த படிக்காத மேதை.

1960 ல் தொடங்கப் பட்ட இந்த இலவச மதிய உணவுத் திட்டம் பின்னர் 1980 ல் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களால் விரிவுபடுத்தப்பட்டு இன்றளவும் தொடர்கிறது.

ஆகட்டும் பார்க்கலாம் என்ற இரண்டெழுத்து மந்திரம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாற்றமே இன்று வரை பலன் தந்து கொண்டு இருக்கிறது.

1. இலவச மதிய உணவுத் திட்டம். 2. இலவச புத்தகம், சீருடை திட்டம். 3. நெய்வேலி நிலக்கரி திட்டம். 4. பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை. 5. திருச்சி பாரதி ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ். 6. மேட்டூர் காகித தொழிற்சாலை. 7. மேட்டூர் கால்வாய் திட்டம். 8. காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவரின் ஒன்பது ஆண்டு கால பொற்கால ஆட்சியின் சாட்சிகளை.

தேசப் பணியும் கட்சிப் பணியுமே முக்கியம் எனக் கருதிய காமராசர் கே - பிளான் அதாவது காமராசர் திட்டம் என்ற ஒரு திட்டத்தையும் கொண்டு வந்தவர். அதை அவரே செயல் படுத்தியும் காண்பித்தவர்.

குறைந்த அமைச்சர்களை மட்டுமே தன் அமைச்சரவையில் வைத்திருந்தவர். எதிர்த்து நின்றவர்களுக்கே தன் அமைச்சரவையில் இடம் கொடுத்தவர். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை கைவிட்டு, மூடி இருந்த பள்ளிகள் அனைத்தையும் திறக்க உத்தரவிட்டவர் .

முற்றும் துறந்த முனிவர்களே துறக்க முடியாத உறவு தாய் உறவு தன் பொது வாழ்வின் தூய்மை கருதி அந்த தாய் உறவையே தள்ளி வைத்த அதிசிய மனிதர் தான் இந்த கர்மவீரர் காமராசர்.

முனிசிபாலிடி குழாயில் வரிசையில் நின்று தண்ணீர் பிடிக்கும் பெருந்தலைவரின் தங்கை நாகம்மாளைக் கண்ட அப்போதைய உள்துறை அமைச்சர் மஜீத் அவர்கள், தலைவரின் வீட்டிற்கு குழாய் இணைப்பிற்கு வழி செய்தார். முறைப்படி விண்ணப்பம் செய்யாத வீட்டிற்கு எப்படி இணைப்பு கொடுக்கலாம் எனக் கேட்டு தன் வீட்டு இணைப்பையே துண்டிக்கச் செய்தவர் தான் நேர்மைக்கு பேர்போன பெருந்தலைவர். ஊழல் நிழல் படாத உயரிய அரசியல்வாதியின் தங்கை மீண்டும் தண்ணீருக்காக அடுத்த தெருவை நோக்கி... வரிசையில் நிற்க ஆரம்பித்தார்.

நெருங்கிய நண்பர் ஒருவர், முழுமையாக கட்டி முடிக்கப்படாத திரையரங்கை திறந்து வைக்க, காமராசரை அணுகினார். அவரின் ஒப்புதலுக்கு பிறகு, உரிமம் கேட்டு மாவட்ட ஆட்சியரை அணுகினார். ஆட்சியரோ கட்டிமுடிக்கப்படாத திரையரங்கிற்கு உரிமம் தர மறுத்து விட்டார். பெருந்தலைவரே வருகிறார் திறந்து வைக்க என்று கூறிய போதும் உரிமம் மறுக்கப் பட்டது. நண்பரோ விஷயத்தை தலைவரின் காதுகளுக்கு கொண்டு சென்றார். நண்பனைப் பார்த்து சிரித்த வண்ணம், திறந்து வைக்கிறேன் ஆனால் கட்டிடம் முழுமையடைந்த பிறகு, உரிமம் பெற்று பின் தொடங்கு என சொன்னதோடல்லாமல், விழா முடிந்த கையோடு நேராக ஆட்சியர் இல்லம் சென்று அவரின் நேர்மையை பாராட்டியதோடு, அவர் தம் வாரிசிடம், தந்தையைப் போல் நேர்மையான அதிகாரியாக வர வாழ்த்தும் சொல்லி விட்டுச் சென்றாராம்.

எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராசர், தனக்காக உழைக்காமல் மக்கள் நலனுக்காகவே வாழ்ந்த பெருந்தலைவர்.

திருமணம் பற்றி கூட சிந்திக்காத அவரிடம் , பலரும் அது பற்றி பேச தயங்கிய போது, இங்கிலாந்து ராணி அவரிடம் நேரிடையாக கேட்டாராம் திருமணம் குறித்து. அதற்கு சிறிதும் யோசிக்காமல் காமராசர் தந்த பதில் என் வீட்டில் (நாட்டில்) பல பேர் திருமண வயதாகியும் கல்யாணம் செய்யாமல் வறுமையில் இருக்க நான் மட்டும் எப்படி மணம் முடிக்க முடியும்...? என் சமூகத்தில் தங்கைக்குத் தான் முதலில் முடிக்கும் வழக்கம் என்றாராம். நாட்டையே தன் வீடாக நினைத்த மாமனிதர்.

பல முதல்வர்களை உருவாக்கியவர். நாட்டின் பிரதமரையே முன் மொழிந்து கிங் மேக்கர் ஆக உயர்ந்து நின்ற படிக்காத மேதை.

காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, காந்திய வாதியாகவே வாழ்ந்த கருப்பு காந்தி இந்த காமராசர்.

1954 ல் தமிழ் புத்தாண்டில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று, ஒன்பது ஆண்டுகள் பொற்கால ஆட்சியை வழங்கிய தென்னாட்டு காந்தி யாகிய இவர் காலத்தின் கடைசி கருணை காமராசர் என்று கண்ணதாசனால் வருணிக்கப் பட்டவர்.

அவரது வாழ்க்கையில் இருந்து நாம் படிக்க வேண்டிய பாடம் ஏராளம் இருந்தாலும், இன்று சிலவற்றை உங்கள் சிந்தனைக்கு வைக்கிறேன்.

1. சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும் எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல...பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை.

2. எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல...ஏதேனும் சிறப்பு சக்திகளும் இருக்கத் தான் செய்யும்.

3. நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காத மனிதன் பிணத்துக்கு சமமாவான்.

4. சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.

5. உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டு கொள்வது தான், வளர்ச்சியின் அடையாளம்.

6. நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது.

7. எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால், உலகத்தையே கைப்பற்றலாம்.

8. படித்த சாதி, படிக்காத சாதி என்றொரு சாதி உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

9. நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன், எப்போதுமே கதாநாயகன் தான்.

10. பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்காக பயன்படுத்துவதே, உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.

அவர் காலமாக மாறி நாற்பத்தைந்து ஆண்டுகள் ( 1975 ) ஆன போதும், இன்று வரை தமிழக அரசியல் வரலாற்றில் ஏன் இந்திய அரசியல் வரலாற்றில், தவிர்க்க முடியாத இடத்தில், நேர்மையின் சின்னமாக திகழும் நம் தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்களை இன்றைய அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வதோடு, அவரின் ஆழ்ந்த கருத்துக்களையும் உள்ளேற்றுவோம்.

கரை படியாத கர்மவீரர்.எளிமையின் வடிவம்.நேர்மையின் மறுவுருவம்.வாழ்க அவரது புகழ்.வளர்க நமது தமிழ்...🙏🙏🙏.

தமிழச்சி கலாவதி அய்யனார்.