ஜெ-விற்கு - கடிதங்கள்
அன்பு ஜெ,
நலம்தானே?
வெங்கி, கென்யாவிலிருந்து.
ஜேம்ஸ் ஃபர்குஸன் ஸ்காட்டிஷ்காரர். இரு வாரங்கள் முன்பு எங்கள் நிறுவனத்தில், ”தலைமை செயல் அதிகாரி”-யாக பணிக்கு சேர்ந்திருக்கிறார். பிறந்தது கென்யாவில். வளர்ந்தது, படித்தது, திருமணம் செய்தது தென்னாப்ரிக்காவில். அம்மா இருநாட்டுக் கலவை; அப்பாவும் கூட. அவரின் பெண்ணும், பையனும் கென்ய பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இருநாட்கள் முன்பு இரவுணவின்போது அவருடன் பேசிக்கொண்டிருந்தது சுவாரஸ்யமான மூன்று மணி நேரங்கள். இங்கு கென்யா பல்நாட்டுக் கலவை; இஸ்ரேலிகளையும், டச்சுக்களையும், பிரிட்டானியர்களையும், ஐரோப்பியர்களையும், சீனர்களையும் சாதாரணமாகக் காணலாம். எண்ணிக்கையில் இந்திய சமூகத்தை விட குறைவென்றாலும், என்.ஜி.ஓக்களிலும், காய்கறி மற்றும் மலர்ப் பண்ணைகளிலும் உற்பத்தியிலும், வணிகத்திலும் இருக்கிறார்கள்.
பொதுவாகவே, அவர்களுடன் பேச வாய்ப்பு கிடைத்தால் நான் விடுவதில்லை; ஜேம்ஸ் ஒரு புத்தகப் பிரியர் வேறு; உற்சாகமாய் பேசிக்கொண்டிருந்தேன். அவர் வீட்டிற்குச் சென்றபோது பாட்டனின் (Alain De Botton) "The Consolations of Philosophy" படித்துக்கொண்டிருந்தார். பேச்சின்போது அப்புத்தகத்தைப்பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு, அவருக்கு தத்துவப் புத்தகங்களில் மிகுந்த ஈடுபாடென்றார். வரலாற்றிலும். இந்தியாவின் மேல், இந்தியக் கலாச்சாரத்தின், இந்திய தத்துவ சிந்தனைகளின் மேல் மிகுந்த மதிப்பு அவருக்கு. இன்னும் இந்தியாவை பார்த்ததில்லை; விரைவில் இந்தியப் பயணம் இருக்கும் என்றார்.
பேச்சு ப்ரெக்ஸிட் பற்றியும், ஸ்காட்லாண்ட் பற்றியும், ஐரோப்பிய யூனியன் பற்றியும் நீண்டது. முதன்முறையாக ப்ரெக்ஸிட்டினால் பிரிட்டனுக்கு நன்மையே என்று சொல்லும் ஒருவரைக் கண்டேன். எனக்கு ஆச்சரியம்; அதற்கான காரணங்களையும் சொன்னார். ஐரோப்பிய யூனியனே இன்னும் சில ஆண்டுகளில் இல்லாமலாகலாம் என்றார்; பிரிட்டன் ஒரு தொடக்கமே என்றும், ஜெர்மனியும், இத்தாலியும், ஸ்பெயினும் விலகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அவர் சொன்னபோது ஆயாசமாக இருந்தது. ஆனால் ஸ்காட்லாண்ட் இப்போது ஒரு குழப்ப நிலையில் இருக்கிறதென்றார்; ஸ்காட்லாண்ட், 1700-களில், பிரிட்டனுடன் அரசியல் ரீதியாக இணைந்தது. 2014-ல், பிரிட்டனுடன் அது தொடரவேண்டுமா அல்லது தனி சுதந்திர நாடாக வேண்டுமா என்ற வாக்கெடுப்பு நடந்தபோது, பெரும்பாலான ஸ்காட்டிஸ் மக்கள் பிரிட்டனுடன் இருக்கவே வாக்களித்தனர். ஆனால் பிரெக்ஷிட் முடிவு அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது; ஐரோப்பிய யூனியனில் இருக்கும் பிரிட்டனுடன் இருக்கவே ஸ்காட்லாண்ட்டின் விருப்பம். இப்போது என்ன நடக்கும் என்று கணிக்க முடியவில்லை என்றார்.
ஸ்காட்லாண்டின் பருவநிலை, கலாச்சாரம் பற்றியும் கேட்டறிந்துகொண்டேன். குளிர்காலத்திற்கான உணவுகளையும், மற்ற தயாரிப்புகளையும் முன்பே செய்து வைத்துக்கொள்ளவேண்டும் என்றார். குளிர்காலங்களில் சூரிய வெளிச்சம் ஒரு சிலமணி நேரங்களே இருக்குமென்றும், வேலையும் ஒன்றிரண்டு மணிநேரங்களே செய்யமுடியுமென்றார். ஆனால் கோடை காலத்தில் சூரிய வெளிச்சம் இரவு பத்து மணி வரை கூட நீண்டிருக்கும் என்றார். மெல்லிய வெளிச்சம் கூட இரவுமுழுதும் இருக்குமாம். ப்ரொடஸ்டண்ட்கள் அதிகம். தனக்கு மதத்தின் மீது அதிகம் பற்றில்லையென்றும், தத்துவத்தில்தான் ஆர்வம் அதிகமென்றார். அந்தந்த நாடுகளின் மக்கள் கலாச்சாரம், அந்த நாடுகளின் காலநிலையை பெரும்பாலும் சார்ந்திருக்கிறதோ என்றும் பேச்சு வளர்ந்தது.
அவர் குடும்பத்தில் பலர் தலாய்லாமாவினால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். எதனாலோ புத்தாவின் மீதும், புத்த தத்துவங்களின் மீதும் அவருக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இந்திய பயணத்தில் புத்த சம்பந்தமான இடங்களை பார்க்கவேண்டுமென்பது அவர் ஆர்வம். நான் இந்தியா சென்று வரும்போது, புத்திஸ்ம் சம்பந்தமான புத்தகங்கள் வாங்கி வருமாறு சொல்லியிருக்கிறார். எனக்கு ஆங்கிலத்தில் புனைவுகள், ஜிட்டு மற்றும் ஒஷோ தவிர பரிச்சயம் குறைவு. ஜேம்ஸிற்கு வாங்கி பரிசளிக்க Bhuddism சம்பந்தமான சில நல்ல புத்தகங்கள் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.