கோவில் பிரகாரங்களில்
கோவில் பிரகாரங்களில் தனியே உட்கார்ந்து புத்தகம் படிப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று.
திருமங்கலத்தில், PKN School-ல் படிக்கும்போது அவ்வப்போது விடுமுறை நாட்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தோளில் புத்தகப் பையோடு போய், ஏதேனும் பிரகாரம் ஒன்றில் உட்கார்ந்து படிப்பதுண்டு; சில சமயம் ஒத்தக்கடை திருமோகூர் கோவில். (மதுரை அழகர் கோவில் எனக்கு பிடித்தமான இடம்).
UG படிக்கும்போது, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், புத்தகம் படிக்க எனக்கு மிகவும் விருப்பமான இடம் (மருதமலை முருகர் கோவிலும்.). பேரூர் கோவிலுள்ளிருக்கும் விஜயா பதிப்பக புத்தகக்கடைக்காரர் நண்பராகியிருந்தார்.
ஒருமுறை மருதமலை கோவிலில் உட்கார்ந்து பாலகுமாரனின் “இனிது இனிது காதல் இனிது” படித்துக்கொண்டிருந்தேன். அது குட்டி குட்டியான விதவிதமான வாழ்வு (காதல்) கதைகளின் தொகுப்பு; பாலா narrative நடையில் எழுதியிருப்பார்.
பக்கங்கள் நகர்ந்துகொண்டிருந்தன; பாத்திரங்களும், கதைகளும் மனதை நெகிழ்த்தியிருந்தன; நாணா, துர்கா கதை வந்தது. அக்ரகாரத்தில் பக்கத்து பக்கத்து வீடு; இருவருக்கும் மனதுள் காதல்; இன்னும் சொல்லவில்லை.
மார்கழி மாதத்தின் ஒரு நாளில், நாணா வீட்டில் அக்கார அடிசல் பிரசாதம் செய்து, கோவிலில் விநியோகிக்க...வரிசையில் நகர்ந்து துர்கா உள்ளங்கை மேல் இலை வைத்து வாங்கும்போது... காற்றில் இலை நகர, சூடாய் அடிசல் உள்ளங்கை மேல் விழுகிறது; கொடுத்துக் கொண்டிருந்த நாணா பதட்டமாக அவன் கையிலும் விழுகிறது...
அன்று முன்னிரவில், வீட்டின் பின், காம்பவுண்ட் அருகில் பார்த்துக் கொள்கிறார்கள்.
“கை எப்படி இருக்கு?” - நாணா கேட்க... “எண்ணெய் போட்டிருக்கு...” “விழுந்தவுடன் உதறியிருந்தா, இவ்வளவு ஆயிருக்காதே...” “நீங்க உதறிட்டேள்; நான் உதறல; உதற மனசில்ல...”
புரிகிறதா?... புரிகிறதா?...
படித்துக் கொண்டிருந்தபோது, உரையாடலை அடுத்த பாராவில் ”புரிகிறதா?... புரிகிறதா?...” என்ற வார்த்தைகளை வாசித்தபோது, மனது சட்டென்று விகாசத்தில் விரிந்தது; புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, பத்து நிமிடம் உள்ளுக்குள்ளும், உயரத்திலும் அலைந்திருந்தேன்.