விவேகானந்தர்
காவி கட்டிய துறவியின் 158 வது பிறந்த தினம் இன்று. 1863 சனவரி 12 ல் மேற்கு வங்காளம், கல்கத்தாவில் நரேந்திர நாத் தத்தா வாக அவதரித்தார் இந்த அத்வைத வேதாந்த தத்துவஞானி. நாம் பலரும் நன்கு அறிந்த அறிவிற் சிறந்த மகான்.
குழந்தை பருவத்தில் தன் அன்னையிடம் இராமாயணமும் மகாபாரதமும் கேட்டு வளர்ந்தவர். உலகின் ஏற்ற தாழ்வுகளை கண்டு மனம் வருந்தி அதை கேட்டு விட இறைவனை தேடியவர். கடவுள் இருக்கிறாரா...? எங்கே இருக்கிறார்...? நாம் அவரைக் காண முடியுமா என பலரிடமும் கேட்டு கொண்டே வளர்ந்தவர். அப்படி அவர் கேட்டவருள் ஒருவர் தேசிய கவி தாகூரின் தந்தை ஆவார். அவர் சிறிது யோசித்து பின் நீ ஒரு மகானாக வளர்வாய் என வாழ்த்தினாராம்.
குதிரை வண்டியில் பள்ளிக்கு சென்றதால், குதிரை வண்டியை பிடித்துப் போய், ஒருமுறை நீ என்னவாக ஆசைப் படுகிறாய் என கேட்ட ஆசிரியரிடம் நான் குதிரை வண்டிக்காரன் ஆகப் போகிறேன் என்று சொன்னாராம். அனைவரும் கேலி செய்த போதும், அவர் தாய் புவனேஸ்வரி தேவி மட்டும் அவரை அழைத்து நீ குதிரை வண்டிக்காரன் ஆவதில் தவறில்லை. ஆனால் அர்ஜூனனுக்கு தேர் ஓட்டினானே கிருஷ்ணன்... அந்த கிருஷ்ணனைப் போல் மிகச்சிறந்த சாரதியாக வேண்டும் என்று கூறினாராம்.
அந்த சிறுவன் தான் பிற்காலத்தில் இந்தியாவின் தலை சிறந்த சமயத் தலைவர்களில் ஒருவராகவும், மக்களை சரியான ஆன்மீகப் பாதையில் நடத்திச்சென்ற சாரதியுமான விவேகானந்தர்
அந்த சமய சொற்பொழிவாளரின் பிறந்த தினம் இன்று.
இசையும் தியானமும் அவர் கூடவே வளர்ந்தது. கிண்கிணி நாதம் போன்ற குரல் வளம் கொண்டவராம்.
பள்ளிப்படிப்பை முடித்து, கல்லுரி படிப்பையும் முடித்தார். தத்துவம் பயின்றார். இருப்பினும் எப்பொழுதும் இறை உண்மையினை அறியும் முயற்சியிலேயே இருந்தார். இதற்காகவே பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். அங்கும் மனம் ஒருநிலை அடைய மறுத்தது. தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை ப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார். சந்தித்த ஆண்டு 1881.
முதலில் உருவ வழிபாட்டில் திருப்தி அடையாத விவேகானந்தர் பின்னர் இரண்டு மூன்று சந்திப்பிற்கு பிறகு அவரின் வழிபாடுகளை புரிந்து கொண்டு அவரின் முதன்மை சீடராகிப் போகிறார்.
1886 ல் இராமகிருஷ்ணர் மறைந்த பின் விவேகானந்தர் துறவறம் பூண்டார். இராமகிருஷ்ண இயக்கம் தொடங்குகிறார்.
பின்னர் அவரின் சுற்றுப் பயணம் தொடங்கியது. 1892 ல் கன்னியாகுமரியில் கடலில் அமைந்த பாறை மீது மூன்று நாட்களாக தியானம். நீந்தியே பாறையை அடைந்ததாக சொல்லப் படுகிறது.
அதன் பிறகு சென்னை வந்தவரிடம் சிகாகோ வில் நடைபெற உள்ள உலக சமய மாநாட்டில் இந்து சமயம் சார்பாக கலந்து கொள்ள வேண்டுதல் வைக்கப் படுகிறது. 1893 ல் சிகாகோ பயணம்... அங்கு அவருடைய பேச்சின் ஆரம்பமே சரித்திரம் படைக்கிறது.
My dear brothers and sisters.... கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது. இன்று வரை அந்த அலைகள் அதிர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அமெரிக்க பயணத்தை முடித்து, இலங்கை வழியாக 1897 ல் பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார்.
அன்றைய இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி மிகச் சிறப்பான வரவேற்பை வழங்கினார். உலக அரங்கில் இந்து மதத்தை தன் சொற்பொழிவால் நிலை நிறுத்திய விவேகானந்தரின் பாதங்கள் மண்ணில் படக் கூடாது என்று எண்ணிய மன்னர் தன் தலை குனிந்து அதில் வைக்க கேட்டுக் கொண்டாராம். மறுத்த விவேகானந்தர் பின்னர் தங்கத்தட்டில் கால் வைத்து இறங்கியதாக சொல்லப்படுகிறது. இறங்கியவரை தேரில் அமர வைத்து மன்னரும் இழுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
பின்னர் மீண்டும் இரண்டாண்டுகளில் இரண்டாவது முறையாக மேல் நாட்டு பயணம்.
அவரின் சொற்பொழிவால் ஈர்க்கப்பட்ட ஒரு அழகிய அமெரிக்க இளம் பெண் அவர் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து கொண்டே இருந்து இருக்கிறார். ஒருமுறை அவரிடமே சென்று நீங்கள் மிகுந்த அறிவு மிக்கவராக இருக்கிறீர்கள். நானோ அழகுள்ளவள். இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்கு பிறக்கும் குழந்தை அறிவும் அழகும் இணைந்து பிறக்குமல்லவா...! நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம். அதற்கு விவேகானந்தர்... தாயே தங்களுக்கோ வயது இருபது. எனக்கு வயது முப்பது. நாம் திருமணம் செய்தாலும் குழந்தை அறிவும் அழகும் உள்ளதாக பிறக்கும் என்பதற்கு எந்த உத்ரவாதமும் இல்லை. அதற்கு பதில் நீங்கள் என்னையே உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றாராம். பெண்கள் அனைவரையும் தாயாகவே பார்த்த துறவி.
அவரது சீடர்களில் ஒருவரான சகோதரி நிவேதிதை தான் நம் பாரதி க்கு குருவாக இருந்தவர்.
ஒருமுறை ஜெய்ப்பூர் மன்னர் அரண்மனையில் விவேகானந்தர் தங்கி இருந்த போது அங்கு நடன நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. துறவி என்பதால் அவர் அதில் கலந்து கொள்ள மனமில்லாது தன் அறையிலேயே ஓய்வில் இருந்திருக்கிறார். அப்போது அங்கு ஒரு பெண் பாடிய பாடல் அவர் செவிகளை தொட்டது. அதில் இளைந்தோடிய சோகம் அவரை அந்த இடத்திற்கு அழைத்து வந்து விட்டது. அப்போது அவர் கூறியது... எந்த தொழில் செய்தாலும் அவளின் பாடல் எனக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்தது. அவள் பாடலில் இருந்த அவளின் வாழ்க்கை சிரமங்கள் என்னை உருக்கி விட்டது. நடனப் பெண்ணாகவே இருந்தாலும் அவளும் அம்பாளின் அம்சமே ...! என்று சொல்லி சென்றாராம்...பெண்களை தெய்வமாக பார்த்த அந்த தெய்வத் துறவி.
மனிதர்கள் தெய்வீகமான வர்கள் என்று நம்பினார் விவேகானந்தர். இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் வலியுறுத்தினர்.
அமெரிக்காவில் தங்கி இருந்த விவேகானந்தர், நீரோடை வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு சில இளைஞர்கள் முட்டை ஓடுகளை நீரில் மிதக்க விட்டு, அசையும் அவைகளை துப்பாக்கியால் சுட முயற்சி செய்தனராம். ஒன்றையும் சுட முடியாமல் தவித்த இளைஞர்களிடம் சென்று சுவாமி அவர்கள் அனைத்தையும் குறி வைத்து சுட்டுக் காண்பித்தாராம். அசந்து போன அவர்கள், தாங்கள் பயிற்சி பெற்ற வீரனாக இருப்பீர்கள் என்று சொன்னார்கள். ஆனால் தான் முதன் முறையாக இன்று தான் துப்பாக்கியை கையில் எடுப்பதாக கூறினாராம். பிறகெப்படி என வியந்து நின்ற இளைஞர்களிடம் எந்த செயலும் சாத்தியமே ... நம் மனம் ஒருமுகப்படும் போது எனச் சொல்லி, தியானத்தின் சிறப்பை எடுத்துரைத்தார் நம் சுவாமி.
நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள். இந்தியாவை உயர்த்தி காட்டுகிறேன் என கூறியவர்.
இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் மூன்று விரதங்களையும், இரண்டு கடமைகளையும் கை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மூன்று விரதங்கள் : 1. பசித்தவற்கு சோறு. 2. நோயுற்றவனுக்கு மருந்து. 3. அறிவற்றவனுக்கு கல்வி.
இரண்டு கடமைகள் : 1. தொண்டு. 2. துறவு.
துறவு என்றால் காவியணிவது அல்ல. சுயநலத்தை துறப்பது.
மகான்கள் எல்லாம் குறுகிய ஆயுள் வாங்கி வந்தது போல் இவரும் தன் முப்பத்தொன்பதாவது வயதிலேயே 1902 ல் பேலூரில் முக்தி நிலை அடைந்தார்.
ஒருநாள் தற்செயலாக தன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு கம்பீரமாக அரங்கின் முன் நின்ற விவேகானந்தரை, ஒரு புகைப்பட கலைஞர் கிளிக் செய்து விட்டார். அதை சிகாகோவின் கோஸ்லித்தோ கிராஃபிக் கம்பெனி போஸ்டராக அச்சடித்து நகர் முழுக்க தொங்க விட்டதாம். அந்த படம் தான் நாம் இன்றும் கண்டு ரசிக்கும்... வியக்கும் நம் விவேகானந்தர்.
அவரின் பிறந்த தினம் தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த தத்துவஞானி யின் பிறந்த தினத்தில் அவரின் சிந்தனைகள் சிலவற்றை நாமும் சிந்திப்போம்.
1.உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
2.நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.
3.நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு.
4.ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.
5.அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.
6.கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல்.இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்
7.இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.
8.ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரை, கல்வியறிவு அற்றவர்களை, செருப்பு தைக்கும் தொழிலாளியை, தெரு பெருக்குபவரை, மறந்து விடாதீர்கள். அவர்களும் ரத்தமும் சதையாலும் ஆன நம்முடைய சகோதரர்கள்.
9.வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமை கொள்ளுங்கள். பெருமையோடு, ‘நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!’ என்று ஆராவரியுங்கள்.
10. சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
என் குழந்தைகளே நீங்கள் என்னை விட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்....
இப்படி எத்தனை எத்தனையோ அவரின் சிந்தனை துளிகள், கடலாக நம்முன் பரந்து விரிந்து கிடக்கிறது. அதில் நீந்தினால் முத்தெடுப்பது உறுதி.
இளைஞர்களின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை வளர்க்கும் வைர வரிகள் ஏராளம்... ஏராளம்...
கடவுளைத் தேடி என்ற தலைப்பில் அவர் எழுதிய வங்க மொழிக் கவிதை இதோ...
அனைத்தும் ஆகி அன்பாகி, அமைபவன் அவனே அவன்தாளில், உனதுளம் ஆன்மா உடல் எல்லாம் உடனே தருக என் நண்பா...
இவைகள் யாவும் உன் முன்னே, இருக்கும் அவனின் வடிவங்கள்... இவைகளை விடுத்து வேறெங்கே இறைவனை தேடுகிறாய் நீ
மனதில் வேற்றுமை இல்லாமல்...மண்ணுல கதனில் இருக்கின்ற அனைத்தையும் நேசித்திடும் ஒருவன் ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்...
சுவாமி விவேகானந்தர்
வாருங்கள்...உலகமே நமது வீடு... அங்குள்ள உயிர்கள் அனைத்தும் நம் உறவுகள்... அனைத்தையும் நேசிப்போம்.... ஆண்டவனாக மாற முடியா விட்டாலும் மனிதனாக வாழ முயற்சிப்போம்...🙏.
என்றும் அன்புடன்.... உங்கள் கலாவதி அய்யனார் ...🙏.