நிகழ்வுக்குறிப்புகள் 1 - குழந்தைகளும் அம்மாக்களும்

From HORTS 1993
Jump to navigation Jump to search

நிகழ்வுக் குறிப்புகள் - 1 - குழந்தைகளும் அம்மாக்களும்

முதல் சந்திப்பின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே “நான் பிராமின். என்னோட முழுப்பெயர் துஷார் வியாஷ். எங்க தாத்தா கோவில்ல பண்டிட்டா இருந்திருக்கார். எங்க பாட்டி அடுத்தவங்க வீட்டில தண்ணிகூட குடிக்கமாட்டாங்க...” என்றான் துஷார். கண்கள் விரிந்து மின்னின. நான் மனதுக்குள் புன்னகைத்துக்கொண்டேன். நேரம் மதியம் இரண்டுக்கு மேல் ஆகியிருந்ததால், “லன்ச் சாப்பிட்டாயிற்றா?” என்று சாதாரணமாகத்தான் கேட்டேன். இந்நீண்ட பதிலை எதிர்பார்க்கவில்லை. “நான் வீட்டிற்குப் போய்தான் சாப்பிடவேண்டும். உங்களுக்குப் பசித்தால், ஏதேனும் ஹோட்டல் போகலாம்” என்றான். நான் “வேண்டாம்” என்றேன். மல்லிகா கொடுத்தனுப்பியிருந்த புளிச்சாதம் இன்னும் இரண்டு டப்பாக்களில் மீதமிருந்தது.

மல்லிகாவும் இயலும் இல்லாமல் இம்முறைதான் முதன்முதலாய் தனித்திருக்கப் போகிறேன். இயலை பல்லடத்தில் ஜெம் சிபிஎஸ்இ ஸ்கூலில் சேர்த்துவிட்டு, அவர்களை விமலா அத்தை வீட்டில் மல்லிகா அக்கா லதாவுடன் இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்துவிட்டாகியிருந்தது. கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் விடிகாலை இரண்டு மணிக்கு செக் இன்னில் நுழைந்து கண்ணாடிச் சுவருக்கு வெளியே நின்றிருக்கும் அவர்களுக்கு கையசைத்தபோது மனதைப் பிசைந்தது. பயணம் முழுதும் மனது அவர்களிருக்கப் போகாத கென்ய நாட்களின் கனத்தைக் கொண்டு ஒடுங்கியிருந்தது. நைரோபியில் இறங்கியதும் மேகமூட்டமும், மென் தூறலும் மனதைக் கொஞ்சம் தளர்த்தியது. சுபாடி நிறுவனத்தின் டிரைவர், பெயர் எழுதிய அட்டை பிடித்து வருகையில் நின்றிருந்தார். சுபாடியில் இண்டர்வியு முடித்தது இந்தியா போகுமுன் டிசம்பரில். பிப்ரவரியில் அப்பாய்ண்ட்மெண்ட் கடிதம் வந்தது.

ஏர்போர்ட்டிலிருந்து வெளியில் வந்ததும், டிரைவர் பீட்டர், துஷார் ஹெட் ஆபீஸில் இருப்பதாகவும், பண்ணைக்குச் செல்லும்போது அவரையும் கூட்டிச் செல்லவேண்டும் என்றார். நைரோபியின் மத்தியில், எம்.பி.ஷா. மருத்துவமனை பக்கத்தில் பத்துமாடிக் கட்டிடத்தின் கீழ் பார்க்கிங்கில் துஷாரை முதன்முதலாய் சந்தித்து கைகுலுக்கினேன். துஷாருக்கு முப்பந்தைந்து வயதிருக்கும். குஜராத்தி. எம் வடிவத்தில் முன் வழுக்கையிருந்தது. சுபாடியின் இரண்டு பண்ணைகளில் நைவாஸா பண்ணையில் அட்மின் மேனேஜராய் இருக்கிறான். பண்ணைக்குப் போகும் வழியில் நான் முன்னால் வேலை செய்த பிளாக் டூலிப் பண்ணையைப் பற்றியும், மலர்த்துறையில் என் நண்பர்கள் பற்றியும் கேட்டுக்கொண்டு வந்தான். எட்டு வருடங்களாக உகாண்டாவின் ஒரு மலர்ப் பண்ணையின் முழுப் பொறுப்பில் இருந்ததாகவும், பின்பு அப்பண்ணை மூடப்பட்டதால் கென்யா வந்ததாகவும் சொன்னான். (பின்பு நண்பர்கள் மூலமாக, துஷார் அப்பண்ணையில் ஸ்டோர் கீப்பராக இருந்ததாகவும், பண்ணை நஷ்டமடைந்ததால், எல்லோரையும் அனுப்பிவிட்டு, குறைவான சம்பளத்திலிருந்த துஷாரை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பண்ணையை விற்பதுவரை இருக்குமாறு அந்நிர்வாகம் சொன்னதாக் அறிந்தேன்!).

சுபாடியின் டைரக்டர்களும் குஜராத் படேல்கள்தான். கென்யா ஆப்ரிக்க நாடானாலும், காதுகள் முழுதும் “கெம்சோ” கேட்டுக்கொண்டுதானிருக்கும். துஷார், தன்னைப் பற்றிய ஒரு உயர் பிம்பத்தை, அவன் உகாண்டாவில் பணியாற்றிய விதங்களைச் சொல்லி, என்னுள் உருவாக்க முயன்றுகொண்டிருந்தான். பண்ணையின் மெயின்கேட்டில் நுழைந்து, வலதுபக்கம் திரும்பியதும் மேனேஜர் குடியிருப்பு வந்தது. காம்பவுண்டினுள் நான்கு தனித்தனி வீடுகள்.

ஒன்றில் துஷார் குடும்பத்துடன். தனக்கு ஒரு பெண் என்றும், ஒன்றாம் வகுப்பு நைவாஸா கென்ய சிலபஸ் ஸ்கூலில் படிப்பதாகவும், இப்போது மனைவியும், குழந்தையும் இந்தியா போயிருப்பதாகவும் சொன்னான்.

மற்றொரு வீட்டில் தாஸ். மெகானிகல் சைடில் வேலை. கேரளாக்காரர். தாஸின் குடும்பம் நகுருவில் இருந்தது. தாஸின் பெண் எட்டால் வகுப்பில். தாஸ் வார விடுமுறையில் நகுரு போய்வருவார். அவர் குடும்பம் பள்ளியின் நீண்ட விடுமுறை மாதங்களின்போது பண்ணைக்கு வந்து அவருடனிருக்கும். மூன்றாவது வீட்டில் நான். நான்காவது வீடு, வாரம் ஒருமுறை பண்ணைக்கு வந்துசெல்லும் மேனேஜிங் டைரக்டரின் சமையல்காரர் தங்குவதற்கு! (சமையல்காரர் நேபாளி. அவரின் சம்பளம் தாஸின் சம்பளத்தைவிட அதிகம் என்று பின்னர் அறிந்தேன்!)

பணியிட அரசியல்கள், எனக்கு அறிமுகமானது 1995-ல் ஓசூரின் மஞ்சுஸ்ரீ நிறுவனத்தில். முதலில் அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது; பின்னர் பழகிப்போனது அல்லது சீக்கிரம் புரிந்தும் பழகியும் கொண்டேன். இரண்டாவது நிறுவனமான மும்பையின் சம்பாலியில் அரசியல் குறைவு. ஆனாலும் வெவ்வேறு பொறுப்புகளிலிருந்த மராத்தி மனுஸ்களின் வயிற்றெரிச்சல்களையும், குழி தோண்டல்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. சம்பாலியில் சி.இ.ஓ-வாக இருந்த கொச்சின்காரர் ஒரு ஆங்கிலோ இந்தியர். ஒருமுறை தனிப்பேச்சின்போது சொன்னார் “நிறுவனத்தை இந்த மராத்திகளிடம் மட்டும் ஒப்படைத்தால், இரண்டே வருடங்களில் இழுத்து மூடி விடுவார்கள்” என்று. மூன்றாவதாக கென்யாவின் பிளாக் டூலிப் குழுமத்தில் இணைந்தது 2011-ல். இக்குழுமம் தமிழ்க்காரருடையதாயிருந்தாலும், உயர்மட்டத்திலிருக்கும் வட இந்தியரின் “வட இந்திய/தென்னிந்திய” அரசியலைத் தாங்க முடியாமல் (சமாளிக்க முடியாமல்!) இரண்டு வருடங்களிலேயே வெளியில் வரவேண்டியிருந்தது.

சுபாடியின் நைவாஸா பண்ணையில் என்னையும் சேர்த்து இந்தியர்கள் மூவர்தான் என்றாலும் அரசியலுக்கு இங்கும் குறைவில்லை. எனக்கு சூழல் பழகுவதற்கும், உடன் வேலை செய்பவர்களின் நுண்ணரசியலைப் புரிந்துகொள்வதற்கும் நாலைந்து மாத அவதானிப்புகள் தேவையாயிருந்தது. துஷாரும், மேனேஜிங் டைரக்டரும் குஜ்ஜூக்கள் என்பதால், இயல்பாகவே துஷாரின் அரசியலும், ஆதிக்கமும் கொஞ்சம் தூக்கலாய்த்தானிருந்தது துஷாரின் கொச்சை ஆங்கிலத்தை சகித்துக்கொள்ளவும், பழகவும் கொஞ்ச நாள் ஆனது. உரையாடல்களின்போது ஹிந்திக்கு மாறி தப்பிக்க வேண்டியிருந்தது. டைரக்டர்களுடனான குழுச் சந்திப்புகளின்போது, டைரக்டர்கள் ஆங்கிலத்தில் உரையாடினாலும், உரையாடலை குஜராத்திக்கு மாற்றும் துஷாரின் அநாகரிகம் ஆரம்பத்தில் எரிச்சலை உண்டாக்கினாலும், போகப் போக புன்னகை வரவழைத்தது.

வந்த புதிதில் எனக்கு மிகுந்த ஆச்சர்யம் உண்டாக்கியது, துஷார் மனைவியின் மறைமுகமான நிர்வாகத் தலையீடுகள். குறிப்பாக நிறுவன வாகன ஓட்டுநர்கள் மீதான அவரது அதிகாரங்கள் (குஜராத்திகளின் வீடுகளில் மனைவிகளின் ஆதிக்கம் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்!). எனக்கு முன்பிருந்த உற்பத்தி மேலாளர் மராத்திக்காரர். அவரை மூன்றே மாதத்தில் வேலையைவிட்டு அனுப்பியதற்கு முக்கிய காரணம் துஷாரின் மனைவிதான் என்று ஒருமுறை தாஸ் சொன்னார். துஷாரின் மனைவிக்கும், மராத்திக்காரர் மனைவிக்கும் தினசரி உச்சக்குரலில் சண்டை நடக்கும் என்றும், சில நேரங்களில் குழாயடிச் சண்டை வார்த்தைப் பிரயோகங்கள் கூட கேட்டதுண்டு என்றும் தாஸ் சொல்லியிருக்கிறார்.

பணியிடத்தில் தாஸிற்கும், துஷாருக்கும் ஏழாம் பொருத்தம். மாதமிருமுறையாவது பெரும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு, விஷயம் டைரக்டர் வரை போகும். சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தி நடத்தி டைரக்டர் பெரும் ஆயாசத்திலிருந்தார். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, துஷாரும், தாஸூம் “பாய்...பாய்” என்று பேசிக்கொள்வதைப் பார்த்தால், என்ன ஒரு அன்பும் அண்டர்ஸ்டேண்டிங்கும் என்றுதான் தோன்றும்!

ஒருமுறை தாஸ் குடும்பம் பள்ளி விடுமுறைக்கு பண்ணைக்கு வந்து தங்கியிருந்தபோது, தாஸின் மனைவியிடம் நலம் விசாரித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தபோது துஷார் மற்றும் துஷார் மனைவி பற்றி ஏகக் கதைகள் சொன்னார். தாஸைச் சுட்டிக்காட்டி, “இவர் பாவம், வாயில்லாப் பூச்சியாச்சா!; துஷாருக்கு இளக்காரம். இவரு வாயே திறக்கமாட்டாருங்கற நம்பிக்கையில டைரக்டர்கிட்ட ஒண்ணுக்கு ரெண்டா இவரப்பத்தி போட்டுவிட்டுர்றான். இவர்கிட்டயும் நான் சொல்லிச்சொல்லி அலுத்துப்போச்சு. இன்னும் குழந்தையாவே இருக்கார் (தாஸிற்கு வயது நாற்பத்தி ஒன்பது). இப்படியே அவன் சொல்றதுக்கெல்லாம், திருப்பிக் கொடுக்காம, அமைதியாவே போய்ட்டிருந்தா, அவன் தலைமேல ஏறி ஆடத்தான் செய்வான். இவர் டைரக்டர்கிட்ட வாயே திறக்கறதில்ல. ஏதாவது அத்தியாவசியமானது கூட டைரக்டர்கிட்ட கேட்டு வாங்கமாட்டார். எல்லாம் நாந்தான் சொல்லிச் சொல்லிப் புரிய வைக்கணும்” என்று ஆரம்பித்து சுமார் அரைமணி நேரம் கொட்டித்தீர்த்தார். அவரின் தமிழ், முழு வாக்கியங்களில்லாது, உடைந்த தமிழாயிருந்தது. தாஸைவிட தனக்கு நன்றாக தமிழ் தெரியுமென்றார். மல்லிகாவிடம் பேசும்போது விசாரித்ததாக சொல்லுமாறும், தானும் ஒருமுறை பேசுவதாகவும் சொன்னார்.

அவ்வருடம், தாஸின் பெண் தேவிகாவின் பிறந்தநாள், அவர்கள் பண்ணையில் தங்கியிருந்த நாட்களினூடே வந்தது. தாஸ், இரவு டின்னருக்கு, என்னையும் துஷாரின் குடும்பத்தையும் அழைத்திருந்தார். வேலை முடித்து வீடு வந்து குளித்து ரெடியாகி தாஸ் வீட்டிற்கு போனபோது மணி ஏழாகியிருந்தது. சுவர்களில் ஊதி ஒட்டவைக்கப்பட்ட பலூன்கள். ஹாலில் சிறிய டேபிளில் கேக் வைக்கப்பட்டு இரண்டு பக்கமும் பூக்கள் வைக்கப்பட்டிருந்தன. துஷார் மனைவியும், தாஸ் மனைவியும், தாஸூம் சோபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க, துஷார் பெண் நம்ரதாவும், தேவிகாவும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நான் சென்றதும் என்னை உட்காரச் சொல்லிவிட்டு, “துஷார் வர லேட்டாகுமா?” என்று தாஸ், துஷார் மனைவியிடம் கேட்டார். துஷாரின் மனைவி துஷாருக்கு போன் செய்து, “வெங்கியும் வந்தாச்சு. உங்களுக்காகத்தான் வெய்ட்டிங். சீக்கிரம் வாங்க” என்றார். போனை வைத்துவிட்டு “துஷார் எப்பவுமே இப்படித்தான். எப்பப் பார்த்தாலும் வேலை...வேலை. வேலை சீக்கிரம் முடிச்சு சீக்கிரம் வீட்டுக்கு வரணும்னு ஒரு பொறுப்பு கிடையாது” என்று சலித்துக்கொண்டார்.

பேச்சு சாப்பாடு பக்கம் திரும்பியது. துஷார் வீட்டில் இருபத்தைந்து கிலோ மூட்டையாய்த்தான் உருளைக்கிழங்கு வாங்குவார்கள். அவர்களின் முக்கிய உணவு உருளைக்கிழங்குதான். வாரத்தின் இரண்டு மூன்று ”உண்ணாவிரத” நாட்களில், உருளைக்கிழங்கை வித்விதமாய் சமைத்துச் சாப்பிடுவார்கள். “வாக்கிங் போகணும். உடம்பு ஏறிட்டே போகுது” என்றார் துஷார் மனைவி. “எனக்கு உங்கள் சவுத் இண்டியன் மசால் தோசை ரொம்பப் பிடிக்கும்” என்றார். என்னைப் பார்த்து “உங்கள் குடும்பம் இந்தியாவில் நலமா?” என்றார். நான் அவர்கள் நலம் என்றேன். குழந்தைகள் பற்றியும் அவர்கள் ஸ்கூல் பற்றியும் பேச்சு தொடர்ந்தது. தாஸ் “ஆச்சர்யமாக நம் மூன்று குடும்பங்களிலும் அனைவருக்கும் தலா ஒரு குழந்தை; அதுவும் பெண்” என்றார். துஷார் மனைவி “இல்லையே, எனக்கு இரண்டு குழந்தைகளாச்சே...” என்றார், சிரித்துக்கொண்டே. சிறிது இடைவெளிவிட்டு “துஷாரையும் சேர்த்து” என்றார். “அட!” என்று என்னுள் வார்த்தை எழுந்தது. “நம்ரதா மாதிரியேதான் துஷாரும்; வீம்பு, பிடிவாதம். சின்னக் குழந்தை மாதிரி நடந்துக்கறது. எல்லாத்தையும் அவங்களுக்கு நாந்தான் செய்யணும். ஒரு காரியமும் அவங்களா பண்ணிக்க மாட்டாங்க. துஷாருக்கு டீ போடக்கூட தெரியாது!” குரலில் பெருமைபொங்க சொன்னார்.

கோயம்புத்தூரிலிருந்து மல்லிகா ஃபோன் வந்தது. எடுத்து தேவிகாவிற்கு பிறந்த நாள் என்றும், தாஸ் வீட்டில் இருப்பதாகவும் சொன்னேன். மல்லிகா தேவிகாவிடம் ஃபோனைத் தரச் சொல்லி வாழ்த்து சொல்லியது. தாஸ் மனைவி நானும் பேசுகிறேன் என்றார். மல்லிகாவிடம் ஃபோனில் அரை மணி நேரம் பேசினார். ஹால்விட்டு நகர்ந்து ஃபோனோடு வாசல் கதவு திறந்து வெளியில் போனார். இடையிடையே அவர் பேசுவது காதுகளில் விழுந்தது. “ஆமாமா. இவரும் அப்படித்தான். சரியான ஊமை. ஒழுங்கா பேசக்கூட தெரியாது”. மல்லிகா என்ன சொல்லியிருக்கும் என்று புரிந்தது. வாய்விட்டு சிரிக்கவேண்டும் போலிருந்தது.

இப்படியாக சக குழந்தைகளோடு பணியிட வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது...