நலம்...நலமறிய ஆவல் (பேலியோ வாழ்வியலுடன் 170 நாட்கள்)
2017 மே மாதத்தின் இறுதி வாரத்தின் ஒரு நாள் மாலை, ஆறு மணி இருக்கும். கோவை ஈச்சனாரி கோவிலின் வெளியே காரில் உட்கார்ந்திருந்தேன். மல்லிகாவும், இயலும் கோயில் உள்ளே தரிசனத்திற்குச் சென்றிருந்தார்கள். அப்போதுதான் டாக்டர் ஹரிஹரனை (Hariharan V), கோவிலுக்கு எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளியிருந்த அவர் கிளினிக்கில் பார்த்துவிட்டு வந்திருந்தோம். இரத்தப் பரிசோதனை அளவுகள் பயமுறுத்தியிருந்தன. மனம் பேலியோ குறித்தான யோசனையிலேயே இருந்தது. பேலியோவைக் கடைப்பிடிக்க முடியுமா, வேறு வழிகள் ஏதேனும் இருக்கிறதா, மல்லிகா உடன் இருந்தாலாவது தாக்குப் பிடிக்கலாம், தனியே கென்யாவில் எப்படி பேலியோவை சமாளிப்பது, என்னதான் டாக்டர் ஹரிஹரன், சைவ பேலியோவிற்கு பாரா (Pa Raghavan) சாரை உதாரணம் காட்டி ஊக்கப்படுத்தினாலும், என்னால் முடியுமா?, சைவ பேலியோ முடியவில்லையென்றால், 25 வருடங்களாய் விலக்கியிருந்த அசைவ உணவுப் பழக்கத்திற்கு மறுபடியும் திரும்ப வேண்டியிருக்குமோ, அப்படித் திரும்ப எனக்கு மனம் ஒத்துக்கொள்ளுமா...முன்னும் பின்னுமாய் பல்வேறு யோசனைகள்.
மேற்கில் சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது. வெளிச்சம் குறைந்து, கோவில் வெளியில் மின் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. உள்ளிருந்து மல்லிகாவும், இயலும் வந்தார்கள். உள்ளங்கையில் கொண்டுவந்த விபூதியை மல்லிகா என் நெற்றியில் இட்டுவிட்டு, கண்களுக்கு மேல் கைவைத்து மறைத்துக்கொண்டு, நெற்றியை ஊதியது. கண்களை மூடியபோது, உள்ளிருக்கும் அவனிடம் கைகூப்பினேன் “அடுத்த வருடம், வாய்ப்பிருந்து உன்னைச் சந்திக்க வந்தால், பூரண உடல் நலத்துடன்தான் வருவேன்”
2018 மே-யில் ஊருக்கு வரும்போது ஈச்சனாரி விநாயகனை உள்ளே சென்று நேரில் சந்தித்து, மிக்க மகிழ்ச்சியாய் நன்றியும், நலம் விசாரிப்பும் செய்யவேண்டும். டாக்டர் ஹரிஹரன் தான், கிளினிக்கை கோவை ஆர்.எஸ்.புரத்திற்கு மாற்றிக்கொண்டார்; ஒரு வருடமாக மின்னஞ்சல்களில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த அவரையும் நேரில் சந்திக்கவேண்டும்.
இந்த 2017 டிசம்பர் 20-ல் பேலியோவில் 170 நாட்கள் ஆகின்றன. எடை 91.6 கிலோவிலிருந்து 71-ஆகக் குறைந்திருக்கிறது. டோட்டல் கொலெஸ்ட்ரால் 257-லிலிருந்து (mg/dl) 170-ற்கு வந்திருக்கிறது. LDL 197-லிலிருந்து 111-க்கு. ட்ரைகிளிசரைட்ஸ் 253-லிலிருந்து குறைந்து 88-ல். டயாபடிக் மாத்திரைகளை பேலியோ ஆரம்பித்த ஒரே வாரத்தில் நிறுத்தியதுதான். HbA1c, ஃபேட்டி லிவருக்கான அப்டமன் ஸ்கேன், பிற பரிசோதனைகள் மே-யில் ஊருக்கு வரும்போதுதான் செய்யவேண்டும். இங்கு கென்யாவில் இரத்தப் பரிசோதனைக்கான கட்டணங்கள் மிக அதிகம். முழுப் பரிசோதனைக் காரணிகளுக்கும் கிட்டத்தட்ட 30000-லிருந்து 40000 கென்யன் ஷில்லிங்குகள் ஆகும் (நம் இந்திய ரூபாயில் 20000-லிருந்து 26000 வரை!). ஒருமுறை இங்கு ஒரு லேப்-ற்குச் சென்று விட்டமின் டி-க்கு மட்டுமான பரிசோதனைக்கான கட்டணம் எத்தனையென்று கேட்டேன். 8000 கென்யன் ஷில்லிங் என்றார்கள்; பயந்து ஓடிவந்துவிட்டேன். ஏன் ஆர்பிடோ ஏசியா (Orbito Asia), ஆர்த்தி ஸ்கேன்ஸ் (Aarthi Scans), தைரோகேர் (Thyrocare Coimbatore) மாதிரியான லேப்-கள் தங்கள் கிளைகளை ஆப்பிரிக்க நாடுகளில் துவங்கக் கூடாது? (லேப் நடத்தி நிர்வகிப்பதற்கான பொருளாதாரக் கணக்குகள் எனக்குத் தெரியாது; இம்மக்களுக்கும் குறைந்த செலவில் மருத்துவ சேவைகள் கிடைக்கலாமே என்ற விருப்பம்தான்).
கடந்த முப்பது வருடங்களில், நீரிழிவினால் பாதிக்கப்பட்ட மக்கள்தொகை இங்கு கென்யாவில் இரு மடங்காகியிருக்கிறது. மரணங்களில் நீரிழிவினால் இறப்பவர்கள் விகிதம் 20 விழுக்காடு. கணக்கெடுப்பின்படி நீரிழிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை 4.6 சதவிகிதம் (6 சதவிகிதத்துக்கும் மேலிருக்கலாம் என்று மற்றொரு அறிக்கை தெரிவிக்கிறது). இன்றைய நிலவரப்படி 17 கென்யர்களில் ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறது. இம்மக்களின் முக்கிய உணவு மக்காச்சோளம். நீரிழிவு சம்பந்தமான பல அமைப்புக்கள் இங்கு செயல்படுகின்றன (Kenya Diabetes Management & Information Centre, Diabetes Kenya Association போன்று). அரசு அமைப்புக்கள் தவிர, வெளிநாடுகளின் உதவியுடன் இயங்கும் சாரிட்டி அமைப்புகளும் உண்டு (Kenya Defeat Diabetes Association - KDDA, Diabetes Awareness, Prevention and Management, Kenya - DAPMK போன்று).
பேலியோ நாட்கள்...
1. உற்சாகமாய் இருக்கிறது. பழைய கார்ப் வாழ்க்கை மறந்தே விட்டது; அதற்கான ஏக்கமும் துளியும் இல்லை. எனது சமையலறை நேரங்கள் மிகக் குறைந்துவிட்டன. நானே சமைத்துக் கொள்வதால், முன்பெல்லாம் எல்லா நேரமும் என்ன சமைப்பது என்ற யோசனையிலேயே மனது இருக்கும்; அதற்கான திட்டமிடலை முன்னரே செய்யவேண்டியிருக்கும். இப்போதெல்லாம் சமையலைப் பற்றிய சிந்தனையே அதிகம் வருவதில்லை.
2. விடுமுறை நாட்களின் மதிய உணவிற்குப் பின்னான பகல் தூக்கங்கள் தொலைந்துபோய் விட்டன. நாளின் எந்த நேரமும் உடலும், மனமும் களைப்படைந்ததாகவே உணர்வதில்லை. அலுவலக நேரங்களில், சுற்றியிருப்பவர்களுடனும், இயக்குநர்களுடனுமான தொடர்புத் தரம் மேம்பட்டிருக்கிறது.
3. மனது, தானாகவே உருவாக்கிக் கொண்ட பல கற்பனைத் தடைகளிலிருந்து வெளிவந்திருக்கிறது. இரண்டு வயதில் ஏற்பட்ட இளம்பிள்ளை வாதத்தினால் வலது கால் சிறிது பாதிப்படைந்திருந்தது. எனது பணியிடம் (கொய்மலர் வளர்ப்புப் பண்ணை) அதிகம் சுற்றவேண்டிய வேலைகள். பெரும்பாலும் இரண்டு சக்கர வாகனத்தில்தான் மேற்பார்வைகளுக்குச் செல்வேன் (பசுங்குடில்களின் உட்புறங்களில் கூட). பேலியோ ஆரம்பித்தபின்னான கடந்த ஐந்து மாதங்கள், இவ்விஷயத்தில் மிகப் பெரும் விடுதலையை எனக்குத் தந்தன. வாகனத்தில் சுற்றுவது குறைந்து நடை அதிகமாயிருக்கிறது. பணியின் தரம் உயர்ந்திருக்கிறது.
4. தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு புதிய முயற்சியில் இறங்கவோ, கருத்துக்களை பேச்சின்போது அடுத்தவர்களுக்கு தெரியப்படுத்துவதிலோ பெரும் தயக்கமிருக்கும்; அது உடைந்திருக்கிறது.
5. புதியவர்களுடனான அறிமுகமும், தொடர்பும் இயல்பானதாய் இனிமையாய் துவங்குகிறது. முன்பெல்லாம், மெல்லிய தாழ்வு மனப்பான்மையோடு, “இண்ட்ராவெர்ட்” என்று எனக்கு நானே பொய்யாய் கற்பித்துக்கொண்ட பிம்பத்தோடு சுற்றிக் கொண்டிருப்பேன். சமீபத்தில் எங்கள் நிறுவனத்தில் ஸ்காட்டிஷ்காரரான ஜேம்ஸ் பணிக்குச் சேர்ந்தார். முன்பிருந்ததுபோல் இருந்திருந்தால், இடைவெளியோடுதான் இருந்திருப்பேன். ஆனால் இப்போது, நட்பு ஏற்படுத்திக் கொள்வதில் தயக்கம் ஏதுமில்லை. அவரும் புத்தகங்களின் பிரியர் என்பதால், அவருடனான நட்பு பலப்பட்டு தொடர்கிறது.
இன்னும் சொல்லலாம்; யோசித்து தொகுத்துக்கொள்ள வேண்டும். நண்பர் ஒருவர் குழுமத்தில் எழுதியிருந்தது போல, அடுத்த முறை பயணத்திற்காய் விமான நிலையம் செல்லும்போது, இம்மிக்ரேஷனில் மேலும் கீழும் பார்ப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
டான்சானியாவில் வேலை பார்க்கும் நண்பர் பாலாவுடன் பேசும்போதெல்லாம், பேலியோ பற்றி பேசாமல் எந்த முறையும் பேச்சு நடந்ததில்லை. நாங்கள் இருவரும் வேளாண் பல்கலையில் படித்தவர்கள் (பாலா எனக்கு சீனியர்). பாலா வேளாண்மை சார்ந்தும், சமூக, பொருளாதாரம் சார்ந்தும் கட்டுரைகள் எழுதுவார். மாறிவரும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் நீர் மேலாண்மைக்கு ஏற்ப மாறவேண்டிய/மாற்ற வேளாண்முறைகள் பற்றி ஒரு நீள் கட்டுரை எழுதவேண்டும் என்று சொன்னார். பேலியோவினாலும் எதிர்காலத்தில், வேளாண்மையில் கணிசமான மாற்றங்கள் ஏற்படும் என்றுதான் தோன்றுகிறது.
மார்கழி துவங்கியிருக்கிறது. பேலியோவில் என் முதல் மார்கழி. மார்கழி, எனக்கு எப்போதும் மிகவும் விருப்பமான, மனதுக்கு மிக நெருக்கமான மாதம். சிறு வயதிலிருந்தே எல்லா மார்கழிகளும் மனதுக்குள் பசுமையாய் பதிந்துபோயிருக்கின்றன. மார்கழியின் மணம் கூட என் இதயம் அறியும். ஆண்டின் எல்லா நாட்களிலும் எனக்குப் பிடித்த நாட்களும் நேரமும், மார்கழியின் வைகறை நேரங்கள்.
தேகம் கோவிலென்று முன்னர் படிக்க மட்டும்தான் செய்திருக்கிறேன். பேலியோ இப்போது உணர்த்தியிருக்கிறது.
“எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்”
ஆம்...குறையொன்றுமில்லை நண்பனே...