வீரமாமுனிவர்

From HORTS 1993
Revision as of 08:39, 30 November 2020 by Raj (talk | contribs) (→‎==)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search
WhatsApp Image 2020-11-08 at 9.06.45 AM.jpeg
WhatsApp Image 2020-11-08 at 9.06.44 AM (1).jpeg
WhatsApp Image 2020-11-08 at 9.06.44 AM.jpeg

இத்தாலி தேசத்தின் வெனிஸ் மாநிலத்தில், மாந்துவா என்னும் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கேசுதிகிலியோன் என்னும் சிற்றூரில் பிறந்த முனிவரின் பிறந்தநாள் இன்று.

அவரின் இயற்பெயர் கான்ச்டன்டைன் சோசப்பு பெஸ்கி என்பதாகும். 1680 ல் தண்ணீர் நகரில் பிறந்த இவர் 1710 ல் தமிழகம் நோக்கி பயணப்பட்டார். லிஸ்பனில் ஆரம்பித்த இவர் பயணம், கோவா வழியாக தமிழகம் அடைந்ததாக கூறப்படுகிறது. கோவாவில் சில காலம் தங்கி இருந்த அவர், பின்னர் கேரளாவின் அம்பலக்காடு வழியாக, கால்நடையாகவே மதுரை காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்ததாக சில குறிப்புகள் கூறுகின்றன.

இவர் பயணத்தின் நோக்கம் கிறிஸ்து வை அறிவிப்பதே. அதை எளிதாக செய்ய, தமிழை கற்க துவங்கினார் பெஸ்கி. சுப்ரதீபக்கவிராயரிடம் தமிழை முறையாகக் கற்றும் தேர்ந்தார்.

மெல்ல மெல்ல தமிழால் ஈர்க்கப்பட்ட பெஸ்கி, தன் இயற்பெயரை அப்படியே தமிழ் படுத்தி தைரியநாதசாமி என வைத்துக் கொண்டார். பின்னர் அதில் ஏதோ வடமொழி வாடை வருவதாக உணர்ந்து, அதையே மீண்டும் சுத்தத் தமிழ் படுத்தி வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

ஆம் தேம்பாவணி எனும் பெருங்காவியம் எழுதிய, தமிழ் உரைநடையின் தந்தை என அழைக்கப்படும் நம் வீரமாமுனிவர் பிறந்த தினம் இன்று.

இயேசு வின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், அவரின் தந்தை புனித யோசேப்பின் வாழ்க்கை வரலாற்றையும் தொகுத்து தீந்தமிழ் காப்பியமாகிய தேம்பாவணியை நமக்கு வழங்கி இருக்கிறார். அதன் கதாபாத்திரங்களின் பெயர்களை தமிழில் வைத்து அழகு பார்த்தவர் இந்த மாமுனி.

அது தவிர 23 நூல்களை தமிழில் எழுதி செந்தமிழ் தேசிகர் என்ற பட்டமும் பெற்றவர்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் புனித தேவாலயங்களை கட்டியிருக்கிறார். அவரின் கட்டிடங்கள் ஒத்த அமைப்பை கொண்டவையாகவும், 50 பேர் மட்டுமே அமரக் கூடிய வகையிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து இருக்கிறார்.

அக்காலத்தில் சுவடிகளில் தமிழில் , உயிர் எழுத்துக்களின் அருகில் 'ர' சேர்த்தும் (அ:அர, எ: எர) உயிர் மெய் எழுத்துக்களின் மேல் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக் கொண்டும் இருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பிய‌காலத்தில் இருந்து வழங்கி வந்த இந்த பழைய முறையை 18 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாற்றிய வீரமாமுனிவர், ஆ, ஏ எனவும், நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் (கே, பே) வழக்கத்தையும் கொண்டு வந்து எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர்.

எண்ணற்ற தமிழ் சுவடிகளை தேடி அலைந்திருக்கிறார். இதனாலேயே இவர் சுவடி தேடிய சாமியார் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தின் அகராதியை உருவாக்கி இருக்கிறார். 1000 சொற்களைக் கொண்ட இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ் - போர்த்துகீசிய அகராதியை உருவாக்கி இருக்கிறார் இந்த சதுரகராதி கண்ட வீரமாமுனிவர். சதுரகராதியை நிகண்டுக்கு ஒரு மாற்றாக கொண்டு வந்தவர்.

ஒரு மொழி அகராதி : சதுரகராதி. இரு மொழி அகராதி : தமிழ் - லத்தின் அகராதி. மும்மொழி அகராதி : போர்த்துக்கீஸ் - தமிழ் - இலத்தீன் என‌ உருவாக்கி தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப்பட்டவர்.

கொடுந்தமிழ் இலக்கணம் என்னும் நூலை முதன்முதலில் பேச்சுத் தமிழில் விவரித்தவர்.

தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐவகை இலக்கணங்களாக தொகுத்தவர்.

தமிழில் முதன் முதலில் வந்த ஹாஸ்ய இலக்கியமாகிய பரமார்த்த குரு கதையை 1728 ல் புதுவையில் அச்சிட்டு வெளியிட்டவர்.

திருக்காவலூர்த் திருத்தலத்தையும், ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கலமாதாவையும் போற்றும் வண்ணம் திருக்காவலூர் கலம்பகம் பாடியுள்ளார்.

வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை போன்ற நூல்களை படைத்தவர்.

1798 ல் சாமிநாத பிள்ளை அவர்களால் ஆரம்பித்து, அச்சேறாமல் போன வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாறு, 1822 ல் முத்துசாமி பிள்ளை என்பவரால் எழுதி முதல் முறையாக அச்சுக்கு வந்தது. அவரே அதை மீண்டும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து 1840 ல் வெளியிட்டார்.

1742 ல் மதுரையை விட்டுச் சென்ற வீரமாமுனிவர், கேரளாவின் அம்பலக்காட்டில் அமைந்துள்ள குருகுலத்தில் தன் இறுதி காலங்களில் தங்கி இருந்ததாகவும், பின்னர் 1747 ல் தமது 67 ம் வயதில் காலமானதாகவும் வரலாறு கூறுகிறது.

சிற்பக் கலை மற்றும் ஓவியக்கலையிலும் சிறந்து விளங்கிய பல்துறை வித்தகரான நம் வீரமாமுனிவர் கிட்டத்தட்ட 16 வகையான மருத்துவ நூல்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் பிறந்து சமயத் தொண்டு புரிய இந்தியா வந்த இவர், நம் தமிழ் பால் ஈர்க்கப்பட்டு, இறுதி வரை தமிழுக்காகவே பணி செய்து, என்றென்றும் தமிழோடு வாழ்ந்து வரும் மா முனிவர்... இந்த வீரமாமுனிவர் ... அவரின் 340 வது பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வதில் நானும் ஆசீர்வதிக்கப் படுகிறேன். வாழ்க தமிழ் வளர்த்த மகான்கள்... வளர்க தமிழ்...🙏🙏🙏.

என்றும் அன்புடன்... கலாவதி அய்யனார் ...🙏.