CORONA
Jump to navigation
Jump to search
கொரோனா... உச்சரிக்கும் போதே குரல்வளை தொடுகிறது இந்த நாமம். கொள்ளை நோயாக மாறி வரும் கொரோனா. விஷமாக மாறி வரும் வைரஸ் கிருமி. நாடியை அசைத்துப் பார்க்கும் நச்சுயிரி. நுண்ணோக்கி மூலம் நோக்கும் போதே உன் வில்லத்தனம் விளங்குகிறதே தீநுண்மி. எத்தனையோ உயிர்க்கொல்லி நோய்களை ஓரம் கட்டி விட்டு, இன்று மனிதகுல சிந்தை முழுவதும் சிம்மாசனம் இட்டு அமர்ந்து , மிரட்டிப் பார்க்கும் கொரோனாவே. எங்கிருந்து வந்தாய்...? ஏன் இப்படி உயிரிகளை உரசிப் பார்க்கிறாய். கலியுகமே ஆனாலும் கண்ணா (கிருஷ்ணா) இது உனக்கு அடுக்குமா...? எதார்த்தமாக செருமினாலும், தீவிரவாதியைப் பார்ப்பது போன்றே ஒரு பார்வை நம்மை நோக்கி. சக மனிதனை சமமாக பார்க்கும் காலம் போய், பயந்து மூன்றடி விலகி ஓடுகிற நிலமை. எத்தனை நாட்கள் இந்த பயந்த வாழ்க்கை. யாதுமறியா குழந்தைகளை எப்படி எந்நேரமும் கண்காணிப்பது. எதையாவது தொட்டு விடுவார்களோ.தொட்ட கையை வாயில் வைத்து விடுவார்களோ என எப்பொழுதும் ஒரு பதட்டநிலை. அறிகுறிகள் வேறு, மிகவும் பொதுவானவைகளாகவே இருக்கின்றன. தொட்டாலும் வரும்.காற்றிலும் கலந்து வரும். இப்படி ஆரம்பித்து இறுதியில் இழப்பையும் ஏற்படுத்தும் என்றால் என்ன நியாயம் ஆண்டவா. வேண்டாம் இறைவா. அதன் வீரியத்தை குறைத்து,அதை காற்றில் கரைத்து,உன்னையே முழுமையாக நம்பிக் கொண்டு இருக்கும் எங்கள் இனத்தை கரை சேர்த்து விடப்பா. என் இனத்தின் மற்றொரு சாரர், படும் பாட்டை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. காது கொடுத்து கேட்கவும் முடியவில்லை. உடம்பை முழுவதுமாக மறைத்துக் கொண்டு,முகத்தில் சுவாசக் கவசத்துடன், விழிகள் மிரள,ஒரு பரபரப்பான வாழ்க்கை. அத்தனை இக்கட்டுகளிலும், தன் சேவையை துணிந்து செய்யும், உனக்கு இணையான என் இனத்தவர்கள் (மருத்துவர்கள்). மக்கள்தொகையிலும் முதலிடம். கண்டுபிடிப்புகளிலும் முதலிடம். கடுமையாக உழைப்பதிலும் முதலிடம். இப்படி முன்னேறிக் கொண்டிருந்த அந்த தோழமைகள் இன்று புதுப் புது தொற்றுநோயினாலும் போராடுகிறார்கள். சீனாவின் வுகான் நகரத்தின் அமைதியை, இன்றைய நிலையை ,சமூக செயல்பாட்டாளரான 'ஜிங்' என்ற இளம்பெண் தன் குறிப்பேட்டில் பதிய வைத்தது....மனதை கலங்கடித்தது. படிக்க... படிக்க கண்கள் பனித்துப் போயின. நமக்கும் ஒருவிதமான பயம் இருந்த போதும், அவர்களின் அந்த நிமிடங்களை, நொடிகளை... அந்த இளம்பெண்ணின் வரிகள் மூலம் உணரும் போது, ஏனோ இனம் புரியாத....என் இனம் பற்றிய வலி ஏற்படுகிறது...😢. தற்காப்பாக எங்கும் பரவாமல் தடுக்க, அவர்கள் தனிமை படுத்தப்படுகிறார்கள். இப்பொழுது உலக வரைபடத்தில் 'சீனா' உற்று நோக்கப்படுகிறது. அதன் எல்லைகள் கண்காணிக்கப்படுகிறது. நச்சுநுண்மத்தை நசுக்க வழி தெரியாமல் மனித இனம் திணறுகிறது. தற்காப்பாக செய்ய வேண்டியவைகள் பக்கம் பக்கமாக, விளக்கம் கொடுக்கப்படுகின்றன. அதில் மிகவும் எளியதும், கிட்டத்தட்ட நம் பக்கமே வரவிடாமல் தடுப்பதும் ஒரே முறை தான்...அது நம் கரங்களை மறுபடியும் மறுபடியும் நேரம் எடுத்து, சுத்தம் செய்வது. இது அடிப்படை சுகாதார முறையே ஆனபோதும் , இது தான் தற்சமயம் நம்மை இந்த மிரட்டும் நோயிலிருந்து மீட்கும் கவசம் ஆகும். கூடவே உட் கொள்ளும் ஆகாரம். நம்மை .... நம் தேகத்தை நெருங்கினாலும் அண்டவிடாமல் விரட்டி அடிக்கும் வண்ணம், வலுப் பெற்றதாக மாற்றுவதுடன் எதிர்ப்பு சக்திகளை தேகத்தில் சேமித்தும் வைத்துக் கொள்வதும் சிறந்த பாதுகாப்பு முறையாகும். நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் எப்பொழுதும் நம் சிந்தையில் இருக்கட்டும். கொரோனாவாகவே இருந்தாலும், நம் ஒளி வட்டத்தை மீறி நுழைந்து விடா வண்ணம் தற்காப்பு அரண் அமைத்திட வேண்டும். இருபது இருபது, அனைவருக்குமே நலமாக அமைய வேண்டியே எங்கும் பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டன. இறைவா ஏன் இந்த கடுமையான சோதனை....மனித குலத்திற்கு. ஏதோ...அறியாமல் அவன் செய்த தவறு எதுவாயினும், கொஞ்சம் பொறுத்து மனித குலம் வாழ வகை செய்திட மாட்டாயா இறைவா. மன்னித்து எங்களை இதன் தொற்றிலியிருந்து விடுவித்து அருள் பாலித்திடு ஆண்டவா. உலகையே அச்சுறுத்தும் இந்த 'கொரோனா' விஷம் மீண்டும் அந்த ஈசனின் குரல்வளையை சென்று அடையட்டும். ஆம் ...பரமசிவனோ...பரமாத்மாவோ... யாராயினும் அதன் விஷம் விழுங்கி எங்கள் இனம் வாழ வழி செய்திடுங்கள். வௌவாலினால் வந்ததா... பாம்பினால் வந்ததா... அதை உண்ட மனிதனால் வந்ததா... எப்படியோ என் இனத்தை தொட்டு விட்டது விஷம். அது தொடராமல் பார்த்துக் கொள் என் இறைவா. உயிர்த் தன்மையையும், உயிரற்ற தன்மையையும் கொண்டதனாலேயே நீ உன் வழியைத் தனியாக்கினாய் தீநுண்மம் என்று. நீ உயிராகவே இருந்த போதும்,உயிர்க்கொல்லியாகவோ... கொள்ளை நோயாகவோ மாறாதவரை மன்னிக்கப்படுவாய் . ஆம்... அப்படியே வந்த சுவடு தெரியாமல் , தொலைந்து போய் விடு. ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொரு புதிய தொற்று,மனிதனை தொற்றுகிறதாக வரலாறு சொல்லுகிறது. இதை காலத்தின் கட்டாயம் என்று சொல்லுவது தவறு. ஆம்...மனிதனும் எங்கோ தவறு செய்கிறான். காலத்திற்கேற்ப வாழ்க்கை முறை மாற வேண்டும். உட்கொள்ளும் உணவுமுறை மாற வேண்டும். அதனதனை அதனதன் போக்கில் வாழ விட்டாலே நாமும் வாழ்ந்து, அனைவரையும் வாழ வைக்கலாம். வாழ்க்கை சுழற்சியில் ஒன்றோடொன்று சார்ந்தே இருந்த போதும், 'சுயம்' அறிந்து வாழ பழகிக் கொண்டால் கொரோனா மட்டுமல்ல... எந்த கொடிய நோயையும் வென்று விடலாம். மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் நம்மில் தொடங்கட்டும். தேகம் வலிமை அடையட்டும். மனதில் அமைதி நிலவட்டும்...🙏🙏🙏.