அப்துல் கலாம்

From HORTS 1993
Revision as of 08:31, 27 July 2020 by Raj (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search


Pictures-of-late-abdul-kalam.jpg

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதின் அப்துல் கலாம் ஆகிய ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அய்யா நினைவு தினம் இன்று.

1931 அக்டோபர் பதினைந்தாம் நாள் தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்னும் புண்ணிய மண் பெற்றெடுத்த புனித மகன் இந்த கலாம் அவர்கள். ஒரு படகுக்குச் சொந்தக்காரரும், மரைக்காயருமான ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷிம்மா அவர்களுக்கும் ஐந்தாவது மகனாக பிறந்தவர்.

இவரது தொடக்கக்கல்வி இராமேஸ்வரத்திலும், கல்லூரி வாழ்க்கை திருச்சியிலும் தொடங்கியது. 1954 ல் இயற்பியல் பட்டம் பெற்ற கலாம் அய்யா, பின்னர் தனது விண்வெளி பொறியியல் படிப்பிற்காக சென்னை எம்.ஐ.டி யில் சேர்ந்தார். 1960 ல் பட்டப்படிப்பை முடித்த கலாம் அவர்கள் , 1969 ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் திட்டத்தின் இயக்குனர் ஆனார். புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த ஒரு குழுவின் அங்கமாகவும் விளங்கினார்.

(எஸ்.எல்.வி-lll) பாய்ச்சுதல் வாகனம் ரோகிணி செயற்கைக்கோள் புவிச் சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980 ல் ஏவப்பட்டதே... கலாம் அவர்களின் வாழ்வில் , விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிகச்சிறந்த சாதனையாக கருதப்பட்டது.

1963 - 64 ல் நாசா விற்கு பயணம். 1970 - 90 களில் போலார் எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எல்.வி -lll திட்டங்களையும் வெற்றிகரமாக முடித்தார்.

நாட்டின் முதல் அணு ஆயுத சோதனையான புன்னகைக்கும் புத்தன் திட்டத்தை காண்பதற்கு பதிலியாக அழைக்கப்பட்டவர். பிரதம தலைவர் இந்திரா காந்தி அவர்களின் ஆதரவு பெற்றவர். ஒருகட்டத்தில், கலாம் அவர்கள் நாட்டின் உயர்மட்ட அணு அறிவியலாளராக அறியப்பட்டார். 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருக்கும் போது சர்வதேச நாடுகளின் அச்சுறுத்தல்களை மீறி இவர்கள் இணைந்து பொக்ரான் அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி இந்தியாவின் வலிமையை உலகிற்கு நிரூபித்தனர்.

குடும்ப சூழல் காரணமாக தன் சிறுவயதில் செய்தித்தாள் வினியோகம் செய்யும் பையனாகவும் வாழ்ந்த கலாம் அவர்கள், பின்னர் மிகச் சிறந்த அறிவியலாளராக தன்னை வளர்த்துக் கொண்டதோடு, ஒருகட்டத்தில் நாட்டின் உயரிய பதவியான குடியரசு தலைவராகவும் உயர்ந்து நின்றார். ஆம்... 2002 ம் ஆண்டு 11 வது குடியரசு தலைவராக ஆர்.கே.நாராயணனைத் தொடர்ந்து பதவி ஏற்றுக் கொண்டார் கலாம் அவர்கள். ராஷ்டிரபதி பவனை ஆக்கிரமித்த முதல் விஞ்ஞானி மற்றும் மணமாகதவரும் ஆவார்.

மாணவர்களோடு கலந்துரையாடுவதையே அதிகம் விரும்பும் கலாம் அவர்கள் அது பற்றிய அவரது உணர்வுகளை அவர் இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார்... நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர் நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும் போது நிறைவாக உணர்கிறேன் என்று. மேலும் மாணவர்களிடம் நீங்கள் என்னைவிட உயரத்தைப் பார்ப்பீர்கள்... அதற்காக கனவு காணுங்கள் என்றும் ஊக்கப்படுத்தியவர்.

1998 ல் இதயம் சார்ந்த மருத்துவர் சோம ராஜுவுடன் சேர்ந்து, ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் கலாம் ராஜூ ஸ்டென்ட் என பெயரிடப்பட்டது. 2012 ல் கிராமப்புறங்களில் உள்ள சுத்த வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி கலாம் ராஜூ டேப்லெட் என்று பெயரிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அவரது மற்றுமொரு அரிய கண்டுபிடிப்பு கேலிபர் என்ற இலகுரக செயற்கை கால் உறுப்பு. ராக்கெட் , ஏவுகணை தயாரித்ததை விட ஊனமுற்ற குழந்தைகளுக்காக குறைந்த எடையில் ( 4 கிலோவிலிருந்து 400 கிராமிற்கு) செயற்கை கால்கள் தயாரித்தே தனக்கு பெருமகிழ்ச்சி என்றும், மாபெரும் சாதனையாக கருதுவதாகவும் கலாம் தெரிவித்து இருக்கிறார்.

அவரின் நூல்கள் பலவற்றின் மொழிபெயர்ப்புகள் தென் கொரியா வில் மிகுந்த வரவேற்பில் இருக்கிறது.

பத்மபூஷன், பத்ம விபூசண், பாரத ரத்னா போன்ற உயரிய விருதுகளால் கௌரவிக்கப்பட்ட போதிலும், எங்கோ தமிழகத்தின் கடைக்கோடியில் பிறந்து, கோடிக்கனக்கான மக்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஏவுகணை நாயகன் கலாம் அவர்கள் மக்களின் நாயகனாக வே இருக்க விரும்பிய மக்களின் ஜனாதிபதி.

ஐக்கிய நாடுகள் அவையில் கலாம் அவர்களின் 79 ஆவது பிறந்த தினம் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களோடேயே வாழ்ந்து, மாணவர்களுக்காகவே சிந்தித்த அந்த தூய இதயம்... 2015 ம் ஆண்டு ஜூலை 27 ம் நாள் மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் ல், மாணவர்கள் முன்னிலையிலேயே தனது 84 ம் வயதில் தன் பணி செய்து கொண்டே மயங்கி சரிந்து காலமாக மாறிப்போனது.

அவரின் கனவுகள் தொடரும் உலகம் இயங்கும் வரை... நித்திரையில் அல்ல... நிஜத்தில்... அந்த மகானின் உறுதிமொழிகளை இன்றைய அவரது நினைவு நாளில் நாம் நினைவு கூறுவோம்...


1. எனது கல்வி அல்லது பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்து அதில் சிறப்பானதொரு இடத்தை அடைவேன்.

2. எழுதப் படிக்கத் தெரியாத பத்துப்பேருக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுப்பேன்.

3. மதுபானத்திற்கும், சூதாட்டத்திற்கும் அடிமையாகியுள்ள ஐந்து பேரை அதிலிருந்து விடுவிப்பேன்.

4. அல்லல்படும் எனது சகோதரர்களின் இன்னல்களைத் தீர்க்கத் தொடர்ந்து பாடுபடுவேன்.

5. குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.

6. சாதி, மதம், மொழி அடிப்படையிலான பாகுபாட்டிற்கும் வேதங்களுக்கும் ஆதரவளிக்கமாட்டேன்.

7. நேர்மையில் முன்னுதாரணமாக இருந்து ஊழலற்ற சமுதாயம் உருவாகப் பாடுபடுவேன்.

8. பெண்களை மதிப்பேன், பெண் கல்வியை ஆதரிப்பேன்.

9. உடல் ஊனமுற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாக இருந்து அவர்கள் நம்மைப் போல இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்படுத்த உழைப்பேன்.

10. நாட்டின் வெற்றியையும், மக்களின் வெற்றியையும் நான் பெருமிதத்துடன் மகிழ்ந்து கொண்டாடுவேன்.

இந்த உறுதிமொழிகளை ஏற்று இளைஞர்கள் தளராத உறுதியோடு வளமான, மகிழ்ச்சியான பாதுகாப்பான இந்தியாவுக்காக உழைக்கும் போது வளர்ந்த இந்தியா மலர்வது திண்ணம். - ஏ.பி.ஜே‌ அப்துல்கலாம்.

இராமேஸ்வரத்தில் மசூதி தெருவில் உள்ள கலாம் அய்யா அவர்களின் இல்லம் மிஷன் ஆஃப் லைஃப் காலேரி (Mission of Life Gallery) என்ற பெயரில் காட்சியகமாக இயங்கி வருகிறது.

கலாம் அவர்களின் மணிமண்டபம் அவரது சொந்த ஊரான இராமேஸ்வரம் அருகில் உள்ள பேக்கரும்பு எனும் இடத்தில் அமைந்துள்ளது. அந்த நினைவிடத்தின் வாயில் இந்திய நுழைவு வாயில் வடிவிலும், கட்டிடம் ராஷ்டிரபதி பவன் போன்றும் வடிவமைக்கப் பட்டு நம் அய்யா கலாம் அவர்களை பெருமைப் படுத்துகிறது. அங்கு அமைந்துள்ள வீணையோடு கூடிய அய்யாவின் சிலை, அவரை நம் இதயத்தில் தெய்வமாக உணர‌ வைக்கிறது. மதங்களை கடந்த மகான் இந்த கலாம் ...🙏🙏🙏.

அந்த மகானின் சில பொன்மொழிகள் உங்கள் பார்வைக்கு....

1. கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல...உங்களை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே கனவு (இலட்சியம்).

2. நாம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

3. வாழ்க்கை என்பது... ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதீர்கள். ஒரு கடமை -நிறைவேற்றுங்கள். ஒரு இலட்சியம் - சாதியுங்கள். ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள். ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள். ஒரு பயணம் -நடத்தி முடியுங்கள் .

4. அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்,அது உங்கள் கடமையைப் பாழாக்கி விடும்.கடமையைப் பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்

5. அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கிக் கொள்ளும்.

6. முடியாது என்று நீங்கள் சொல்வதையெல்லாம் யாரோ ஒருவர் எங்கோ செய்து கொண்டு இருக்கிறார்.

7. நீங்கள் கதிரவனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் கதிரவனைப் போல எரிய வேண்டும்.

8. இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப் பட்டுள்ளது.ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

அய்யா காலமாகிய நாள்...எனது கண்ணீர் துளிகள் விழிகள் நிறைத்து,விரல் வழி என் தாய் தமிழ் எழுத்தாக உதிர்ந்தது. அந்த துளிகளை மீண்டும் இன்றைய அவரது நினைவு நாளில் உங்கள் விழிகள் நனைய படைக்கிறேன்... எனது அஞ்சலியாக நமது அய்யாவிற்கு இதோ...

குடியரசு தலைவரா...! அறிவியல் அறிஞரா...! கவிஞரா.. ! இசையின் வசம் இருந்தவரா...!மனிதம் நிறைந்தவரா...!அத்தனையும் ஒருங்கே பெற்று உமது தன்னலமற்ற தூய அன்பினால் இவ்வுலகை வென்று விட்டீர் அய்யா...! நீர் வாழ்ந்த 83 வருடங்களில் நினைவு தெரிந்தது முதல் பொதுநலத்தோடு வாழ்ந்து மாணவர்களை சீரான பாதையிலே வழி நடத்தினீரே அய்யா! உமது உருவில் புத்தரைப் பார்த்தோம் விவேகானந்தரைப் பார்த்தோம் நேதாஜியைப் பார்த்தோம் அம்பேத்காரைப் பார்த்தோம் மகாத்மாவைப் பார்த்தோம் அன்னை தெரசாவைப் பார்த்தோம் காமராஜரைப் பார்த்தோம் இத்தனை முகங்களையும் ஒருமுகமாகக் கொண்டு நடமாடிய எங்கள் திருமுகமே எங்கு சென்றாய் அய்யா! இன்னும் சில வருடங்களாவது இருந்திருந்தால் உமது பல படைப்புகள் எங்கள் மனித சமுதாயத்தை செம்மைபடுத்தி இருக்குமே இனி வரும் சந்ததியாரும் உம் சிந்தனை துளியில் நினைந்து எதிர்கால இந்தியாவை ஏற்றம் பெற செய்திருப்பார்களே! உங்கள் மாணவ சமுதாயத்திற்காக மீண்டு வாருங்கள் அய்யா... காத்துக்கொண்டு இருக்கிறது உம் இளைய சமுதாயம் கனவுகளோடு! இறப்பைக் கடந்து இன்னொரு தாயின் கருப்பையிக்குள் மீண்டும் பிறந்துவிடமாட்டீரா! மக்களுக்காக மக்களுடன் வாழ்ந்த மாமனிதரே மும்மதங்களையும் முழுமையாக உள்வாங்கி அதன் பொருள் உணர்ந்து மனிதநேயம் என்ற மதத்தை மட்டும் மூச்சாக வெளிவிட்டவர் நீர் அய்யா ! இந்த பண்பு இனி எவருக்கு வரும்? உமது சமகாலத்தில் வாழ்ந்த பாக்கியம் மட்டுமே இப்பொழுது எங்களுக்கு ஆறுதல்! இன்றைய ஆன்மிகம், தியானம் பற்றி நிறைய பேசுகிறது இதைத்தானே நீர் எளிய தமிழில் கனவு காணச் சொன்னீர்... இளைஞா்களை இழுக்கும் காந்தச் சொல்லால் அவர்களை சரியாக யோசிக்கவைத்தீர். இன்று எதிர்கால இந்தியாவே உம்மை தியானித்துக்கொண்டு இருக்கிறது ஆமாம்... கனவு கண்டுகொண்டு இருக்கிறது உம்முடைய ஆழ்ந்த தமிழ் பற்று எங்களை அதிசயிக்க வைக்கிறது... உம்முடைய வியத்தகு விஞ்ஞானம் எங்களை வியந்து பார்க்க வைக்கிறது... உம்முடைய எளிமை எங்களுக்கு எதையோ கற்றுக் கொடுக்கிறது. உம்முடைய பரந்த சிந்தனை எங்களை பண்படுத்துகிறது உம்முடைய சுயஒழுக்கம் எங்களை சீர்படுத்துகிறது உம்முடைய மனிதநேயம் எங்களை மண்டியிட வைக்கிறது அய்யா. மண்ணுலகில் இருந்து விண்ணை ஆராய்ந்த மகானே... இன்று நீரே விண்ணுலகம் சென்றதென்ன...? அக்னிச் சிறகில் கூறியதுபோல் தீர்ப்பு நாளில் உம் அன்னையைக்காணச்சென்று விட்டீரோ? எங்கள் தமிழ்நாட்டை உயர்த்த நீர் ஆரம்பித்த அத்தியாயம் ஏழோடு பாதியில் நிற்கிறதே....... மீதியை எவர் தருவார் அய்யா..? உம்மை யன்றி எவர் தரமுடியும்... எத்தனைபேர் எத்தனைமுறை கூறினாலும் சத்தியத்தை உரைக்காமல் நான் எப்படி இருக்கமுடியும் அய்யா...! சரித்திரம் படைத்த சாதனை நாயகனே...! நீர் மதங்களை கடந்து மனித மனங்களை கவர்ந்த மாமேதை அய்யா...! உமது புனித பயணத்தில் நீர் புண்ணியம் தேடிக் கொண்ட நாள் இதுவோ...! உமது அக்னி சிறகுகள் புகைந்து கொண்டே தான் உள்ளது... அதில் உமது வாசம் நம் பாரதம் எங்கும் மனம் பரப்பிக் கொண்டே தான் உள்ளது... வாழ்க உமது புகழ்...! வளர்க நமது தமிழ்...🙏🙏🙏.

தமிழச்சி கலாவதி அய்யனார்