அம்மா

From HORTS 1993
Revision as of 19:26, 29 November 2022 by Raj (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search


1dc839bc-6af3-4c87-a75e-a748e64e1ddb.jpg
990e6d11-b740-415b-b4a5-37d01a20ef9c.jpg

அ என்னும் முதல் எழுத்துக்கு அர்த்தம் கொடுத்தவள்.


கருவை பிரசவித்த பிறகும், நெஞ்சில் நிரந்தரமாக சுமந்தவள்.


பாசத்தை மட்டுமே கொட்டத் தெரிந்த இதயம்.


உள்ளதை மட்டுமே பேசும் எதார்த்தம்.


அனைவருக்கும் தாயாய் வாழ்ந்த மனசு.


அன்னப்பூரணியாய் வாழ்ந்த அன்னை.


அதிர்ந்து பேச கூச்சப்படும் அமைதி உள்ளம்.


சாந்தமே குடி கொண்ட தெய்வ முகம்.


நீ காலமாகி ஆண்டுகள் கடந்து இருக்கலாம்.


எங்கள் ஆன்மாக்களில் சுவாசமாய் என்றென்றும் ஜீவிக்கிறாய்.


நால்வருமே எங்கள் வயதின் பாதி நிலையில் நிற்கிறோம்.


இதன் ஒவ்வொரு படிக்கட்டில் ஏறும்போதும் மனம் என்னவோ உன்னை நிறைய தேடுகிறது அம்மா...😟


மனதால் சோர்வுறும் போதும், உடலால் தளர்வுறும் போதும் உன் கரம் பற்றி எழ எங்கள் கைகள் துழாவுகின்றன.


பிறகு நிதர்சனம் உறைக்க... மனது ஊமையாய் அழுகிறது...😞


நீ அருகிருந்தால் எத்தனை நிம்மதியாக இருக்கும் என விதியை மாற்றி யோசித்து மனம் ஏக்கப் பெருமூச்சு விடுகிறது.


உனக்கான கணக்கற்ற அன்பும், கள்ளங்கபடமற்ற பாசமும், எதிர்பார்ப்பே இல்லாத நேசமும் எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்து இருக்கின்றன.


ஆசிரியையாய் நீ கற்றுக் கொடுத்ததை விட....


ஒரு அன்னையாய்....ஒரு தாயாய்...ஒரு மனுஷியாய்...


பரந்த மனப்பான்மையுடனும் பூமித் தாய்க்கு நிகரான பொறுமையுடனும் வாழ்ந்த


உன் தூய்மையான வாழ்க்கை எங்களுக்கு கற்றுக் கொடுத்தது ஏராளம் அம்மா.


எப்பொழுதும் எங்கள் நினைவுகள் முழுவதும் நிறைந்து இருப்பவளே...


இந்த இடைப்பட்ட வயதில் எங்களுக்குள் உன்னை நிறைய உணருகிறோம்.


உன் சாயல்கள் எங்கள் அசைவுகளில்.


மீண்டும் மீண்டும் எங்கள் மூலம் நீ வாழ்கிறாய் தாயே...


உன் மூச்சில் சுவாசம் பெற்ற நாங்கள் சுவாசிக்கும் வரை, நீ இன்னொரு பிறவியாய் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய்.


வாழ்க அன்னையே...


வாழும் வரை மனம் எண்ணும் உன்னையே...! 💐💐💐🙏.

- Kalavathi