என்.எஸ்.கிருஷ்ணன்
நகைச்சுவை மூலம் சமுதாய மாற்றங்கள் தந்து, எதிர்கால வளர்ச்சி குறித்து அன்றைய காலகட்டத்திலேயே சிரிக்க சிரிக்க நம்மை சிந்திக்க வைத்த மிகப் பெரும் கலைஞர் பிறந்த தினம் இன்று.
1908 ல் நவம்பர் 29 ம் நாள் நாகர்கோவில், ஒழுங்கினஞ்சேரியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் இந்த நகைச்சுவை மன்னர்.... நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். ஆம் சிரிப்போடு சிந்தனை விதை தூவி வளர்த்த நம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று.
ஏழ்மை காரணமாக எட்டாக் கனியாகிப் போனது அவரது கல்வி. பிறகென்ன...சிறு வயதிலேயே நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக அந்த கலைஞனின் வாழ்க்கை ஆரம்பமானது.
திண்பண்டங்கள் விற்றுக் கொண்டிருந்தவரின் மனதில் கலையும் வளரத் தொடங்கியது.
நாடகங்கள் அரங்கேறின மனதில்.
அதை நிஜத்தில் நிகழ்த்த முனைந்து, நாடக்குழுவை தொடங்கினார்.
அவரே சொந்தமாக வசனங்கள் எழுதினார்.
வில்லுப்பாட்டுடன் ஆரம்பித்த அவர் கலை.... கொஞ்சம் கொஞ்சமாக நாடகம், சினிமா, படங்கள் தயாரிப்பு என வெகு சிறப்பாக வளரத் தொடங்கியது.
1936 ல் அவரின் முதல் படமான சதி லீலாவதி யில் நடித்தார். ஆனாலும் திரைக்கு வந்த முதல் படம் மேனகா. கிட்டத்தட்ட 150 படங்கள் வரை நடித்து, தென் இந்தியாவின் சார்லி சாப்ளின் எனப் புகழப்பட்டவர்.
சதி லீலாவதி, அம்பிகாபதி, மதுரை வீரன், ஆர்யமாலா, ஹரிச்சந்திரா, ஹரிதாஸ், சந்திரலேகா, ரங்கோன் ராதா, ராஜா ராணி, போன்ற புகழ்பெற்ற பல படங்களில் தோன்றி நகைச்சுவையால் சீர்திருத்தம் செய்தவர்.
அந்தக் காலத்திலேயே ஒன்ஸ்மோர் வாங்கிய கலைஞர் என்று கேள்விப்பட்டதுண்டு.
ராஜா ராணி படத்தில் இடம்பெற்ற சிரிப்பு இதன் சிறப்பை என்ற பாடல்.
அம்பிகாபதி படத்தில் இடம்பெற்ற கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா என்ற பாடல்.
பணம் படத்தில் இடம்பெற்ற எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன் என்ற பாடல்... இப்படி எத்தனையோ பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்... என்றைக்கும் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, எளிதில் வாழ்வியல் தத்துவங்களை புரிய வைத்த மாபெரும் சிந்தனையாளர்.
தேசப் பிதா மகாத்மா காந்தி மேல் அளவுகடந்த பற்றுகொண்டவராக இருந்திருக்கிறார். அந்த பற்றின் தீவிரம் காரணமாக மகாத்மாவின் மறைவிற்குப் பின்னர் அவருக்கு, 50,000 ரூபாய் செலவில் நினைவுத் தூண் ஒன்றையும் எழுப்பி இருக்கிறார் தன் சொந்த ஊரில்.
1957 ல் காஞ்சிபுர தேர்தலில் அண்ணாவுக்கு பிரச்சாரம் செய்த கலைவாணர், ஆரம்பம் முதலே அண்ணாவை எதிர்த்து நின்ற மருத்துவர் ஒருவரை புகழ்ந்து பேசிய அவர் இறுதியில் இத்தனை திறமை வாய்ந்த மருத்துவரின் சேவை நம் மக்களுக்கு தேவை. எனவே அண்ணாவையே சட்டசபைக்கு அனுப்பி வைப்போம் என்று பேசி கூட்டத்தில் கூடுதல் கலகலப்பை ஏற்படுத்தியவர்.
பெரியார் வழியையும் பின் பற்றியவர். கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன் என்பதை வலியுறுத்துபவர். சுயமரியாதை கருத்துக்களையும் பகுத்தறிவுக் கருத்துகளையும் தம் பாடல்கள் மூலம் வலியுறுத்தியவர்.
பழமை பேசி வீணாவதை விரும்பாத அவர் பத்து ஆண்டுகள் கழித்து வரும் புதிய விஞ்ஞானம் குறித்து வழி மொழிந்தவர். விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி...அஞ்ஞானத்தை அழிக்கப் போறேண்டி... என்று பாடி எதிர்கால வளர்ச்சியை பட்டியல் போட்டவர்.
தியாகராஜ பாகவதர் அவர்கள், பி.யூ. சின்னப்பா அவர்கள் மற்றும் கலைவாணர் போன்றவர்கள் மிகப் பெரும் கலைஞர்களாக வலம் வந்த சமயம், எதிர்பாரத விதமாக ஒரு வழக்கில் சிறை சென்ற அனுபவமும் உண்டு நம் கலைவாணருக்கு. விடுதலைக்குப் பிறகு தன் சிறை வாழ்க்கையையும் சிரிக்க சிரிக்க விவரித்த நகைச்சுவை கலைஞர் அவர். ஜெயிலுக்கு போய் வந்த என்று ஒரு பாடலையும் தன் படமான பைத்தியக்காரனில் இடம் பெறச் செய்து கவலையையும் கலகலப்பாக்கியவர்.
நந்தனாரை கிந்தனாராக வழங்கியவர். பாரதி யின் நந்தனாரை இப்படி மாற்றலாமா என் வினவிய மனைவி மதுரத்திடம், நந்தனார் எழுதிக் கொண்டிருந்த பாரதியிடம் அவர் மனைவி செல்லம்மா தான், நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம்...சாப்பிட வாருங்கள் என அழைத்ததாகக் கூறி தன் மனைவியை சமாதானப் படுத்தியவர்.
உதவி என்றால் இருப்பவர்கள் உதவுவது மனிதத்தன்மை. உதவி என்றால் இல்லாத போதும் எப்படியாவது உதவுவதை என்னவென்று சொல்வது. அத்தகைய வள்ளல் தன்மை கொண்டவர் தான் நம் கலைவாணர். நம் காலத்தில் நாம் வள்ளலாகப் பார்த்த புரட்சித் தலைவர் திரு எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மைக்கு முன்னோடியே கலைவாணர் தான் என்று தலைவரே அன்றைய காலகட்டத்தில் பேட்டி கொடுத்ததாக செய்திகள் உள்ளன.
நிறைய விஷயங்களில் கலைவாணர் தான் தலைவரின் வழிகாட்டியாகவே இருந்திருக்கிறார். தலைவருக்கு கலைவாணர் மேல் தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் இருந்திருக்கிறது.
ஒருமுறை உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த கலைவாணரை சந்திக்க சென்ற தலைவர் 1000 ரூபாய் நோட்டு கட்டை அவரின் தலையனை அடியில் வைத்து விட்டு வந்திருக்கிறார். இதை அறிந்த கலைவாணர், தம்பி ராமச்சந்திரா... அந்த 1000 ரூபாய் நோட்டு கட்டை மாற்றி 100 ரூபாய் நோட்டு கட்டுகளாக வைத்திருந்தால் அனைவருக்கும் கொடுக்க எனக்கும் எளிதாக இருந்திருக்கும் என்று சொன்ன கலைஞன் நம் கலைவாணர்.
எந்த சூழ்நிலையிலும் கடைநிலை கலைஞர் வரை எவரும் கஷ்டப்படக் கூடாது என விரும்பியவர்... அதன் படி வாழ்ந்து காட்டியவரும் கூட.
ஒருமுறை உதவி என்று வந்த ஒருவருக்கு கையில் காசு இல்லாது போனதால் கண்ணில் தென்பட்ட வெள்ளி கூஜாவை கொடுத்து விற்று பணம் பெற்றுக் கொள்ளச் சொன்னவர்.
திடீரென உதவி கேட்டு வருபவர்களுக்கு சட்டென்று செக் கொடுத்து விடுவாராம். பிறகு வங்கியில் இருந்து செய்தி வருமாம்... செக் பௌண்ஸ் ஆயிரும்ங்க ஐயா என்று. பின்னர் ஒரு ரெண்டு மணி நேரம் கேட்டுக் கொண்டு பணத்தை புரட்டி கட்டி விடுவாராம்.
அடிக்கடி தன் மனைவி மதுரத்திடம், யாராவது உதவி என்று வரும் போது என்னால் கொடுக்க முடியாத நிலை வரும் முன்னமே தான் மறைந்து விட வேண்டும் என்று சொல்வாராம்.
எப்பொழுதும் அடுப்பு எரிந்து கொண்டிருந்த வீடு நம் கலைவாணரின் வீடு.
ஒருநாளைக்கு குறைந்தது 50 பேராவது பசியாறிக் கொண்டு இருப்பார்களாம்.
பந்தி நடந்து கொண்டே இருக்குமாம்.
ஒவ்வொரு சிறு சிறு விஷயத்திலும், நகைச்சுவை மூலம் நாகரீகம் வளர்த்த நாகரீக கோமாளி யாக இருந்தவர்.
ஒருமுறை விழா ஒன்றிற்காக குதிரை வண்டியில் சென்றவர், எனக்கு குதிரை வண்டிகாரரை ரொம்ப பிடிக்கிறது... ஏனென்றால் அவர் தான் முன்னுக்கு வா... முன்னுக்கு வா...என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று சொல்லி விழாவை கலகலப்பாக்கியவர்.
ஒரு பிரபலத்தின் வீட்டிற்கு மனைவி மதுரத்துடன் சென்றவர்... அங்கு தங்களுக்கு டீயா...காப்பியா...கூல் டிரிங்ஸா... ஹார்லிக்ஸா என வினவியரிடம் ... கலைவாணர் எனக்கு டீயே மதுரம் எனக் கூறி சிரிப்பொழியை வரவழைத்தவர்.
ஒருமுறை ரஷ்ய பயணம் குறித்து அவரிடம் வினவிய போது, அங்கு தான் அக்ரஹாரமும் இல்லை...சேரியும் இல்லை என்று சொன்னாராம்.
சிந்திக்க தெரிந்த மனித குலத்திற்கு சொந்தமானது சிரிப்பு எனப் பாடி நம்மை சிந்திக்க வைத்த கலைஞருக்கு 1947 ம் ஆண்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில், கலைவாணர் என்ற பட்டம் கொடுத்து கௌரவித்தனர். அந்த பட்டத்தை அவருக்கு வழங்கியவர் திரு. பம்மல் கே சம்பந்த முதலியார் அவர்கள்.
ஆணவச் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு, சாகச் சிரிப்பு, சங்கீதச் சிரிப்பு இப்படி நம்மை சிந்தித்து சிந்தித்து சிரிக்க வைத்த கலைவாணர், 1957 ல் தனது 49 ம் வயதிலேயே சிந்தனையை நிறுத்திக் கொண்டார். காலமாக மாறிய அவரின் நினைவாக தமிழக அரசு, சென்னையில் உள்ள அரசு அரங்கத்தை கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டி கௌரவித்தது.
சேலம் நாமக்கல் அருகே உள்ள தாரமங்கலத்தில் , அண்ணா அவர்களின் படத்தை திறந்து வைத்தது தான் அவரின் கடைசி நிகழ்ச்சி. கலைவாணரின் சிலையை திறந்து வைத்தது தான் அறிஞர் அண்ணாவின் இறுதி நிகழ்ச்சி என்பது கொஞ்சம் நெகிழ்ச்சியான விஷயம்.
மூன்றெழுத்துக்கு பெயர் போன நம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு முன்னரே பிரபலமான மூன்றெழுத்து கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுடையது.
மனிதாபிமானம் நிறைந்த வள்ளல் தன்மைக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்த சீர்திருத்த வாதி மற்றும் பெரும் சிந்தனைவாதி. ஒருவகையில் தோழர் பா.ஜீவானந்தம் அவர்களின் உறவினருமான நம் கலைவாணர் அவர்களின் பிறந்த நாளான இன்று உங்கள் பார்வைக்கு என்னால் முடிந்த சில மலரும் நினைவுகளை பகிர்ந்ததில் நானும் அக மகிழ்கிறேன். ஆசீர்வதிக்கப் படுகிறேன்.
கலைஞர்கள் வாழ்க...! கலைகள் வளர்க...!
என்றும் அன்புடன் உங்கள் கலாவதி அய்யனார்...🙏.
(கலைவாணர் காலத்திலேயே புகழ்பெற்ற கவிஞராக வலம் வந்தவர் திரு.மருதகாசி அவர்கள்.
அவர்களின் நினைவு நாளும் இன்று தான்... அவரை அவரது பிறந்த நாளில் இன்னும் ஓரிரு மாதங்களில் சந்திக்கலாம்...